![Sowmya raman](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/Sowmya-780x405.jpeg)
1. ஏதோ ஒன்றைத் தேடி
பழைய புத்தகங்களை திருப்புகையில்
அதில் கிடைக்கும் காகிதங்கள்
என்னென்னவோ கதைகள் சொல்கின்றன
புத்தகத்தின் கதை
கைப்பட எழுதப்பட்ட காகிதத்தின் கதை
இந்த காகிதத்தைக் கொடுத்தவரின் கதை
இதை நான் பத்திரப்படுத்திய கதை
அப்போதிருந்த எங்களின் கதை
இப்போதில்லாமல் போன கதை
அதை பத்திரமாய் அப்படியே விட்டுவிட்டேன்
நான் எதையோ தேடிக்கொண்டிருந்தேன் தானே?
2. இந்த
நெரிசல் சாலையையும்
கடற்கரையையும்
மணலையும்
ரயில் நிலையத்தையும்
நகரத்தையும்….
என
உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும்
மூட்டைகட்டி பரணில் ஏற்றிவிட்டேன்
எங்கிருந்தோ வரும் உன் வாசனையை
மட்டும்
என்ன செய்வதென்று தெரியவில்லை…
3. பரத்தையின் சத்தியதிற்க்கு
முன் பயந்து
மன்றாடி கிடக்கின்றன
சில தாளிகளும்
முறுக்கிவிடப்பட்ட மீசைகளும்.
இரவை மெல்ல மெல்ல
விழுங்கும் ஒளிக்கு
பொய் என்று பெயர்.
4. ஒரு புன்னகை
ஓர் இரவு
சிறு கதகதப்பு
ஒரு குருவியின் கீச்சு
ஒரு மரணம்
எதையோ ஒன்றைக் கடப்பதுவே
ஒரு நாளாகவும் – மாதமாகவும் – வருடமாகவும்
வாழ்க்கையாகவும் மாறிவிட்டது!