தொடர்கள்
Trending

அடையாளம் 8: மருத்துவர் மனோரமா- உமா மோகன்

தொண்டர் புகழ்பாடிப் `பெரிய புராணம்’ இயற்றிய சேக்கிழார் வம்சக் குழந்தையொன்று, தொண்டை வாழ்வாக வரித்துக்கொண்ட கதைதான் இந்த அத்தியாயம்.

சென்னை தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பினாகபாணியின் கரம்பிடித்தார், சேலம் ஜமீன்தார் குடும்பத்துப் பெண் ஞானசுந்தரி. மூத்த மகன் தியாகராஜனுக்குப் பின் 7.2.54ல் பிறந்த பெண் குழந்தைக்கு மனோரமா எனப் பெயர் சூட்டப்பட்டது.

குழந்தைகளின் கல்வியை உத்தேசித்து, குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. 1956ல் கோடம்பாக்கத்தில் குடியேறினார்கள். பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார் மனோரமா. மிகக் கண்டிப்பான சூழல். மனோரமாவோ சேட்டை செய்யும் குழந்தை. மதர் சுபீரியரிடம் கொண்டுபோய் நிறுத்தினால், பாட்டுப்பாடிக் கொஞ்சி அறிவுரை சொல்லி அனுப்பிவிடுவார்.

மற்றபடி அனைவரும் சமம் என்பதைக் கற்ற இடம். ஒரே தண்டனை, ஒரே பாராட்டு, ஒரே அணுகுமுறை; குழந்தைகளிடையே சாதி, மத வேறுபாடு எதுவும் கிடையாது.

குழந்தைகளை உட்காவைத்துக் கதைகள் சொல்வது அப்பாவின் வழக்கம்.

அப்படித்தான் ஒருநாள், இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மனோரமாவுக்கு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கதையைச் சொன்னார் அப்பா. ஒழுகிக்கொண்டிருந்த ரத்தமும் சீழும் துடைத்து, சேவையாற்றிய விதத்தை அப்படியே சொல்கிறேன் பேர்வழி என்று அப்பா சொன்னதை, வேறு எந்தக் குழந்தையாவது கேட்டிருந்தால் அழுது ஓடியிருக்கும். ஆனால், மனோரமாவின் மனதில் மருத்துவராகத்தான் வாழவேண்டும் என்ற கனவு விதைக்கப்பட்டது அப்போதுதான். பெரிதாக எதுவும் புரியவில்லை என்றாலும், “நான் டாக்டராதான் வருவேன்” என்று சொல்லத் தொடங்கிவிட்டார்.

எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். அதன்பின், நேரடியாக பதினொராம் வகுப்பு தனித் தேர்வராக எழுதி, முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பதென்று முடிவு. தனித் தேர்வர் என்பதால், மதிப்பெண் சான்றிதழ் (தாமதமாகவே வரும்) கைக்கு வராமல் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயங்கினர். பாட்டி வேறு தனது சாந்தோம் வீட்டில் தங்கி, வேறு கல்லூரியில் படிக்கச் சொல்கிறார். தன் விருப்பப் பாடம், தன் விருப்பக் கல்லூரி என்பதே மனோரமாவின் தீர்மானம்.

உறவு வட்டத்தில் பெயர்பெற்ற மருத்துவர்கள் இருந்தாலும், அக்கால மனநிலைப்படி, ஒரு பெண் மருத்துவராக வருவதில் வீட்டில் அத்தனை ஆதரவில்லை. குறிப்பாக, அம்மாவிடமிருந்து பலத்த எதிர்ப்பு.

முதலில் வாங்கிவந்த விண்ணப்பத்தை அம்மா கிழித்துப்போட்டு, அப்பா இன்னொன்று வாங்கிவரும் அளவு வீட்டுச் சூழல். நேர்முகத் தேர்வுக்குச் செல்லவே அனுமதியில்லை. எல்லாம் தாண்டி சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அம்மாவின் கவலை உயர்கல்வியைத் தொடர்ந்துகொண்டே போனால், மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம் என்பதுதான். மற்றபடி இவரின் சகோதரர் பொறியாளராகவும், இவர் மருத்துவராகவும் உருவாகப் பெற்றோர் செய்த தியாகங்கள் எண்ணிலடங்காது எனக் கசிகிறார் மனோரமா. செலவுகளைச் சமாளிக்க கடுமையான சிக்கனம், தங்கள் தேவைகளைக் குறைத்துக்கொள்வது என்றெல்லாம் தங்கள் வாழ்வையே குழந்தைகளின் உயர்வையொட்டி அமைத்துககொண்டனர்

இறுதித் தேர்வுகளுக்குப் படிக்கும்போது, பேய் மாதிரி படிப்பார். அட்டவணை போட்டுக்கொண்டு மராத்தான் படிப்பு! தேநீர் போட்டு வைத்துக்கொண்டு, தானும் ஒரு பூத்தையல் போன்ற கைவேலையோடு மகளுக்குத் துணையாக அம்மா உடன் அமர்ந்துகொள்வது வழக்கம்

 

மனோரமாவின் இறுதியாண்டுத் தேர்வு நெருக்கத்தில், அவர் பெற்றோருக்கு இலவசமாக மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப் பயணம் செல்லும் அரிய வாய்ப்பு கிட்டியது. ஆனால் மகளோ, “தேர்வு நேரத்தில் நீங்கள் என்னோடு இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேன்” என்று மிரட்டி அடம் பிடிக்க, தங்கள் பயணத்தைவிட மகளின் தேர்ச்சியே முக்கியம் என்று அந்த வாய்ப்பைக் கைவிட்டனர்.

ஆனால், இது எனக்கு வாழ்நாள் முழுவதுமான குற்றவுணர்வாக மாறிவிடும் என்று அப்போது அறியவில்லை. மீண்டும் அப்படி ஒரு சூழல் அவர்களுக்கு அமையவேயில்லை. என் பிடிவாதத்தையும் மூட நம்பிக்கையையும் நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூருக்கு நான் செல்ல நேர்ந்தபோது, விமான நிலையத்தில் அடிவைக்கவே என்னால் முடியவில்லை” என்று நெகிழ்கிறார்

MBBS படிக்கும்போதே, சிறப்பு மருத்துவம் படிப்பது பற்றிய யோசனைகளில் இருந்தார். பொதுவாக அப்போது பெண் மருத்துவர் என்றால், மகப்பேறு மருத்துவத்தைத் தொடர்வதே வழக்கமாக இருந்தது. ஆனால், மனோரமாவுக்கு அதில் ஈடுபாடில்லை. பயிற்சிக்கால சம்பவங்கள் சில அதற்குக் காரணமாயின. பேற்றுவலி தாங்கமுடியாமல் அலறும் பெண்களும், அப்போது அவர்கள் பெறும் அணுகுமுறையும்இந்த அவலங்களைப் பார்க்க வேண்டாம் என்றொரு எண்ணம். பரிசோதனைக்கு வந்திருந்த ஒரு கர்ப்பிணியிடம், பேறுகாலக் கணிப்புக்காகக் கடைசியாக எப்போது தீட்டு வந்தது எனக் கேட்கப்பட்டது. “இருங்க” என வெளியே ஓடினார். வந்து பதில் சொன்னார். “அதற்குள் எங்கே போனீங்க?” என்று கேட்டால்,என் மாமனார்தான் வீட்டு விலக்காகும் நாட்களைக் குறித்து வைப்பது வழக்கம். கேட்டு வந்தேன்” எனச் சொல்லவும் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

இதையெல்லாம் சகிக்க முடியாது என்றுதான்  கணித்த பெண்ணின் பாடுகள் குறித்தே, வாழ்நாளின் பெரும்பகுதி  தீவிரமாக இயங்கப்போகிறோம் என்று அப்போது அறியவில்லை.

நரம்பியல் அல்லது உளவியல் சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற மனோரமாவின் விருப்பத்தைக் குடும்பம் ஏற்கவில்லை. தொடர் வாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் நல மருத்துவம் படிக்கச் சேர்ந்தார். அதிலேயே உயர்சிறப்பு பட்டமும் பெற்றார். தொடர்ந்து இரைப்பை,குடல் சிகிச்சை வல்லுநராகவும் ஆனார். DR.P.MANORAMA . MD(PAEDIATRIC)., DCH.,DM(GASTRO ENTEROLOGY) என்ற தென்னிந்தியாவின் முதல் பெண் குழந்தைநல குடல்சிகிச்சை வல்லுநர் இப்படித்தான் உருவானார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணி.

மேலே படிக்கப் படிக்க அம்மாவுக்கு மகளின் திருமணம் எப்படி அமையுமோ என்ற அச்சமும் வளர்ந்துகொண்டு வந்தது. ஒரு வழக்கறிஞரை மணமகனாக்கினார்கள். ஓர் உயர்சிறப்பு மருத்துவர், பேராசிரியரின் வீடு, நிச்சயம் சராசரி பெண்ணின் வேலைப் பொறுப்புகளால் கட்டமைக்கப்பட முடியாது என்பதை இன்றும்கூட இச்சமூகம் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. பதின்மூன்று ஆண்டுகாலக் கருத்து வேறுபாடுகளுள்ள இல்லறம் மனமொத்த பிரிவில் முடிந்தது.

திருமணமாகி ஆறாண்டுகள் கழித்துப் பிறந்த மகன் கார்த்திக். தொடர்ந்த உடல்நலக் குறைவுகள் இருந்தன. உடல் பருமன் ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சைகள், பரிசோதனைகளுக்குப்பின் MRI மூலம், மூளையில் சிறுகட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம். திடீரென தலைவலி வந்துவிடும். உப்பு குறைவான பத்திய உணவு.

இவற்றுக்கிடையே இவருடைய கண்காணிப்பின் கீழ் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கபபட்டிருந்தனர். எச் வி தொற்றுடைய இரண்டரை வயதுச் சிறுவனும், நான்கு வயதுச் சிறுமியும். சிகிச்சையின்போதே அக்குழந்தைகள் சந்திக்கும் புறக்கணிப்பும், அவர்களுடைய பரிதாப வாழ்நிலையும் மனோரமாவின் மனதை உலுக்கின. மருத்துவமனையிலிருந்து அவர்கள் வெளியேறும் நாள் வந்தபோது, பொறுப்பேற்க அழைத்துச் செல்ல யாருமற்ற அந்தச் சூழலில் தாமே அழைத்துவந்தார்.

 

 

நண்பர்கள்,இவர்கள்மேல் பாசம் வைக்காதே, சீக்கிரம்  இறந்துவிடுவார்கள், நீதான் கஷ்டப்படுவாய்” என்றெல்லாம்  இவர் மேல் அக்கறையோடு சொல்லிப் பார்த்தனர். மனோரமா கேட்கவில்லை. தொடர்ந்து இதுபோல குழந்தைகள் வர வர கிட்டத்தட்ட முப்பது குழந்தைகள் ஆயிற்று

முதலில் இவர் எடுத்துவந்த அந்த இளைஞன், இப்போது முப்பது வயதில் தனக்கு ஒரு வாழ்விணையைக்  கண்டுபிடித்துள்ளதாகவும் “அவளும் மாத்திரை சாப்பிடற (தொற்றுக்காக) பொண்ணுதாம்ம. நீங்க வந்து பார்த்து கல்யாணம் நடத்தணும்” என்று தொலைபேசியில் சொல்லியிருக்கிறார். “கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்னும் போகமுடியவில்லை” என்று மருமகள் கிடைத்த பூரிப்போடு சொல்கிறார்.

அந்தப் பெண் குழந்தை?

பதினைந்து வயதில் இறந்துபோனது

இப்படித்தான் வருத்தமும் மகிழ்ச்சியும் மாறி மாறி இருக்கிறது CHES வாழ்வில் 

CHES- COMMUNITY HEALTH EDUCATION SOCIETY 

 குழந்தைகள் தொடர்ந்து வர ஆரம்பித்தபோது, தன்னார்வத் தொண்டு நிறுவனமாக நடத்துவதே சரியாக இருக்கும் என்ற நண்பர்களின் அறிவுரையால் பிறந்த அமைப்பு. தொடக்கத்தில் ராசாத்தியம்மாள் என்ற ஆயா குழந்தைகளை நன்கு பராமரித்து, பழக்க வழக்கங்களை சிறப்பாகக் கற்பித்து வந்தார். எண்ணிக்கை கூடியபோது, குழந்தைகளைப் பராமரிப்பதில் கடும்சிக்கல் இருந்தது. பாதிக்கப்பட்டு உதவி நாடுபவர்களையே ஈடுபடுத்தினால் என்ன எனத் தோன்றியது டாக்டர் மனோரமாவுக்கு.

பாலியல் தொழிலாளிகள், மாற்றுப் பாலினத்தவர் பலரையும் தனது சேவையில் ஈடுபடுத்தத் தொடங்கினார். அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. குழந்தைகள் பராமரிப்பு, எச் வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பொது சமூகத்துக்கும் விழிப்புணர்வு அளித்தல் போன்ற களப்பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்குத் `தோழிகள்’ என்ற பெயர் தந்தது இந்தத் திட்டம். மாற்று வருமானத்துக்கான வழிகாட்டியாக இந்த வாய்ப்புகள் அமைந்தன. குறைந்தபட்சம் மாதம் 15,000 ரூபாயாவது கிடைக்கவேண்டும் என்பது நோக்கம்.

நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் வாழ்க்கைமுறை மாறி, சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஜான்சி ராணி சங்கம் உருவானது. கையெழுத்திடுவது , காப்பீடு, வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் கற்றனர். கடைகள் நடத்தினர். ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கும் இந்த வழிகாட்டல், மாற்றம் வந்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள், மாற்றுப் பாலினத்தவர், ஆண், பெண் பாலியல் தொழிலாளர்களுக்கான மருத்துவ உதவிகளும் தரப்பட்டன.

TANSAC எனக் குறிப்பிடப்படும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு, ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் திருவிழாவில், மாற்றுப் பாலினத்தவர் பெருமளவில் கலந்துகொள்வதால், அங்கு சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய இவரது அமைப்பை வேண்டியது. அங்கு சென்றபோது டாக்டர் மனோரமா ஓர் உண்மையை உணர்ந்தார். மாற்றுப் பாலினத்தவருக்கு சமூக அங்கீகாரமே முதற் தேவையாக உள்ளது. புறக்கணிப்புதான் அவர்கள் வாழ்க்கை பாலியல் ரீதியாகச் சீரழிவதன் காரணம். விழிப்புணர்வுச் செய்திகள் அவர்களைப் போய்ச் சேரவேண்டுமென்றால் நம்பிக்கை தரவேண்டியது முக்கியம். அவர்களுக்கு ஓர் ஈடுபாடு வரும் வகையில் 1995,96 ல் அழகுப் போட்டிகள் நடத்தினார். ஆர்வத்துடன் பெருமளவில் கலந்துகொண்டனர்.

அடுத்த வருடம் அழகுப் போட்டிக்காக அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தபோது, மாற்று ஏற்பாடு ஒன்றைக் கொண்டுவந்தார். அரசுத் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஒரு வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதுல்ய மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அரவானின் மனைவியாகத் தம்மைக் கருதி தாலி கட்டிக்கொள்ளுதல் கூவாகம் விழாவின் ஐதீகம். அந்த அடிப்படையில் அரவானிகள் என்று அழைக்கலாம்  என்று தொடங்கிவைத்தார் ரவி பி எஸ்., ஆட்சியர் அதுல்ய மிஸ்ரா இருபத்தியிரண்டு அரவானிகளுக்கு தலா ஒரு சென்ட் இடம் இலவசமாக அளித்து, அவர்கள் ஏதேனும் தொழில் நடத்த ஊக்கம் தந்தார்.

பின்னாளில் மாற்றுப்பாலினத்தவர் தங்களுக்குள் இணைந்து தொழில்புரிந்து, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ THAA’என்ற பதிவுபெற்ற அமைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்தார்  மனோரமா .

வீடு வீடாகச் சென்று நேரடியாக ரவிக்கைத் துணி, ஊறுகாய் விற்பது போன்ற சுயதொழில்களை நடத்தி வாழ வழி பிறந்தது. அத்தோடு மட்டுமல்ல,எச் வி தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, பாசிடிவ் எனக் கண்டுபிடிக்கப் பட்டவர்களுக்கும், இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவ்வாறு செல்லும்போது ஓர் ஆழாக்கு அரிசியாவது கையில் கொண்டுபோவார்களாம். ஏன் தெரியுமா? தொற்றாளர் எவரேனும் உடல்நலமின்றி இருந்தால், கஞ்சியாவது காய்ச்சிக் கொடுத்துவிட்டு வருவதற்கு.

இப்படிச் சோதனை செய்யப்படுவதற்கு யாரும் முன்வராத நாட்கள் அவை. 1997ல் வீட்டிலிருந்தபடியே கவனித்துக்கொள்ளப்படுவது குறித்த யோசனையை முன்னெடுத்தார் மனோரமா. தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வுத் திட்டம். அங்கு சென்று மக்களிடையே உரையாற்றுவது, கேள்வி பதில் மூலம் அவர்களையும் பங்கேற்க வைப்பது, அதன் மூலம் மக்களின் மனத்தடை உடைத்து பரிசோதனைக்கு முன்வரலாயினர்.

பரிசோதனை மட்டுமல்லஅவர்களுக்கான வழிகாட்டல் மிக முக்கியம் என்பதை உணர்ந்தவர் டாக்டர் மனோரமா. அரசு பொது மருத்துவமனையில் இருந்த ஹோமியோபதி மருத்துவர் இதற்குத் துணை நின்றார். புரிந்துகொண்ட மக்கள் பரிசோதனைக்கு முன்வர முன்வர, பாசிடிவ் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது கவுன்சலிங் செய்ய அதிக ஆட்கள் தேவை என்ற நிலையில், வேலூர் சி எம் சி மருத்துவமனை பயிற்சியளிக்க முன்வந்தது. ஆனால், பயிற்சிபெற யார் முன்வருவார்கள்?

Ches உறுப்பினர்களே அதைச் செய்யட்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாதிப்பின் கனபரிமாணங்களை உணர்ந்த அவர்கள், மற்றவர்களைவிட உணர்வுபூர்வமாக இதைச் செய்ய முடியுமென்பது டாக்டரின் கணிப்பு

97-98ல் 130 குடும்பங்களைக் கண்டடைந்தனர். மருந்து கிடையாது, இரண்டு மூன்று ஆண்டுகளில் செத்துத்தானே போகப்போறோம். இஷ்டப்படி இருந்துட்டு போவோம் என்று கட்டுக்குள் வர மறுத்தனர். நிறுவனத்தில் எல்லோரும் வெளிப்படையாகப் பேசலாம். எனவே, இந்த கள நிலவரத்தைப் புரிந்துகொண்டு,உன் குழந்தை வளர்ந்து ஆளாகும்வரையாவது நீ நல்லா இருக்கணும். எனவே, வழிகாட்டுதலைப் பின்பற்று” என்று குழந்தையின் வாழ்வை முன்னிறுத்தி வழிகாட்டும் முறை மாற்றப்பட்டது. இதற்கு நல்ல பலனும் இருந்தது.

எச் வியால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இறந்துவிடுவது, பிரிந்துவிடுவது, நோயுற்றிருப்பது போன்ற பல காரணங்களால் இத்தகைய குழந்தைகளை வளர்ப்பவர்கள் அவர்களின் பாட்டிகளாகவே இருந்தனர். அந்தக் குழந்தைகளின் நலன் காக்கவும், அதற்கு அந்தப் பாட்டிகளுக்கு உதவவும் வேண்டும் என்று சிந்தித்தார் மனோரமா. அதற்காக அவர்களுக்கு சங்கம் அமைத்து ஒருங்கிணைத்தார்.

இதற்கிடையே சுனாமி வந்தபோது, மூன்று நாட்கள் தொலைக்காட்சியில் அந்த இழப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேரில் போகவேண்டும் என்று தோன்றியது. கடலூர் புதுக்குப்பத்துக்குப் போனார்

பார்த்துக்கொண்டே வந்தவர் சற்று இளைப்பாற அங்கிருந்த ஒரு திண்ணையில் அமர்ந்தார். வெறும் திண்ணைஅப்போது ஒரு பெண்மணி கையில் ஒரு கூடையோடு சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். என்ன வேண்டும் எனக் கேட்டபோதுதான் தெரிந்தது, இவர் உட்கார்ந்திருந்த வெறும் திண்ணை அந்தப் பெண்மணியின் வீட்டின் எச்சம் என்பது. கடல் கொண்டுபோன வீட்டில் எல்லாம் போய்விட்டது. ஏதாவது நகை கிடைக்குமா எனத் தேடுவதாகச் சொன்னது வருத்தமாக இருந்தது.

கையோடு சாப்பாடு கொண்டுபோயிருந்தார்கள். ஆனால், எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது? மிஞ்சியிருந்த ஒரு வீட்டில்,இங்கு உட்கார்ந்து சாப்பிடுங்கள்” என்றார்கள். அந்த வீட்டில் ஒரு பெண்ணின் படத்துக்கு மாலை போட்டிருந்தது. யாரென்று விசாரித்தார். அந்த வீட்டின் தலைவி தன் புடவையால் கட்டி இழுத்து ஆறு பேர் உயிரைக் காத்து, தன்னுயிரை நீத்த கதை தெரியவந்தது.

இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் துயரக் கதைகள்

இதனிடையே மீட்புக்காக வருபவர்கூட அங்கிருந்த வளரிளம் பெண்களிடம் அத்துமீறும் விஷயங்களும் நடந்தகொண்டிருந்தன.

அப்போதைக்கு கொஞ்சம் விளையாட்டுச் சாமான்களைக் குடும்பம் இழந்த ஒரு தாயின் மேற்பார்வையில் அளித்து வந்தார்.

மருத்துவ உதவிகளும், மனநல ஆலோசனைகளும் அங்கிருப்பவர்களுக்கு இயல்பு வாழ்வுக்குத் திரும்ப அவசியம் தேவை என்று உணர்ந்தார். நாகை, கடலூர் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த நாற்பது கிராமங்களில் பணி தொடர்ந்தது. 111 குழந்தைகள் சிதைந்த மனநிலையிலிருந்து மீட்கப்பட்டனர். தண்ணீரைப் பார்த்தாலே அஞ்சி நடுங்கும் நிலையில் இருந்தவர்களும் அதில் அடங்குவர்.

2017ஆம் ஆண்டு இவரைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். மூன்று நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றுவதாகத் தெரிவித்த அவன், சுனாமி காலப் பணிகளின்போது இவரை அறிந்துகொண்டான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரைப் பார்த்ததும் விசாரித்துக்கொண்டு வந்து அன்பைப் பகிர்ந்த நாளை நெகிழ்வுடன் சொல்கிறார்.

நலத்திட்டங்களை முன்னெடுக்க அரசுக்கு உதவியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட விதவைகள், குழந்தைகளின் கணக்கெடுப்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்கள் வீட்டு செவிலியர் பணிக்கும்ஆடை வடிவமைப்பு பயிற்சிக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் வாழ்வு பெறவும் உதவுதல், வழிகாட்டுதல் என இவர் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தன.

புயலால் பாதிக்கப்பட்ட காலத்திலும் பல்லாயிரக் கணக்கானோர் மனிதநேய உதவிகள் பெறக் காரணியாக இருந்தார் டாக்டர் மனோரமா.

இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சியை வடிவமைத்து, பத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சிகள் அளித்தது, அப்பள்ளிகளுக்குக் கைகழுவுதல், கழிப்பறைப் பழக்கங்கள் குறித்த பயிற்சியும் வசதிகளும் ஏற்படுத்தித் தந்தார்.

குழந்தைகளின் நலனில் இவர்கொண்ட அக்கறை பொறுப்புகளின் எல்லையை அகலமாக்கியது. குழந்தைகள் நலனுக்கான சென்னை அமைப்பின் தலைவராக ஒரு மாவட்ட நீதிபதியின் அதிகாரங்களோடு சேவை செய்யும் வாய்ப்பு வந்தது. குழந்தைகளின் வளர்ச்சியில் குழந்தைகளின் உரிமைகளுக்குள்ள முக்கியத்துவத்துவத்தை முன்வைத்தே செயல்பட்டார். பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் நலன் காக்க, இச்சூழலைக் கையாள்வதற்கான விதிமுறைகள் உருவாக்குவதிலிருந்து, வழக்குகள் பதிவது, நீதிக்காகப் பயணிப்பது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்வது என்று அடிமுதல் நுனிவரை மனோரமாவின் பங்களிப்பும் உழைப்பும் இருக்கும்.

இத்தகைய சூழலைக் கையாளும் காவல், மருத்துவம், கல்வித் துறை போன்றவர்களுக்கான வழிகாட்டுதல், ஆலோசனை, பயிற்சி போன்றவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

பாலியல் வன்கொடுமை, சிறார் தொழிலாளர் பிரச்னைகளில் நீதியின் முன் நிற்கும் நிறுத்தப்பட்ட சிறாருக்கான அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதில் அக்கறை காட்டியவர்.

தகுந்த ஆலோசனைகளுக்குப்பின் குழந்தைகளைத் தாய்மாரிடம் ஒப்படைப்பதும் இவர் கனிவின் விளைவாக நிகழ்த்தியதுண்டு.

திரைப்பட ஆசையில் வீட்டைவிட்டு ஓடிவந்து சுற்றித் திரிபவர்களைக் காவல்துறை இனங்கண்டு தகவல் தர, மீண்டும் மீண்டும் உரையாடிப் புரியவைத்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் 

வீட்டிலிருந்து நகை, சொத்துப்பத்திரம், காப்பீட்டுப் பத்திரம் உட்படத் தூக்கிக்கொண்டு அண்டை வீட்டுப் பையனோடு ஓடிவந்த பெண்ணின் கதையைத் திருத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தது என்று இவர் சொல்லும் அனுபவங்கள் ஒவ்வொரு நாளையும் பணிக்கு ஒப்புக்கொடுத்த சாட்சிகள்.

பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான சென்னை மாவட்டக் கமிட்டியிலும், தமிழ்நாடு மாநிலக் கமிட்டியிலும் பணியாற்றியிருக்கிறார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு எச் விஎய்ட்ஸ் குறித்து அடிப்படைப் புரிதலை உருவாக்குவதற்கான பாடத்திட்டக் குழுவுக்கு ஆலோசகர் 

தமிழக அரசு உருவாக்கிய திருநர் நலக்குழு உறுப்பினர்.

நீதித்துறைக்கு ஆலோசனை கூறும் பிற துறையினர் குழு உறுப்பினர் 

சமூக நலவாரியத்தின் தன்னார்வலர் குழுவில் பணியாற்றியிருக்கிறார்.

 பல நிறுவனங்களில் பணிபுரியும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலை விசாரிக்கும் குழு உறுப்பினர்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் உறுப்பினராக, வழிகாட்டியாக, பங்கேற்பாளராக டாக்டர் மனோரமா தொடர்ந்து இணைந்து இயங்கிவருகிறார்.

பாலியல் தொழிலாளர்கள் நலனுக்கு,விழிப்புணர்வுக்கு புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு, கிட்டத்தட்ட ஐயாயிரம் பேருக்கு மேல் பலன்பெற வழி காட்டியவர். கால் நூற்றாண்டு காலமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்

விழிப்புணர்வு தர அணுகியபோது ஒரு பெண், எய்ட்ஸ் பற்றி நன்றாகவே தெரியும் என்றாராம். “பிறகு ஏன் பாலியல் தொழில் புரிகிறாய்?” எனக் கேட்டபோது,என் மூன்று குழந்தைகள் நல்ல கல்வி பெறவேண்டும் என்றுதான் இப்படி வாழ்கிறேன். வேண்டுமானால் பாதுகாப்பான செக்ஸ் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டாராம். பாதுகாப்பாக ஆணுறை பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தினோம். பாதிக்கப்பட்டவருக்கு ஒழுக்க வகுப்பு எடுப்பதைவிட, அவர் நிலையை உணர்ந்து தீர்வு சொல்வதே முக்கியம் என்று முடிவுசெய்தார்

நாமக்கல்லில் இன்னொரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து எச் வி தாக்கம் குறித்த விழிப்புணர்வு, கணக்கெடுப்பு போன்றவற்றை ches மேற்கொண்டது. களப்பணி நிலவரம் குறித்த கணக்கெடுப்புகளை, திருச்சி, தேனி, சேலம், திருநெல்வேலி என  சென்னைக்கு வெளியேயும் இயங்கினார்.

சென்னையில் பெட்ரோல் பங்குகளில் ஆணுறை கிடைக்கச் செய்யும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எய்ட்ஸ் பாதிப்பால் இறக்கும் தருவாயில் உள்ள பெண்களைக் கவனித்துக்கொள்ள ஓர் இல்லமும் அங்கு செயல்படுகிறவர்களுக்கான பயிற்சியும் ஏற்படுத்தினார்.

எய்ட்ஸ் பாதிப்பால் கைவிடப்படும் குழந்தைகள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயலாக்கி வருபவர். இத்தகைய குழந்தைகளுக்காகத் தொண்டு நிறுவனம் உருவாக்கியபோதும், சமுதாயத்தால் இந்தக் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என விரும்பினார். இந்தக் குழந்தைகளைத் தத்து எடுக்க வசதியானவர்கள் தயாரில்லை

மனோரமா பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று இத்தகைய குழந்தைகளைத் தத்து எடுப்பது பற்றிப் பேசினார். சுய உதவிக் குழு மகளிர் இருபத்தியிரண்டு பேர் முன்வந்தனர். முப்பத்து ஐந்து குழந்தைகள் உள்ள நிறுவனத்தில், அந்தக் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துரைத்தபோது பலரும் விலகினர். கடைசியில் இரண்டு பேரைத் தேர்வுசெய்தார்.

சமுதாயத்தில் இவர்களை வளர்த்துக் காட்டவேண்டும் என்பது ஒரு குறிக்கோள் என்றால், இரண்டாவது என் திருப்திக்கு என்றிருந்தது. பாசிடிவே என்று தெரிந்து தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பரிசோதிக்கவும் அவர்கள் தயங்கினர். நெகடிவ் என்று வந்துவிட்டால் ஒருவேளை பிரித்துவிடுவீர்களா என்று தயங்கினர்

பெங்களூர் அழைத்துச்சென்று இதற்கான பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். உதவித்தொகை வழங்க முன்வந்தபோதும், அந்தப் பெண்கள் மறுத்ததை நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார். “பெண் குழந்தை வந்ததால் என் கணவர் குடிப்பதை நிறுத்திவிட்டார். மகன்கள் தங்கை மேல் பாசமாக இருக்கிறார்கள். இது எங்கள் குழந்தை பணம் வேண்டாம்” என்று சொன்னார்களாம். பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமன்றி, பொதுசமூகத்தின் நடத்தையிலும் மாற்றம் கொண்டுவந்த இத்தகைய முயற்சிகள் எவ்வளவு மேலானவை.

 பாசிடிவ் என்று வளர்க்கப்பட்ட 57 குழந்தைகள், இரண்டு வயதில் பரிசோதனை செய்தபோது நெகடிவ் ஆகியிருக்கிறார்கள்.

மனோரமா சமூகநலத்துறை மூலம் இக்குழந்தைகள் பற்றி சமூகத்தில் நிலவும் மனத்தடை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தத்து கொடுப்பது பற்றிய சட்டபூர்வ விழிப்புணர்வு முயற்சிகளையும் மேற்கொண்டார்.

வெளிநாட்டுப் பெற்றோருக்கு தத்து கொடுக்கப்பட்டு நெகடிவ் என்று வந்து வளர்ந்த பெண் குழந்தை, பதினைந்து வயதில் தாயைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லி இந்தியா வந்தார். இவர்களோடு உரையாட தமிழும் ஆங்கிலமும் கற்றதும் தன் மூலம் தேடி அடைந்ததும் சுவாரஸ்யமான நினைவுகளாக நிற்கின்றன

முதல் இறப்பின் துயரமான நினைவுகளை இன்னும் மறக்கவில்லை அவர்.

அம்மை நாக்கு முதல் ஆசனவாய் வரை பாதித்த குழந்தை இங்கு கிடைத்த மருத்துவப் பரிவை உணர்ந்து ஒட்டிக்கொண்டது.

எய்ட்ஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த ஐந்து வயது கிஷோரின் பெரியப்பாதான் இங்கு சேர்த்தார். பின் ஒருமுறை அவனைப் பார்க்க பிஸ்கட் பாக்கெட் எடுத்துக்கொண்டு வந்தபோது, அதைத் தூக்கி வீசிவிட்டான். அவர் வீட்டில் இருக்கும்போது வெளியில் உட்காரவைத்து அவனைத் தனிமைப்படுத்திய நினைவுகளைச் சொல்லி கத்தியவன், அவரைப் பார்க்க மறுத்தான்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரச் செயலர் வந்திருந்தபோது, பெற்றோர் பற்றிக் கேட்டபோது, கலங்கியவன் மீண்டும் வீட்டுக்குப் போக மிகவும் ஏங்கினான். ஆனால், அவர்கள் தயாரில்லை. அந்த ஏக்கத்தோடு இங்கேயே இறந்தான். சொத்துக்குப் பங்கம் வராது இருக்க, இறப்பு சான்றிதழ் கேட்டு அந்தப் பெரியப்பா வந்து நின்றபோது, எனக்குப் பார்க்கவே பிடிக்கவில்லை என்று கசப்பான நினைவில் பெருமூச்சு விடுகிறார்.

இத்தகைய குழந்தைகளின் நலன் குறித்து பொது சமூகம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக, டாக்டர் மனோரமா பல்வேறு நிகழ்வுகளை உருவாக்கினார். நாட்டிலேயே முதலாவதான எய்ட்ஸால் கைவிடப்பட்ட 300-க்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கான இல்லத்தை உருவாக்கினார். அங்கு அளிக்கப்படும் கல்வி, மருத்துவ, ஆலோசனை, பயிற்சி வசதிகளால் சாதனை புரியும் குடிமக்களாக அவர்கள் உருவாகி வருகிறார்கள்.

தன் மருத்துவ தொழில் வருமானத்தை மட்டுமே கொண்டு நீண்ட நாள் இவற்றுக்கான செலவைச் சமாளித்து வந்தார். 1996ல் தமிழக ஆளுநர் அளித்த ஐம்பதாயிரம் ரூபாயே குறிப்பிடத்தக்க முதல் கொடை. பின்னர், இவர் சேவையின் அருமை உணர்ந்த நண்பர்கள் ஆதரவு தரலாயினர். இத்தகைய உதவிகளால் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடங்களில் ஆனந்த இல்லம்  இயங்கிவந்தது.

இடம் கிடைப்பதே கடினம். அதன்பிறகு, சில சமயம் அண்டை அயலார் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சி, உரிமையாளர்களிடம் வலியுறுத்தி இடம் மாறவேண்டிய அவலமெல்லாம் நடந்திருக்கிறது.

ஒருமுறை வளைகுடா நாட்டிலிருந்து ஒருவர் சென்னை வந்த தன் நண்பரிடம் இவர்களுக்கான நன்கொடையைக் கொடுத்துவிட்டிருந்தார். இவர்களுடைய சூழலையும் சேவையையும் நேரில் பார்த்த அந்த நண்பர், தான் பணிபுரியும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் அதைத் தெரிவிக்க,  ஆனந்த இல்லத்துக்கு நல்ல காலம் பிறந்தது. டாக்டர் மனோரமாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் கொடையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

முன்பு இல்லத்துக் குழந்தைகளின் கல்வி, இல்லத்தின் பணியாளர்கள் உதவியோடு நடக்கும். அருகில் உள்ள பள்ளிகளில் உண்மையைச் சொல்லி பிள்ளைகளைச் சேர்ப்பது பெரும் பிரச்னையாக இருக்கும்.

இப்போது சொந்த கட்டிடத்தில் பள்ளி, விளையாட்டு மருத்துவ வசதிகளோடு இயங்கிவருகிறது. ஐந்து வகுப்புவரை இங்கு பயிலும் குழந்தைகள், பின்னர் அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சிறந்து பயில்கின்றனர். கல்லூரியில் படிப்பைத் தொடர்வோரும் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெறும் மாணவர்களும் இங்கு உருவாகியுள்ளனர்.

இப்போது இவர் உருவாக்கிய ches எய்ட்ஸால் கைவிடப்பட்ட குழந்தைகள், வீட்டைவிட்டு ஓடிவரும் சிறார் சிறுமியருக்கான மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிரிவுக் குழந்தைகளின் தங்குமிடமாக விளங்குகிறது.

தேவைகளின் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகளையும் இவர் உருவாக்கி நடத்துவது உண்டு.

குழந்தைகள் தொடர்பான கல்வி,விழிப்புணர்வு, உரிமை பாதுகாப்பு, அத்துமீறல்கள், கடத்தப்படுதல் போன்ற பல விஷயங்களையும் தெளிவாக எடுத்துக்கூற வல்லவர் என ஊடகங்கள் இவரை அணுகுவது வழக்கம்.

பணிகளுக்கு பன்னாட்டு அமைப்புகளோ, நிறுவனங்களோ உதவிசெய்ய ஏற்ற வழிகளைத் தேடித் தேடிப் பலரும் பயனுற வாழ வழி செய்வதே டாக்டர் மனோரமாவின் வாழ்க்கைப் பாதையாக இருக்கிறது. தன் உடல்நலச் சிக்கல்களை எல்லாம் பொருட்படுத்தாது கொண்ட கொள்கைக்காக அயராது செயல்படுவதில், அது அடிப்படை வேலையா உச்சநிலை சந்திப்பா என்ற வேற்றுமைகளைப் பாராட்டாதவர்

தன் தந்தை, மகன், மருமகள், பேரன் என நான்கு தலைமுறைகள் இணைந்து வாழும் வீட்டின் நாயகி. இந்த உரையாடல் பதிவும் பேரனின் விளையாட்டுக்கு ஈடுகொடுத்துக்கொண்டே நடந்தது.

யாரும் நுழையத் தயங்கிய ஒரு சேவையைக் கையிலெடுத்து அநாயாசமாக எல்லோரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, இன்றும் புதிய புதிய தேவைகளைக் கண்டறிந்து செயல்படுத்தும் டாக்டர் மனோரமாவின் நம்பிக்கை அசாத்தியமானது

கல்லூரி காலத்தின் போட்டிகளில் வென்ற பதக்கங்கள் தொடங்கி, சிறந்த மருத்துவ சேவைக்காகவும், எச் வி தொற்றுஎய்ட்ஸ் நோயாளிகள், கைவிடப்பட்டோருக்கான சேவைக்காகவும் மருத்துவக் கூட்டமைப்புகள், ரோட்டரி லயன்ஸ் போன்ற அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்கள், tansac போன்ற அரசு அமைப்புகள் தங்கள் விருதுகளால் சிறப்பித்தல் ஆண்டுதோறும் தொடர்கிறது.

இன்னும் மிகப்பெரிய அங்கீகாரங்கள் இவரது சேவையைச் சிறப்பிக்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு

மிக உயரிய மருத்துவ தகுதியைக்கொண்டு பெரும்பொருளோடு புகழ்வாய்ந்த மருத்துவராக வாழ்ந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. துன்பத்தில் உள்ளவர்களின் அன்பையே சொத்தாக சேர்த்துக்கொண்டார். டாக்டர் மனோரமா இதைச் சொல்லும்போதும் புன்னகையைத்தான் பதிலாகத் தருகிறார்.  

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button