சிறுகதைகள்

பதினேழாவது நிறம் – அனுராதா ஆனந்த்

சிறுகதைகள் | வாசகசாலை

முருகன் நான்காவது முறையாக காலிங்பெல்லை அழுத்தியபோது, தன்னிச்சையாக உள்ளிருப்பவரின் தாயை நடத்தை கெட்டவளாக்கி இருந்தான். மதியத்திலிருந்து தொடர்ந்து பெய்யும் மழையால், இந்நேரத்திலும் வழியெங்கும் டிராபிக். வழக்கமாக கடக்க இருபது நிமிடம் எடுக்கும் தூரம், இன்று முக்கால் மணி நேரம் எடுத்தது. வலது கழுத்து தோள்பட்டையில் தொடங்கிய வலி, மணிகட்டில் பரவி நடுவிரல் வரை இழுத்தது. இடது கையால் விரலை நீவியபடியே மேலும் சில வசைகளை முணுமுணுத்தான்.

மழையின் காரணமாக அவனது கடையில் உள்ள ஊழியர்கள் இருவரும் சீக்கிரம் கிளம்பிவிட்டனர். எட்டு எட்டரைக்கு மேல் ஒரே ஒரு கஸ்டமர்தான் இன்று. மற்றபடி ஏழெட்டு ஆரஞ்சு உடையணிந்த உணவு எடுத்துசெல்லும் பணியாட்கள், அவரவரின் ஃபோன்களில் மும்முரமாக இருந்தனர். இருவர் அமர்ந்திருந்தனர், இருவர் சுவரில் சாய்ந்தபடி காதிலிருந்து வயர்கள் வழிய நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமும் அவர்களுக்குரிய பையைக் கொடுத்து அனுப்பினான். கடைசியாக நின்றவன், பசியா களைப்பா என்று தெரியாத தன் மங்கிய கண்களை போனிலிருந்து ஒரு நோடிகூட எடுக்காதவனிடம், அவனுடைய ஆர்டரை கொடுத்தான். “தாங்ஸ்ணா… மழைணா ” என்றபடி அவனும் நீங்கினான். அவன் கடையை மூடும் நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பை எடுக்கவா வேண்டாமா என யோசித்தான் ஒரு கணம்.

வியாபாரம் என்று வரும்போது வேறு வழியில்லை.

இந்தச் சிறு உணவு கடையைத் தொடங்கு முன் பெரும் போராட்டங்களை சந்தித்தவன் முருகன். அம்மாவின் நினைவேயில்லாமல் வளர்ந்தவன். குடிகாரத் தந்தை அவனை 14 வயதில் விட்டுச்சென்றார். அண்ணனும் அண்ணியும் மட்டும்தான். அப்பா போய் முழுதாக ஒரு மாதம்கூட முடியவில்லை. அண்ணியின் சாடல்களும் குத்தல் பேச்சையும் தாங்க இயலாமல், வீட்டைவிட்டு ஓடிவந்தவன். டீ கடையில் கடுமையாக உழைத்தவன். இன்றைக்கும்கூட அவனுடைய அண்ணி சொன்ன வார்த்தைகளை ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் அவன் காதுக்கு வந்து போகும். புனிதாக்கா சொன்ன வார்த்தைகளையும் சேர்த்து எண்ணிக்கொள்வான். இரண்டுமே இருவேறு திசைகளிலிருந்து அவனை மேலே செலுத்துபவை. அதனால் தன் வேலையில் என்றுமே சுணங்க மாட்டான். உழைப்புக்கு அஞ்ச மாட்டான். நேரம் காலம் பார்க்க மாட்டான். அதுதான் இன்றைக்கு இந்த இடத்தில் கௌரவமாக அவனை வைத்திருக்கிறது. ஓர் அழகான குடும்பத்தையும் தந்திருக்கிறது.

சட்டென்று பெண்ணா ஆணா என்று சரியாக இனம் காணமுடியாத குரல், இந்த சில்லி சீஸ் சாண்ட்விச் ஆர்டர் செய்தது. ஒன்றே ஒன்றுதான்.

மெயின் ரோட்டிலிருந்து திரும்பியதும் இவ்வளவு அமைதியான முட்டு சந்தை அவன் எதிர்பார்க்கவில்லை. நகரத்தின் சந்தடிக்குத் தொடர்பேயில்லாத பூச்சிகளின் சத்தம் மட்டும் ஓங்கியிருந்து. மிகவும் நீண்ட ரயிலின் விசில் போல இந்தமுறை பெல்லை அழுத்தினான். மேல்தட்டு குரல் ஒன்று “கமிங், கமிங். கமிங் மேன்” என்று கதவை திறந்தது.

அறை கிட்டதட்ட முழு இருட்டில் இருந்தது. உள்ளே எங்கோ ஒரு மெழுகுவத்தி வெளிச்சம், சிவப்பாக அரைமனதோடு கசிந்துகொண்டிருந்தது. அடர்ந்த வெண்தாடியின் ஊடாக, ” தேங்க்யூ மேன்” என்றது அதே பெண்மை நிறைந்த ஆண் குரல். ஆனால், உள்ளொடுங்கிய அவருடைய கண்கள் அவனை திடுக்கிட வைத்தன.

நடு நிசியில் கிணற்றை எட்டிப் பார்த்தால் உள்ளிருந்து நம்மைத் திருப்பிப் பார்க்கும் கறுப்புப் பூனையின் கண்கள். அந்தக் கண்களும் விளங்கிக்கொள்ள முடியாத வேறு ஏதோ ஒன்றும் சேர்ந்து இவனுக்கு நடு முதுகு சில்லிட உலுக்கிப் போட்டது. நொடியில் வேறு ஒரு காலத்துக்கு அவனை இழுத்துச் சென்றன. சற்றும் யோசிக்காமல் ” சித்தண்ணேதானே ” என்று அவனுடைய வாய் சொல்லியது.

அவன் மனதுக்குள் ஒரு நொடியில் பத்தாயிரம் விஷயங்கள் நிறைந்த ஒரு வாழ்வே ஓடி மறைந்தது. கூடவே வேறொரு மனது, அது சாத்தியமேயில்லை என்றும் சொல்லிக்கொண்டே இருந்தது.

“வாட் நான்சென்ஸ் மேன்” என்ற வெண்தாடிகாரர் பணம் எடுக்க திரும்பி உள்ளே சென்றார்.
மென்மையான மங்கலான சிவப்பு மட்டும் உள்ளிருந்து உருகி வழிந்தது. அதனுடன் சேர்ந்து புரியாத ஆங்கிலத்தில் அவனுக்குப் பரிச்சயமான பெண் குரலும். என்ன பிரச்னை என்று இவரிடம் விசாரிப்பது போல கேட்டது.

ஆனால், அவர் நடந்துபோவதை பின்னாலிருந்து பார்த்தவனுக்கு குழப்பமும் பயமுமாக மனது அடித்தது. அப்படியே சித்தனின் ஒரு பக்கம் சாய்ந்த நடை .

“காலில் எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்ல முருகா. எங்க சின்ன மாமா ஒருத்தரு… நான்னா ரொம்ப பிடிக்கும் அவருக்கு. அவர் கூடவே அலைவேன். சின்ன வயசுல அவரு இப்படித்தான் நடப்பாரு. அதான் எனக்கும் பழக்கமாயிருச்சி” என்று சித்தன் சொன்ன விளக்கம்கூட அவன் குரலிலேயே காதில் கேட்டது.
ஆனால் அது வேறு குரல். க்ரஷரில் ஜல்லி அறைக்கும் நரநரப்போடு, ஊரின் குழந்தைமை நீங்காது, நகரின் சூட்சமும் நாசுக்கும் அறியாத குரல் . சித்தனைப் பற்றி எதுவும் மறக்கவில்லை, மறக்கவும் முடியாது. எல்லாமே நேற்று நடந்தது போல மனதில் இருந்தது. ஆனால், சித்தனுக்கு இந்த மேதட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. ஒரு வடகத்தியவர்க்கு வழிசொன்ன அவனுடைய ஆங்கிலம்கூட தமிழ் போல தேனாய் ஒலித்தது இன்னும் நினைவிலிருக்கிறது.

ஆல்பர்ட் அண்ணன் டீ கடையில் வேலைக்கு இருந்த நாட்கள் அவை. கடைக்குப் பக்கத்தில் தொகுப்பு வீடுகளின் மாடியில் ஓடு வேய்ந்த ஒற்றை அறையில் சித்தனின் வாசம். இருசக்கர வாகனங்களும், அறிதாக சில கார்களும் போவதால் மட்டுமே அதை ரோடு என்று சொல்ல முடியும். மற்றபடி சாலைக்கு உண்டான எந்தவித இலக்கணத்தையும் பூர்த்திசெய்யாத ரோடு. ஆல்பர்ட் அண்ணன் டீ கடையைத் தொடங்கின நாட்களில் தார் ரோடு இருந்ததாகத் தலையில் அடித்து சத்தியம் செய்தாலும், மேன்சனிலுள்ள தங்கள் நாட்களின் பெரும்பகுதியைக் கடை வாசிலிலேயே கழிக்கும் உதவி இயக்குனர்களும், அந்தக் கனவுடன் அலைபவர்களும், “காமடி பண்ணாதீங்கண்ணே” என்று சிரித்துவைப்பார்கள்.

சித்தனை முதன்முதலாகப் பார்த்தது அங்குதான். ஒற்றைப் பையை முதுகில் சுமந்து பெரிய கித்தானை தூக்கியபடி தன் அறைக்கு வழி கேட்டு வந்திறங்கினான். கறுப்புதான்… பராமரிக்கப்படாத சுருட்டைமுடி, ஒடிசலான தேகத்தோடு, கடைக்கு வரும் பெரும்பான்மை இளைஞர்களைப்போலதான் இருந்தான். இருபத்தி ஆறிலிருந்து முப்பத்தி எட்டு, நாற்பது வரை எந்த வயதை சொன்னாலும் சரியாகப் பொருந்தும்படியான முகம். ஆனால், அவனுடைய கண்கள் மட்டும் வேறு ஒன்றைத் தேடிக்கொண்டும் வேறு புரியாத பாஷையைப் பேசிக்கொண்டும், இந்தச் சூழலுடன் தொடர்பே இல்லாமல் தனித்து மின்னின. எதிர் நிற்பவனின் மனதை பார்ட் பார்ட்டாகப் பிரித்துப் போட்டு, எந்தக் கதியில் இயங்குகிறது என்று கண்டுணர்ந்து மறுபடி சேர்த்து இணைத்து அன்போடும் புரிதலோடும் நம் கையிலேயே திருப்பித் தரும் நிதானமான பார்வை. முருகனை ஒரு கணம் நிலைகுலைய வைத்த பார்வை.

அறையை அடையாளம் காட்ட, சுத்தம் செய்து உதவ ஆல்பர்ட் இவனை கூட அனுப்பினார். “பைய குடுங்கண்ணே” என்பதற்கு பிரியத்தோடு சிறு பிள்ளையிடம் செய்வதைப்போல தலைமுடியை கலைத்து அழகாகச் சிரித்தான். ப்ரியங்களும் நேசமிகு தொடுகைகளும் என்னவென்றே அறியாத அவனை அது நெகிழ்த்தி கலைத்துபோட்டது .

17 வயது. உள்ளே ஏதோ ஒன்று உடைந்தது. புதிதாகக் கிடைத்த அண்ணணை கட்டிபிடித்து அழவேண்டும் என்று பொங்கிப் பொங்கி வந்தது. சிரமத்துடன் அடக்கிக்கொண்டான். சித்தனிடம் சொந்த அண்ணன் போன்ற ஒட்டுதலுடன் பழகத் தொடங்கினான். சில சமயம் சிறு பிள்ளையைப் போல பாசம் காட்டி, வாயில் பிஸ்கெட் ஊட்டுவான். சில சமயம் சக வயது நண்பனைப் போல, தன் காதல் சொதப்பல்களை பகிர்வான். தன் நாட்கள் ஒவ்வொன்றையும் முழுவதுமாக இவனிடம் ஒப்பிப்பான். தன் மனதை திரைபோடாமல் திறந்து காட்டினான். அப்படித்தான் அந்நேரம் நம்பினான் முருகன்.

சித்தனுக்கு எல்லாமே வண்ணம்தான். சில நாட்கள் அதனோடு சண்டை பிடிப்பேன் என்பான். வேறு நாட்களில் அவ்வண்ணங்கள் தன்னோடு மிக நெருக்கமாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் சொல்வான்.

“என் காதலிடா இவ” என்று தான் கலந்த ஒரு பெயர் தெரியாத வண்ணத்தை கலப்பானில் காண்பிப்பான்.

“அப்படியே சாப்பிடணும் போல இல்ல இந்த கலர”
முருகனுக்கு அவன் என்னச் சொன்னாலும் சரியென்றே இருக்கும். அவன் வயது அப்படி. சித்தன் மேல் வைத்த பிரியம் அப்படி.

எல்லாவற்றையும் நிறங்களின் கண்ணாடி வழி பார்ப்பான் சித்தன். நிறங்களோடே, நிறங்கள் மூலமாகவே உலகை, மனிதர்களை, தன் நாளை, மனதை எல்லாவற்றையும் பார்த்தான். “நீ பச்சை கலர்டா! பச்சைன்னா அழுத்தமான வேப்பிலை பச்சையில்லை. கொஞ்சமா கடல் சேர்த்த, வானம் சேர்த்த நீலப் பச்சை. ஸீ க்ரீன்.”
முருகனுக்கு மனமெல்லாம் கடல்பச்சை ததும்ப, நிரம்பி வழியும்.

“உங்க ஆல்பர்ட் அண்ணன் மஞ்சள்டா. மஞ்சள்ன்னா பல்லிளிக்கிற சூரியகாந்தி மஞ்சள் இல்ல, கடுகு அரைச்சா வருமே அந்த மஞ்சள். ஆனா, இன்னைக்கு வெள்ளையான நாள். ஒண்ணுமே பண்ணத் தோணல” என்பான்.

ஒரிரு மாதங்கள் ஆனது அவனுடைய மொழி முழுமையாகப் பிடிபட. அதற்குள் சித்தனுடைய வாழ்க்கையை முருகனும் சேர்ந்து வாழத் தொடங்கியிருந்தான்

…………….

சித்தன் தேங்கியிருந்த மழை நீரைத் தாண்ட எவ்வினான். சட்டென்று இடுப்பிலிருந்து ஒரு வலி… கால் பிடித்து இழுத்தத்தில் சேற்று நீரில் காலை ஊன்ற, அவன் அணிந்திருந்த ஜீன்ஸிலும் இளஞ்சிவப்பு சட்டையெங்கும் ப்ரௌன் வண்ண சிதறல்களாய் வரைந்தது. ஒரு நொடி எரிச்சலுக்குப் பின், அந்த ஒரு நாளுக்கான மகிழ்ச்சியைக் கண்டடைந்தவனுடைய முகத்தைப்போல ஒரு உள்ளார்ந்த சிரிப்பு. இன்றைக்கான கலர் கிடைத்து விட்டது.

அது சிறிய அறைதான். ஆனால் எவ்வளவு சிறிய இடத்தையும் வீடாக்கும் கலை கைவரப் பெற்றவன். சுடுநீர் வைக்க இருந்த அடுப்பைக்கூட சிதறலாக வண்ணங்கள் தெளித்தது போன்று செய்து அழகாக்கி வைத்தான். ஆங்காங்கே பல கித்தான்களில் வரைந்து முடிக்கப்படாத ஓவியங்கள் சில. கிட்டதட்ட முடிந்த நிலையில் சில. தொடக்க நிலையில் பெரும்பகுதி கித்தானின் அழுக்கு வெள்ளை தெரிந்தபடி. பல இடைப்பட்ட வெவ்வேறு நிலைகளில். அறையில் இருந்த பழைய உடைந்த பொருட்கள் எதையும் தூரவீசாமல் நயத்தோடு மாற்றி வைத்திருந்தான். பலவிதமான செடிகள் அதிலிருந்து வளர்ந்தன. மணிப்ளாண்டை தவிர வேறு எதற்கும் இவனுக்குப் பெயர் தெரியாது.

அறையின் கீழ்தளத்தில் நின்ற முருகனிடம் டீ சொல்லிவிட்டு மாடிப்படியை ஒன்றிரண்டாக தாவி, மேலே தன் அறைக்குச் சென்றான். உடையை மாற்றும் பொறுமையெல்லாம் சித்தனுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. அக்ரைலிக் வண்ணங்களை எடுத்து கலக்கத் தொடங்கினான். அவன் மனமெல்லாம் சேறு. சிவப்பில் நிறைய கறுப்பு சேர்க்க வேண்டியிருந்தது அவனுடைய சேற்றின் நிறத்தைக் கண்டடைய. மழை நாளின் குதூகலம்தான் மனதில் இருந்தது. சிறு வயதில் மழை நாட்களில் அப்படியொன்றும் சேற்றில் குதித்தாடி மகிழ்ந்தவனெல்லாம் இல்லை. எப்போதும் ஓரமாக அமர்ந்து மற்ற பிள்ளைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தவன்தான். யாரோடும் சேர்ந்துகொள்வது அவனுக்கு எளிதானதில்லை. இன்றுவரை அப்படித்தான். பல நாட்களும் பல மனப் போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சிறிய ஒட்டுதலுக்கு மனம் ஒப்பும். முருகன் மட்டும்தான் விதிவிலக்கு. அப்படி அரிதாக இணைந்தவர்கள்கூட ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தையே அவனுக்கு அளித்தனர். அவனைப் பெரிதாக யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் உண்மை.

தனியாக எதையாவது நினைத்துகொண்டும், ஏதாவது ஒரு கற்பனைக் கதையில் தன்னை கதாநாயகனாக எண்ணிக்கொண்டும் களித்திருந்த நாட்கள்தான் அதிகம். நீர் வண்ணங்களை சிவா மாமா வாங்கித்தந்த பின்புதான் தன் கறுப்பு வெள்ளை பால்யத்தில் வண்ணம் இட்டு நிரப்ப தொடங்கினான். பின் கல்லூரியில் தைல நிறங்களைக் கண்டு பரவசமடைந்தான். தைல வண்ணங்களின் கழிவு சுற்றுச்சூழலுக்கு தீங்கானது என்று தெரிந்தபோது, அதை முற்றிலுமாகக் கைவிட்டு அக்ரைலிக் வண்ணங்களுக்கு மாறியிருந்தான்.

அவனுடைய சட்டையில் தெரித்த சேற்றைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் கித்தானில் முதல் புள்ளியை வைத்தான். இந்த முதல் புள்ளிதான் தந்திரமானது, அலைகழிக்ககூடியது. கருவண்டைப் போல கித்தானின் மேல் எங்கும் சில நொடிகள் அவனுடைய கை பரபரத்த பின்னே வைக்கப்பட்ட புள்ளி. தலையுடன் சேர்த்து மேல் பாதி உடம்பை சற்று பின்நகர்த்தி, மங்கலான வெள்ளையில் ஒரு துளி சேற்றை கண்கள் மினுங்க ரசித்தான். அவனுக்குச் சேற்றின் நிறம் மட்டும்தான் தேவை. வான் நோக்கி வணங்கும் கைகள்தான் மனதில் வந்து வந்து போன சித்திரம். அதைத்தான் வரைவதாக எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால், வேறு தினுசாக அந்தக் கைகள் வளையத் தொடங்கின. அவனுடைய மனதிலிருந்த கைகள் இரைஞ்சுதலும், வேண்டுதலும், பொறுமையும், சகிப்பும் நிறைந்தவை. ஆனால், அவனுடைய கித்தானிலோ வேறு வகை கைகள் மெதுவாக உருபெற்றன. கோபமான, ஆக்ரோஷமான, பழி தீர்க்கும் கைகளைக் கண்டான். எவ்வளவு முயன்றும் அக்கைகளை செங்குத்தாக நிறுத்த முடியவில்லை.

வேறு ஏதோ நரம்பு நரம்பாய் நீள நீளமாய்தான் கித்தானில் விழுந்தது. அவன் கைகள் அவனுடைய பேச்சைக் கேட்பதை விடுத்து வெகு காலங்கள் ஆகிவிட்டது. தொடக்கத்தில் அவன் கைகளை முகத்துக்கு நேராக விரித்து வைத்து கடுமையாகக் கடிந்துகொள்வான். வெட்கம், மானம் எதுவுமில்லாத அவனுடைய கைகள் எதையும் காதில் வாங்காது தங்கள் இஷ்டம் போல எப்போதும் வரைந்தன.

ஒருமுறை கடவுளை வரைய தொடங்கியிருந்தான். நான்கு ஐந்து நாட்கள் இவன் சொன்னபடி கேட்டு கைகள் வரைய, கடவுள் போலவே அருளும் வெளிச்சமும் அமைதியுமாக ஒன்று தோன்றத் தொடங்கியது. ஆறாம் நாள் திடீரென்று அதற்கு தலையில் கொம்புகள் முளைத்தன. அதை அழிக்கும் முன் கடைவாயில் கோரையாய் பற்களும் வளர்ந்தன. அவனுடைய கடவுள் சாத்தானின் வண்ணம் பூசிப் பிறந்தார். ஆத்திரம் தாங்காமல் வார்த்தைகளே வராமல், கொதித்துக்கொண்டிருந்த நீரில் தன் கைகளை முக்கி எடுத்தான். வலது கைக்கு ஏற்ற வண்ணங்களை தேர்ந்து கொடுத்து கூட்டு களவாணித்தனம் செய்த இடக்கை மேல்தான் நிறைய கோபம் அவனுக்கு. பிறகென்ன இரு கைகளிலும் கட்டுடன் சிறிது காலம் எதுவும் வரையமுடியாமல் அலைந்தான். ஆனால், அப்போதெல்லாம் அவனைப் பார்த்துக்கொள்ள கூட மதி இருந்தாள். இவன் அறையைக் காலி செய்துவிட்டு அவளுடைய வீடு செல்ல இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அதற்குமுன் சில காலமாகவே அவளும் அவனை அழைத்துக் கொண்டுதானிருந்தாள்.

மதி என்றவுடன் அவனுக்கு சிவப்புதான் ஞாபகம் வருகிறது என்பான் முருகனிடம். “எல்லா மனுஷங்களுக்கும் ஒரு பிரத்தியேக கலர் உண்டு முருகா. மத்தவங்க கண்ணுக்கு அது ஏன் தெரியலனு எனக்கு புரியல. மதி சிவப்பாலானவள். அவ நடந்தா, உட்கார்ந்தா, தலையை ரைட்ல சாய்ச்சா, முத்தம் தந்தா… எல்லாம் சிவப்புதான். அவளோட சேர்ந்திருந்தா ரத்தக் களறிதான்டா. அவ பேசினாகூட ரத்தத்தின் வாடை அடிக்கும். ஒரு நாள் அவ கால் நகத்தில ரத்த சிவப்பு நெயில் பாலிஷ் பூசியிருந்தா. அன்னைக்கு ராத்திரி முழுக்க அவ கால்கிட்டேயே கெடந்தேன். அவ கால முத்திக்கிட்டே . என்னால் அவ முகத்தைக்கூடப் பார்க்கமுடியல. அவளோட ரத்த நகத்திலேர்ந்தது கண்ண எடுக்க முடியல.

அப்போ கால் விரல்ல இருந்து சொட்டு சொட்டா ரத்தம் வடிய ஆரம்பிச்சுது. சட்டுனு பதறி பண்டுவம் பார்க்கச் சொல்லுற மாதிரியான ரத்தக்கசிவு இல்லைடா அது. எப்டி சொல்றது? அப்படியே ரெண்டு காலையும் கையில் தூக்கி, உறிஞ்சிக் குடிக்க தூண்டுற மாதிரிடா அது. ஆசைய அடக்க முடியாம, தூக்கத்திலேர்ந்து எழுப்பிவிடற மாதிரியான சிவப்பு. முழிச்சு அவ கால மறுபடி வருடுறேன். என் தொல்லை தாங்காமல் அடுத்த நாளே ரிமூவர் வச்சு சிவப்பை அழிச்சுட்டாடா.”

மதி அவனுக்காகத் தன் வீட்டில் ஓர் அறையை ஸ்டூடியோ போன்று வடிவமைத்திருந்தாள். அறையைக் காலி செய்துவிட்டு, முருகனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அவள் வீட்டில் சென்று இறங்கினான். முருகனுக்கு அந்தத் தெருவில் நடக்கவே பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது. ஏதோ ஒரு வகை போதாமையை உணர்ந்தான். “நான் உள்ளலாம் வரலணே. நீ போ. கட பக்கம் அடிக்கடி வாண்ணே” என்று கண்களில் நீர் முட்ட ஆட்டோவிலிருந்தே விடைபெறத் தயாராகச் சொன்னான். சித்தன் அதைக் காதிலேயே வாங்காது ஒரு சிறிய பையை அவன் கையில் தந்து தோளணைத்து இறக்கி, வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அப்போதுதான் முதன்முதலில் மதியைப் பார்த்தான்.

அவன் மனதெங்கும் பரவிய கசப்பும், வயிற்றை அழுத்தும் சங்கடமும் இன்னமும் நினைவில் இருக்கிறது. புதிதாக அன்பளிப்பாக கிடைத்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுவதைப் போல சித்தனை கட்டிப்பிடித்து, “சித்து” என்று கொஞ்சினாள். அந்தப் பெயரின் சுருக்கமே முருகனுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ வடக்கத்தி பெயர் போல சித்தனுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாது இருந்தது.

அவன் கட்டு போட்ட கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு பரிதாபமாகப் பார்த்தாள். சித்தனின் சுருட்டை முடியை அளைந்துகொண்டே, இவனைப் பார்த்து யார் என்பது போல புருவம் உயர்த்தினாள். அவளுடைய செய்கைகள் எல்லாம் காதலுற்றவள் போலத்தான் இருந்தன. ஆனால், ஏதோ ஒன்று இல்லாதது போலவும் இருந்தது. நடிப்பவருக்கே பிரஞ்ஞையில்லாமல் நிகழ்த்தப்படும் நடிப்புப் போல தோன்றியது. சிவப்பு சிவப்பென்று சித்தன் வர்ணனை செய்யும் எல்லாச் சிவப்பும் விளக்காய் எரிந்து, போகாதே எனத் தடுத்து நிறுத்துவது போன்று ஒளிர்ந்தாள் மதி. மதி கொடுத்த பழரசம்கூட சிவப்பும் கசப்புமாக வழிந்தது.

அப்போதே தோன்றியதா இல்லை பின்னர்தானா என்று முருகனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. சித்தன் தனக்கே இருந்த பயத்திலும் போதாமையிலும்தான் முருகனின் தோளிலிருந்து கடைசிவரை கைகளை எடுக்கவேயில்லை. தன்னை வலிந்து விடுவித்துகொண்டு தான் விடைபெற்றான். இவன் வீட்டின் வெளிகேட்டை அடைக்கும் வரை கூர்மையான எல்லாவற்றையும் கணித்துவிடும் கண்களால் பார்த்துகொண்டிருந்தான் சித்தன். ஆனால், இம்முறை எதிராளியை துளைக்காமல் ஏதேதோ சொல்ல முயன்றன அவனுடைய கண்கள். “வந்திருணா நம்ம ரூமுக்கே போயிடலாம். அவங்களை வேணா அப்பப்ப வந்து பார்த்துக்க சொல்லு. இல்ல நீ போய் பாத்துக்கோ” என்று தொண்டை வரை வந்த சொற்களை முழுங்கி கையசைத்தான். அழுதுகொண்டே திரும்பினான்.

அண்ணியிடம் அவமானப்பட்டு அழுதவன், அதற்கு பிறகு அப்போதுதான் மிகுதியான அன்பால் அழுகிறான். அந்த வயதில் தான் ஏமாற்றப்பட்டது போன்றுகூட உணர்ந்திருக்கிறான். சித்தன் எப்போதும் தன்னுடன் இருப்பான் ஓர் அண்ணணைப்போல என்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பார்ப்பினால் வந்த ஏமாற்றம். இரண்டாவது முறை தான் கைவிடப்பட்டதைப் போல உணர்ந்தான். ஆல்பர்ட் அண்ணன்தான் சொந்த பிள்ளையைப் போல பேசிப் பேசித் தேற்றினார். சித்தன் மீதுகொண்ட கோபத்தையும்கூட களைந்தார்
“அவன் அவன் வாழ்க்கையைப் பார்க்க போய்ட்டான்டா. உன்கூடவே இருக்க முடியுமா சொல்லு? அப்படி அவன் என்னைக்காவது சொல்லிருக்கானா? இப்பகூட என்ன? எப்ப வேணா போய் பார்த்துக்கோடா.”
“எப்படிணே ? அந்த வீட்டைப் பார்த்தாலே பயமா இருக்கு. அந்த ஏரியாவே எப்படியோ இருக்குணே.”

அடுத்த இரண்டு மாதத்துக்குள் ஆல்பர்ட் ஒரு புது போன் வாங்கிக்கொண்டு, தன் பழைய போனை இவனிடம் கொடுத்தார். அதன்பின் சித்தனின் எண்ணை பலமுறை தொடர்புகொண்டான். சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. மதியின் வீட்டுக்குப் போக தைரியம் வரவில்லை. ஆனால், அவனை அடுத்து பார்க்கும் வரை, காலை எழுந்தவுடன் சாமி கும்பிடுவதைப் போல ஒருமுறை சித்தனுக்கு போன் போட்டு பார்ப்பான். சில சமயம் இரவு உறங்குவதற்கு முன்னும் முயற்சி செய்வான்.

நவம்பர் மாத நசநசத்த மழைநாள் ஒன்றில் காலை எட்டு மணி வாக்கில், உள்ளபடியே மெலிந்தவன் மேலும் பாதியாக மெலிந்து, கண்கள் பஞ்சடைத்து போய், சேறு தெரித்த சட்டையுடன், மேலும் பிரகாசமான கண்களுடன் ஒரு பிச்சைகாரனைப் போல கடையினுள் வந்து நின்றான். ஒரு நிமிடம் அடையாளம் தெரியாமல் முழித்த ஆல்பர்டிடம். “என்னைத் தெரியலையா? சித்தன். அந்த ரூம் காலியாயிருக்கா? செந்திலண்ணன் போன் எடுக்க மாட்றார்” என்றான்.

ஆல்பர்ட்டை தவிர அவன் கண்கள் சுற்றி சுற்றி எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்தன. தேடிக்கொண்டிருந்தன. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. டீ கிளாஸ்களை கழுவிக்கொண்டிருந்தவன், ஒரே பாய்ச்சலாக வந்து கட்டிக்கொண்டான்.

“என்னணே உடம்பு சரியில்லையா? எவ்ளோ நாளாச்சு!”

எதற்கும் பதில் சொல்லாமல் திரும்ப அணைத்து வழக்கம் போல தலைமுடியை கலைத்துவிட்டான். தொலைந்த பொக்கிஷம் திரும்ப கிடைத்தைப் போல இருந்தது. ஆனால், இம்முறை ஆல்பர்ட் எச்சரித்திருந்தார். “அவன் மேலே ரொம்ப நம்பிக்கை வெக்காதடா. நல்லவன்தான். ஆனா, அவன் ஒரு நாடோடி மாதிரி. அவனால ஒரு இடத்துல தங்கமுடியாது. திடீர்னு கிளம்பிருவான். அப்புறம் நீதான் சங்கடப்படுவே!”

ஆனால், சித்தன் எப்போதும் போலவே இருந்தான். நடுவில் கழிந்த நாட்கள் நாட்களே இல்லாதது போல விட்ட இடத்திலிருந்து தொடங்கினான். இவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக ஒன்று சிரிப்பான், இல்லை “விடுறா” என்பான். இல்லை, “கேள்வி கேக்க படிச்சிட்டேடா நீய்யு” என்பான்.
அவன் திரும்ப வந்து ஒரு வாரம் கடந்திருக்காது. “மதி வீட்டுக்குப் போய் மிச்ச சாமானெல்லாம் எடுத்துட்டு வரணும். கூட வரியா?” என்றான்.

மதியின் வீட்டின் வரவேற்பறை மஞ்சள் விளக்கொளியில் அவன் போன முறை பார்த்தது போல இல்லை. வேறு விதமாக துரோகம் பூசி இருந்தது. சோஃபாவில் கைகளை வைக்கும் இடத்தில் தன் முதுகை சாய்த்து சற்று தள்ளி அமர்ந்திருத்தவனுடைய மடியில், கால்களை நீட்டி ஒரு கையில் போனும் மற்றொரு கையில் ஒரு நீள் காம்பு கோப்பையில் அடர்ந்து மின்னும் திரவமுமாக, மதியும் வேறு விதமாக இருந்தாள். உட்காருவதற்கும் படுப்பதற்குமான இடைப்பட்ட நிலை. ஒரே ஒரு நொடி தலையைத் திருப்பாத ஓர் அலட்சிய பார்வையைத் தவிர இவர்கள் வருகையினால் எந்த மாற்றமும் இல்லை அவளிடம்.

உடன் சோஃபாவில் அமர்ந்திருந்தவனோ சித்தனைப் பார்ப்பதையும் தவிர்த்தான். அவனுடைய பார்வையையும் தவிர்த்தான். ரிமோட்டை வைத்து சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ராட்சத டிவியைத் தேவைக்கு அதிகமான கவனத்துடன் இயக்கிக் கொண்டிருந்தான். சித்தன் எல்லாவற்றையும் எதிர்பார்த்திருந்தது போலவே சலனமில்லாது கடந்தான். அவனுடைய அறையில் ஏதோ பெயின்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்தது. புது பெய்ண்ட் வாடை அடித்தது. வெளியில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் கவனமில்லாமல் வீசப்பட்டு உடைந்த பிரஷ்களும் சில வண்ண டியுப்புகளும் கிடந்தன. பக்கத்தில் காயாத கித்தான்களை ஒன்றன் மேல் ஒன்று அலட்சியமாகக் கிடத்தபட்டதால், கலர்கள் அழிந்தும் ஒன்றோடொன்று ஒட்டியும் ஓவியங்கள் விகாரமாக இருந்தன. உணர்ச்சியற்று எல்லாவற்றையும் பார்த்தான் சித்தன்.

முருகன் அறையினுள் எட்டிப் பார்த்தான். ஒரு பக்க சுவர் முழுதும் கீழ் பாகத்தில் அழகான உதடுகளும் தாடையும், எல்லாமே வெவ்வேறு விதமான சிவப்பில் இருந்தன. மேல் உள்ள கண்களும் நெற்றியும் பெயின்டின் ஊடாக மங்கலாக தெரிந்தன. மதி முகம். இருவரும் வெளியேறுகையில் மதி தன் முகத்தைத் திருப்பி, “பை சித்து” என்று அழகாகச் சிரித்து வைத்தாள். எதிரிகளுக்கென்றே பிரத்யேகமாக ஒதுக்கி வைக்கப்பட்ட சிரிப்பு. அப்போது மட்டும்தான் சித்தனின் கண்களின் ஒளி முற்றிலுமாக மறைந்து இருண்டிருந்தது. மழை கொட்டிக்கொண்டிருந்தது. அப்படியே உடைந்து தூள் தூளாகத் தெருவிலேயே சித்தனும் கொட்டி விடுவானோ என்று முருகன் பயந்தான். ஆனால், அறைக்கு வருவதற்குள் அதே சலனமற்ற முகத்தை மீண்டும் மாட்டிக்கொண்டான்.

எந்த விளக்கமும் அவனிடமிருந்து வரப்போவதில்லை, கேள்விகளுக்கும் எந்தப் பதிலும் வராது என்று தெரிந்ததால், முருகனும் ஒன்றுமே கேட்காமல் இருக்கப் பழகிக்கொண்டான்.
சித்தனுக்குக் கடந்த காலமும் கிடையாது எதிர்காலமும் கிடையாது . என்ன செய்தான் என்பதைப் பற்றியோ, என்ன செய்யப்போகிறான் என்பதைப் பற்றியோ எந்த விளக்கமும் தரமாட்டான். ஆனாலும், அறையில் தங்கியிருந்த நாட்களில், அன்று நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் முருகனுடன் பகிர்வான். “அண்ணே திடீர்னு ஒரு நா சொல்லாம கொள்ளாம நீ எங்கேயாவது போய்டுவதானே?” என்ற கேள்விக்குக்கூட ஆமாம் என்றோ, இல்லையென்றோ சொல்லாமல் கண்களை நேராகப் பார்த்து, அழகாகச் சிரிக்க அவனால் மட்டுமே முடியும். நாட்கள் மறுபடி பழைய கதியில் இயங்க தொடங்கின. ஒராண்டாக அறுபட்ட நூலை சேர்த்து முடி போட்டு பிணைத்ததுபோல…

ஆல்பர்டுடன் வீட்டில் புதிதாக புனிதா தங்கத் தொடங்கினாள் .ஆல்பர்டைவிட வயதானவளாகத் தெரிந்தாள். அக்கா என்று அழைத்துப் பார்த்தான்.அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவளை கூப்பிடவே கூடாது என்று முடிவெடுத்தான். அவள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனாலும் அவள் மேல் கோபம் எல்லாம் வரவில்லை. அவள் எதுவும் சொல்வதற்கு முன் இவனே கடையில் படுக்கத் தொடங்கினான். தன்னை யாரும் வெளியேறச் சொல்லும் முன் தாமாக வெளியேறுவது என்று முடிவெடுத்தான். சித்தனிடம் மட்டும் புலம்பித் தீர்ப்பான். “எங்க அண்ணிய மாதிரி மோசமானவங்க இல்லை. ஆனாலும் வெளிய தெரத்திருவாங்களோன்னு பயமாருக்கண்ணே.”

“அவங்க ரொம்ப நல்லவங்கடா. ஆல்பர்ட் அண்ணனை எப்படி பார்க்குறாங்க கவனிச்சிருக்கியா. அவ்ளோ காதல். இதெல்லாம் அபூர்வமாதான் வாய்க்கும். உனக்கு இப்போ புரியாது.”

“அதல்லாஞ் சரி… நான் என்னைய பத்தி கவலபடுறேன். நீ என்னனா காதல் அது இதுனு சினிமா மாதிரிஏதேதோ பேசற.”

“நீ நல்லாருப்படா!”

சேற்றின் நிறமுடைய கைகள் இன்னும் முடிக்கப்படாமலே இருந்தது.

இறையைத் தொழும் கைகளாக அவை வளரவில்லை என்று புலம்புவதை சித்தன் விட்டுவிட்டான்.
அடர் சேற்றின் நிறத்தில் நரம்புகள் புடைத்துக்கொண்டு ஆக்ரோஷமான கைகள் கித்தானிலிருந்து வெளிப்பட்டன. நீளமான கலைஞனின் விரல்கள் , கோடுகள் விழுந்த பழுப்பு நகங்களுடன். அவை கடித்து துப்பப்பட்டவை, அழுக்கடைந்தவை, யாருக்கும் கட்டுப்படாதவை. அப்போதான் வெகு நாட்கள் பிணைத்திருந்த சங்கிலியிலிருந்து விடுபட்டதைப் போல ஏதோ ஒரு குற்றத்தை நிகழ்த்துவதற்காகப் பரபரத்துக் கொண்டிருந்தவை. அதற்கு குறைவான நாட்களே இருப்பதை அறிந்திருந்தன.

அவன் கைகளின் ஆட்டத்துக்கே தன்னையும் ஓவியத்தையும் ஒப்புக்கொடுத்துவிட்டான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தினுசில் அந்தக் கைகள் காணக்கிடைக்கும். யாரோ வேறொருவர் வரைந்துகொண்டிருக்கிற ஓவியம் போல, இருவரும் தினமும் சில நிமிடங்கள் அதைப் பார்ப்பதும், அந்தக் கைகள் என்ன செய்ய எத்தனிக்கின்றன என்று பேசவுமாக இருந்தார்கள்.

“ரெண்டு கையும் ஷேக் ஹாண்ட் குடுக்கப் போகுதுணே, பாரு நேத்தயோட இன்னைக்கு எவ்வளோ பக்கத்துல இருக்கு.”

“இல்லடா… கீழே ஏதோ பொருள் விழப்போகுது. அதைப் பிடிக்க அவசரமா வருது.”

“இல்லணே… கைதட்டற மாதிரி இல்ல?” என்றெல்லாம் சொன்னான். என்றாலும், முருகனுக்கு அந்த ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும் பயத்தை மறைக்கவே இந்தப் பேச்சு.

“ணே… எனக்கு இப்ப நல்ல விளங்கிடுச்சி. நீ எப்ப பார்த்தாலும் ரூமுகுள்ளயே இருக்குற .என்கூட மட்டும்தானே பேசுற, அதான் என் கையையே வரயற. இப்ப நடுவுல ஒரு டீ க்ளாஸ் வரைவே பாரேன். அதைப் பிடிக்கதான் இரண்டும் வெய்ட்டிங்.”
அன்று சித்தன் இதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. முகமே இருண்டிருந்தது.

” கழுத்த நெரிக்கிறதுக்குதான்டா இப்படி வளருது இது ரெண்டும்.”

“யார் கழுத்தணே”

சித்தன் சட்டென்று சிரித்தான்… இயல்பானான். இப்போது நினைத்து பார்த்தால் அவன் ஒரு ஞானியைப் போல துலக்கமாக இருந்தான் என்று தோன்றியது . விவஸ்தையே இல்லாத இந்த வாழ்வு, அவனுடைய முகத்தில் துப்பிய எச்சிலை துடைத்து, மறுபடி துணிந்து தலைதூக்கி நிற்பவனாகத் தோன்றினான்.

அதற்கடுத்த நடந்தவைகள் முருகனின் வாழ்வைப் புரட்டிப் போட்டன. காலை ஐந்து மணிக்கே புனிதா எழுப்பினாள். படபடப்பாக இருந்தாள். அவளிடம் பயமும் கோபமும் தெரிந்தது.

“ஆல்பர்ட்ட பாத்தியாடா?”

“இல்லக்கா.”

“எப்ப கடைசியாக பாத்தே?”

“நேத்திக்கு நீங்க ரெண்டு பேரும்தானே கடைய பூட்டிட்டு போனிங்க.”

” அதுக்கப்புறம் பாக்கலியா?”

” இல்லையே!”

அவள் சந்தேகத்துடன் இவனையே முறைத்தாள். முருகனின் வயிற்றில் அவிழ்க்க முடியாத முடிச்சொன்று இறுக்கியது.

“ஆங்… அக்கா போன மறந்துட்டேனு திரும்ப வந்து எடுத்துட்டு போனார்.”

சட்டென்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றாள்.

முருகன் கண் முழித்து பார்த்தபோது, போலீஸ் ஸ்டேஷனில் கிடந்தான். புனிதாவின் ஜாடையில் உள்ள பெண் போலீஸை கூட்டிவந்தது நினைவிருந்தது. அவர்கள் அவனை அடிக்கத் தொடங்கியதும் நினைவிலிருந்தது. என்னவென்று புரிவதற்கு முன்பே விழுந்த அடியால் தலை கிறுகிறுத்தும், சித்தனைத்தான் முதலில் நினைத்தான். விஷயத்தை கேள்விபட்டதும் கண்டிப்பாக வந்துவிடுவான் என்று முழு நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தான். ஆனால், வந்ததென்னவோ புனிதாதான். கூட அவளுடைய அக்காவும் மாமாவும் ஒரு வக்கீலும். மாமாதான் கேஸ் கொடுத்திருந்தார்.

“ஏம்மா உன் நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு கம்பி நீட்டிட்டான் . கண்டிப்பா இவனுக்குத் தெரிஞ்சிருக்கும். இரண்டு நாள் வுடு ஆள கண்டுபிடிச்சிடலாம்” என்றார்

“இல்லைங்க வேணா… இவனுக்கு ஒண்ணும் தெரியாது. பாவம் வுட்ருங்க ”
புனிதாவைத் தவிர மூவரும் தலைகுனிந்தே இருந்தனர்.

“அறிவு இல்ல? கேஸ வாபஸ் வாங்கப் போறியா?”

அவருக்கு ஏதோ ஒன்று கைவிட்டுப் போவதை போன்று கோபமும் குரூரமும் சேர்ந்தது.

புனிதா வக்கீல் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தாள். இன்ஸ்பெக்டர் அசிங்கமாக சிரித்துக்கொண்டே, “அவனை மட்டும்தான் வச்சிரிந்தியா இல்ல…” என்று முருகனைப் பார்த்தார். அங்குள்ள பெண் போலீஸ் இருவரும் சத்தமாக சிரித்தனர்.

முருகனுக்கு விட்டு விட்டு காய்ச்சல். துவண்டுபோய் ஒரு துணி போல கிடந்தான். டாக்டரிடம் அழைத்துசென்றது முதல் சாப்பாடும் கஞ்சியுமாக புனிதாதான் கவனித்துக்கொண்டாள். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசாமலிருந்தாள் . ஆல்பர்ட் அண்ணன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்பது நம்பமுடியாததாக இருந்தது.நெஞ்சில் வலியாக அதை உணர்ந்தான். சித்தன் ஏன் வரவில்லை என்ற நினைப்பும் வாட்டியது.

“அந்த மாடி ரும்ல உள்ள பையன் தற்கொலை பண்ணிகிட்டானாம். போலீஸ் வந்திருக்கு” என்று யாரோ புனிதாவிடம் சொல்வது காதில் கேட்டவுடன் சட்டென்று எழுந்து ஓடினான். யோசிக்கும் திறனற்று அழுகையும் அசதியுமாக விழுந்து விழுந்து எழுந்து, சித்தனின் அறை நோக்கி ஓடினான். தெருக்காரர்களின் கூட்டத்தை விலக்கிச் செல்ல முடியாமல் திணறினான். முண்டியடித்து கிட்ட செல்வதற்குள் ஆம்புலன்ஸில் சித்தனை ஏற்றிவிட்டார்கள். அவனுடைய கால்களை மட்டும் தொட்டுப் பிடித்தான். அந்தக் கணத்தை நினைத்தாலே முருகனின் கைகள், ஐஸ்கட்டியைத் தொட்டது போல இன்றும் சில்லிட்டுவிடும். சித்தனின் முகத்தை பார்க்கவேயில்லை. என்ன காரணத்திற்காகவோ அவனுடைய அறையைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். வெளியிலிருந்து எட்டிப் பார்த்தான். ஜன்னல் கதவில் சாத்திவைத்திருந்த கைகளின் ஒவியத்தில், கித்தான் முழுதும் இடைவெளியில்லாமல் சேற்றின் வண்ணம் அடித்து நிரப்பப்பட்டிருந்தது. அந்தக் கைகள் காணாமல் போயிருந்தன.

எத்தனை நாட்கள் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் என்று நினைவில்லை. புனிதா சாப்பாடு போட்டாள், மத்திரைகள் வாங்கித் தந்தாள். ஆனால், முகத்தில் கடுகடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் கண்களில் தன்னையேதான் பார்த்தான். பலமுறை ஏமாற்றப்பட்ட , கைவிடப்பட்ட தோல்வியே தெரிந்தது. எல்லாவற்றையும் தொலைத்த வருத்தத்தைவிட , ஏமாற்றப்பட்ட வலியே கனலாக எரிந்தது. அவளால் ஆல்பர்ட்டைப் போலவோ, சித்தனைப் போலவோ அன்பாக பேச, அவனை ஆசுவாசப்படுத்த முடியாது. அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை அவள். அதனால் என்ன அவளுக்கு உதவியாகச் சேர்ந்து கடையை நடத்தலாம் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

திரும்ப திரும்ப தொடக்க நிலைக்கே கொண்டுவந்து நிறுத்துகிற இந்த வாழ்வை என்னவென்று சொல்வது? எத்தனை முறைதான் பூஞ்யத்திலிருந்து தொடங்குவது என்ற சலிப்பும் அந்த 19 வயதிலேயே முருகனுக்கு ஏற்பட்டது. அவளிடம் ஒண்டிக்கொள்ளத் துடித்தான்.
அதைப் பற்றின பேச்சை எடுத்தவுடன் புனிதா தன்னுடைய அத்தனை கோபத்தையும் இவனிடம் காட்டினாள்.

“தே……… உனக்கு எத்தன தடவ பட்டாலும் புத்தியே வராதாடா. அண்ணே அக்கானு யார் பின்னாடியாவது நாய் மாதிரி, இன்னும் எத்தன நாளைக்கு சுத்திகிட்டிருப்பே. என்ன வயசாகுது? தனியா ஏதாவது செய்யுற வழியப் பாரு. ஒண்ணு சொல்றேன் மனசுல வச்சிக்க. நம்மள மாதிரி ஆட்களுக்கு எப்பவும் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டாங்க. கிடச்சாலும் ஏமாத்தத்தான் செய்வாங்க. உட்கார்ந்து உட்கார்ந்து அழறத நிப்பாட்டிட்ட ஒழுங்கா தனியா பொழக்கிற வழியப் பாரு. நான் நாளக்கு ஊருக்கு கிளப்பறேன்” என்று கிளம்புவதில் மும்முரமானாள்.

அந்த ஒன்றரை வருடத்தில் அவள் இவ்வளவு பேசியதில்லை. அப்போது அதற்கும் அவனால் அழதான் முடிந்தது என்றாலும், வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்த இந்த வார்த்தைகளை இந்நாள் வரை கெட்டியாகப் பிடித்திருக்கிறான். அதில் உள்ள அப்பட்டமான உண்மையைப் போகப் போகத் தெளிவாக உணர்ந்தான்.

ஐந்து வருடங்கள் முன்பு ஆல்பர்ட் அண்ணணிடமிருந்து போன் வந்தது.

” மன்னிச்சிருடா … அப்போ சூழ்நில அப்படி!”
அவனால் அவரை வெறுக்க முடியவில்லை. “என்ன விடுங்க. புனிதாக்கா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா? இப்படிப் பண்ணிட்டீங்களே” என்று சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

“என்கூடதான்டா இருக்கா. அவதான்டா உன் நம்பர் குடுத்தா. இனிமே எல்லாம் சரியா வரும்னு நினைக்கிறேன்டா. ”

என்ன சொல்வதென்று தெரியவில்லை முருகனுக்கு. ஆனாலும், மனதுக்கு இதமாக இருந்தது. ஆல்பர்ட் அண்ணனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இந்த வெண்தாடதான் சித்தனென்று சொன்னால் நம்புவாரா என்று தெரியவில்லை.

உள்ளிருந்து பணம் எடுத்து வந்தார். அவருடைய முகத்தையே ஆவலாகப் பார்த்தான. சித்தனேதான். அந்தக் குரல் மட்டும்தான் இடறியது. லேசாக தலையை ஆட்டினார். இல்லை என்பது போலுமில்லமால், ஆமாம் என்பது போலுமில்லாமல் இருந்தது அது. சட்டென்று கதவு அடைத்துக்கொண்டது. பின்னாடி திரும்பிப் பார்த்துக்கொண்டே வண்டி இருக்கும் இடத்துக்கு வந்தான். `இருக்க முடியாது… சித்தனுக்கு இந்த இருபத்து சொச்ச வருடத்துக்குள் இவ்வளவு வயசாகியிருக்காது’ என்பது போல தலையை இட வலமாக ஆட்டிக்கொண்டான்.

தெருவிளக்கு விட்டு விட்டு எரிந்தது. மஞ்சள் பல்புகளின் மஞ்சள் ஒளி நிறைந்த தெரு.
வண்டியில் ஏறி கடைசியாக ஒருமுறை திரும்பினான். ஜன்னலின் திரை ஓரமாக சிறிதாக விலக்கப்பட்டு, சிறிய இடைவெளியில் சித்தனின் கண்கள் அதே பாசத்தோடும் தீர்கத்தோடும் மின்னின.பின்பு திரை மூடப்பட்டது.

சிமிட்டிக் கொண்டிருந்த விளக்கும் முழுவதுமாக அணைந்துவிட்டது.

“டேய் கறுப்பு எவ்ளோ தந்திரமான கலர்னு தெரியுமாடா. அது எல்லாத்தையும் உள்ள மறச்சு வச்சிக்கும். ஒவ்வொரு நேரம் நமக்கு ஒண்ணே ஒண்ண மட்டும்தான் காமிக்கும். நீ கவனமா பாக்கலனா அவ்ளோதான் சட்டுனு திருப்பி ஒளிச்சி வச்சிக்கும். ஆனா, கறுப்புக்கு மட்டும் வேற குணம் ஒண்ணும் உண்டு. நாம யாருகூட இருக்கமோ அத பொருத்து எல்லாமே மாறும். ஆளுக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி காமிச்சு தலய சுத்தவைக்கும்.”

.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button