![வளன்](https://vasagasalai.com/wp-content/uploads/2020/08/WhatsApp-Image-2020-08-22-at-21.34.04.jpeg)
அந்த மனோரஞ்சித கன்றை வீட்டில் நட்டு வைத்தபோது, வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள். அப்படிச் சொல்வது முறையாக இருக்காது. எங்கள் வீட்டு நாய்க்குட்டியைத் தவிர அனைவரும் எதிர்த்தார்கள். வீட்டின் பின்புறம் வெயில்படும் ஒரு சிறிய இடத்தில் அதை நான் நட்டு வைத்துக்கொண்டிருக்கும்போது, நாய்க்குட்டி படுசமத்தாக அமர்ந்து என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்தது.
மனோரஞ்சிதம் வீட்டுக்கு ஆகாது என்று பாட்டி ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். நான் எதையும் கவனிக்காமல் கன்றை நட்டுவிட்டு பாத்தி கட்டித் தளர நீர் வார்த்துக்கொண்டிருந்தேன். “ஒரு முருங்கைப் போத்தை நட்டால்கூட நாளைக்குக் கீரை சுண்டி சாப்பிடலாம்” என்று பாட்டி இன்னமும் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். அப்பா எதுவும் பேசவில்லை. அம்மாவின் கண்களிலும் ஓர் எரிச்சல் தெரிந்தது. அன்று மாலை வரை யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. பளிச்சென்று நிலவு வீசிக்கொண்டிருந்த அந்த இரவில், வெகுநேரம் நான் அந்தச் செடியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். வாய்விட்டு அதனிடம் பேச ஆசையாக இருந்தது. ஆனால், மௌனமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
மனோரஞ்சிதம் ஒரு விசித்திரமான மலர். அதற்குக் குறிப்பிட்ட எந்த வாசனையும் இல்லை. நாம் மனதில் நினைக்கும் ஒன்றின் வாசனையை அந்த மலர் வீசும். அதனால்தான் அதற்கு மனோரஞ்சிதம் என்ற பெயர். எவ்வளவு ரம்மியமான பெயர்! மலர்களின் வாசனைப் பற்றித்தான் அன்று நான் உரையாடிக்கொண்டிருந்தேன். எத்தனை நறுமணங்கள் இருக்கிறது? எல்லாம் எங்கிருந்து வருகிறது? ஒன்றின் மணத்திலிருந்து இன்னொன்றை நாம் எப்படி வேறுபடுத்துகிறோம்? எல்லாவற்றுக்கும் அந்தச் சிறியச் செடி ரகசிய மொழியில் பதிலளித்துகொண்டிருந்தது. எனக்கு அதன் பாஷை புரியவில்லை ஆனாலும், ஒரு சின்னஞ்சிறு சிரிப்புடன் உரையாடலைத் தொடர்ந்தேன்.
என்னுடைய ஒரு ரகசிய ஆசையை அந்தச் செடியிடம் சொன்னேன். இத்தாலியில் வாழ்ந்த ஒரு துறவிக்கு, ஒரு வினோத சக்தியிருந்தது. அவர் யாரிடமும் எதுவும் பேசமாட்டார். மாறாக, அவர் உடலிலிருந்து பல்வேறு வாசனைகள் வரும். அதைக்கொண்டுதான் உரையாடுவார். உதாரணமாக, ஒருவர் சொல்லும் கருத்துடன் உடன்படுகிறார் என்றால், அவர் உடலிலிருந்து ரோஜா பூ வாசனை வருமாம். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது மல்லிகையின் மணமும், சிரித்து இன்புறும்போது லாவண்டர் மணமும் வருமாம். கோபப்படும்போதும் எரிச்சலடையும்போதும், ஒருவிதமான திராவகத்தின் நெடி வீசுமாம். எனக்கும் அப்படி ஒரு சக்தி வேண்டுமென்று கேட்டேன். மெய்யாகவே இப்போதெல்லாம் மனிதர்களிடம் பேசப் பிடிக்கவில்லை. அவர்களின் மொழி, கசக்கும் அனுபவங்களை மட்டுமே தருகிறது. இப்படி வாசனைகள் மூலமாகப் பேசினால் நன்றாக இருக்கும்தானே? நிலவொளியில் சலனமின்றி நான் பேசியதைக் செடிக் கேட்டுக்கொண்டிருந்தது.
தினமும் காலையில் எழுந்ததும், என் மனோரஞ்சிதச் செடியுடன் உரையாடுவதுதான் என் முதல் வேலை. மாலையில் தண்ணீர் ஊற்றும்போது, என் நாய்க்குட்டியிடம் இருக்கும் துள்ளலுடன் தண்ணீரை அது பருகுவதாகத் தோன்றும். அப்பா ஒருநாள் வெளிப்படையாகவே மனோரஞ்சிதச் செடியைப் பிடுங்கி எறியப்போவதாகக் கூறினார். என் பார்வையில் தெரிந்த சீற்றத்தைப் புரிந்துகொண்டு, மனோரஞ்சிதம் புதர்செடியாக வளரும் என்பதாலும், கொடியைப் போன்று படரும் என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். பாம்பு பூச்சி போன்றவை வரும் என்றெல்லாம் மேலும் மேலும் காரணங்கள் சொல்லச் சொல்ல, எனக்கு ஆத்திரமாக வந்தது.
இந்தச் செடியின் மீது ஏன் எல்லோருக்கும் இத்தனை வெறுப்பு? “செடியைத் தொட்டால் என்னைத் தொட்டதற்குச் சமம். ஜாக்கிரதை” மிகவும் சுலபமாக என் கோபத்தைக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டேன். ஒரு சில மாதங்களிலே நெடுநெடுவென வளர ஆரம்பித்தது மனோரஞ்சிதம். இப்போது அது என் இடுப்பு உயரத்துக்கு இருந்தது. எங்கள் வீட்டார்களும் அதனிடம் பழக ஆரம்பித்தார்கள். என் பாட்டி மட்டும் இதெல்லாம் பூக்காது என்று சாபத்தால் அர்ச்சித்துக்கொண்டிருந்தாள்.
செடியைப் பிடுங்கி எறியப்போவதாகச் சொன்ன அப்பாவும் நன்றாகப் பழகியிருந்தார். குப்பையில் சேரும் முட்டை ஓடு, காய்கறி தோல் எல்லாவற்றையும் தனியாகச் சேர்த்து, மனோரஞ்சிதத்தைச் சுற்றி இட்டு மண்ணைக் கிளறி ஏதேதோ செய்துகொண்டிருப்பார். எனக்குச் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாளில் மனோரஞ்சித கன்றின்மீது ரொம்பவும் பிரியமுள்ள மனிதராக மாறிப்போனார்.
அன்று எங்கள் ஊரை, புயல் ஒன்று கடக்கவிருப்பதாக செய்தி வந்தது. முதல் நாள் காலையிலிருந்து செடியிடம் அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது அதைச் செடி என்று வகைப்படுத்த முடியாதபடி, ஆளுயரத்துக்குக் குச்சி பருத்து நன்றாகக் கிளைவிட்டிருந்தது. இன்னும் பூக்கவில்லை. பலமான காற்றுக்கு முறிந்துவிட வாய்ப்பிருந்தது. எப்படியாவது சமாளித்துவிடு என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்பா அதனருகில் இருபக்கமும் மூங்கில் தடியை நட்டு, அதில் மனோரஞ்சிதச் செடியைக் கட்டிவைத்தார். எனக்கு இந்த யோசனை எப்படி வராமல் போனதென்று நொந்துகொண்டேன்.
அன்று இரவு முழுவதும் பேய்க் காற்று வீசி மழை பெய்துகொண்டிருந்தது. காற்றின் உய் உய்யென்ற சப்தம் என் வயிற்றில் ஏதேதோ செய்தது. தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து சென்று ஜன்னலைத் திறந்து செடியைப் பார்க்கலாம் என்று நினைத்து வெளியில் சென்றேன். அங்கே அப்பா நின்று செடியைப் பார்த்துக்கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் நாங்கள் இருவரும் செடியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மழை அடங்கியதும் செடிக்கு எந்தச் சேதாரமுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உறங்கச் சென்றோம்.
மறுநாள் காலை தாய்ப்பால் குடித்த பூரிப்போடு செடி நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்றபோது, அதனுள் இருந்து ஒரு தேன்சிட்டு விறுட்டெனப் பறந்துபோனது. அங்கிருந்த சகதியில் எங்கள் நாய்க்குட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
இப்போது அந்தச் செடியை நட்டு கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாகியிருந்தது. இன்னமும் பெரிதாக வளர்ந்தது. நாம் நட்டுவைத்த மரம் நம் கண்முன்பாக வளர்வதைப் பார்க்கையில் ஆனந்தமாக இருந்தது. இலை அடர்ந்து கிளையில் ஏதோ சுருள் சுருளாக வளர்ந்திருந்தது. எங்கள் வீட்டின் மேல் படர எத்தனித்து, ஒரு சிறு கிளைமட்டும் தத்திக்கொண்டிருந்தது. ஓர் இளவேனிற் காலத்துக் காலைப் பொழுதில், இருள் அகல இன்னும் கொஞ்சம் நேரமிருந்தது. அந்த விடியற்காலையில், என் அம்மா மனோரஞ்சித மரத்திலிருந்து வந்த சலசலப்பால், அருகில் சென்று எதையோ விரட்டிக்கொண்டிருப்பது கேட்டது. அதன்பிறகு சடசடவென ஏதோ ஒன்று மரத்திலிருந்து பறந்து செல்கிறது. பின் ஓர் உற்சாகம் கலந்த தொனியுடன் அம்மா என்னைக் கூப்பிட்டுக்கொண்டே என் அறைக்கு வந்தாள்.
மரத்தில் முதல் பூ பூத்திருப்பதாகவும் அதைப் பழந்தின்னி வௌவால் ஒன்று கொரித்துவிட்டதாகவும், பூவின் சில இதழ்களை என்னிடம் கொடுத்தாள். முதல்முறை அதை வாங்கியபோது அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. உடனே முகர்ந்து பார்த்தேன். உண்மைதான்! மனோரஞ்சிதத்தின் மணம் அமானுஷ்யமானதாக இருந்தது. அதன் வாசனையை என்னால் வருணிக்க முடியவில்லை. ஆனால், அதுவொரு மர்ம வாசனை. தாவிக்குதித்து எழுந்து ஜன்னல் வழியாக மரத்தை பார்த்தேன். அதில் எந்தச் சலனமும் இப்போது தெரியவில்லை. எனக்கு அன்று மகிழ்ச்சியாக இருந்தது. வௌவால் இப்படி நாசமாக்கிவிட்டது என்று சொன்ன அம்மாவிடம், “அதெல்லாம் ஒன்றுமில்லை. வௌவாலும் சிட்டுக்குருவிகளும்தான் அந்த மரத்தின் ரத்த சொந்தங்கள். நாம் ஒன்றும் சொல்லக் கூடாது” என்று சொல்லிவிட்டு, இன்னும் கீழே கிடந்த மற்ற இதழ்களைச் சேர்த்துக் கையில் வைத்து, முகர்ந்துகொண்டிருந்தேன்.
அதன் இதழ்கள் தடிமனாக இருந்தன. கொஞ்சம் சுருங்கிப்போன பலாப்பழ சுளைகளைப் போல இருந்தன. மரத்தின் உள் எட்டிப் பார்த்தபோது, சிறிய கோலி குண்டுகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ இருந்தது. அது பூவின் மலராத மொட்டுகள் என்று சொல்லிக்கொண்டு, அடுத்த பூவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.
அடுத்தநாள் ஒரு பூ பூத்தது. அம்மா ஆசையாக அதைப் பறித்துக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தாள். இனிமேல் பூக்களைப் பறிக்க வேண்டாம் போதும் என்று கூறினேன். “போடா” என்று சொல்லி, அப்பூவை கையில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். மாலை வேளையில் இப்போது மிகவும் ஆர்வமாக மரத்திடம் – மரமா கொடியா புதரா என்று சரியாகத் தெரியாதபடி வளர்ந்ததால், மரம் என்று சொல்லிக்கொள்கிறேன் – பேசிக்கொண்டிருக்கத் தொடங்கினேன். என் வேதனைகள், வருத்தங்கள் எல்லாம் அந்த மரத்துக்குத்தான் தெரியும்.
பூக்களை இப்போது யாரும் பறிக்காததால், அதன் வாசனை அங்கே கமகமத்துக்கொண்டிருந்தது. எப்போதாவது அம்மா ஒரு பூவை கையில் வைத்துக்கொண்டு அதை அப்படியே சாப்பிட்டுவிட வேண்டும் என்று கூறுவாள். அம்மா சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றியது, சமயங்களில் அது முற்றிய ஒரு பழத்தின் வாசனையுடன் இருந்தது. இதழ் விரித்துத் தாராளமாய் வாசனையை பரப்பிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அந்த மரம் தனியாகவே இருப்பதில்லை. தேனீக்கள் எப்போதும் இந்த மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஒரு தேன்சிட்டு கூடுகட்டி அதில் குடியிருந்தது. அந்தக் கூட்டில் குருவி தனியாக இருந்ததா தெரியாது. ஆனால், மாலையில் தத்தித்தத்தி மெதுவாக மரத்தில் கிளைக்குக் கிளைத் தாவும் அந்த ஒரு குருவியைத்தான் நான் கவனித்திருந்தேன். மதிய வேளையில் எட்டு தவிட்டுக் குருவிகள் இந்த மரத்தின் நிழலில் இளைப்பாறும். எப்போதாவது அங்கே சென்றுவிட்டால், விறுட்டென அனைத்தும் பறந்துசென்று பக்கத்திலிருக்கும் புங்க மரத்தில் அமர்ந்து, ‘கியகியா’ என்று கத்தி, மதிய நேரத்தின் நிசப்தத்தைக் கலைத்துவிடும். இப்படி ஏதாவது ஒன்று மரத்துடன் தங்கியிருந்தது.
என் காதலியைப் பிரிந்த துர் இரவு ஒன்றில் யாரிடமும் என் கண்ணீரைக் காட்டாமல், மரத்தினடியில் என் வேதனைகளை உமிழ்ந்துகொண்டிருந்தேன். அவளுடனான என் நினைவுகள் ஒவ்வொன்றும் அந்த மரத்தின் இலைகளை போல என்னுள் சலசலத்துக்கொண்டிருந்தது. துக்கத்தின் பாரம் பொறுக்காமல் நெஞ்சு வெடித்துவிடுவது போன்று கனத்துக்கொண்டிருந்தது. யாரோ தொண்டையைப் பிடித்து நெறிப்பது தெரிந்தது. கண்ணீர் வர மறுத்தது. சட்டென ஒரு பெரிய இதழ் விரிந்த பூ, முழுமையாகக் கீழே விழுந்தது. அதைக் கையில் எடுத்து முகர்ந்த அந்த நேரம், உடைப்பெடுத்துக் கண்ணீர் வந்தது. அந்த வாசனை உள் செல்ல செல்ல கண்காணாத இடத்தில் என் நினைவுகளுடன் இருக்கும் அவளின் நினைவுகள், என் மனக்கண் முன் மீண்டும் மீண்டும் ஓடி மறைந்தது. இப்போது அந்த மலரிலிருந்து பழுத்த கொய்யா கனிகளின் மணம் வீச ஆரம்பித்தது. சட்டென அந்த மணம் விலகி, தெளித்தேனின் நறுமணம் வீசியது. மணம் மாறுவதை என்னால் உணரமுடிந்தது. ஆனால், நான் அவளின் நினைவுகளால் பீடிக்கப்பட்டுக் கதறி அழுதுகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நான் நின்றிருந்த இடம் நடுங்குவதாகத் தோன்றியது. என்னால் இனி நிற்க முடியாது என்றறிந்து, மண்டியிட்டு ஒரு கையில் மரத்தையும் மறுகையில் பூவையும் பிடித்துக்கொண்டு நெடுநேரம் அழுது ஓய்ந்தேன்.
எப்போது என் அறைக்கு வந்தேன் என்று தெரியவில்லை. என் அப்பா என்னை அந்த மரத்தடியிலிருந்து தூக்கிக்கொண்டு வந்ததாக அம்மா சொன்னாள். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அப்பா அந்த மரத்துக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். தன்னுடன் விளையாடுமாறு என் நாய்க்குட்டி என்னை இழுத்துக்கொண்டிருந்தது. ஏன் மரத்தடியில் விழுந்து கிடந்தேன் என்பதைப் பற்றி யாருமே எதுவுமே பேசவில்லை. அப்பா இன்னும் இரண்டு மனோரஞ்சித மலர்களை என் கையில் கொடுத்துவிட்டுப் போனார்.
“அப்பவே சொன்னேன் மனோரஞ்சிதம் குடும்பத்துக்கு ஆகாது” என்ற பாட்டியின் குரல் கேட்டது. ஆழமாக அந்தப் பூக்களை முகர்ந்தபோது, மனதுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. இன்னமும் அந்த மனோரஞ்சிதம் பூத்துக்கொண்டுதான் இருக்கிறது.