இருத்தலில் தீயாகி நிலைப்பதில், பெயர்தலில் பூவாகியும் மலரக்கூடும். மெல்ல மெல்ல காலம் நகர்த்தும் ஒரு புள்ளியில் நாமும் பிழைதான்.
எப்போதும் எல்லாவற்றையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இப்போது உங்களிடம் சொல்லத் தோன்றுவதில், அந்த நீல நிற நட்சத்திர கண்கள் காரணமாகவும் இருக்கலாம்.
நிலவரங்கள் சில நேரங்களில் கலவரங்கள் நிகழ்த்துகிறது. இளவரசி போலவே நடை உடை பாவனைகளோடு என்னை நானே உற்றுநோக்குவதாய் உணர்கிறேன்.
எல்லாமும் எல்லாரும் கடந்த பொழுதுகளில், நான் மட்டும் தனித்த இறகு. இனி நிறைவாகியும் மிதக்கக்கூடும். கவனங்கள் ஓர் புள்ளியில் குவிதல், கவனநிறைவாக நம்பவும் கூடும். சன்னலில் பட்டு தெறித்த வெயில் கீற்றுகளோடு, “இன்னுமா தூங்கறவ?” என்ற சொற்களை காதுக்குள் கொண்டுசேர்த்தது. தூக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்குள் வருவதற்குள் வெகு பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
சட்டென இடுப்பில் கைவைத்து எனது உடைவாள் எங்கேவென யோசிக்கிறேன். இல்லாமல் போகவே ஸ்தம்பித்து போனேன். பைத்தியக்காரத்தனம் சில நேரங்களில் கவிதை. சில நேரங்களில் தேவை. சில நேரங்களில் அவசியமற்றது.
“அதிமா“ – அப்பாவின் குரல் தீர்க்கமாய் ஒலித்த திசைநோக்கி பலமாக ஓடினேன். பிறகான நேரங்களை பகல்பொழுது வாங்கிக்கொண்டது. தனி அறையில் படுத்துறங்க எப்பவும் பயம். யாரோ அருகில் இப்பதாகவும் தோன்றுகிறது. மிகத் தோரணையாக நானே பேசுவது போல எனக்கே தோன்றும். சில சமயங்களில் கேட்கவும் செய்யும். சில சமயங்களில் கேட்கும் என் குரலோடு, தீர்க்கமாய் மற்றொரு குரலும் சேர்ந்தே ஒலிக்கும். இப்போதும் ஒலிக்கிறது. உங்களுக்கும் கேட்கிறதா? ஒன்றும் விளங்கவில்லை எனக்கு.
இருள் நிறம் மாறி உதித்தலில் பயம் சின்னதாய் நடுக்கக் கோடு வீசியது. எப்படியும் விளக்கும்போது, சில கதைகள் சிக்கல் பேசும். சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தலில், மீண்டும் மெல்ல பயம் அஸ்தமனமானது. எனக்குள் நானாக, பின்பு யாருக்குள் நானாகவோ மெல்ல மெல்ல படர்கிறேன். தூக்கம் பலமாய் பிடரி பிடிக்க, மீண்டும் உறக்கம் தழுவியது.
இப்போது உடைவாள் ஒருவரின் கழுத்தில் பலமாய் இறங்கியது. என்ன நடக்கிறது என்ற கணநேர சிந்தனையில், மீண்டும் மற்றொருவரின் கழுத்தை பதம் பார்த்தது. கண்களைத் தெளிவாக்கி மீண்டும் கூர்நோக்குகிறேன். ஆம்! நானேதான். மிக ஆக்ரோஷ முகம்கொண்டு எதிரிகளை களத்தில் வீழ்த்திக் கொண்டிருக்கிறேன். பயம் திக்கென்று அடி மனதில் இறங்க, வியர்வை துளிகள் முகத்தை முத்தமிட்டு பார்த்தன.
சட்டென எழுந்து அமர்ந்துகொண்டேன். இருள் முழுக்க ரத்தம் அப்பி கிடப்பதாய் தோன்றிய எனக்கு. முழுக்க கனவு என எண்ணவும் தோன்றாமல் இல்லை.
எல்லாமும் கடந்துவிடுவதில் சில நிலைத்துவிடக்கூடும். கற்பனித்துகொண்டதில், காத்துக் கிடப்பது கனவாகவும், நம்மிடம் மீண்டும் தருவிக்கக்கூடும் நிகழ்வாகவும் இருக்கலாம்.
மறுநாள் அலுவலகம் துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ராகவி” என்றேன் மெல்லிய குரலில். “ஹாய் அதி… கம்… கம்” என்றாள்.
“கேன்டீன் போகலாம்.”
“Sure” என்றாள்.
சூடான `டீ’யோடு கனவை துரிதமாய் சொல்லிமுடித்தேன். “இவ்வளவு தீர்க்கமா நீ சொல்ற, நான் நம்புறேன். அந்தக் கனவுக்கும் நம் வாழ்க்கை நிகழ்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதா தோணுது. மறுமுறை கனவு வரும்போது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் யார் யார்? சூழல் என்ன என்பதை தெளிவாக உற்றுநோக்கு. ஏதாவது குறியீடு நிச்சயம் காணக் கிடைக்கும். அதி… இன்னொரு விஷயம் சொல்லணும்” என்ற பலத்த பீடிகையோடு பேச்சை ஆரமித்தாள் ராகவி.
“உன் பெயர் அலுவலக விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. உன் பதவி பறிபோகும் வாய்ப்பு நிறையவே உள்ளது.”
நான் மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். பின்னிரவு எதைப் பற்றியும் சிந்திக்க இயலாது, தூங்காமல் விழித்து இரவை மெல்ல தின்றேன். அலுவலகப் பிரச்சினை ஒருபுறம்… கனவு இளவரசி மறுபுறமென சிந்தனைக்குள் திகைத்து வெளி விரிந்து கொண்டே சென்றது. இருளுக்குள் இருளையே தேடுகிறேன். என்னோடு கதையைத் தொடர முடியாதவர்கள் இங்கேயே நின்று கொள்ளலாம். அயற்சியில் உறங்கிபோனேன்.
மீண்டும் இளவரசி, இம்முறை அரசவை சிம்மாசனத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள். எந்நிறமும் இல்லாதபோது வெண்ணிறத்தை நமதாக்கிக் கொள்வது காலச் சிக்கல். கொடும் வனத்துக்குள் மெல்ல நடப்பது வழிதவறிய வானமாகவும் இருக்கலாம்.
ஏதோ விசாரணை நடப்பதாகத் தெளிகிறேன். பார்த்த முகங்கள் நிழலாடுவதாய் தோன்றியது. “இளவரசியாரே” என்ற குரலுக்குள் பின்பு கவனம் சென்றது. “நம் படைத் தளபதி உங்களுக்கு எதிராகப் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்” என்ற தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் தலைமைக் காவலர். இப்போது படைத் தளபதியின் முகம் அருகிலேயே தெரிந்தது. அதிர்ச்சியில் என் கண்கள் நிலைக்கொத்தி நின்றன. ஆம்! அவன்தான்… சக அலுவலக தோழர் ராஜூ, படைத் தளபதியாக.
எல்லாமே புரிந்தது போன்றிருந்தாலும், கண்களையும் காதுகளையும் மேலும் கூர்த்தீட்டி சம்பாஷனைகளைக் கவனித்தேன்.
படைத் தளபதி மறைத்து வைத்திருந்த கத்தியை, இளவரசியை நோக்கி வீசினான். இளவரசி மிகச் சாதுர்யமாகத் தடுத்து நிறுத்தினாள். என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள், கத்தி வீசிய கண நொடியிலேயே மிக லாவகமாகப் படைத் தளபதி அங்கிருந்து தப்பித்தான்.
மறுநாள் கைபேசி மிதமாய் ஒலித்தது.
ராகவி என மின்னி மின்னி மறைந்தது. பச்சை பட்டனை சொடுக்கி, “சொல்லு ராகவி” என்றேன். “கனவு” என நிறுத்தினாள். நான் தொடர்ந்தேன். கண்டதை சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்தாள் ராகவி. “நன்றாகத் தெரிந்ததா ராஜூவின் முகம்தானா?” என மீண்டும் தீர்க்கமாகக் கேட்டாள் ராகவி. “ஆம்!” என்றேன் சுரத்தையே இல்லாமல். இரண்டாவது அழைப்பில் HR Manager வந்து கொண்டிருந்தார். ராகவியிடம் line இல் காத்திருவென சொல்லிவிட்டு, அவரின் அழைப்பை ஏற்றேன். நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டார்.
“அலுவலகத்துல உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு.”
“என்ன?” என்றேன் அனிச்சையாக!
“அலுவலக ரகசியங்களை வேறு அலுவலகத்துக்கு விற்றதாக” என்று தீர்க்கமாகச் சொல்லி முடித்தார்.
“பத்து மணிக்குலாம் ஆபிஸ் வந்துருமா விசாரணைக்கு” எனச் சொல்லிவிட்டு விடைபெற்றார். மறுமுனையில் காத்திருந்த ராகவியிடம் விஷயத்தைப் பகிர்ந்தேன்.
“அதி… நான் சொல்வதை கூர்ந்து கவனி. ராஜூதான் குற்றவாளி என்றாலும், நம்மிடம் ஆதாரம் ஒன்றுமில்லை. மீண்டும் கண்களை மூடி உறக்கம் கொள். கனவு நிச்சயம் வரும். ஏதேனும் நமக்குத் தேவையான உபயமும் கிடைக்க கூடும்.”
ராகவி சொல்வது சரிதான் எனத் தோன்றியது. சட்டென கண்களை மூடிக்கொண்டேன். ராஜூ படைத் தளபதியாக எதிரி நாட்டு மன்னரிடம், இளவரசி நாட்டு ரகசியங்களை பொற்காசுக்காக விற்றுக் கொண்டிருந்தான்.
“எப்படி ரகசியங்களை கொணர்வாய்?” என்ற எதிரி நாட்டு மன்னரின் கேள்விக்கு, “குப்பைக் கூடையில்” எனப் பதில் அளித்தான் ராஜூவாகிய படைத் தளபதி.
9.30 க்கு அலுவலகத்தை அடைந்தேன். ராகவியிடம் விஷயத்தை சொல்லி, குப்பைக் கூடை முழுக்க சரிபார்த்தோம்.
ஒன்றும் சந்தேகிக்கும்படி கிடைக்கவேயில்லை. சட்டென உதிர்த்த எண்ணத்தில் நான் பரபரத்தேன். ராகவி என்னவென புரியாமல் திகைத்தாள். ராஜூவின் அலுவலக மெயில் ஐடி பாஸ்வேர்டை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். நான் இரண்டு முறை பாஸ்வேர்டுக்காக முயற்சித்த பிறகு, ராகவி தொடர்ந்தாள். “அவரது பிறந்ததேதி 9-9-99. இதை முயற்சி செய்.”
அடுத்த நொடியில் பிரமாண்டமாய் வழிவிட்டது கணிப்பொறி. Inbox லும் send item லும் எதிர்பார்த்தது போலவே எதுவும் கிடைக்கவில்லை. அவசரமாக bin பகுதிக்கு சென்று, ராஜூ என்னென்ன தகவல்களை அழித்திருக்கிறான் எனக் கவனமாகப் பார்த்தேன். சந்தேகப்பட்டது போலவே,ராஜூதான் வேறு அலுவலகத்துக்கு என் அலுவலகத் தகவலை விற்றிருந்தான். அதற்காக வாங்கிய தொகைக்கான வங்கி விவரங்களும் இருந்தன. காதறுந்த ஊசியின் ஒரு கணமும் பயனும் நீக்கமற எங்கும் உருக்கிதான் விட்டுருக்கக் கூடும் என்பதும் தேவைக்கு அப்பாற்பட்டதுதான் இங்கு.
மிகத் தூரத்தில் ராஜூ, சில்அவுட்டாக போலீஸோடு சென்று கொண்டிருக்கிறான். வீடு வந்துசேர்ந்த என்னை, அப்பாவும் அம்மாவும் “என்ன ஆச்சு? நாலு நாளா ஒரு மாதிரியா இருக்க? எதுவும் இல்லையே” எனக் கேட்க, இடைவேளைவிட்டு நகைத்தேன்.
நீல நட்சத்திரம் தூரத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. இப்போது கனவில் எதிரி நாட்டு மன்னராக HR Manager முகம் தோன்றுகிறது!