யவ்வனம்
கருணையற்றது காலம்.
யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி
நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம்
இப்போது
வயோதிகத்தின் வனாந்திரத்தில்
தனித்தலைகிறார்கள்.
*****
புலரும் காலை
தரை துடைக்கும் சப்தத்தில்
கண் விழிக்கிறார்கள்
ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள்
“எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்”
என்றதோடு ஓய்ந்து போனான்
அறிவிப்பாளன்
துயரத்தின் கசிவில்
சில்லிட்டுக் கிடக்கும்
மார்பிள்ஸ் தரைக் கட்டங்களை
எண்ணி எண்ணிக்
களைத்துப் போகிறான்
இரவுக் காவலாளி
ராஜராஜன் அட்டெண்டரின்
வெறித்தலின் வாதை தாளாது
மேலும் கெட்டித்துப் போனது
தெய்வச் சிலையொன்று.
அப்போதுதான்
முகம் கழுவி வந்திருந்தான்
கேஷ் மற்றும் பில்லிங்கில் இருப்பவன்
இரண்டாவதாக வந்த மேக்ஸி
கேப்-லிருந்து
ஆறாவதாக இறங்கிய நர்ஸ் ஒருத்தியின்
கடைசி வினாடி புன்னகையில்
புலரத் தொடங்குகிறது அவன் காலை.
*****
தனிமையை அருந்துபவர்
ஜோசப் சீனுவாசன்
கர்த்தருக்குள் நித்திரை அடைந்ததை
அறிவிக்கும் போஸ்டர் ஒன்றை
வெறித்தபடி இருந்தார் அவர்.
முன்பொரு நாள்
மூன்றாம் தளத்தின் ஏழாவது படியில்
சில்லிட்டுப் போயிருந்த
பல்லி ஒன்றினருகில் சலனமற்று
அமர்ந்திருந்தார்.
மற்றொரு நாள்
குட்டிகளைத் தொலைத்துவிட்டு
பார்க்கிங்கில் அரற்றிக் கொண்டிருந்த
பூனையின் முதுகை நீவிக்கொண்டிருந்தார்.
பலசமயங்களில் பார்த்திருக்கிறேன்
நள்ளிரவில் இருளில்
பால்கனியின் கம்பிகளைப் பற்றியபடி
அவர் நின்றிருப்பதை.
திரைச்சீலை விலகிய
சில தருணங்களில் பார்த்ததுண்டு
யாருமற்ற நாற்காலி முன்
ஒரு கோப்பைத் தேனீர் வைத்துவிட்டு
பிறிதொன்றில் தனிமையை
அருந்திக் கொண்டிருக்கும் அவரை.
அவருள் ததும்பிய தனிமை
என்னுள் பரவுவதை
உணர்ந்த கணத்தில்
கைகள் பற்றி வாழ்த்துச் சொன்னார்.
இலை உதிரும் ஓசை கேட்கத்தொடங்கியது.
*****
நானறியாத பாதை
புலரியின் வெளிச்சம் தூறும்
விழிக்காத வனமொன்றில்
மூர்க்கமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன்
சரிவிலிறங்கும் கூடைப்பெண்
திடுக்கிட்டுப் பார்க்கிறாள்
காட்டுநெல்லிகள் உதிர்ந்துகிடக்கும் இந்தப்பாதை நானறியாதது
எதிர்பாராத திருப்பமொன்றில்
நீலநிற மலரொன்றை
பரிசளித்துப் போகிறாள் சிறுமியொருத்தி
தசைகளின் திரட்சியில் பூரித்து
இன்னும் வேகம் கூட்டினேன்
எத்தனை நாட்களாயிற்று இப்படி ஓடி….
சட்டென்று வனத்தை அழித்து
அரச ஓவியனொருவன்
வரையத்தொடங்கிய
அரண்மனைத் தூணொன்றில்
தானாகவே ஒட்டிக்கொண்ட
ஆதிவாசியின் இடக்கண்ணில்
முடிந்தது பாதை
பதட்டத்தில் மூச்சடைக்கிறது
துழாவும் கைகளைப் பற்றிக்கொள்கிறாள் அம்மா
களிம்பேறிய மாடத்திலிருந்து
நீலநிற மாத்திரை ஒன்றைத் தருகிறாள்
மூத்திரப்பை கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிலின்
ஓரத்தில் அதே நீலநிற மலர்
சன்னலுக்கு அப்பால் வானம் நிர்மலமாயிருக்கிறது.
******
கரிசனம்
தனித்திருப்பது அவனுக்குப் புதிதில்லை
ஆண்டுக்கணக்கில் அவன் அப்படித்தானிருக்கிறான்
சன்னலுக்கு அப்பால் தெரியும் ஒரு துண்டு வானமும்
எப்போதாவது பார்க்க வாய்க்கும் தெருவும் போதுமவனுக்கு.
இருளில் பொருட்களை உற்றுப் பார்ப்பதும்
சன்னல் கம்பியின் நீளும் நிழல் வெறிப்பதும்
காற்றிலாடும் நூலாம்படையில் சிக்கி மீள்வதும்
நினைவின் உள்ளடுக்குகளில் தொலைந்து போவதும்
என அவனது அன்றாடங்கள் உங்கள் கற்பனைக்கெட்டாதவை.
ஒரு வட்டப்பாதையில் உருளும் கால்பந்துதான் வாழ்வென்றும்
அதன் கருப்பு வெள்ளைக் கட்டங்கள்தான் தினங்களென்றும்
உறுதியாய் நம்புகிறான்
உங்கள் திடீர்க் கரிசனம் அவனுக்கு பேரச்சம் தருகிறது
எப்போதும் போல் அன்பற்று இருங்கள்
மேலும் அவன் முணுமுணுப்பதைக் கேளுங்கள்
“திடீரென நீங்கள் ஊற்றும் குளிர்நீரில் செடி அச்சத்தில்
தன் ஒற்றை மலரை உதிர்த்துக் கொள்ளும்”.
*****
அன்பின் ஆயிரம் மலர்கள்
அகத்திக்கீரை விற்பவருக்கும்
யாசகக் கிழவிக்குமிடையேயான
தடுப்புக்கம்பியில் சாய்ந்தபடி
புறாக்கள் அனத்தும் கோபுரத்தை
கண்கள் பனிக்கப் பார்த்திருந்த
அவனுக்கு வடநாட்டுச் சாயல்.
திடீரென வலிப்பு வந்து
சரிந்த அவனை
திகைத்துப் பார்க்கிறார்கள்
இன்னும் அழ ஆரம்பிக்காத
மனைவியும் சிறுகுழந்தையும்.
ஒருவர் மடியில் கிடத்தி நெஞ்சுதடவ
பிரிதொருவர் பட்டன் தளர்த்த
யாரோ சாவிக்கொத்தைத் திணிக்க
யாரோ விசிற
யாரோ ஆறுதல் கூற
யாரோ ஆட்டோ பிடிக்க ஓட
யாரோ நாக்குகடித்து ஒழுகும் ரத்தம் துடைக்க
கைகூப்பி அழுகிறாள் அவன் மனைவி.
அன்பின் ஆயிரம் மலர்கள் மலர்ந்தன நொடிப்பொழுதில்.
இத்தனை சாமிகள்
இங்கிருக்க
உள்ளே யாரைத் தரிசிக்க
வரிசைக்கூட்டம்….
*****
நகரின் மீது கசியும் இரவு
வதைமுகாம்களின்
கதவிடுக்குகளில் கசியும் குருதியென
நகரத்தின் மீது கசிகிறது இந்த இரவு
ஒளிப்பாம்புகளென இரவுச் சாலைகள்
குழந்தைகளுக்கான புத்தகமொன்றை
வாங்கிக் கொள்ளும்படி இறைஞ்சும் சிறுமியை
புறந்தள்ளிப் பறக்கிறாள்
சிக்னலுக்குக் காத்திருந்த யுவதி ஒருத்தி
தோல்பையைக் குறுக்காக மாட்டியபடி
தலை போர்த்தப்பட்டு கிடப்பவனின் அருகில்
நிறைய ரத்தமும் கொஞ்சம் தின்பண்டங்களும்
கைமுழங்களால் பூவையும் வாழ்வையும்
ஒருசேர அளக்கிறாள் பூக்காரப் பெண்
உணவுப் பொட்டலங்களோடு
உட்புறத்தெருக்களில்
அலைகிறார்கள் டெலிவரிப் பையன்கள்
உறக்கத்தில் மகள்
கொடுத்த முத்தத்தில்
கரைகிறது பகலின் கசடுகள்
“தென்றலிடைத் தோரணங்கள்”
பல்லவி முடித்து
சரணத்தில் நுழைகிறார் இளையராஜா
கிட்டாரிசையில்
மெருகேறிக்கொண்டிருக்கிறது இரவு.