சிறுகதைகள்

மரணங்களும் சில கடிகாரங்களும்- மனோஜ்

 

‘இறப்பு’ என்ற வார்த்தையை எப்பொழுது கேட்டாலும், அது என் மனநிலையை சில நிமிடங்கள் பாதிக்கும். சிறு வயதில் இருந்தே இந்த வார்த்தையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்.

இறப்பு என்பது என்ன? இறப்பின் வழி நம் எண்ணங்களை அது எங்கு அழைத்துச் செல்லும்? ஏன் உடலை மட்டும் உணர்விழக்கச் செய்து இங்கேயே கிடத்திச் செல்கிறது இந்த உயிர்?

நம் நண்பர்களையும் நமக்குப் பிடித்தவர்களையும் இறப்புக்குப் பின் காண முடியுமா? உணர முடியுமா? ஏற்கனவே இறந்த நண்பர்கள் அங்கு இருப்பார்களா? இது போன்ற ஆயிரக்கணக்கான அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அர்த்தமற்ற பதில்களுடன் எனை நானே குழப்பிக் கொண்டிருப்பேன். இறுதியாக எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்காது. மிஞ்சுவது மன அழுத்தம் மட்டுமே. இதனால் சிறு வயதிலேயே பைத்தியம் பிடிக்கக் கூடிய மனநிலையை எட்டியுள்ளேன்.

கடந்த சில நாட்களுக்கு முன், எனது பாட்டி, அம்மாவின் அம்மா, இறந்த செய்தியைக் கேட்டதும் இந்த எண்ணங்கள் மறுபடி என்னுள் வலம் வர ஆரம்பித்தன. ஆனால், இப்பொழுதெல்லாம் சிறுவயதில் ஏற்பட்ட அளவு பாதிப்பு ஏற்படுவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல மரணங்களைப் பார்க்கப் பார்க்க தானாகவே இவ்விசயத்தில் ஒரு தெளிவு நிலைக்கு வந்து சேர்ந்து விட்டேன். இது யாராலும் அறிய முடியாத ஒன்று. இறப்பு ஒன்றுதான் அதற்குத் தீர்வு என்றும் முடிவு செய்து விட்டேன். இறப்பைக் கண்டு பயமில்லை. பிடித்த உறவுகள் அனைத்தையும் நீங்கி உயிர் எங்கு போகிறது என்ற பயம்தான். சில மணி நேரங்களில் இந்த எண்ண அலைகளிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

இரவு கிளம்பி விடியற்காலை பாட்டி வீட்டினை அடைந்தேன்.

வரும் வழியெல்லாம் பாட்டியின் நினைவு அவ்வப்பொழுது மனதில் மின்னி மறைந்து கொண்டே இருந்தது. வீட்டில் நுழைந்ததும் சென்று பாட்டியின் உடலை சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு நகர்ந்தேன். தாய் மாமா என்னைப் பார்த்ததுமே, “என்ன தம்பி வெளுத்துட்ட போல?” எனக் கேட்க சட்டெனச் சிரிப்பு வந்து விட்டது. பின்னர் சற்று நேரத்தில் அரட்டை அடிக்கத் துவங்கினோம். தனக்கும் பிறருக்கும் இம்சையற்ற மரணம்தான் மனிதனுக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய வரம். அது பாட்டிக்கு  கிடைத்தது ஓரளவு மகிழ்ச்சி என அரட்டை அடித்தவாறே இன்னொரு மாமா கூற, மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

பாட்டியும் தாத்தாவும் இணைந்து உடல் தானம் செய்திருக்கின்றனர். எனவே இறந்த ஒரு மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து வந்து பாட்டியின் கண்களைத் தனியே எடுத்து பதப்படுத்தி வைத்துக் கொண்டு அவ்விடத்தில் பஞ்சு வைத்து கண்களை மூடிச் சென்றுவிட்டார்களாம். உடலை இன்று மதியம் பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தனர். அப்பாவிடம் என்ன நடந்தது? எப்பொழுது இறந்தார்? என்று விசாரித்தேன். 

சில வருடங்களுக்கு முன், தாத்தா, அப்பாவினுடைய அப்பா இறந்த பொழுது, நடந்திருந்த அதே சம்பவம் இங்கும் நிகழ்ந்திருப்பதைக் கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். அதே மாதிரியான சம்பவம் மீண்டும் இங்கு நிகழும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் சாதாரணமாக நிகழக் கூடிய சம்பவமில்லை.

தாத்தா சுயநினைவை இழந்து படுத்த படுக்கையாகி பத்து நாட்களாகியிருக்கும். படாதபாடு பட்டார். கடைசி வரை அப்பா அவரை அப்படிப் பார்த்துக் கொண்டார். அப்பா சுகாதாரத் துறையில் இருப்பதால் மருத்துவம் பற்றிய அடிப்படை விசயங்கள் முதல் ஓரளவு அனைத்து விசயங்களும் தெரியும். எனவே வீட்டில் யாருக்கு என்ன உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அவரே கவனித்துக் கொள்வார். சரி செய்து விடுவார். மரணத்தின் விளிம்பில் நிர்வாணம், கழிவு நீக்கம் போன்றவற்றைக் கூட சுயமாக செய்ய இயலாத பொழுது, எவரொருவர் தனக்கு அவ்வுதவிகளை முகம் சுழிக்காது செய்யும்படியான உறவுகளை பெற்றிருக்கிறாரோ  அவர் பாக்கியம் செய்தவர். அவ்வகையில் எனது தாத்தா மாபெரும் பாக்கியம் செய்தவர்.

படுத்தவாக்கிலேயே இருப்பார். அவ்வப்போது விழிகளில் அசைவுகள் இருக்கும். சில சமயங்களில் கண்களிலிருந்து கண்ணீர் வழியும். தன் நிலையை உணர்ந்து அவர் அழுவது போல் இருக்கும். அம்மா அவரது கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருப்பார். இப்படியாக நாட்கள் கழிய இறுதியாக அன்று மதியத்திற்கு மேல் எங்கள் வீட்டிலிருந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது. பெரியமுள் புதைகுழியில் மாட்டிய சக்கரத்தைப் போல அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் அங்கேயே அசைந்து கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து அப்பாவிற்கு அழைப்பு வந்தது. சென்று பார்த்தார். தாத்தாவின் கையைப் பிடித்துப் பார்க்க நாடித்துடிப்பு குறைந்திருந்தது. எதேச்சையாகப் பார்க்க பாட்டி வீட்டிலிருந்த சுவர் கடிகாரமும் நின்றிருந்தது. ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்த்தும்படி அவை நின்றிருப்பதாக அப்பாவிற்குத் தோன்றியது. அடுத்தநாள் தாத்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அன்று மதியம் அப்பாவின் கைக்கடிகாரமும் நின்று போனது. அது நின்ற சில நிமிடங்களில் தாத்தாவின் உயிர் பிரிந்தது.

இது எதனால் என்று ஒன்றும் புரியவில்லை. இதை ஒரு சாதாரண நிகழ்வாகவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்பொழுது தாத்தாவைப் பற்றி பேசினாலும் இந்த கடிகாரங்களைப் பற்றி அதிசயமாக பேசிக் கொண்டிருப்போம். இப்பொழுது இறந்த பாட்டிக்கும் இதே கதை. அவர் இறந்த அன்று காலை வரை நன்றாக இருந்திருக்கிறார். மதியம் போலத் தான் தனது சுயநினைவை இழந்து விட்டிருந்திருக்கிறார்.

உடனே அம்மா, தாத்தா மற்றும் அப்பாவிற்கு போன் செய்து கூற அப்பா சில நிமிடங்களில் அங்கு சென்றுவிட்டார். அங்கு செல்வதற்கு முன்னாலேயே அப்பாவின் மனதை ஏதோ உறுத்திக் கொண்டிருக்க, வீட்டில் நுழைந்ததும் அவர் கண்ட காட்சி அவரது மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், அங்கிருந்த சுவர் கடிகாரமும் நின்று போயிருந்தது. ஒன்று முந்தைய நாளே நின்று விட்டதாம். மற்றொன்று இன்றுதான் நின்றதாம்.

உடனே அப்பா ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்து கடிகாரங்களைப் பார்க்கப் பிடிக்காமல் அவற்றை கழற்றி தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விட்டு பாட்டியின் உடல்நிலையைப் பார்த்து விட்டு ஆம்புலன்சுக்கு போன் செய்து விட்டு அமர்ந்தார். ஆம்புலன்ஸ் வந்தது. பாட்டியின் உடலை ஸ்ட்ரக்சரில் கிடத்தி வீட்டின் அறையிலிருந்து ஹாலுக்கு தூக்கி வரும் போதே உயிர் பிரிந்து விட்டது, என்று கூறி முடித்தார் அப்பா.

பின்னர் மறுபடியும் மரணத்தை விடுத்து கடிகாரங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். எப்படி இது நடந்திருக்கும். ஒரு கடிகாரத்திற்கு எப்படி ஒரு உயிர் போகப் போகிறதென முன்கூட்டியே தெரிய வரும். மன்னிக்கவும் கடிகாரங்களுக்கு  இது யதேச்சையான சம்பவமென துளியும் ஏற்க முடியவில்லை. அனைத்து கடிகாரங்களுமே பேட்டரி தீர்ந்ததன் மூலம்தான் நின்றிருக்கின்றன. எப்படி அனைத்து கடிகாரங்களிலும் ஒரே சமயத்தில் பேட்டரி தீரும்?

பதிலை எப்படிக் கண்டுபிடிப்பதெனத் தெரியவில்லை. சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டு பாட்டியின் உடலை அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வந்து எடுத்துச் சென்று மார்ச்சுவரியில் ஏற்கனவே இருக்கும் உடல்களுடன் கிடத்தி விட்டனர். பின்னர் வீட்டினை சுத்தம் செய்து விட்டு அடுத்த நாள் கடிகாரத்திற்கு பேட்டரி வாங்கி வந்து போட்டேன். பழையபடி ஓட ஆரம்பித்தது. சுவரில் அதனை மாட்டிவிட்டு முட்கள் நகர்வதைப் பார்த்துக் கொண்டே நின்றேன். கடிகார முள் நகரும் ஓசையும் இறப்பைப் பற்றிய சிந்தனையையும் தவிர்த்து என்னைச் சுற்றி நிகழ்வது அனைத்தும் மங்கலாகி கடிகாரச்சத்தம் எனை ஆக்ரமிக்கத் தொடங்கியிருந்தது.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button