ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான்
ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த
எருமைகளின் எலும்புகளில்
அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன்.
வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு
பாடலுக்கு அம்பா சொற்கள்
வாசத்திற்கு சமுத்திரக் கவுல்
நினைவுகளாக மட்டுமிருக்கின்றன.
நினைவுகளையும் திருட வந்தால்
காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின்
இரு துருவத்திலும் பிழம்பு மூட்டி
நெருங்கவிடாது சிலம்பமாடுவேன்
**********
மும்மாத எடையுள்ள மழை
அறுபது நிமிடத்தில் இறங்கியதில்
எனது மகள்களிருவர் உப்பி வெடித்தனர்.
தப்பித்த நான்
காலநிலை மாற்ற அகதியானேன்.
சுவாச சிலிண்டருக்குள்
சத்திரம் தந்தது அரசாங்கம்.
எப்பக்கமும் திறப்பில்லாத
சத்திரத்தின் இரும்புத் தோல்களை
மயானத்துத் தேவதைகள் தட்டுகின்றனர்.
தேவதைகளோடு
மகள்களும் வந்திருப்பதை
தட்டும் தாளங்களில் அறிகிறேன்.
உயிரோடிருந்த மகள்களுக்கு
சன்னல் வைத்த வீடே பிடிக்கும்.
வெப்பமயமான எனது விரல்களால்
சிலிண்டரில் வட்டச்சன்னல் கிழித்தேன்.
உள்ளே நுழைந்தவள்கள்
சிதைவுற்ற கைக்கடிகாரம் போலிருந்த
என்னைப் பாய்ந்து முத்தமிட்டனர்.
**********
துர்நாற்றப் புகாரெல்லாம் கிடையாது.
மேனியிலிருந்து வெளியேறும் புகைக்குத்தான் என்னை
தூர வைக்கின்றனர்.
நிலக்கரி எஞ்சின் ஒரேயொரு பெட்டியுடன்
சிசுவிலிருந்தே என்னுடம்புக்குள் முண்டுகிறது.
உச்சியிலிருந்து கால்கள் வரை
பயணிக்கும் எஞ்சின்
என்னுடலைச் சுற்றுலாத் தலமாக்கிடும்.
பெட்டியின் பழுப்புகால மனிதர்களை வேடிக்கைப் பார்த்தபடியிருப்பேன்
தனிமை வாதையில் நானில்லை.
**********
அருமை அண்ணா ?