காற்றின் போக்கில்…
பழுத்த இலையுடன் உறவாடுவதை
மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன
பசிய கிளைகளுடனான தொடர்பை
உதற முடியவில்லை
பழுத்த இலைக்கு
பச்சை கண்ணுக்கு குளர்ச்சி
மற்றபடி நிறத்திலா
உயர்வு தாழ்வு இருக்கிறது
இயற்கையின் பருவமாற்றம்
எல்லா உயிர்களுக்கும்
பொதூவானது தானே
உதிரும் பழுத்த இலைக்கு
காற்று மலர் பஞ்சணை விரிக்கிறது
மரத்தில் ஒரு பாகமாய்
இருப்பதைவிட
மண்ணில் சருகுகளாய்
காற்றின் போக்கில் அங்குமிங்கும்
அலைக்கழிக்கப்படுவது
அடிமைத்தனத்திலிருந்து மீண்டு
சுதந்திர உலகிற்கு
பிரவேசித்த அற்புத உணர்வை
ஏற்படுத்தியது பழுத்த இலைக்கு
முகவரி மரத்திலிருந்து
மண்ணுக்கு மாறுவதால்
என்ன குறைந்துவிடப் போகிறது
மக்கி எருவாகவில்லை என்றால்
இந்த மரம் ஏது
மனிதன் ஏது!
*****
பிம்பம்
வாடிக்கையாளரின் வரவை எதிர்பார்த்து
காத்திருக்கிறது சலூன் நிலைக்கண்ணாடி
இங்கு நீங்கள் காணலாம்
பிரம்மனின் படைப்புகள் அசடு வழிய
தன்னைத்தானே பார்த்துக் கொள்வதை
நிலைக்கண்ணாடியில் தோன்றும் பிம்பம்
உங்களுடையவை தானா என்று
எப்படி உறுதிப்படுத்திக் கொள்வீர்கள்
எல்லா கோணங்களிலும்
முகத்தை திருப்பித் திருப்பி
பார்க்கும்போது நிலைக்கண்ணாடி
அலுத்துப் போகாதா என்ன
வசீகரத் தோற்றம் தேவைப்படுவோர்கள்
படையெடுப்பதால்
அழகுநிலையத்தில் நிலைக்கண்ணாடிகளுக்கு
ஓய்வென்பதே கிடையாது
மணப்பெண் அலங்காரத்தை
மணமகனுக்கு முன்
நிலைக்கண்ணாடிதானே பார்க்கிறது
சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து
முகம் பார்ப்பவர்கள்
தொலைத்த தன் பிம்பத்தை
நிலைக்கண்ணாடியில் தேடுவார்கள்
அடுத்து உள்ளே நுழைபவரின்
அவலட்சணமான பிம்பம்
வெளியேறுபவரின் பிம்பத்தை
முறைத்துப் பார்க்கும்
சாதாரணமாக மொட்டை அடித்தாலும்
சலூன் கடைக்காரருக்கு
துக்க நிகழ்வைத்தான் ஞாபகப்படுத்தும்
கடந்து போனவர்கள்
மரணித்துவிடலாம் அவர்களில்
யார் அழகென்று நிலைக்கண்ணாடிக்கு
மட்டுமே தெரியும்!
*****
நிசப்தம்
அறையில் யாருமில்லை
மின்விசிறி ஓடிக் கொண்டிருந்தது
கோப்பையில் இருந்த காபி
ஜில்லிட்டுவிட்டது
ஆஷ்ட்ரே சாம்பலால் நிரம்பியிருந்தது
காலத்திற்ரு முக்கியத்துவம்
இல்லாவிட்டாலும்
கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது
மின்விளக்கு வெளிர் மஞ்சை
நிற ஒளியினை
உமிழ்ந்து கொண்டிருந்தது
சாளரத்தை மறைத்திருந்த
திரைச்சீலை காற்றினால்
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது
மாட்டியிருந்த புகைப்படத்திலுள்ள
பிம்பங்கள் தங்களுக்குள்
பேச ஆரம்பித்தன
காற்று விரித்து வைக்கப்பட்டிருந்த
புத்தகங்களின் பக்கங்களை
புரட்டிக் கொண்டே போகிறதே தவிர
எந்த ஒரு வரியையும்
படித்ததாக தெரியவில்லை
மனிதனைப்போல!
*****
முடிவல்ல தொடக்கம்
பறவைகளுக்கு பறக்க யாரும்
கற்றுத்தருவதில்லை
வசந்தம் வரும்போதே
உனக்கு தெரிந்திருக்க வேண்டும்
வேனிற்காலமும் கூடவே
வருமென்று
படித்துறை பாசியால்
வழுக்கி விழுந்தவர்கள்
திரும்ப குளத்துநீரில்
இறங்குவதில்லையா என்ன?
என்றாவது கொடுத்த வாக்கினை
காப்பாற்ற தவறியதற்காக
குற்றவுணர்ச்சி கொண்டிருக்கின்றாயா?
தேய்ந்த செருப்புடன்
செல்லும் நீ
எதிரே செருப்பில்லாமல்
வருபவனைப் பார்த்து
ஆறுதலடைய வேண்டாமா?
வாழ்வில் சோதனைகளுக்கு
தீர்வு தேடி அலைபவனா நீ
உனக்கொன்று சொல்கிறேன்
இந்த வாழ்க்கை அப்படியொன்றும்
முக்கியமானதல்ல
இறப்புக்குப் பின் தான்
வாழ்வின் தொடக்கமே
இருக்கின்றது!
*****
திசைகாட்டி
தேன் கலந்த வார்த்தைகளில்
மகுடிப் பாம்பாய் மயங்குபவர்கள்
எதைப் பற்றியும் யோசிக்காமல்
கையிலிருக்கும் காசை
கொடுத்துவிட்டுப் போவார்கள்
காவி உடுத்தியவர்களெல்லாம்
கடவுள் அருள் பெற்றவர்கள் என
கபடவேடதாரிகள் எல்லை
மீறும் போதெல்லாம்
எதிர்க்காமல், தடுக்காமல்
தன்னை இழந்து திரும்புவார்கள்
எண்ணற்ற கண்ணகிகள்
ஆறடி நிலத்தில்
தன் ஆயுளை முடிக்கும்வரை
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
தன்னுடையதாக இருக்கவேண்டுமென
மனக்கணக்கு போடுவார்கள்
ஆன்மிகச் செம்மல்கள்
குறுக்கு வழியில்
அரியணை ஏறியவுடன்
எவ்வித தயக்கமுமின்றி
அனைத்திற்கும் கர்த்தா
தானென்றும் தன்னை
உலகைப் படைத்த
கடவுளென்றும் கூட
பிரகடனப்படுத்திக் கொள்வார்கள்
தான் நினைத்தது
நடக்காத போது
இறைவன் மீது பழிபோடுபவர்கள்
தான் ஏற உதவிய
ஏணியை என்ன செய்தோம் என்று
எண்ணிப் பார்க்க மாட்டார்கள்
இடறி விழும்போது
மட்டும்தான் இவர்களுக்கு
கல் கடவுளாகத் தெரியும்
மனித தன்மையற்றவர்கள்
தனக்கு விதிவிலக்குவேண்டுமென கடவுளிடம்
பேரம் பேசுவார்கள்
ஏக இறைவன் இவர்களென்றால்
சாவைக் கண்டு ஏன்
ஓடி ஒளிகிறார்கள்
வங்கிக் கணக்கில் பணமிருந்தால்
சுவர்க்கத்தில் இடம் கிடைத்துவிடுமா
என்ன?
உனது காகிதப் பணத்துக்கு
மயானம் வரைதான் மதிப்பென
அப்போது தெரிந்து போய்விடும்
உனக்கு!
*****
இவனுக்குப் பெயர்தான் இறைவன்
கடவுள் தன் சாயலிலேயே
மனிதனைப் படைத்தார் என்கிறது
வேதகாமம்
பூரணமடையாத இவ்வுலகில்
படைப்பிலிருந்து வெளிப்படும்
ஆற்றல் எந்த
விதியைக் கொண்டு
தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு
விடை தேவைப்படுகிறது
சீதையை ஏமாற்ற
ராவணம் ராமனாக
உருமாறிய போது
முதன்முறையாக மனசாட்சியின்
குரலைக் கேட்டான்
வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்கள்
சாத்தான் தான்
கடவுள் என்பார்கள்
தெய்விகத்தை தேடி அலைபவர்கள்
எத்தனை பிறவி எடுத்தாலும்
கடைசியில் ஏமாந்து தான்
போவார்கள்
போகம் எனும் பாவச்சேற்றில்
மூழ்கியவர்களை யாரும்வந்து
தட்டி எழுப்ப மாட்டார்கள்
கதவைத் தட்டுவது
கடவுள் என்று தெரியாமல்
அறையில் மதுவுக்கு
அடிமையாகி கிடப்பார்கள்
அகிம்சைக்கு தோட்டாக்ளைப்
பரிசாகத் தந்த தேசத்தில்
ஆலயங்கள் வியாபார
ஸ்தலமாக மாறிவிட்டன
ஏழைகள் மிகுந்த நாட்டில்
அருள்பாலிக்கும் கடவுள்கள்
பணக்காரர்களாக இருக்கின்றார்கள்
ஏழைகளுக்குத் தேவை
போதனையல்ல
ஒருகவளம் சோறு
உலகில் சாஸ்திரங்கள்
தப்பிக்க உதவும்
கேடயங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது
உண்மையை அறிந்தவர்கள்
இவர்தான் கடவுளென்று
பிச்சைக்காரனை அறிமுகப்படுத்தினால்
உன் மனம் ஒத்துக்கொள்ளுமா
இறந்தவனைக் கேட்டுப்பார்
மீண்டும் பிறக்க
ஆசைப்படுகிறாயா என்று!
அருமையான கவிதைகள் மிகவும் சிறப்பாக புதிய பார்வையோடு எழுதி இருந்தது
நன்றியுடன்
தாழை .இரா.உதயநேசன்