இப்பொழுதுகள்!
இயற்கை பேருருக் கொண்டு
வஞ்சித்த இப்பொழுதுகளில்
உடல் முழுவதும் தீண்டும் பசியால்
வெளிக்காட்டாத ஊற்றுக்கண்களாய்
துயருரும் ஓடையில் மிதக்கின்றன விழிகள்
நிதம் காற்றைத் தின்று,
பசியாற மனதிற்குள்
நடக்கும் யுத்தத்தை மதகடைத்தப்பின்
வீசும் வாளாய் உயிர் ஆவியைக் கொண்டு நுகர்ந்திருக்கிறோம்
உயிர்ச் சித்திரம் தடயமற்று
கரைந்திருக்க ஒருகவளை சோற்றுக்காய்
காத்திருந்து நா வறண்டு
எதன் பொருட்டோ வரும் வாசனையை
மூச்சுக்குள் இருத்துகிறோம்
பின் அறையெங்கும் சோற்றுத் துகளாய்
சிதறிக் கிடக்க அள்ள அள்ளக்
குறையாது நிறைய,
துணுக்குற்று எழுந்து
அத்தனையும் கனவுதான்
என உணர்கையில் மொத்தமாய் சாகிறோம்
பசிகொண்ட வயிற்றின் மேல்
நிதானமாய்தான் கடக்கின்றன
ஊரடங்கு இரவுகள்!
*****
துளி மிச்சமுள்ளது
பெருமழைக்கு நிரம்பாத
நதியொன்று வெப்பத்தைப் பருகும்
நிலையதனில் நிர்மாணிக்கப்படாத
நீரற்ற நதியாகவே ஓடிக் கொண்டிருந்தது
முன்பொரு பொழுதில் கரையொதுங்கிய
அலையாத்திப்பூ
கரைகளில் வந்தமரும்
வெண் கொக்குகளுக்குப் பிளவுற்றிருக்கும்
நதியின் கதையைச் சொல்லித் திகிலுற்றது
பின் விளையாட்டு மைதானமான நதிப்படுகை
வறண்ட வதைக்கூடங்களாகவே
எவரின் பார்வையோடும் இறுகி வழிந்தது.
சூரியன் இடம்பெயர வந்தமரும்
நிலவின் வெம்மையோடு
இளைப்பாறி பலவேறு பனிதேசங்களாய்
குளிர்ந்து நிறைந்தது நீரின் தடம்
மீண்டும் நூற்றாண்டுகளின்
குறிப்புகளோடு கடந்த
குக்கூ பறவை அலகிலிருந்து
சிந்துகிறது நிர்மாணத்தின் ஆதித்துளி!
*****
ஓவியம்!
பொய்யும் மழைக்குள்
நனையாமலே
இருக்கிறது
ஓவியத்தின் தூரிகை!
நல்ல கவிதைகள்