கடலும் மனிதனும் : 10 – நடனமாடும் பூனைகளின் காய்ச்சல் – நாராயணி சுப்ரமணியன்
தொடர் | வாசகசாலை
“தவறு செய்தது கடல் அல்ல
கடல் எந்தத் தவறும் செய்யவில்லை
கடல் என் வாழ்க்கை
கடல் என் மதம்
கடல் எனக்கு இதமளிக்கிறது.
சாகப்போகிறேன் என்று நான் நினைத்தபோது
கைகள் மரத்துப்போனபோது
கடலிடம்தான் போய் அழுவேன்
கடல் என்னைக் கைவிட்டதேயில்லை
என் இரத்தநாளங்களில் கடல்தான் ஓடுகிறது.”
மினமாட்டா கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒரு மீனவரின் பாடல் இது. ஜப்பானின் சமீபகால வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிட்ட சூழலியல் பேரிடர்களில் மினமாட்டா நோயும் ஒன்று. சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.
ஒரு சாதாரண கடற்கரை கிராமத்தின் பெயர், நோய்க்கு வைக்கப்படுகிறது, சர்வதேச ஒப்பந்தத்துக்கு வைக்கப்படுகிறது. இன்றும் அந்த நோயின் அதிர்வலைகள் ஓயவில்லை. Eco disaster, Eco-epidemic போன்ற பல தலைப்புகளைப் பேசும்போது கட்டாயம் உச்சரிக்கப்படும் பெயர், “மினமாட்டா”.
என்னதான் நடந்தது மினமாட்டாவில்?
கீசி யோஷியோகாவின் சிஸ்ஸோ நிறுவனம், ஜப்பானின் தென்மேற்குக் கடற்கரை கிராமமான மினமாட்டாவில் 1908-இல் தொழிற்சாலை ஒன்றை அமைத்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்த நிறுவனம் அசிடால்டிஹைடு உட்பட பல வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் ஒரே நிறுவனமாக மாறியது. தொழில் சூடு பிடித்தது. தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன.
1950களின் தொடக்கத்தில் மினமாட்டாவைச் சேர்ந்த பல பூனைகளை விநோதமான நோய் ஒன்று தாக்கியது. அவை கன்னாபின்னாவென்று துள்ளி ஆடி, அங்கங்கே போய் இடித்துக் கொள்ளத் தொடங்கின. சில நாட்களில் இறந்தன. “நடனமாடும் பூனைகளின் காய்ச்சல்” (Dancing cat fever) என்று அந்த நோய் அழைக்கப்பட்டது.
பறந்து கொண்டிருந்த காக்கைகள் செத்து விழுவது, இறந்த மீன்கள் கடலில் மிதப்பது, சிப்பிகள் தானாகவே திறந்து கொள்வது, கடல்பாசிகளே வளராமல் வெறிச்சோடிய கடற்படுகைகள் என்று பல நிகழ்வுகள்.
வலிப்பு, நடப்பதிலும் பேசுவதிலும் தடுமாற்றம் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரம்பு மற்றும் மூளை சார்ந்த, அறியப்படாத நோய் ஒன்று உருவாகியிருப்பதாகப் பொதுநலத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1956-இல் குமாமாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறையினர் இந்த நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் களமிறங்கினார்கள். ஆய்வில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயால் இறந்த பூனைகள் எல்லாரும் கடலோரங்களில் வசிப்பவர்களாகவும் அதிகம் மீன் உணவுகள் உண்பவர்களாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள்ளேயே “Heavy metal poisoning” எனப்படும் உலோக நச்சுதான் நோய்க்குக் காரணம். அந்த உலோகம் கடல்சார் உணவுகளிலிருந்து வந்திருக்கலாம்.” என்று ஆய்வுக் குழு அறிவித்தது. சிஸ்ஸோ தொழிற்சாலைகளிலிருந்து கடலில் கொட்டப்படும் கழிவுநீரிலிருந்து இந்த நச்சு வந்திருக்கலாம் என்றும் அறிவித்தார்கள்.
“இந்த சூழலில் கூடிய வரையில் மீன்கள், சிப்பி, கிளிஞ்சல் ஆகியவற்றை உண்பதைத் தவிர்ப்பது நல்லது” என்று 1957-இல் பொதுவான ஒரு பரிந்துரையை வெளியிட்டது ஜப்பானிய அரசு.
மனிதனுக்கு நஞ்சாக மாறக் கூடிய உலோகங்களை ஆய்வுக் குழுவினர் ஒவ்வொன்றாகப் பரிசோதித்தனர். 1959-இல் “கரிம பாதரசம்தான் இந்த நோய்க்குக் காரணம்” என்று உறுதி செய்யப்பட்டது. இந்தக் கரிம பாதரசம்(Organic Mercury) எங்கிருந்து வந்திருக்கலாம் என்று யோசித்த ஆய்வுக்குழுவினர் உடனடியாக தொழிற்சாலைக் கழிவு நீரை ஆய்வு செய்தனர். கழிவுநீர் கடலில் கலக்கும் இடத்தில் 2000 பி.பி.எம் கரிம பாதரசம் கண்டுபிடிக்கப்பட்டது. “அசிடால்டிஹைடை உருவாக்கும்போது மித்தைல் பாதரசம் உருவாகும். அதைத்தான் கழிவுநீர்க் குழாய்களில் வெளியேற்றியிருக்கிறார்கள்” என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.
தொடர் விசாரணைகளில், இந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போதே சிஸ்ஸோ நிறுவனம் ரகசியமாகக் கழிவு நீர்க் குழாய்களை நேரடியாக நதியின் முகத்துவாரத்தில் மாற்றியமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி மாற்றியமைத்ததால் கழிவுநீரின் நச்சு இன்னும் அதிகமாகக் கடலில் சேரத் தொடங்கியிருந்தது!
அதன் பிறகு நிகழ்ந்தவை எல்லாமே நாம் யூகிக்கக் கூடியவைதான். “இல்லவே இல்லை… எங்கள் தொழிற்சாலையில் நடக்கும் எந்த வேதிவினையின் போதும் கரிமப் பாதரசம் உருவாக சாத்தியமே இல்லை” என்று சிஸ்ஸோ மறுத்தது. உள் வட்டாரங்களோ, “இந்த வேதிவினையின்போது பாதரசம் உருவாகும் என்பதும், அது கழிவுநீரில் சேர்க்கப்படும் என்பதும் தெரிந்த ரகசியம்தானே” என்றார்கள்!
“நீங்கள் முதலில் தப்புத் தப்பாக வேறு உலோகங்களைத்தானே சொன்னீர்கள்? அப்படியானால் உங்களது ஆய்வு முடிவுகள் நம்பத் தகுந்தவையா? நீங்கள் சொல்லும் ஆய்வு முடிவுகளை ஏற்க முடியாது” என்று ஆராய்ச்சியாளர்களைக் குறை சொன்னது சிஸ்ஸோ நிறுவனம்.
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மக்கள் நோய்வாய்ப்படுவதும் இறப்பதும் தொடர்ந்தபடியேதான் இருந்தது. கழிவுநீர் கொட்டப்படுவது நிறுத்தப்படவேயில்லை. மினமாட்டாவின் நகர மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஹோசோகாவா, தானே ஆராய்ச்சியில் இறங்கினார். கழிவுநீர் கலந்த உணவைப் பூனைகளுக்கு அளித்தார். பூனைகளுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறி, பரிசோதனை முடிவுகள், இறந்த பூனைகளின் உடற்கூராய்வு எல்லாவற்றையும் சேர்த்து ஆராய்ந்து, “கழிவுநீரில் இருக்கும் மீத்தைல் பாதரசம்தான் இந்த நோய்க்குக் காரணம்” என்றார். அவரை மிரட்டி விவரங்களை வெளியில் விடாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்தது சிஸ்ஸோ.
சிஸ்ஸோ தொழிற்சாலை அமைக்கப்பட்டதிலிருந்தே மீன்களின் உற்பத்தி தொண்ணூறு சதவிகிதம் குறைந்திருந்தது. இதனால் மீனவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். நதியின் முகத்துவாரத்துக்குக் கழிவுநீர்க் குழாய் மாற்றப்பட்டதும் இருந்த கொஞ்சநஞ்ச வாழ்வாதாரமும் அவர்கள் கையை விட்டு நழுவத் தொடங்கியது. இந்தக் கழிவுநீர்தான் நோய்க்கும் காரணம் என்ற உண்மையும் வெளியில் வந்த பிறகு சிஸ்ஸோ நிறுவனத்துக்கு அழுத்தம் அதிகமானது. 1959 நவம்பர் 2 ஆம் தேதி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இழப்பீடு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஸ்ஸோ தொழிற்சாலையின் பல கருவிகள், இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தேசிய ஊடகங்களின் கவனத்திற்குப் போனது மினமாட்டா மக்களின் துயரம். அனைவரும் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
அரசு, செய்தி ஊடகங்கள், பொதுமக்களின் அழுத்தம் எல்லாமாகச் சேர்ந்து சிஸ்ஸோவைத் துரத்தின. “நாங்கள் கழிவுநீரை சுத்திகரித்த பிறகே கடலுக்குள் விடப் போகிறோம்” என்று அறிவித்து விட்டு 1959 இறுதியில் ‘சைக்ளேட்டர்’ என்ற சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவியது சிஸ்ஸோ. “சைக்ளேட்டரிலிருந்து வரும் நீர் முற்றிலும் பாதுகாப்பானது” என்று சொன்ன சிஸ்ஸோ நிறுவனர் கீசி யோஷியோகா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் அந்தத் தண்ணீரைக் குடித்தார்! “இந்த நீர் பாதுகாப்பானது” என்று பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார்! (பின்னாட்களில் அது ஒரு மோசடி என்று தெரிய வந்தது!)
நோய் தொடர்ந்தது, இறப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. பேசியதையே தொடர்ந்து பேசுவது, கை/கால் தடுமாற்றம், பேச்சில் தடுமாற்றம், குகைப்பார்வை (Tunnel vision), கைகால்கள் மரத்துப் போவது, செயலிழப்பு என்று பலதரப்பட்ட அறிகுறிகளோடு மக்கள் நோய்வாய்ப்பட்டனர். தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் இறந்தார்கள். ஒருகட்டத்தில் தொப்புள் கொடித் தடுப்பு (Placental Barrier)என்பதையும் தாண்டிப் பரவியது நச்சுத்தன்மை. கருவிலிருக்கும் சிசுக்களை பாதிக்கத் தொடங்கியது பாதரசத்தின் விளைவு.
உடலில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாதரசம் இருக்கும் பெண்கள் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்! மூளை முடக்க நோய், திடீரென்ற கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, பிறந்த குழந்தைக்கு மூளை/நரம்பு மண்டல பாதிப்பு, வளர்ச்சிக் குறைபாடுகள், ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவது என்று தலைமுறைகள் தாண்டித் தனது கோரப்பற்களை நீட்டியது மித்தைல் பாதரச நஞ்சு.
இத்தனை நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அசராமல் அசிட்டால்டிஹைடு உற்பத்தியை மேலும் அதிகப்படுத்தியது சிஸ்ஸோ. 1959லேயே இந்த நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் 10 ஆண்டுகள் இந்த சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நடுவில் நடந்த பல ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் அழிக்கப்பட்டன. ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம்பத்தகுந்தவை அல்ல என்று சொல்வது, இது சார்ந்த விசாரணைக்குழுக்களின் மெத்தனப்போக்கை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்று எல்லா வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொன்ன பத்திரிக்கையாளர் யூஜின் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஐலீன் ஸ்மித் இருவரும் மோசமாகத் தாக்கப்பட்டார்கள். (இந்தக் கட்டுரையில் காணப்படும் புகைப்படங்கள் அவர்கள் இருவராலும் எடுக்கப்பட்டவையே.)
1968-இல்… அதாவது முதல் நோயாளி கண்டறியப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, “கழிவுநீரைக் கடலில் கலக்கக் கூடாது” என்று ஒருவழியாக சிஸ்ஸோ நிறுவனத்துக்குத் தடை விதித்தது ஜப்பானிய அரசு. 1969-இல் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகு ஒவ்வொருவராக இழப்பீடு பெறத் தொடங்கினார்கள்.
இது போன்ற சூழலியல் வழக்குகள் எத்தனை இழுத்தடிக்கப்படும், பெருநிறுவனங்கள் இந்த வழக்குகளை எப்படிக் கையாளும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புவோர் Erin Brockovich என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட எல்லா பாதிப்புகளையும் சந்தித்த பிறகு ஒரு களிம்பாகக் கூட இந்த இழப்பீடு இருக்காது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
கழிவுநீரில் கலந்திருந்த பாதரசம் எப்படி மீன்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது?
சூழலியலில் Bioaccumulation, Biomagnification என்று இரு கருத்தாக்கங்கள் உண்டு. ஒரு விலங்கின் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சேரும் வேதிப்பொருள், காலப்போக்கில் அந்த உடல் முழுவதும் பரவி விடும். அந்த வேதிப்பொருள் கழிவாக வெளியேறாமல் உடல் திசுக்களில் சேர்ந்து கொள்ளும். இதைத்தான் Bioaccumulation என்கிறார்கள். மாசுபட்ட சூழலிலேயே தொடர்ந்து பல நாட்கள் வாழும் விலங்குகளின் உடலில் இப்படி நச்சு சேரும்.
Biomagnification என்பது உணவுச்சங்கிலியால் வேதிப்பொருளின் அடர்த்தி அதிகரிப்பது. ஒரு பாசியின் உடலில் ஒரு கிராம் நச்சு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பத்துப் பாசிகளை சாப்பிடும் ஒரு சிறு மீனின் உடலில் பத்து கிராம் நச்சு சேர்ந்து விடுகிறது. பத்து சிறு மீன்களை உண்ணும் ஒரு வேட்டை மீனின் உடலில் நூறு கிராம் நச்சு சேரும்! கடலின் வேதியியல் மற்றும் பருப்பொருள் கூறுகள் மாறுபட்டவை. ஆகவே நிலத்தோடு ஒப்பிடும்போது கடல் சூழலில் இந்த இரு நிகழ்வுகளும் அதிகமாக நடக்கும்.
பாதரசம் உள்ள மூலக்கூறுகளிலேயே மித்தைல் பாதரசம்தான் மிகவும் ஆபத்தானது. இதன் வேதியியல் கூறுகள் சற்றே மாறுபட்டவை என்பதால் எளிதில் Bioaccumulation, Biomagnification இரண்டிலும் மித்தைல் பாதரசத்தால் பங்கேற்க முடியும். உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் வேட்டை விலங்குகளின் உடலில் மிக அதிகமான பாதரச அடர்த்தி சேர்ந்து விடக் கூடிய அபாயம் இருக்கிறது. கடல் நீரோடு ஒப்பிடும்போது பத்து லட்சம் மடங்கு வரை பாதரச அடர்த்தி அதிகரிக்கலாம்! பாதரசத்தால் மாசுபட்ட கடற்பகுதிகளிலிருந்து பிடிக்கப்படும் சுறா, சூரை, மயில்கோலா, கத்திமீன் போன்றவற்றை உண்பது ஆபத்தானது.
இந்த சூழல்சார் கொள்ளைநோயிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
எவரும் நோய்வாய்ப்படுவதற்கு முன்பே கடலில் பாதிப்பு இருப்பதை மீனவர்கள் சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஆனால், அந்தப் பேச்சு இழப்பீடு பற்றிய விவாதம் என்பதாகச் சுருங்கி விட்டது. ஒரு இடத்தில் இருக்கும் பாதிப்பு பற்றிய உள்ளூர் மக்களின் புகார்கள் உடனடியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு இடத்துக்குக் களப்பணிக்குச் சென்றால், “இந்த பைப் போட்டாங்க/இந்த பாலம் கட்டினாங்க/இந்த ஃபேக்டரி வந்திச்சு. அதிலேர்ந்து…” என்று ஒரு தூரத்துக் கட்டிடத்தைக் காட்டி ஊர்ப் பெரியவர்கள் பேசத் தொடங்குவார்கள். நிச்சயம் அது ஒரு சூழலியல் பேரிடரின் ஆரம்பப் புள்ளியாகத்தான் இருக்கும். இது போன்ற குரல்கள் மதிக்கப்பட வேண்டும்.
சிஸ்ஸோவால் மினமாட்டா கிராமம் பெற்ற பொருளாதார வளர்ச்சி முக்கியமானதாக இருந்தது. அதனால் நிறுவனம் பற்றிய ஆரம்பகாலப் புகார்கள் பெரிதாகக் கொண்டு செல்லப்படவில்லை. ஒரு காலகட்டத்தில், “சிஸ்ஸோவின் கோட்டை” என்று கூட மினமாட்டா அழைக்கப்பட்டது. சூழலியல்சார் சிக்கல்களைப் பேசும்போது அந்த நிறுவனத்துக்கும் ஊருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதையும் பேச வேண்டியதாக இருக்கிறது.
“நச்சுத்தன்மை இருக்கலாம்” என்று தெரிந்த பின்பும் ஊர் மக்கள் தொடர்ந்து மீன் சாப்பிட்டார்கள். சாகசம் செய்வதற்காக அல்ல, மீன் உணவு சார்ந்த பழக்கத்தை விட்டுத் தர முடியாமல் சாப்பிட்டார்கள். மைக்கேல் போலன் என்கிற உணவியல் ஆய்வாளர் இதைத்தான் “சின்ன உணவுச் சங்கிலி” என்கிறார். அதாவது எந்த ஒரு தொழில் நிறுவனமும் குறுக்கிடாமல் இயற்கையிலிருந்து நேரடியாக மனிதன் உணவைப் பெற்றுக் கொள்ளும் தன்மை இது. தொன்மமான வாழ்க்கை முறை உள்ளவர்கள் இயற்கை சார்ந்தே இருக்க விரும்புவார்கள். நச்சுத்தன்மை இருக்கலாமோ என்ற சிறிய சந்தேகத்தை விடவும், மீன் என்பது இயற்கை தரும் கொடை என்ற நம்பிக்கையே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது” என்று எழுதுகிறார் ஆராய்ச்சியாளர் மாசாமி யுகி. எந்த ஒரு சூழலியல் பிரச்சனையும் அந்த இடத்தின் மரபின் பின்னணியிலேயே அணுகப்பட வேண்டும் என்பதற்கு மினமாட்டாவின் மீன் உணவு முறை உதாரணம். மீன் உணவின் மீதான அழுத்தமான தடை இருந்திருந்தால் நோயின் தீவிரம் ஓரளவாவது குறைந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த சிக்கல் வந்த புதிதில் ஜப்பானில் சூழலியலுக்கென்று ஒரு தனி சட்டம் இருக்கவில்லை. 1967-இல்தான் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய சட்டம் இயற்றப்பட்டது. சட்டம் அமலாக்கப்பட்ட பின்பும் கூட “இந்த நோய் ஒரு சூழலியல் பிரச்சனைதானா?” என்ற குழப்பம் நிலவியது. பல விவாதங்களுக்குப் பிறகே இந்த நோய் சூழலியல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சூழல் சார்ந்த தெளிவான சட்ட வரையறைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் இந்தப் பேரிடர் உணர்த்துகிறது.
2013-இல் ஐக்கிய நாடுகள் சபையில் “சர்வதேச மினமாட்டா ஒப்பந்தம்” கையெழுத்தானது. பாதரசம் மற்றும் அது சார்ந்த வேதிப்பொருட்களை உருவாக்குவதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்தியது. இந்தியா உள்ளிட்ட 130 நாடுகள் இதில் கையெழுத்திட்டன.
1953-இல் தொடங்கி 2011 வரை 2271 பேர் மினமாட்டா நோயால் பாதிக்கப்பட்டார்கள், அதில் 1784 நோயாளிகள் இறந்தனர். கருவிலேயே பாதரசத்தால் பாதிக்கப்பட்ட, உடல்சவால் உள்ள ஒரு தலைமுறை இன்னமும் மினமாட்டாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சூழல் சார்ந்த பல்வேறு படிப்பினைகளை உலகுக்கு அளித்த மினமாட்டாவில் இன்றும் பல ஆராய்ச்சியாளர்கள் பாதரசத்தின் காலடித் தடங்களைத் தேடியபடி இருக்கிறார்கள்.
“ஒரு பொய்யின் விலை என்ன?” – செர்னோபில் தொடரின் புகழ் பெற்ற வசனம் ஒன்று உண்டு. மினமாட்டாவின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் “அலட்சியத்தின் விலை என்ன?” என்ற கேள்வி தவறாமல் எழுகிறது.
இது கடலால் மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்ல. மனிதன் கடலுக்கு ஏற்படுத்திய சீரழிவினால் மனிதனே பாதிக்கப்பட்ட வரலாறு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடலின் அரசர்களையே மனிதன் சிறை பிடித்த வரலாறு ஒன்றும் உண்டு… அது என்ன?
– தொடரும்…