அத்துவானக் காடு
அத்துவானக் காட்டில் தண்டவாளம் வானம் பார்த்துக் கிடந்தது
சிறு செடியிலிருந்து சுற்றி எல்லாமே அப்படித்தான் கிடக்கிறது
ஒரு ட்ரெயின் அந்த நேரம் பார்த்து தண்டவாளத்தில் ஓட
ட்ரெயினை அந்தப் பக்கம் ஓரமாக ஒரு புரட்டு விட்ட தண்டவாளம்
“எனக்கு வானம் பார்க்க வேண்டும்
நீ வேண்டுமென்றால் போய் தரையில் ஓடு” என சாகவாசமாகக் கிடந்து
சொன்னது
தண்டவாளத்தைச் சுற்றி அத்தனையுமே இப்படியே ஒன்று ஒன்றாகப் புரட்ட
புரண்டு கொண்டிருந்த ட்ரெயின் புரண்டு கொண்டே வானத்தைப் பார்க்க
நன்றாகப் பழகிவிட்டது
எல்லாருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு புரண்டது
எல்லாவற்றையும் விட ட்ரெயின்தான் இப்பொழுது தீவிரமாக
பார்க்கிறதாகச் சொன்னார்கள்
அந்தச் சாயங்காலப் பொழுதில்
தண்டவாளம் தண்டவாளத்தைச் சுற்றியுள்ளவைகளெல்லாம் தங்களுக்குள்
ரத்தம் வராமல் அடித்து மண்டையை உடைத்துக் கொண்டன.
**********
தண்டவாளத்தை ஒட்டிய வீடு
தண்டவாளத்தில் ட்ரெயின் ஓடும் போதெல்லாம்
தண்டவாளத்தை ஒட்டியுள்ள அந்த வீடும் சேர்ந்து ஓடுகிறது
அது ஒரு வீடு என்பதையே மறந்திருந்தார்கள்
ஒரு ட்ரெயினில் குடியிருக்கிறோம் என்ற நினைப்பில்தான் அவர்கள்
வாழ்ந்து வந்தார்கள்
ஒருநாள் அந்த வீட்டிலிருந்த ஒருவன் அதிகாலை மூன்று மணிக்கு
தனது வீட்டின் முன் பாய்ந்து இறந்துபோனான்
அந்த வழியாக வந்தவரிடம் தான் இறந்த விசயத்தைச் சொன்னவுடன்
அவர் அவனை எழுப்பி உட்கார வைத்து குடிக்கக் தண்ணீர் கொடுத்தார்
செய்தி அந்தப் பகுதியில் தீ மாதிரி பரவியது
இறந்து போன அவனது உடலைப் பார்க்க அவனது வீட்டில் கூட்டம்
கூடியிருந்தது
டிவி பார்த்துக் கொண்டிருந்த அவன் உடல் மீது விழுந்து எல்லாரும்
கதறி அழுதனர்
மெதுவாக அடித்து அழுங்கள் என்றான்
வலிக்கிறதா, மன்னித்துக் கொள்ளென அவனிடம் மன்னிப்பு
கேட்டுக் கொண்டனர்
“நீ எப்படி இறந்தாய் என வந்தவர்களிடம் நீயே சொல்லிவிடு” என
அவனிடம் கூறிவிட்டு அவனது தந்தை அழுகையைத் தொடர்ந்தார்
இவ்வளவு நேரமும் தன்னுடைய காரியத்திற்கு நல்ல முறையில்
ஒத்துழைத்தவன்
இறுதி ஊர்வலத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டே கடைசியில்
நடந்து வருகிறேனென தந்தையிடம் கெஞ்சிக் கேட்டான்
அழுகையை நிறுத்தி அவரும் ‘ம்ம்’ என்றார்
வீட்டிலிருந்து மயானத்தை நோக்கிக் கிளம்புகிற நேரம் பார்த்து சரியாக
தண்டவாளத்தில் ஒரு ட்ரெயின் வந்தது
அதற்குள் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தார்கள்
நல்ல வேளையாக வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டோம்
இல்லையென்றால்
இறுதிஊர்வலத்திற்கு நேரத்திற்கு கிளம்பியிருக்க முடியாதென
எதிர் வீட்டுக்காரர் சொல்லிக் கொண்டே நடக்க
அந்த இறுதி ஊர்வலத்தில் தண்டவாளத்தை ஒட்டிய வீடுகளில்
வசிப்பவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
**********
செமென் டெஸ்ட்
வெளியே மூன்று இளம் பெண்களின் பேச்சு கேட்டது
ஒருத்தி விஜய் சேதுபதியின் வாய்ஸ் மாடுலேஷனை கிண்டல் செய்தாள்
இரண்டு பேர் அவர்கள் பாணியில் அவளுக்கு பதிலடி கொடுத்தார்கள்
திடீர் திடீரென அமைதியானவர்கள் பின் தொடர்ந்தனர்
எதையும் கண்டு கொள்ளாமல் பார்ன் மூவி நாயகி நடிப்பில் மும்முரமாய்
இருந்தாள்
எனக்கு ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை
தமிழ்க் கதாநாயகர்களில் யாருக்கு ஷார்ப்பான கண்கள் என்பதற்குத்
தாவியிருந்தார்கள்
கழிவறையில் இருந்த ஒரு ஜன்னலும் சொருகு கண்ணாடி வைத்து
மறைக்கப்பட்டிருந்தது
கொஞ்சம் கூட ஈரம் காய வழியில்லாமல் சொதசொதவென இருந்ததை
பழைய குண்டு பல்ப் வெளிச்சம் காட்டியது
எனக்கு கை வலிக்க ஆரம்பித்தது
மியா கலிஃபாவிடம் வழக்கம் போல அதே குழந்தைச் சிரிப்பு
மியாவின் சிரிப்பைக் கடப்பதற்கு ஏற்கனவே நேரம் பிடிக்கும்
அன்றைக்கு இன்னும் பாவமாகத் தெரிந்தாள்
என்னால் முடியவேயில்லை
சூர்யா,கமல்ஹாசன் என்று ஒரு முடிவிற்கு வந்திருந்தனர்
கையை மாற்றி முயற்சிக்கலாமெனத் தோன்றியது
அதற்குள் கையிலிருந்த கன்டெய்னர் தரையில் விழுந்து தடதடவென
உருண்டது
வெளியே பரிபூரண அமைதி
தொடந்து இரண்டு நிமிடங்கள் அந்த அமைதி இருந்தது
அந்த அமைதிக்குப் பிறகு எதுவுமே செய்யமுடியாதெனத் தோன்ற
வெளியே வந்துவிட்டேன்
அதற்குமேல் என்னால் அங்கு இருக்கமுடியவில்லை
காலி கன்டெய்னரோடு அந்த லேபிலிருந்து வேகவேகமாக வெளியேறி
அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பதற்றமாகக் கேட்டேன்
“இந்த பஸ் எனது பால்ய காலத்திற்குப் போகுமா?”
**********
மேஜையிலிருந்த தன்னுடைய மூளையை நினைத்தல்
தன்னுடைய மூளையைத் தானே ஆப்ரேஷன் செய்து கொள்வதாகச்
சொன்னான்
உதவிக்கு நிற்கிறோமென்ற செவிலியர்களைக் கூட
வேண்டாமெனச் சொல்லி
தலையை நிதானமாக அறுத்து மூளையை வெளியே எடுத்தான்
தன்னுடைய மூளையை முதன் முதலாக பார்ப்பதால் அவனுக்கு
தலை கால் புரியவில்லை
ஒரு ஸ்டூலில் உட்கார்ந்த படி தன்னுடைய மூளையை முன்னாலிருந்த
மேஜையில் வைத்துக் கொண்டு
ஏற்கனவே தன்னிடமிருந்த மூளை வரைபடங்களை வைத்துச் சரி பார்க்க
தன்னுடைய மூளையை நினைத்து அவனுக்கு ரொம்பத் திருப்தி
ஆப்ரேஷன் இருபது நிமிடங்களில் முடிந்தது
மூளையை இருந்த இடத்தில் வைத்து கண்ணுங் கருத்துமாகத் தைத்தான்
ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடித்து
வெளியே வந்த அவனிடம் ஆப்ரேஷனைப் பற்றிக் கேட்டனர்
தன்னுடைய உணவைத் தானே சமைத்துக் கொண்ட
தன்னுடைய மலத்தைத் தானே கழுவிக் கொண்ட
தன்னுடைய துணியைத் தானே துவைத்துக் கொண்ட அனுபவங்கள்
ஆப்ரேஷனில் கை கொடுத்தது என்றான்
அவனுக்கு எல்லாரும் வாழ்த்துக்கள் கூறினர்
**********
இரண்டு பூனைகள்
என்னிடம் ஒரு பூனை இருந்தது வளர்க்க நினைத்த பூனையது
வளர்த்து வரும் பூனையும் ஒன்று இருந்தது
என்னிடம் ஒரு பூனை இருப்பதாகத்தான் இரண்டு பூனைகளுமே
நினைத்துக் கொண்டிருந்தன
தடவிக் கொடுப்பதற்காக கையைக் காட்டும் போது இரண்டுமே
கைக்குள் வந்து மண்டையைக் காட்டிக் கொள்ளும்
வாலைத் தூக்கியபடி ஒன்றையொன்று மோதிக் கொண்டு
என்னை உரசி வரும்
வெளியே எங்காவது போனால் முதலாவது அதுவாகவே பின்னால் வந்து
ஒட்டிக் கொள்ளும்
இரண்டாவதிற்கு மரம் ஏறத் தெரியுமாதலால் ஏறி மரத்தில் நின்று
பார்த்துக் கொண்டிருக்கும்
பெரும்பாலும் எனது மடிக்குள்ளேயேதான் இரண்டும் கிடக்கும்
இரண்டுமே மியாவ் மியாவென்றுதான் கத்தின
இரண்டு பூனைகள் எதற்கு என்றால் இரண்டு பூனைகள் எனக்குத்
தேவைப்பட்டது
ஒரு நாள் அணிலைப் பிடித்து வந்த இரண்டாவது
சாப்பிடாமல் அதன் முன்னால் உட்கார்ந்து
காலை வைத்து மெதுவாக அதைத் தள்ளித் தள்ளி விட்டது
எனக்கு தூக்கி வாரிப் போட்டது
நிலைமை விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து
வளர்க்க நினைத்த பூனையை கண் காணாத இடத்தில் கொண்டு விட
முடிவு செய்தேன்
வளர்க்கின்ற பூனை உடனே தெரிந்துகொண்டது
என் கால் பக்கத்தில் நகராமல் உட்கார்ந்து கொண்டு
நகர்கிற மாதிரி தெரிந்தாலே எனது கால்களைக் கடிக்க ஆரம்பிக்க
ஒட்டுமொத்தமான என்னுடைய எண்ணங்கள் அதன் கட்டுப்பாட்டின்
கீழ் வந்தன
அப்பொழுது பார்க்க நான் ஒரு பூனை மாதிரியே இருந்தேன்.
**********