சபிக்கப்பட்டவனின் இரவு
கடிகாரத்தின் நொடி முட்கள்
தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல்
இருக்கிறது
சுவர்க்கோழிகள் சத்தம்
கபாலத்தைப் பிளக்கிறது
குளியலறை குழாயிலிருந்து
தண்ணீர் சொட்டுவது
உச்சந்தலையில் கடப்பாரையால்
தாக்குவது போலிருந்தது
இரவு சர்ப்பம் என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாக
விழுங்கிக் கொண்டிருந்தது
நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்க
நான் மட்டும் கோட்டானாக
விழித்துக் கொண்டிருந்தேன்
காலம் நத்தை போல்
நகர்ந்து கொண்டிருந்தது
கொஞ்சம் கொஞ்சமாக மனம்
பைத்தியத்தின் உச்சநிலையை
அடைந்து கொண்டிருந்தது
எனது மூளை
பேய்களின் சத்திரமானது
கைகள் ஒன்று இரண்டு மூன்று என
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருந்தது
வாழ்வு தேவதை
விடைபெற்றுக் கொண்டது
மரணதேவதை ஆரத்
தழுவிக் கொண்டது
உறங்கிக் கொண்டிருக்கும்
மக்களுக்கு தெரியாது
தற்கொலை மூலமே
கடவுளை வெற்றி கொள்ள
முடியுமென
இனியும் மரணத்தை
வைத்து பூச்சாண்டிக் காட்ட
முடியாதென
அடிமை விலங்கை
உடைத்தெறிய நானொருவன்
போதுமென!
*****
சந்திப்பு
விடுமுறை முடிந்து
பணிக்குத் திரும்ப ஆயத்தமாகி
புகைவண்டி இருக்கையில் அமர்ந்தபடி
கடிகாரத்தின் நொடி முள்ளை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அங்குமிங்கும் நான் பார்க்கையில்
வழியனுப்ப வந்த
நண்பரையோ மனைவியையோ
அவர்களின் கண்களை
நேருக்கு நேராக
சந்திக்கத் தயங்கி
தலையை தாழ்த்திக் கொண்டார்கள்
சந்திப்பில் நடந்து கொண்டிருந்தவர்களையும்
கல் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களையும்
கடந்து சென்றது புகைவண்டி
அடுத்த முறை வரும்போது
வாங்கி வர ஆளுக்கொரு
பட்டியல் தந்திருந்தார்கள்
மனைவியை தவிர்த்து
அம்மாவுக்கு அப்புறம்
அவள் தான் என்னை
கண்ணும் கருத்துமாக
கவனித்துக் கொள்வது
விடைபெறும் போது
அவள் சட்டைப் பையில்
திணித்ததை எடுத்துப் பார்த்தேன்
ஐயனாரு கோயில்
விபூதியும் குங்குமமும்
அடுத்த முறை ஊருக்கு
நான் திரும்பும் வரை
குடும்பத்தை அந்த
ஐயனாரு தான் காக்கவேணும்!
*****
நாங்கள் ஊமைகளல்ல…
எங்களுக்கு தலைவன்
தேவையில்லை
யாருக்கும் வாலாக இருக்க
நாங்கள் விரும்பவில்லை
உதட்டளவில் புரட்சியைப் பற்றிப்
பேசும் வெற்று வேதாந்திகள்
எங்கள் புத்திக் கூர்மையை
மழுங்கச் செய்வதற்கு
புறப்பட்டு வர வேண்டாம்
இந்த சுதந்திர நாட்டில்
உரிமை கேட்டு
கை உயர்த்துபவர்கள்
தரித்திரத்தின் சின்னங்களா
கண்களையும் காதுகளையும்
திறந்துவிட்டு வாயினை
தைப்பதுதான் உங்கள் அகராதிப்படி
ஜனநாயகமா
பதவி பெறுவதற்காக
நடத்தப்படும் யாகத்தில்
பலி கொடுப்பதற்காக வளர்க்கப்படும்
பலியாடுகளா நாங்கள்
அரசியல் சூதாட்டத்தில்
உருட்டப்படும் தாயக்கட்டைகள் தான்
மக்களின் தலையெழுத்தையே
தீர்மானிக்கிறதா
காற்று இப்போது
எங்கள் பக்கம் வீசுகின்றது
பணயப் பொருளாக
எதை வைத்து ஆடுவது என்று
நீங்கள் தான்
தீர்மானிக்க வேண்டும்!
*****
ஞாபகநதி
நகரங்களில் முள்வேலியைக்
காண முடியாது
கொல்லையில் உள்ள செடிகளைக்
காப்பதே முள்வேலியின் வேலை
செருப்பின்றி தும்பியைத் துரத்தும்
சிறார்களின் பாதத்தை
பதம் பார்க்கும் கருவேலமுட்கள்
துர்நாற்றமடிக்கும் சந்தினை
கடக்கும் துணிவு
யாருக்கும் இருந்ததில்லை
வேலியோர மலத்தை
தின்று வயிறு வளர்க்கும்
நாய்களின் கூட்டம்
கல்லடிக்குப் பயந்து
சிறார்களைப் பார்த்தாலே
சிட்டாய்ப் பறக்கும்
சுள்ளிகள் பொறுக்க வருபவர்கள்
காய்க்கின்ற மரத்தின்மீது
கல்லெறியாமலா போவார்கள்
அன்றொருநாள் எதேச்சையாக
என் கிராமத்தைக் கடக்கையில்
மூத்திர வாடை அடித்தது
என்னிடம் அடிவாங்கிய
நாயொன்று கிராமத்தின்
எல்லை வரை
என்னை துரத்திவந்தது
பால்யத்தில் நெருஞ்சி முள்
குத்திய பாதத்தில்
இப்போது சுருக்கென்றது
தான் கக்கியதை தின்னும்
நாயாக மனம் உழன்றது
அக்கரைக்கு வந்துவிட்டாலும்
நதியின் ஞாபகங்கள்
தோளிலிருந்து இறங்க மறுத்தன!
*****
ஹேராம்!
அவதாரத்திற்கே
மாயமான் எது
நிஜமான் எதுவென்று
அடையாளம் காணமுடியவில்லை
லெட்சுமணனின்
நடத்தையை சந்தேகித்ததுடன்
கோட்டையும் தாண்டிவிடுகிறாள் சீதை
ராமன் வடிவில் வந்த ராவணன்
சீதையை ஏமாற்றி புஷ்பகவிமானத்தில்
லங்கைக்கு கவர்ந்து சென்றுவிடுகிறான்
சுக்ரீவன் ஆதரவைப் பெற
தர்மநெறி தவறி
வாலியை மறைந்திருந்து
வதம் செய்கிறான் ராமன்
ராமனின் கணையாழியுடன்
கடல் தாண்டிய அனுமன்
அசோகவனத்தில் சீதையைக்
கண்டதற்கு சாட்சியாக
சூடாமணியுடன் திரும்பி வருகிறான்
கொண்டாட்டங்களுக்கு நடுவே
லங்கை பற்றி எரிகிறதே
சீதை என்ன ஆவாளோ என
வானரங்கள் கலங்கவில்லை
வானரங்கள் ஏற்படுத்திக்
கொடுத்த சேதுப்பாலம்
படைகள் கடலைக் கடக்க
உதவியது
சீதையின் அனுமதியில்லாமல்
அவளைத் தீண்டக்கூடாது என்ற
இராவணனின் தர்மநெறி தான்
அவன் மரணத்துக்கு வித்திட்டது
உத்தமனான ஸ்ரீராமனிடம்
தன் கற்புநெறியை
நிரூபிக்க ஏன் சீதை
அக்னிப்பிரவேசம் செய்ய
நேர்ந்தது என்று இன்றுவரை
தெரியவில்லை
சத்தியத்தை தன் வாழ்க்கையில்
பரிட்சித்துப் பார்த்த
காந்தி தான்
எனக்கு ஞாபகம் வருகிறார்
ராமனைத் தொழுதால்
தீங்கு செய்யும்
எண்ணமே எழாது என்கிறார்
ஹேராம்!