ஆதவனின் ‘கருப்பு அம்பா கதை’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
ஜான்ஸி ராணி
தலைப்பு : கருப்பு அம்பா கதை
ஆசிரியர் : ஆதவன்
வகைமை : சிறுகதைகள்
வெளியீடு : காலச்சுவடு
தொகுப்பாசிரியர் : சுரேஷ் வெங்கடாத்ரி
புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்த போதும் ,எந்த திட்டமிடல் இல்லாமல் நேற்று முன்தினம் படிக்க எடுத்து, நேற்று முடித்தேன்.ஆதவனின் பிறந்தநாள் என்பதை அறிந்த போது இனம் புரியாத ஒரு பரவச சந்தோஷம்.
ஆதவன் என்றாலே ஸ்டெல்லா புரூஸின் நினைவுகளும் வருவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.முதன் முதலில் அவர்தான் “என் பெயர் ராமசேஷனை” பரிந்துரைத்தார்.”காகித மலர்களை” நீண்ட இடைவெளிக்குப் பிறகே படித்தேன்.சமீபத்தில் சத்யா GP கடனாக அளிக்க “இரவுக்கு முன் வருவது மாலை” படித்தேன்.
“கருப்பு அம்பா கதை” எனும் இந்தப் புத்தகம் 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இவை புனைவு என்றே தோன்றவில்லை.ஏனெனில் உண்மைக்கு அத்தனை அருகில் இருக்கின்றன.அப்படி இருப்பதாலேயே உயிர்ப்புடன் இருக்கின்றன.மனித மனங்களின் அந்த எண்ண அலைகளை சொற்களாய் கட்டமைக்கும் உத்தி பிரமிக்க வைக்கிறது.தனிப்பட்ட வாசிப்பானுபவத்தில்தான் அதை நீங்களும் நுகர முடியுமென நினைக்கிறேன்.புதிய விதத்தில் எழுதுகிறேன் என்ற பேரில் மொழியை திருகவில்லை..வலிந்து எந்த உத்திகளையும் திணிக்கவில்லை..சளசளவென ஒரு தெளிந்த காட்டோடையின் நடை.
தி.ஜா அவர்கள் முன்னுரையில் சுட்டியுள்ளது போல( “கணங்களை அசட்டை செய்யாமலிருப்பதால் அக_புற விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன.”)
இந்த context ல் இத்தனை பக்கங்கள் எழுத முடியுமாவென ஆச்சரியப்பட வைக்கிறார்.(நிழல்கள் கதையில்) காதலிக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஒரு சந்திப்பில் நடக்கும் சம்பாஷணைகள்தான் கதை.அந்த உரையாடல்களுக்குப் பின்னிருக்கும் ஆணின்/பெண்ணின் psychology யை விவரித்திருக்கும் அழகை நீங்கள் படித்தால்தான் உணர முடியும்.
“கருப்பு அம்பா கதை”யில் வரும் கணவனும் மனைவியும் எப்படி தங்களின் துணைகளின் உலகினைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை வரிகளினூடே கட்டமைத்திருப்பார்.எப்போதுமே men are from mars,women are from venus தான் போலிருக்கிறது.
புதுமைப்பித்தனின் துரோகம் ~ultimate..கலோக்கியலாக சொல்வதென்றால் “தல! நீ வேற லெவல்.”