கவிதைகள்
Trending

ப.மதியழகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அரூபம்

எனது துயரப் பாடலின்
உண்மையான அர்த்தத்தை
நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான்
எனக்கு பிணக்குகளெல்லாம்
வற்றாத துயரநதி
எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது
இந்தப் பேரலைக்குக் காரணம்
அந்த ஆழ்கடல்தான் என்று
எவரும் அறிவதில்லை
எத்தனை யுகங்களாக
கிழக்கும் மேற்குமாக
நாம் இருந்து கொண்டிருப்பது
நகர்ந்து செல்லும் மின்மினிகள்
நட்சத்திரங்களை போட்டிக்கு
அழைக்குமா என்ன?
வெண்மேகமே நீ கரைவதற்குள்ளாக
என் செய்தியை என்னவளிடத்தில்
சேர்த்துவிடுவாயா?
ஒற்றை நிலா எனக்கு மட்டும்
ஏக்கத்தைப் பரிசாகத் தருகிறது
மலர்களிடம் வேர்களைப் பற்றி
விசாரிக்கும் நான்
பைத்தியக்காரனா?
இந்தப் பூக்களின் விதி
அதை எங்கு கொண்டுபோய்ச்
சேர்க்கும்
வைபவத்துக்கா, இறுதிஊர்வலத்துக்கா
ஜோடியாகத் திரியும்
காதல் பறவைகள்
உன் கண்களில் படவில்லையா
வருணன் உன்னைத்
தீண்டிப்பார்க்கவே மழையை
அனுப்புகிறான்
இரவும், பகலும் எப்படி
ஒன்றையொன்று சந்தித்துக்
கொள்ள இயலும் என்கின்றாயா
அம்புப்படுக்கையில் நான்
எனது மரணத்தாகம்
எத்தனை யுகங்களானாலும்
தணியாது!

*** *** ***

பெருந்தீ

எனது உலகம் உன்னை
மையமாக வைத்தே சுழலுகிறது
எண்ணத்தின் ஊற்றுக்கண்ணை
தேடிச் சென்றவர்கள் என்ன ஆனார்கள்
தீயின் நாவுகளைத்
தேடிச் செல்லும் விட்டில் பூச்சியா நான்
கடற்கரை மணலில்
கைகோர்த்து திரிந்தோமே
அந்தக் கனவு ஏன் கலைந்தது
உடலை மீறிய ஏதோவொன்று
என்னைப் பிடித்து உலுக்குகிறதே
வெற்று மோகமாக மட்டும்
இது இருந்திருந்தால்
நான் என்றோ மிருகமாகி இருப்பேன்
பால்வீதியின் இருளை
கிழித்துச் செல்கிறது
நம் இருவரின் கைகளிலுள்ள
மெழுகுவர்த்தி
இந்தக் கண்ணாடியில்
தோன்றும் பிம்பம் தானா
உன் கண்களிலும் தோன்றுவது
அவ்வப்போது
உணர்வின் ஆழங்களில்
மனம் புதைந்து போகிறது
ஆரவாரக் கூச்சல்கள்
எனது தனிமையை குழிதோண்டிப்
புதைக்கிறது
நான் உறங்கும்போது
எனது நிழல்
உனது பாதக்கமலத்தைத் தேடி
அலைகிறது
ஒரு புதிய இரவு நம்மை
ஒன்று சேர்க்கும் என்று
என்னை நானே சமாதானப்படுத்திக்
கொள்கிறேன்
நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில்
பஞ்சுமெத்தையில் நான்
உறக்கத்தை விலைபேசிக் கொண்டிருக்கிறேன்
கனவில் கூட
அவளோடு கைகோர்க்க
முடியாது என
தெரிந்தபின் நான் என்காதலுக்கு
இரங்கற்பா எழுதிக்
கொண்டிருக்கிறேன்
துயரக்கடவுள் தான்
என்காதல் சிலுவையை
தோளிலிருந்து இறக்கிவைக்க
வேண்டும்
இந்தப் பாவி
உலகம் முடியும் வரை
இங்கிருந்து
புனிதத்தைத் தேடிக்
கொண்டிருப்பான்!

*** *** ***

ஊசல்

எனது கப்பல் புறப்படப் போகின்றது
விடைபெறுவதற்கு முன்பாவது
அவளிடம் தெரியப்படுத்திவிட வேண்டும்
என் காதலை
நான் சக்கரவர்த்தியல்ல
கோட்டையை முற்றுகை
இடுவதற்கு
பேரரசனும் அல்ல
சுயம்வரத்தில் பங்கு கொள்வதற்கு
பல்லக்கை சுமந்து போகிறவனுக்கு
பட்டத்து இளவரசியின் மீது
காதல் பிறக்கலாமா
வித்தை காட்டி பெறுவதற்கு
அவள் பதுமை அல்ல பெண்
வாத்தியம் செய்தவனுக்கா சொந்தம்
அறுதலிப் புறாக்கள்
கோயில் கோபுரங்களைத் தவிர
வேறெங்கே தஞ்சமடையும்
சுவாமியை தரிசிக்க
துவாரபாலகர்கள் அனுமதிகொடுக்க
வேண்டுமல்லவா
சீதையின் பொன்எழிலா
ராமனை கவர்ந்திருக்கும்
நான் ஊமையாகிவிடலாம்
ஆனால் இதயத்தின் ஓர்மூலையில்
அவளின் நினைவு
வண்டாக குடைந்து
கொண்டுதானே இருக்கும்
மதுவால் மரத்துப்போக வைக்கலாம்
ஒரேயடியாக மறக்கடிக்க முடியுமா
நானும் அவளும்
கற்பிதம் செய்து கொள்ளும்
உலகம் வெவ்வேறானவை
எனது வேதனை மிகுந்த
பூபாளத்தை காலைப்பொழுது
காது கொடுத்து கேட்குமா என்ன
என்னாலும் பறக்க முடியும்
சிறகுகள் இல்லாமல்
அதிசயமான உலகில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்
அப்படியென்றால்
நான் ஏன் கடவுளாக
இருக்கக்கூடாது?

*** *** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button