சிறுகதைகள்
Trending

பியூலாவின் மந்திரக்கோல்

மாதவன் பழனியப்பன்

சங்கரனுக்கு கடுப்பாக வந்தது. படுக்கையிலிருந்தபடியே ஜன்னலுக்கு வெளியே, தெருவிளக்கின் வெளிச்சத்தில் பெய்யும் மழையை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது அயர்ச்சியாக இருந்திருக்கலாம். ஓட்டுக் கூரையின் மீது சிதறும் மழைத்துளிகளின் இரைச்சல் தூக்கத்திற்கான சூழ்நிலையிலிருந்து அவரைத் தனிமைப்படுத்தியிருந்தது. கண்களை மூடிக் கொண்டால் மழையை இழுத்துப் போர்த்திய கதைதான். கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டார். மணி ஐந்தைத் தொட்டிருந்தது. மற்ற நாட்களாக இருந்திருந்தால் கோனார் இந்நேரம் வந்திருப்பார். அளந்து ஊற்றியதற்குப் பிறகும் கொஞ்சம் கூடுதலாக ஊற்றும் பாலுக்கென ஒரு சிரிப்பு பவித்ராவிடம் இருக்கிறது.

எதுக்கு இப்படி மழை பெய்யுது? இரண்டு நாட்களாக இப்படித்தான். ஊரின் அத்தனை பள்ளங்களும் நிரம்பி விட்டன. வாய்க்காலில் நேற்றே முழங்கால் தண்ணீர் வந்து விட்டிருந்தது. இன்றைக்கும் வாக்கிங்கிற்கு குடையைத் தேட வேண்டும் என நினைத்துக்கொண்டே விளக்கைப் போட்டார். இரண்டு முறை துடித்த பின்னர் கண் விழித்துக் கொண்டது டியூப்லைட். கட்டிலுக்கு இணையாகத் தலையுடன் இழுத்துப் போர்த்தியபடி கிடந்த பவித்ராவின் தோளில் கை வைத்து, “மணியாச்சு, போய் டீ போடு” என்றார்.

எழுப்புவதற்கு முன்னதாகவே எழுந்து விடுபவளின் இந்த அரிதான உபரித் தூக்கத்தைக் கெடுப்பது சங்கரனுக்கு சிரமமாகத்தான் இருந்தது. தோளைப் பிடித்திருக்கும் சுந்தரத்தை அதிசயமாகப் பார்த்தபடியே தலையைச் சுற்றிக் கொண்டு எழுந்து பாயைப் பரணில் வைத்தபடியே, “கோனார் வந்துட்டரா?” என்றாள்.

வேட்டியை சரி செய்து கொண்டிருந்தவர், ”இன்னும் ஆளைக் காணோம், நேத்திக்கு பால் இல்லையா?’ என்றார்.

அடுப்படிக்குள் நின்றபடியே “நேத்தே ஆச்சிக்கு கொடுத்து விட்டேன். சத்த இருங்க. கடையில போய் பாக்கெட் பால் வாங்கியாறேன்” எனக் கிளம்பியவளை நிறுத்துவதற்கு சங்கரனுடைய சைகை போதுமாயிருந்தது.

இந்த முப்பது வருடத்தில் பல வார்த்தைகள் இப்படித் தேய்ந்து சப்தமில்லாத கையசைப்புகளாக மாறியிருப்பதை பவித்ராவும் கவனித்தே வருகிறாள். மப்ளரையும், கட்டம் போட்ட பனியனையும் உடுத்திக் கொண்டவுடன் காலை நேர நடைக்கலை வந்து விடுகிறது சங்கரனுக்கு. கோடுகளாக தகரத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த தண்ணீர் இப்போது புள்ளிகளாக இறங்க ஆரம்பித்தது. குடையுடன் “நடந்துட்டு வரேன்” எனச் சொல்லும் சங்கரனிடம் தலையாட்டினாள்.

வேட்டியை மடித்துக் கொண்டே கேட் கதவைச் சாத்தும்போது, குடையை ஒரு பக்கமாகப் பிடித்திருக்கும் சங்கரனுடைய உருவத்தை அவளால் வீட்டிற்குள் எந்த மூலையில் இருந்தும் துல்லியமாக உருவகப்படுத்திவிட முடிகிறது. “கோனார் எப்பந்தான் வருவாரோ?” என அலுத்துக் கொண்டே புழக்கடைப்பக்கக் கதவுகளைத் திறந்து விட்டாள். முதுகுக்குப் பின்னால் இருந்து வெக்கையான காற்று அறைக்குள் இருந்து வெளியேறுவதை உணர முடிந்தது. இரவு முழுவதும் மழையை உள்வாங்கி இளகியிருந்தது தரை. எதிர் வீட்டு காம்பவுண்டு சுவரில் இருந்த திருஷ்டிப் பூசணிக்காய் கழுவி வைத்ததைப் போல் இருக்கிறது. உயரமான சுவரில் சொட்டையில்லாமல் சுண்ணாம்பு அடித்ததைப்போல் ஈரம் பரவியிருக்கிறது. வாசலில் நிற்கும் புங்கை மழையின் கனத்தால் குனிந்து நிற்கிறது. நீர்மையின் பிடியில் சூழல் இருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஈரத்தை சுமந்து அலையும் ஒரு மழைக்காற்றுக்கு முகம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு இப்போது. செம்பருத்திச் செடியில் புதிதாக ஒன்று விரிந்திருந்தது. பவித்ராவின் காலையை அழகாக்கிவிட ஒரு செம்பருத்திப்பூ போதுமானதாய் இருக்கிறது.

தேரடி வீதிக்கு வந்திருந்தார் சங்கரன். பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூடத்திற்குள் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது தேர். நேராகச் சென்று ஆற்றுப்பாலத்தைத் தாண்டி புனித வளனார் ஸ்கூல் வரை நடப்பதுதான் தினசரிக் கணக்கு. கிடையாடுகள் திமுதிமுவென்று நிற்கும் சர்ச்சின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. மெழுகுவர்த்தியும், ஜெப மாலைகளும் விற்கும் கடைகள் நீல நிறப் படுதாக்களுக்குள் இருந்து இன்னும் வெளிவரவில்லை. ஆற்றுப் பாலத்தில் பஸ்கள் கடக்கும் போது காலுக்கடியில் ஏற்படும் சின்ன அதிர்வுகள் சங்கரனுக்குப் பிடிக்கும். சுழித்து ஓடும் நீரில் கல்லெறிவதையும், “தொப்ளக்” என்னும் சத்தத்துடன் கல் மூழ்குவதையும் பார்க்கும் பழக்கம் போன ஞாயிற்றுகிழமை வரைகூட அவரை விட்டுப் போகவில்லை. பார்வையின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல அனுபவம் தான். குத்தாலத் துண்டும், வேட்டியுமாக இப்போதே வாய்க்காலுக்குக் குளிப்பதற்கு ஆட்கள் கிளம்பிவிட்டனர். சொசைட்டி பேங்கின் வாசலில் லாரி நின்று கொண்டிருந்தது. மூக்கு நீண்ட லாரிகளை இப்போதெல்லாம் ரோட்டில் பார்க்க முடிவதில்லை. வானம் மீண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. ஸ்கூலுக்கு இன்றைக்கும் லீவு விட்டிருப்பார்கள். அசோக மரங்கள் வரிசையாக நிற்கும் காம்பவுண்டிற்குள் வரிசையாக தலையைக் குனிந்து “நீராரும் கடலுடுத்த” பாடுவதற்கு இன்றைக்கு ஆள் இருக்காது.

ஸ்கூலைக் கடந்தால், இந்த பூமி முழுவதும் இனி யூகலிப்டஸ் காடுதானோ என எண்ணும்படியாகக் கச்சிதமான அளவுடன் வளர்ந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். நல்லூர் வரையிலும் யூகலிப்டஸ் காடுதான். ரோட்டிற்கு இருபுறமும் விரிந்து கிடக்கும் இந்த மரங்களை ஆரஸ்வதி மரம் என்னும் சொல்லும் பழக்கம் நிறையப் பேரிடத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காட்டிற்குள் வந்து செபஸ்தியான் பேக்கரி போட்டிருப்பது ஊரில் ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. அத்துவானக் காட்டுக்குள்ளே கடை போட்டாலும் ஆட்கள் வந்து போகத்தான் செய்தார்கள். ரோட்டை ஒட்டினாற்போல் இருந்த கடைதான் சங்கரனின் எல்லை. கடைக்கு எதிரில் இருக்கும் “தங்களை அன்புடன் வரவேற்கும்” இரும்பு போர்டு வரை வந்தவுடன் திரும்பி நடப்பார். தினமும் பார்த்துக்கொண்டாலும் இருவரும் பேசிக்கொண்டதில்லை. இந்த மழை காலத்தின் முன்பான ஒரு விடியலில் பாய்லருக்கு கரி அள்ளிக் கொண்டிருக்கும் போது செபஸ்தியான் சங்கரனைப் பார்த்து சிரித்து வைத்தார் சின்னதாக. எப்படியாகிலும் ஒரு துவக்கம் தேவைப்பட்டுவிடுகிறது.

ஸ்கூல் வாசலில் விடுமுறை அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. இப்படிக்கு தலைமையாசிரியர் என சங்கரன் முடிப்பதற்கும் மழை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. எந்தப் பக்கம் போவது என முடிவெடுப்பதற்குள் நாவல் பழம் போல துளிகள் பருக்க, ஓட்டமும் நடையுமாக செபஸ்தியான் கடைப்பக்கமாக நடந்தார். காற்றின் வேகத்தில் குடை தடுமாறியது. வளைந்த கைப்பிடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். முழங்காலுக்கு மேலே சாரல் ஏறியது. நல்லவேளையாக கூட்டமில்லாமல் இருந்தது கடை. சேறாக இருந்த செருப்பை கழட்டும் சங்கரனிடம் குடையை வாங்கிக் கொண்டார் செபஸ்தியான். “உள்ளே வாங்க” என்றார். சிவப்பு நிறத்தில் பிரேம் போட்ட பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றவரிடம் துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார் செபஸ்தியான். வரிவரியாக ஊறிப் போயிருந்த விரல்களுக்கு தேங்காய் பூ துண்டின் கதகதப்பு தேவையாக இருந்தது. “திடீர்னு பிடிச்சிடுச்சு மழை” என வலக்காதில் ஆட்காட்டி விரல் விட்டு ஆட்டிக் கொண்டே சொன்னார் சங்கரன். “ராவுல இருந்தே இப்படித்தான்” என்ற புதிய குரல் கேட்டு தலையை நேராக்கி மூலையில் பார்த்தார். சர்ச் வாசலில் ஊதுபத்தியும், மெழுகுவர்த்தியும் விற்கும் அதே கண் தெரியாத ஆள்தான். ஆளுயரக் குச்சி ஒன்றை ஊன்றி அதனை இரண்டு கைகளாலும் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். கறுப்புக் கண்ணாடி இன்னும் சிறியதாக இருக்கலாம். பெரிய காண்டா பை ஒன்று காலுக்கடியில் திறந்திருந்தது. உள்ளே பெட்டி பெட்டியாக ஊதுபத்திகள் அடுக்கப்பட்டிருந்தன. “கண் தெரியாத எல்லோருக்கும் வாய்ஸ் நல்லாயிருக்கும்டே” என கண்களை அகல விரித்தபடி சொன்ன பாஸ்கரனுடைய காவிப்பற்கள் ஞாபகத்திற்குள் வந்தன. எதையோ எங்கேயோ கொண்டு போய் முடிச்சுப் போடுகிறது நினைவுக் கயிறு.

காத்தாடியைப் போட்டு விட்டு ரூமை விட்டு வெளியே வந்தார் செபஸ்தியான். “சத்த இருங்க, மழை விடட்டும்”. இதைச் சொல்லும் போதும் ஒரு சிரிப்பு செபஸ்திக்கு வந்து போனது. சேரில் உட்கார்ந்து தலையைக் கோதி விட்டுக் கொண்டே சுற்றும் பார்த்தார். பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் ரொட்டிகளும், கேக்குகளும் விலைவாரியாக அடுக்கப்பட்டிருந்தன. ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என இனிப்புகளுக்குத்தான் எத்தனை நிறம்!! சுவரை ஒட்டியதைப் போல் டேபிளும், சேர்களும் கிடந்தன. வெள்ளை பனியனும், கைலியுமாக பாய்லரில் இருந்து பாலை கிளாசில் ஊற்றிக் கொண்டிருந்தார் செபஸ்தியான். “இப்படியே மழை வலுத்துக் கொண்டிருந்தால்

இந்தத் தெரு நாய்களெல்லாம் மழைக்கு எங்க ஒதுங்கும்?” என்ற கண்ணாடிக் காரரிடம் சங்கரன் எதுவும் பேசவில்லை. பாய்லரிலிருந்து “டப்” என்ற சப்தத்துடன் கங்குகள் காற்றில் பறந்து அணைந்தன. இதற்குள் அறுகோண தம்ளரில் டீயை ஊற்றிக் கையில் கொடுத்தார் செபஸ்தியான். “சோசப்பண்ணா இந்தாங்க டீ” என நீட்ட கையில் இருந்த குச்சியை தொடையில் சாத்திவிட்டு இரண்டு கைகளாலும் தம்ளரை வாங்கிக் கொண்டார். செபஸ்தியானுக்கு சோசப்பின் பெயர் தெரிந்திருப்பது சங்கரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எல்லோருக்கும் பெயர் இருக்கத்தான் செய்கிறது. பஸ் ஸ்டாண்டில் தலை முழுவதும் சிடுக்கு விழுந்த செம்பட்டை முடியுடன் தன்னிடம் காசு கேட்டவனுக்குக்கூட ஒரு பெயர் இருக்கும் என நினைத்துக்கொண்டே டீயின் முதல் மிடறை விழுங்கினார். தொண்டையில் சவுகரியமான சூடுடன் அது பயணிப்பதை கவனித்தபடி இருந்தார். இரண்டு கைகளுக்கும் நடுவே தம்ப்ளரை உருட்டியபடி வெளியே பார்த்தார். ஆயிரம் பாம்புகள் பிணைவது மாதிரி சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன யூகலிப்டஸ் மரங்கள். காற்றின் ஏதோ செய்திக்கு மரங்கள் தலையை ஆட்டுவதாய் சங்கரனுக்குத் தோன்றியது. குளிரும், சூழலும் ஒரு டீயின் தேவையை அதிகப்படுத்தியிருந்தன.

தம்ளரின் ஓரத்தில் வெடிக்கக் காத்திருக்கும் குமிழ்களை கவனித்தபடி குனிந்திருந்த சங்கரன்,” மாமாக்கு கொடுடி” எனக் கேட்டு நிமிர்ந்து கொண்டார். செபஸ்தியானின் மகளாக இருக்க வேண்டும். தட்டு நிறைய சாக்லேட்டுகளுடன் நின்றிருந்தாள் பியூலா. ஒரு கையில் வெள்ளை நிறத்தில் ஜிகினாக்கள் சுற்றிய உருளையின் ஒருபுறத்தில் நட்சத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு மேட்சாக தலையில் வெள்ளை நிறத்தில் கிளிப் போட்டிருந்தாள். தும்பைப்பூ நிறத்திலான இந்த ஏஞ்சல் உடைக்காக ஒரு காலத்தில் தென்காசி முழுவதும் சங்கரன் அலைந்திருக்கிறார். மிருதுளா ஆடிய ராதை மனதில் பாட்டிற்கு எத்தனை பேர் கைதட்டினார்கள் என்பதுகூட அவருக்குத் தெரியும். அந்த இரவில் அவளை வீடு வரைக்கும் தோளில் தூக்கி வர முடிந்ததை அவள் தன் நண்பர்களிடம் சொல்வதை ஓரமாய் நின்று கேட்டிருக்கிறார். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.

“இன்னிக்கு எனக்கு ஹாப்பி பர்த்டே” என்றவளிடம் “நல்லா இருடி சாமி” என்றபடி சாக்லேட்டுகளை எடுத்துக் கொண்டார். “பியூலா குட்டிக்கு இன்னிக்குத்தானா பொறந்தநாளு” என தலையைத் திருப்பி கேட்டார் சோசப். பியூலா என தனக்குள் சொல்லிக்கொண்டார் சங்கரன். மெலிதான புன்னகையுடன் “ஆமா மாமா” என்றபடி சோசப்பிடம் தட்டுடன் நகர்ந்தாள். நடுங்கும் தனது கைகளால் அவளுடைய உச்சந்தலையிலிருந்து மோவாய் வரையிலும் சோசப் தடவிப்பார்த்தார். கண்ணாடியையும் மீறி அவரது கன்னத்து தசைகள் அசைவது தெரிந்தது. கையால் முகத்தை பார்க்க முயற்சிப்பது போலிருந்தது. “புது உடுப்பு போட்டுருக்கியா சாமி” என கன்னத்தைத் தாங்கியவாறே கேட்டவரிடம் “ஆமா மாமா ஏஞ்சல் டிரெஸ்” என பெருமையாக சொன்னாள்.

கொசுவலைபோல் இருந்த கைப்பகுதியை தடவிப் பார்த்துக் கொண்டே “என்ன கலர்?” என்றவரின் நெற்றி ஏறி இறங்கியது.

“வெள்ளை மாமா” எனத் தட்டைக் கைமாற்றிக் கொண்டாள். தரை வரையிலும் நீண்டிருந்த உடையைக் கையில் ஏந்தி முகர்ந்து பார்த்தார் சோசப்.

“என்ன பண்றிங்க மாமா?”

“வெள்ள கலர் எப்படி இருக்கும்னு பாக்குறேன்” என்றார். சிரித்துக்கொண்டே குனிந்தவரிடமிருந்து ஆடையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

அடுத்த கையிலிருந்த மந்திரக்கோலை எங்கே வைப்பதென்று தெரியாமல் விழித்தவளிடம் இந்தா சாமி என இரண்டு கட்டு ஊதுபத்திக் கட்டைக் கொடுத்தார் சோசப். வேண்டாம் என்றவளிடம் “நல்லா வாசமா இருக்கும் பிடி” எனக் கொடுத்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கரன் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி கட்டுடன் திரும்பிய பியூலாவைத் தூக்கி, “என்ன படிக்கிற?” எனும்போது அவரது புருவங்கள் ஏறி இறங்கின. விசும்பலோடு திமிறியவளிடம் “மாமா கேக்குறாங்கல சொல்லு” என்றார் செபஸ்தியான். முகத்தைச் சுழித்துக் கொண்டு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டார். வேகத்தில் இறங்கி அப்பாவிடம் ஓடியது குழந்தை. கொடுப்பதற்கு இந்த உலகில் முத்தத்தைத் தவிர என்ன இருக்கிறது?

குழந்தை ஓடி தன் அம்மாவிடம் தட்டைக் கொடுத்து விட்டு ஒளிந்து கொண்டது. தம்ளருடன் உக்கார்ந்து கொண்ட சங்கரனுக்கு சோசப்பிடம் ஏதாவது பேச வேண்டும் போலிருந்தது. “சர்ச்க்குப் போகனுமா?” என்றார் சங்கரன். “ஆமா மணி என்ன” என்றார் ஒலியின் மூலத்தை ஊகித்து தலையைத் திருப்பியபடி. “ஏழாகப் போகுது” எனும் போது பியூலா தன் மந்திரக்கோலை ஆட்டியபடி அம்மாவிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். தூரத்தில் லேசான இடியின் சப்தம் காற்று களவாண்டது போக மீதம் கேட்டது.

அடியில் தேங்கி நிற்கும் நுரையைக் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டே கிளாசை டேபிளில் வைத்தார். “எதுக்கு இப்படி மழை பெய்யுது” என செபஸ்தியான் சலித்துக் கொண்டார். மழை இதுகளுக்காகல்லா பெய்யுது என்று நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஓடிய சிறுமி ஒருத்தியைக் கைகாட்டினார் சங்கரன். செபஸ்தியானும் தனது டீயைக் குடித்து முடித்திருந்தார். வானம் மெல்ல வெளி வாங்கி வெளுக்கத் தொடங்கியது. வாசலிலிருந்து ரோடு வரை மண் தெரியாமல் கிடந்த தண்ணீரில் மழைத்துளி விழுந்து ஏற்படும் குழிகள் குறைந்துகொண்டே வருவதைத் தலையை சாய்த்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார். கிளாஸ்களைக் கழுவிக் கொண்டிருந்த செபஸ்தி பக்கமாகத் திரும்பி, “ஒரு பார்சல் டீ போட்டு குடுடே” என்றார் சங்கரன்.

பையை மடியில் வைத்து அதன் ஜிப்பை மூடும்போது கழுத்தைத் திருப்பி ரன்னரில் ஜிப் பயணிக்கும் சப்தத்தை கேட்டுக் கொண்டிருந்த சோசப்பிடம், ”வாரும், சர்ச் வழியாத்தான் போறேன். நடப்பமா?” என்றார். சரிந்து கிடந்த குச்சியை அவசரமாக எடுத்து இரண்டு முறை தரையில் தட்டி பின்னர் எழுந்து கொண்டார். செவ்வகமாக இருந்த பையை சோசப் எடுக்கப் போக “இரும் நான் தூக்கிகிடுதேன்” என்றபடி பையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டார் சங்கரன். டீ ஊற்றிய பிளாஸ்டிக் கவரின் வாயை நூலால் அடைத்து, அதை இன்னொரு பிளாஸ்டிக் பையில் பத்திரப்படுத்தி சங்கரனிடம் கொடுக்கும் போது, “தங்கசிக்கு ஒடம்பு சொகமில்லையோ?” என்றார் செபஸ்தி.

உதட்டை விரித்து மெல்லிய புன்னகையுடன் இல்லை எனத் தலையை ஆட்டியபடி வாசலில் இருந்து கீழே இறங்கினார் சங்கரன். பை தொங்கும் அவரது இடது தோளில் கை வைத்தபடியே சோசப்பும் நடக்கத் தொடங்கினார். சங்கரனின் வலது கையில் பச்சை நிற பிளாஸ்டிக் கவர் காற்றில் படபடத்தது. கையில் இருந்த சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டுக் கொண்ட சோசப் இன்னொன்றை சங்கரனிடம் நீட்டினார். காகிதப் பேப்பர் காற்றின் வேகத்தில் மேலெழுந்து பயணிக்கத் தொடங்கியது. குடையை வைத்து விட்டுச் செல்லும் சங்கரனையும், சாக்லேட்டை குழந்தையின் பாவனையுடன் மென்றபடியே பின்தொடரும் சோசப்பையும் பார்த்துக்கொண்டிருந்த பியூலாவின் மந்திரக்கோல் அந்த விடியலின் வெளிச்சத்தில் பிரகாசித்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button