‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ (மொழிப்பெயர்ப்பு நாவல்)- வாசிப்பனுபவம்
முரளி ஜம்புலிங்கம்
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/IMG_20200303_201401-716x405.jpg)
(பார்வையற்றவளின் சந்ததிகள் – சமகால இந்திய எழுத்தாளரான அனீஸ் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “The Blind Lady’s Descendants” என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பு இது.)
கடந்தகாலம் என்பது தகடுபோன்ற ஒரு கேடயம். உங்கள் பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அதன் வழி உள் நுழைய முடியாது. ஆனால் கடந்தகாலத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் உள் நுழைந்து, எதிர்காலத்தை துரதிஷ்டங்களுடன் மட்டுமே கனவு காணும் அமர் என்கிற மனிதனின் கதைதான் “பார்வையற்றவளின் சந்ததிகள்”. இந்நாவல் மொத்தமும் அமரின் பார்வையில் இருந்தே சொல்ல படுகிறது. கொஞ்சம் பிசகினாலும் சுயசரிதையாய் ஆகிவிடக் கூடிய ஒரு படைப்பை ஒரு நாவலாக தூக்கி நிறுத்தியது அனீஸின் கதை சொல்லும் முறைதான்.
கேரளாவின் கடற்கரையோரம் இருக்கிற ஒரு பெரிய மாளிகையில் வாழுகின்ற அல்லது வாழ்ந்து கெட்ட ஹம்சா மற்றும் அஸ்மா தம்பதியினருக்கு ஐசிரா, அக்மல், சோஃபியா மற்றும் அமர் என்று நான்கு குழந்தைகள். இவர்கள் நான்கு பேருக்கும் பெற்றோராய் இருப்பதை தவிர இவர்களுக்குள் பேசுவதற்கு வேறொன்றும் இருந்ததில்லை. மற்ற அனைவரும் இவர்களுக்கிடையில் இருந்த அமைதியை நிறைவான வாழக்கை என்று தவறாக புரிந்துகொள்ள, அந்த வீட்டின் கடைக்குட்டியான அமரால் மட்டுமே இவர்களின் இயக்கமற்ற தன்மையை உணர முடிகிறது. தன் அழகின் மேல் தீவிர கவனம் கொள்கிற ஐசிரா, இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மேல் ஈடுபாடு கொள்கிற அக்மல், தாவரங்களின் மேல் காதல் கொள்கிற சோஃபியா, இதில் எதன் மீது ஈடுபாடுகொள்ளாமல் தொடர் கேள்விகளின் மூலம் தன்னை நாத்திகனாய் உணரும் அமர் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கண்ணிகளின் மூலம் பின்னி பிரிந்திருக்கிற மனிதர்கள்தான் இக்கதையின் முக்கிய பாத்திரங்கள்.
எதையும் ஞாபகத்தில் வைத்திருப்பது வரமா அல்லது சாபமா? நாவலின் தொடக்கத்தில் அமர் ஒரு மனோதத்துவ நிபுணரை சந்திக்கிறான். இறந்த காலத்தில் இருந்து தன்னால் வெளிவரமுடியாததும், எதிர்காலத்தில் தன்னைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிடுவார் என்ற பயத்தத்துடனமே தன்னால் வாழ்வை வாழ முடிகிறது என்கிறான். “எதாவது பேரழிவு நடைபெறும் என்று எதிர்பார்த்து கண்களை அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டிருக்கும்போது ஒன்றும் நடைபெறுவதில்லை. எதிர்பாராத சமயத்தில் அது நம் வாழ்வில் அருவியாக வந்து கொட்டும். அவற்றின் கணிக்க முடியாத தன்மைக்காகவே அவற்றைக் குறித்து எனக்கு பயம் . ஆனால் கணிக்க முடியாத அந்த தன்மைதான் பேரழிவுகளை தாங்கமுடியாததாக்குகிறது. சோகங்களை எதிர்பார்த்து முன்னெச்செரிக்கையுடன் இருப்பது மனப் பிறழ்வின் அறிகுறியா? என்று கேட்கிறான்”. அமரின் கடந்தகாலம் நாவலாய் விரிகிறது.
அந்த பெரிய வீட்டின் கடைக்குட்டி அமர். நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் இறந்துவிட்டதாக நம் எல்லோருமே கனவு கண்டிருப்போம். இது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் தனக்கு தெரிந்தவர்களுக்கு ஏதாவது துர்சம்பவம் நிகழும் என்று எண்ணம் அமருக்கு ஒரு தொடர் நிகழ்வாக வருகிறது. வெளியில் இருக்கும் சமயங்களில் தன்னுடைய தாய் இறந்துவிட்டதாக அவனுக்கு தோன்றுகிறது. வீட்டிற்கு ஓடி வந்து பார்த்து தன் தாய் உயிருடன் இருப்பதை பார்த்து ஆசுவாச படுத்திக்கொள்கிறான். பள்ளி சுற்றுலாவிற்கு சென்ற சோஃபியா நீரில் மூழ்கி பிணமாக வருகிறாள். தன் உடன்பிறந்தவர்களில் அவனுக்கு பிடித்த சோஃபியாவின் இழப்பு அவன் எதிர்காலம் சார்ந்த நம்பிக்கைகளைக் குலைத்துப் போடுகிறது. ஏனென்றால் அவனுக்கு தன்னுடைய மற்றொரு சகோதரியான ஐசிராவைப் பிடிக்காது. தன்னை ஒரு பெரும் அழகியாகவும், நிச்சயம் ஒரு வெளிநாட்டுக்காரன் வந்து தன்னை மணமுடித்து செல்வான் என்று கனவில் வாழும் அவள் நிச்சயம் ஒருநாள் யாருடனாவது ஓடிவிடுவாள் என்று நம்புகிறான்.
சம்பத்தின் “இடைவெளி“ நாவல் படித்திருக்கிறீர்களா. “இடைவெளி“ நாவலில் வரும் தினகரனுக்கும், “பார்வையற்றவளின் சந்ததிகள்“ நாவலில் வரும் அமருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சாவு பற்றி, அதன் அடிப்படை அல்லது பொதுத்தன்மையைச் சொல்லிவிடப்போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து “இடைவெளி” நாவல் உருவாகிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக்கூறு ஒன்றுதான். எல்லோருமே ஒருவிதத்தில் சாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது சாவு மனிதர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்கிறான். சாவை பற்றி சாவுடனேயே பேசி, விவாதித்து, கனவுகள் கண்டு, பயணிக்கும் தினகரனின் தீவிரத்தன்மை கொஞ்சம் மட்டுப்பட்டால் அது தான் அமர். தினகரனை போன்றே அமராலும் வாழ்வுடன் ஒன்றி போகவும் முடியவில்லை. அதே சமயத்தில் விலகி ஓடவும் முடியவில்லை. காலத்துடன் பயணிக்கமுடியாமல் கொஞ்சம் பின் இருந்தே இவர்களால் வாழ்வை பார்க்கமுடிகிறது.
இதை எல்லாம் வைத்து இது வறண்ட அல்லது சுவாரசியமற்ற நாவல் என்று எண்ணிவிடவேண்டாம். நாவல் முழுக்க ஒரு சிறு புன்னகையுடன் தான் நீங்கள் வாசிப்பீர்கள். எனக்கு இந்நாவலில் மிகவும் பிடித்த ஒருவர் என்றால் அது அமரின் தாய் அஸ்மாதான். ஒரே வீட்டில் இருந்தும் கணவனால் புறக்கணிப்பட்ட ஒரு பெண்ணின் மன சஞ்சலங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் இந்நாவல் தத்ரூபமாக பதிவு செய்கிறது. இருக்கும் ஒரு மகளுக்கு திருமணம் செய்வதற்கு அவளிடமும் அவள் கணவனிடமும் எந்த வசதியும் இல்லை. ஏற்கனவே வீட்டில் இருந்த பல பொருட்களை விற்றுதான் அவர்களின் தினசரி நாட்கள் கடந்து இருக்கின்றன. வேறு வழி இல்லாமல் தன்னுடைய தாயின் வீட்டை விற்பதற்கு வெளிநாட்டில் வசிக்கும் தன் தம்பியின் அனுமதி கேட்கிறாள். அவன் கூறியதைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு அந்த வீட்டை விற்று தன் மகளின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்துகிறாள். தன் தாயின் வீட்டை விற்றுவிட்டதால், பார்வை இல்லாத தன் தாயையும் அவளே பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. தன் மகள் திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகுதான் அவளுக்குத் தெரிகிறது அந்த வீட்டை விற்க தன் சகோதரன் ஒப்புக்கொள்ளவில்லையென்று. இந்தியாவிற்கு வந்து அந்த வீட்டை புதிப்பித்து இங்கேயே இருக்கப்போவதாக அவன் கடிதம் எழுதுகிறான். இந்நிலையில் தன் தாயிடமும் உண்மையைச் சொல்ல முடியாமல், தன் சகோதரனிடமும் சொல்வதற்கு ஏதும் இல்லாமல் அவள் சந்திக்கும் வாழ்வு நிச்சயம் அவல நகைச்சுவைதான். இது மட்டுமின்றி நிலாவில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கியவுடன் அவனுக்கு கேட்டது முவாஜ்ஜினின் அழைப்புதான் என்று நம்பும் அக்மல், கடற்கரையோரம் வெளிநாட்டவருக்கு குடில்களை வாடகைக்கு விடும் அமரின் நண்பன் சந்திப், இந்தியாவிற்கு சுற்றலாவிற்கு வரும் பார்பரா, சந்திப்புக்கு பார்பராவுக்குமான காதல், காதலனாகவோ அல்லது மகனாகவோ தன்னை யாராவது தத்தெடுத்து கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் அமர், மருத்துவர் இப்ராஹிம் என்று கதையில் பல கிளைகள்.
சோஃபியாவின் மறைவுக்கு பிறகு அவள் அறையை ஆராயும்போது அவனுக்கு அங்கே நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. வாசிக்கும் பழக்கம் பெரிதும் இல்லாத தன் வீட்டில் யார் இந்த புத்தகங்களைப் படித்திருப்பார்கள் என்று தேட ஆரம்பிக்கிறான். அந்த புத்தகங்களை வாசித்தது தன் மாமன் ஜாவி என்பதை தன் தாய் மூலம் கேட்டறிகிறான். ஜாவிக்கும் தனக்கும் உருவத்திலும் செய்கையிலும் பல ஒற்றுமைகள் இருப்பதை ஜாவியுடன் நெருங்கிப் பழகிய பலர் மூலம் கேட்டறிகிறான். ஜாவியின் இறப்பும், தன் பிறப்பும் ஒரே நாளில் நிகழ்ந்ததை எண்ணி அதிர்ச்சி அடைகிறான். சாவைப் பற்றிய தன்னுடைய பார்வையும், ஜாவியின் பார்வையும் கூட ஒரே போல் இருந்திருக்குமோ என்று ஐயம் கொண்டு தன் வாழ்வை உறையச் செய்து, தன் மாமனின் வாழ்வில் உருகி நுழைகிறான். ஜாவியின் கடந்த கால பாதைக்குள் செல்லும் தன் பயணம் நிச்சயம் தன்னுடைய எதிர்காலத்தைச் சூனியமாக்கும் என்று நம்பத் தொடங்குகிறான். பல கேள்விகளுக்குப் பதிலும், என்றும் யாராலும் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளும் முளைக்கின்றன. பல பரிசோதனை முயற்சிகளுக்கு பிறகு ஜாவி தற்கொலை செய்துகொண்டது அவனுக்குத் தெரிகிறது. என்றாவது ஒருநாள் தன் தற்கொலை குறிப்பும் அந்த பங்களாவின் குறுகிய வரலாறும் அடங்கிய இந்த புத்தகத்தை நாம் பார்க்க நேரிடலாம் என்ற நம்பிக்கையற்ற யூகத்தின் அடிப்படையில் இந்நாவல் முடிகிறது.
கே. கணேஷ்ராம் தமிழில் மொழிபெயர்த்துள்ள “ரியுநொசுகே அகுதாகவா”வின் சுழலும் சக்கரங்கள் நூலில் ஒரு வரி வரும். “கடவுள்கள் துரதிர்ஷ்டம் பீடிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நம்மைப்போல் அவர்களால் தற்கொலை செய்துகொள்ள இயலாது”. தற்கொலை மட்டுமே தன்னை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்பும் ஜாவியும், ஜாவியை பின்தொடரும் அமரின் பயணம்தான் “பார்வையற்றவளின் சந்ததிகள்”.
சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நாவலை விலாசினி மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இது ஒரு மொழி பெயர்ப்பு நாவல் என்பதை வாசிக்கும் எந்த தருணத்திலும் நம்மால் உணர முடியாது.
பார்வையற்றவளின் சந்ததிகள் (The Blind Lady’s Descendants)
நூல் ஆசிரியர்: அனீஸ் சலீம் ( Anees Salim)
தமிழில்: விலாசினி
பதிப்பகம்: எதிர் வெளியீடு