கொல்கத்தா- ச.கோ. பிரவீன் ராஜ்
நான் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பாக எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்வில் நினைத்தது நடக்காமல் மட்டுமா போகும். நினைக்காதும் நடக்குமல்லவா. அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு பார்கவி அக்கா திருமணத்தின் போது கிடைத்தது.
பார்கவி அக்கா – நான் பணியில் சேர்ந்து கிடைத்த முதல் புராஜெக்டில் என்னோடு பணிபுரிந்தவர். சகஜமாக பேசிப் பழகும் நல்ல நண்பர். ஆரம்ப கட்டங்களில் எனக்கு வேலை சார்ந்து நிறைய உதவியிருக்கிறார். தமிழ் தெரியாவிட்டாலும், அடிக்கடி என்னை தம்பி என்று அழைக்கும்போது நகைச்சுவையாய் இருக்கும்.
திருமண அழைப்பிதழ் தந்தபோது அவர்தான் பரிந்துரைத்தார் கொல்கத்தா வரலாமே என்று. நானும் அப்போது வேலை மாற்றத்தின் நடுவே சில நாட்கள் வீட்டில் இருந்தேன். சரி, இந்த சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது என உடனே முடிவு செய்தேன்.
முதல்முறை நீண்டதூரப் பயணம். லேசாக ஒரு பதைபதைப்பு என்னை தொற்றிக் கொண்டது. கிளம்பும் நாள் மாலை அந்த மனநிலையில் தான், கொல்கத்தா செல்லும் ஹௌரா விரைவூர்திக்குரிய நடைமேடை எண்ணை அறிவிப்பு பலகையில் தேடிக் கொண்டிருந்தேன். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலைய கூட்டத்தில் அலைந்து, விசாரித்து சீக்கிரமே எட்டாம் நடைமேடையை கண்டுபிடித்து விட்டேன். அதில் ரயில் எண்ணை சரிபார்த்து விட்டு, பக்கத்தில் ஒரு கடைக்குப் போய் தண்ணீர் பாட்டிலும் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டும் வாங்கிக் கொண்டு வந்தேன்.
ரயிலில் வந்தமர்ந்ததும், என் இருக்கையின் அருகில் யாரும் இல்லை. வெளியே பார்த்தால் அருகே இன்னொரு ரயில்தான் நின்று கொண்டிருந்தது. இலக்கற்று அதை நோக்கியபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில், நடுத்தர வயதில் ஒரு மனிதர் வந்து என்னெதிரே அமர்ந்தார். அடர்கருப்பு நிறத்தில், சராசரி உடல்வாகுடன் மஞ்சள் சட்டையும் கருப்பு பாண்டும் அணிந்திருந்தார். முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் பாஸ்கரனின் சாயல். இவர் தமிழராக இருப்பாரோ என்று எண்ணினேன். வந்தவுடன் என்னை நோக்கி லேசாக புன்னகைத்தார். ஆனாலும், முகத்தில் மெல்லிய சிடுசிடுப்பு. பதிலுக்கு நானும் கொஞ்சம் சிரித்தேன்.
பேச்சை ஆரம்பித்தபோது தான், என் எண்ணம் தவறென்று புரிந்தது. பெரும்பாலும் இந்தியில் பேசினாலும், தமிழும் ஓரளவு அறிந்திருக்கிறார். நான் இயன்றவரை புரிந்து கொள்ள முயன்றேன். அவ்வப்போது செய்யும் சைகையும் உடல்மொழியும் அதற்கு துணைநின்றன. ஆங்கிலமும் கொஞ்சம் பேசுகிறார். இந்தி, ஆங்கிலம், தமிழ் மூன்றும் கலந்து, தட்டுத்தடுமாறி அவருடன் பேசினேன்.
“நான் கெளதம். உங்க பேரு?”
“மங்கள்” என்றபடி மலர்ச்சியுடன் சிரித்தார்.
அவர் அருகில் மாநிறத்தில் இன்னொரு நண்பர் இருந்தார். மங்களின் உறவினர். இவரளவிற்கு பேசும் சுபாவம் இன்றி, ரொம்பவே அமைதியாக இருந்தார். அவரது பெயரை கூட நான் அறிந்துகொள்ளவில்லை.
ரயில் தமிழ்நாட்டை தாண்டிவிட்டது. பெட்டிகளும் ரொம்ப மும்முரமடைந்து விட்டன. தேநீர், பொரி, சமோசா என விதவிதமான விற்பன்னர்கள் கடைவிரித்துக் கொண்டிருந்தனர். இரவு சாப்பாட்டிற்கு ஆர்டர் எடுப்பவர்களும் வந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நிகழும் உரையாடல்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. நான் அவற்றையெல்லாம் கவனிக்காமல் முகநூலில் சற்று நேரம் மூழ்கியிருந்தேன். மங்களும் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
எத்தனை நல்லுணர்ச்சி இருந்தாலும், அவ்வளவு சீக்கிரம் யாரும் சகஜமாக பேசி விடுவதில்லை. அவரும் அப்படித்தான். அவ்வப்போது பார்ப்பது, சிரிப்பது என்பதாக சற்று நேரம் போய்க் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் நானும் ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மீண்டும் பேச ஆரம்பித்தோம்.
“எங்கிருந்து வர்றீங்க?”
“கேரளா. அங்க ஒரு மசூதி கட்டிட்டிருக்கோம்.” என்றபடி தன் போனில் இருந்த புகைப்படத்தை காட்டினார்.
ஒரு கோட்டையை கைப்பற்றிய பின் அதன் மேலேறி நிற்கும் மன்னனைப் போல் இருவரும் ஒரு பாதி வண்ணமடிக்கப்பட்ட மசூதியின் மேற்புறத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
“நீங்க என்னவா இருக்கீங்க?”
“மேஸ்திரி“
ஒரு சில பிரபலமான வார்த்தைகளை மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார். கேரளாவில் நிறைய மசூதியில் வேலை பார்த்திருப்பதாகவும், தன்னை தன் முதலாளி நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
பலகாலம் தங்கி வேலை பார்த்ததால் மலையாளம் நன்கு அறிந்திருந்தார். எவ்ளோ வருஷமா வேலை பாக்குறீங்க என்று கேட்டபோது, “பன்னிரண்டு” என்று செந்தமிழில் பதிலுரைத்தார்.
மெல்ல இரவு வந்துவிட்டது. புலவ் சாப்பிட்டபின் தூக்கம் சொக்கியது. கொஞ்ச நேரம் நுழைவுக் கதவருகே சென்று காற்று வாங்கிவிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அப்பர் பர்த்திற்கு சென்று தூங்கி விட்டேன்.
அதிகாலை எனக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் விடிந்தது. விழித்துப் பார்த்தபோது என்னை தவிர அனைவரும் எழுந்து விட்டிருந்தனர். கீழே இறங்கிய போது, வெயில் சுளீரென்று முகத்தில் அடித்தது. ஆந்திரம். விஜயவாடாவில் சைடு பர்த்தில் இருந்த ஒரு தம்பதி இறங்கிக் கொண்டனர்.
காலைப்பொழுது வேகமாக ஓடியது. ஆங்காங்கே ரயில் நிற்பதும், மனிதர்கள் வருவதும் போவதுமாகவும் இருந்தனர். அப்போது புத்தகக் கட்டுடன் ஒரு வியாபாரி வந்தார். சேத்தன் பகத், ரவீந்தர் சிங் ஆகியோரின் புத்தகங்கள் நிறைய இருந்தன. நான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் ‘பிரீஃப் ஆன்ஸர்ஸ் டு பிக் க்வெஸ்டிண்ஸ்‘ நூலை வாங்கினேன். அதைப் படித்து கொஞ்ச நேரம் போனது.
மதியம் சைடு இருக்கையில் படுத்து கொஞ்ச நேரம் இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். மங்கள் அவருடைய உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டே பாட்டு கேட்பது தனி சந்தோஷம். இந்த பரந்து விரிந்த உலகத்தைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது பாடல்களும் இசையும் வேறு பொருள் கொள்வதுபோல் தோன்றியது. அப்படியே மெல்ல உறக்கம் கண்களைத் தழுவியது.
மாலை நான்குமணி வாக்கில் எழுந்தேன். ரயிலும் பெருமளவு காலியாகி இருந்தது. ஆந்திர எல்லையில் எங்கோ சென்று கொண்டிருந்தது. முகம் கழுவிக்கொண்டு வந்து மீண்டும் என் வழக்கமான இடத்தில் அமர்ந்தேன். சட்டென கேட்டேன்,
“நீங்க எங்க போகணும்? கொல்கத்தாவா?”
“இல்லை. அங்கிருந்து பர்தமான் மாவட்டம் போகணும். ராஜ்மஹால் மலைகள் கிட்ட இருக்கு எங்க ஊரு“
அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது, கொஞ்ச நேரத்தில் என்னிடம் அலைபேசியிலிருந்த சில புகைப்படங்களை காட்டினார். அழகான வடிவமைப்போடு மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த சிற்பங்கள். பச்சைப்பசேல் பின்னணியில் இருந்த கட்டிடங்களின் வாயிலில் செதுக்கப் பட்டிருந்தன. சிக்கனமும் செப்பமும் ஒருங்கே அமைந்திருந்த அவை படாடோபங்கள் ஏதுமின்றி அப்ஸ்ட்ராக்ட் வடிவங்களாக காட்சியளித்தன.
“இதையெல்லாம் எங்க தாத்தா தான் செஞ்சாரு. இது மாதிரி இன்னும் நெறைய செஞ்சிருக்காரு.”
“”ம் நல்லாருக்கு. உங்க அப்பா?”
பெரும்பாலும் மது அருந்திக் கொண்டிருப்பார் என்பதை தண்ணீர் குடிப்பது போன்ற சைகையில் சிரித்தபடி உணர்த்தினார். எவ்வளவு நாள் ஊருக்கு போறீங்க என்று கேட்டபோது பதினைந்து நாள் என்றார். பயணச்சீட்டு சரிபார்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை ஒன்று வைத்திருந்தார். அதில் முழுப்பெயர் ‘மங்கள் சோன்ரா‘ என்று இருந்தது.
கொஞ்ச நேரத்தில் ரயில் புவனேஸ்வரத்தை அடைந்து விட்டது. மாநிலத் தலைநகர் என்பற்கான பரபரப்பு ஏதுமின்றி அந்த ரயில் நிலையம் சற்று
அமைதியாகவே இருந்தது. நடைமேடை பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு காதல் ஜோடியை கவனித்தேன். அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரயில் நகரத் தொடங்கியது. மெல்ல அவர்கள் என் பார்வையிலிருந்து மறைந்தனர்.
சற்று நேரத்திற்கு பின் ஒடிய–வங்காள எல்லையை அடைந்தபோது அங்கே பேய்மழை. அங்கிருந்த ஒரு நிலையத்தில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ரயில் நின்று விட்டது. சைடு இருக்கைக்கு வந்து ஜன்னல் வெளியே பார்த்தேன். கொஞ்சதூரத்தில் இருள் நிறைந்த பின்னணியில், ட்யூப்லைட் வெளிச்சத்தில் வேகமாக ஆடிக் கொண்டிருந்த ஒரு மரம் தெரிந்தது. அந்தக் காட்சி புயலின் உக்கிரத்தை படம்பிடித்துக் காட்டியதுபோல் இருந்தது. இப்படி முன்பின் தெரியாத ஊரில், எவரையும் அறியாத இடத்தில், இரவில் புயல்மழைக்கு நடுவே சிக்கிக் கொண்டது உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. அது ஒரு விவரிக்க முடியாத சுதந்திர உணர்வைத் தந்தது.
நீண்ட நேரம் கழித்து மழை ஓய்ந்தது. ரயிலும் மெல்ல நகரத் தொடங்கியது. சண்டிகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோழியுடன் மெசஞ்சரில் பேசிக் கொண்டிருந்தேன். மங்கள் குறித்தும் இந்தப் பயணம் குறித்தும் சொன்னேன்.
சில மணி நேரங்கள் ஸ்மார்ட்போனும் புத்தகமுமாய் கழிந்தன. ரயில் தன் பயணத்தின் முடிவை நெருங்கி விட்டது. அனைவரும் தங்கள் பயண மூட்டைகளை ஆயத்தம் செய்துகொண்டு இறங்கத் தயாரானார்கள்.
நானும் என் பொருட்களை ஒழுங்குப்படுத்தி தயார் செய்து கொண்டு, மங்கள் அருகே சென்று அமர்ந்தேன். நள்ளிரவாகி இருந்தது. அவர் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காணொளியை காட்டினார். அவரது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம். அவ்வளவு உயிர்ப்புடன் அந்த இடம் ததும்பிக் கொண்டிருந்தது. அவரது மகள், மனைவி, சுற்றத்தையெல்லாம் பார்க்கும்போது, அது தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு விழாவைப் போல் இருந்தது. அந்தளவிற்கு நான் பார்த்து வளர்ந்த மனிதர்களின், ஜனக்கூட்டத்தின் ஒப்புமையை அனைவரிடமும் கண்டேன். எல்லா சவால்கள், துயரங்களைக் கடந்தும் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறதோ என தோன்றியது. ரயிலில் இருந்த கடைசி சில நிமிடங்களில் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டோம்.
இறுதியாக சான்ட்ராகாச்சி ரயில் நிலையம் வந்து விட்டது. அங்கே இறங்கியபின், நாங்கள் மூவரும் சேர்ந்தே பயணத்தை தொடர்ந்தோம். அருகிலிருந்த நீர்நிலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஒரு குறுகிய பாதை வழியாக பிரதான சாலையை அடைந்தோம். அங்கே ஹௌரா ரயில் முனையத்திற்கு செல்லும் பேருந்து காத்துக் கொண்டிருந்தது.
ஹௌரா வண்ணமயமாக ஒளிர்ந்தது. இரவில் சென்னையை விட கொல்கத்தா உற்சாகத்துடன் திகழ்வதாய் தோன்றியது. மங்களின் பர்தமான் ரயில் வருவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் ஆகும். அதனால் கிழக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய நான் அப்போதே விடைபெற வேண்டியதாயிற்று. அங்கே மங்கள் முன்பதிவின் அடிப்படையில் நடந்த டாக்ஸி சேவை அலுவலகத்தில் பேசி எனக்கொரு டாக்ஸி புக் செய்து கொடுத்தார்.
கிழக்கு கொல்கத்தாவில் என் அறையை அடைந்து விட்டேன். உடனே மங்களுக்கு அழைத்து நிலைதகவல் சொன்னேன். அதுதான் அவருக்கு மேற்கொண்ட முதலும் கடைசியுமான அழைப்பு. எந்தவித முன்முடிவுகளுமற்ற இயல்பான ஒரு நட்பு எங்களுக்குள் அந்த பயணத்தின் போது அமைந்தது. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் எல்லாம் திட்டமிட்டு சேகரிக்க முடியாதவை; தற்செயலின் கருணையில் நிகழ்பவை என்று தோன்றியது. அந்த நினைவுகளை அசைபோட்டபடியே உறங்கிப்போனேன்.
மறுநாள் பார்கவி அக்கா திருமணத்திற்கும் வேறு சில இடங்களுக்கும் சென்றேன். ஜாயிகா, கிதர், கித்னா போன்ற சில வார்த்தைகளை வைத்துக் கொண்டே இடையூறுகளின்றி இலகுவாய் பயணம் செய்ய முடிந்தது. அன்பும் தோழமையும் நிறைந்திருக்கும் மனிதர்களிடையே, மொழி ஒரு தடையா என்ன?