நனைந்த சுடர்
வழி மாறிய குட்டி சிங்கம்
ஆதரவற்ற தனது குரலால்
காட்டின் நடுவே
படபடக்கும்
ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக
அடையாளம் கொள்ளும்
குட்டி விலங்கு
சிற்றோடை அருகில்
பூனைக்குட்டியென
குளிர்ந்த நீரால்
தன்னை அமர்த்திக் கொள்கிறது ஓடை நத்தைகளுடன் விளையாடியபடியே
அவ்வப்போது
தெவிட்டாத தனது குரலையுருக்கி மீண்டுமாய் ஏற்றுகிறது கானகத்தின் ஓர் நனைந்த சுடரை.
**********
சேறு படர்ந்த கதைகள்
தனது ஜீவனை
மரிக்கும் தருவாயிலுள்ள பறவையைப் போல
சுமந்து கொண்டிருக்கிறாள்
முன்னம் அவளுக்கு
மிகப் பரிச்சயமான சிற்றோடையிடம் ஒரு நாள்
காலவோட்டம் அறியாமல் தொன்மக் கதை பேசியிருக்கிறாள்.
ஓடியும்
சாடியும்
தெறிக்கும் நீர்த்திவலைகளை அள்ளியள்ளி
மேலே பூசிக்கொண்டபோது சிற்றோடை
பல்வேறு வனக்கதைகளை அவளிடம் கூற ஆரம்பித்தது .
தனது நீண்ட வேள்வியினின்று முடிவுறாத அவள் தேகத்தின் வேதனையினின்று
கடந்துவந்த
பால்யத்தின் சாற்றினின்று அவற்றை சிரத்தையுடன் கொண்டாடுகிறாள்
ஓடையில் நனைந்த
மருதோன்றிச்செடியென.
முதல் புணர்ச்சி குருதியின் வெஞ்சொட்டென ஒழுகும் முள்ளின் நெருக்குதலிலிருந்து அவளை இப்போதும் விடுவித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறது வனம்.
அவளொரு பூநாரை யாகி
நீண்டு வளைந்த தன் கழுத்தை ஓடையின் காதுகளை நோக்கி நீட்டுகிறாள்
அவளுக்குப் பிடித்தமான
சேறு படர்ந்த
கதைகளையுள்ளியவாறு.
**********
பரிதவிப்பின் பாடல்
காட்டின் வறண்ட புற்கள் கோடையின் எச்சமாய் பரவியிருந்தன.
உணவு தேடி
குட்டிகளோடு அலையும் சிறுத்தையின் கண்கள் ஓரிடத்திலிருந்து நகருவதேயில்லை.
தேர்ந்த வேடனின் அவதானிப்பையொத்து
அடி வைக்கும் என்பார்
எனது அப்புப்பன்.
இரவின் முழு கருமையையும் பூசியிருந்த நாளதுவாக இருந்தது. சாய்ந்த நிலவொளியில்
நீரருந்த வரும்
விலங்குகளின் கண்கள்
ஜோடி விளக்குகளாய்
நதியில் ஆடுகின்றன.
காட்டின் புகைப்படமென உறைந்திருக்கும்
காளைகளின் கூட்டமொன்றில் சிறுத்தைகள்
பேரதிர்வாய்ப் புகுந்து
பின்புறமாய்த் தாக்குகின்றன
மீ ஓலத்தோடு மடியும் காளைகள் காடெங்கும் சிதறி ஓடுகின்றன;
அன்றைய தினத்தின்
பரிதவிப்பின் பாடலை
ரத்தம் கெட்டித்துச்சுமந்தபடி.
**********
அண்டார்டிகாவெனும் குச்சி ஐஸ்
மீப்பெரும் பனிப்பாறையின் மீது குறுகிக் கறுத்து, வெளுத்த
ஆயிரம் பொம்மைகளாய் நிற்கின்றன பென்குயின்கள்.
மிதக்கும் பனிப்பாளத்தின் மீதிருந்து
லாவகமாய் நீருள் மூழ்கி
தனக்கும் குஞ்சுகளுக்குமான உணவை பொறுப்பறிந்து கொணர்கின்றன.
துருவப்பகுதியின் உயிர் கொல்லும் உறைபனி,
தீவின் கடற்பகுதியெங்கும்
படிந்து கிடக்கிறது
ஓராயிரம் கூர்முனை உலோகத்தின் வாயெனத்திறந்தபடி.
உணவுக்காக கடலுள் புகும் பென்குயின்களை
ஆக்டோபஸின்
கரங்களாய்த் துரத்தி மடிவிக்கின்றன
கடல் சீல்கள்.
கொடும் பனியின் தடயம்
சிறிதும் தீண்டாமல்
தனது கால்களுக்குள்
குஞ்சுகளைப் பாதுகாக்கும்.
தலையை தாழக்கவிழ்த்தியபடி கூட்டமாய் உறங்கும் பென்குயின்கள் கனவில் அண்டார்டிகா ஒரு குச்சி ஐஸ் போல உருகத் தொடங்குகிறது.
**********