1. சிங்கமும் சுண்டெலியும்
(கதைப்பாடல்)
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அயர்ந்து சிங்கம் உறங்கையிலே
அங்கொரு சுண்டெலி அதன்மேலே
ஆடியும் ஓடியும் மகிழ்ந்ததுவே!
எழுந்த சிங்கம் எலியைப் பிடிக்க
பயந்து போனது சுண்டெலியே
என்னை இன்று விடுதலை செய்திட
என்றோ ஒருநாள் உதவுவேன் என்றது
சிறிய எலியின் பேச்சைக் கேட்டு
சிரித்தே சிங்கமும் விடுதலை செய்தது
இப்படியே காலம் ஓடிப் போகையில்
இடுக்கண் வந்தது சிங்கத்திற்கே!
வேடன் ஒருவன் விரித்த வலையில்
வசமாய் சிக்கித் தவித்தது சிங்கம்
வேகமாய் கர்ச்சனை செய்து பார்த்தது
வெளியில் வந்திட முடியவில்லை…
சிங்கத்தின் கர்ச்சனை கேட்ட வுடனே
சிலிர்த்து எழுந்து ஓடிய எலியும்
கூரிய பற்களால் அந்த வலையை
கடித்துக் கடித்தேக் கத்தரித்தது…
சிங்கம் மீண்டு வெளியில் வந்தது
சிறந்த நண்பனை கண்டு கொண்டது
சேர்ந்தே இரண்டும் வாழ்ந்து வந்தன
சிறியவர் பெரியவர் பேதம் இன்றி…
நீதி: சிறு துரும்பும் பல்குத்தும்..தெரிந்து கொள்வோம் சரியாக…
2. யாருக்கு வீடு..?
(கதைப்பாடல்)
அழகிய ஊரின் ஓரத்தில்
ஆலமரம் அடியில் இருந்த
வளை ஒன்றில் வயதான
கௌதாரி வாழ்ந்து வந்தது…
உணவைத் தேடி பக்கத்து
வயல் நாடிச் சென்றது
தானியம் நிரம்பக் கிடைத்ததால்
தங்கிக் கொண்டது அங்கேயே!
திங்கள் ஒன்று முடிந்ததும்
திரும்பி வந்தது இருப்பிடத்திற்கு
தன்வளை உள்ளே முயலும்
தங்கிடக் கண்டு திடுக்கிட்டது…
என்வீடு என்றது கௌதாரி
எனது என்றே முயலும்
எட்டிக் கழுத்தைப் பிடித்தது
இரண்டும் சண்டை இட்டன…
தூரத்தில் கண்மூடி மௌனமாக
துறவியார் பூனை அமர்ந்திருந்தார்
இருவரும் அவரிடம் சென்று
யாருக்கு வீடென கேட்டனர்…
நெருங்கி வாருங்கள் அருகினிலே
நகர முடியவில்லை என்னால்
என்றே பூனை இயம்பியது
இரண்டும் ஒப்பி நெருங்கின…
முதுமை காரணத்தால் உணவின்றி
முற்றும் பசியால் வாடியபூனை
முழுஉணவு கிடைத்த தென்றே
மூடிய கண்களைத் திறந்தது
அருகில் இரண்டும் வந்தபின்னே
அப்படியே இறுகப் பற்றியது
அழுத்தும் கரத்தின் உறுதியிலே
அறிந்தன இரண்டும் உண்மையை…
விலகிச் சென்றன விரைந்து
வீட்டின் அருகில் நின்றன
பகுதி பகுதியாய் இருவரும்
பகிர்ந்து கொள்வோம் வீட்டினை…
புரிந்து ணர்வு ஒப்பந்தம்
போட்டுக் கொண்டன இரண்டுமே!
போக விருந்த உயிரினை
மீட்டுக் கொண்டன புத்தியினால்…
நீதி: விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.
3. நேர்மை தந்த பரிசு
(கதைப்பாடல்)
காய்ந்த மரக் கிளைகளை
கணக்காய் வெட்டி விற்றேதான்
காலம் கழித்து வந்தான்
கந்தன் என்னும் விறகுவெட்டி..
குளத்தின் அருகே வெட்டுகையில்
கோடரி தவறி விழுந்திடவே
கூடுதல் ஆழம் போகாமல்
குனிந்து தேடிப் பார்த்தனன்.
தேடிப் பார்த்தும் கிடையாததால்
தேம்பித் தேம்பி அழுதனன்
தேவதையொன்று நெருங்கி வந்து
தேவையென்ன என்று கேட்டது.
அருகில் இருக்கும் குளத்தில்
அருமைக் கோடரி விழுந்ததை
அழுதபடி கந்தன் தேவதை
அதனிடம் சொல்லி வருந்தினன்
குளத்தில் மூழ்கிய தேவதை
தங்கக் கோடரியை நீட்டியது
இதுவல்ல எனது என்றே
ஏற்க மறுத்தான் கந்தன்
மீண்டும் ஒருமுறை மூழ்கியே
வெள்ளிக் கோடரி கொடுத்தது
இதுவும் எனதல்ல கூறியே
மறுத்து விட்டான் கந்தன்
மூன்றாவது முறை மூழ்கியே
முற்றும் தேய்ந்த கோடரியை
முன்னால் நீட்டியது தேவதை
மகிழ்ந்து ஏற்றான் கந்தனே!
பேராசை அற்ற குணத்தினால்
பெரிதும் நெகிழ்ந்த தேவதை
தங்க வெள்ளி கோடரியையும்
தந்து விட்டு மறைந்தது…!
நீதி: தன்பொருள் மட்டும் கொள்வோர்க்கு,தானாய் செல்வம் சேர்ந்திடும்..