என்னைக் கடத்திய சொல்
நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது
காயம் அதன் வலியை.
ஒரு மூங்கிலின் வீசலைப் போல்
வலியுண்டாக்கும் அந்த சொல்லை
பல தடவை நான் கேட்டிருக்கிறேன்.
அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும்
அந்த சொல்லின் அடர்த்தி
பிரம்மிடுக்களைப் போல்
பிரம்மிப்பைத் தரும் வல்லமையுடையது.
அதனை நான் பார்த்திருக்க மட்டும் நீளுகிறது,
தூக்கத்தை தியாகித்து எனது முண்டைக்கண்களிரெண்டையும் பிதுக்கி நிற்கிறேன்.
சுவிங்கியம் போல இழுபடுகிறது எனது பகல் பொழுது.
அப்போது கற்றுத்தந்தது அந்தச் சொல்
ஒரு மனிதனிலிருந்து வேறொருவனுக்குள்
என்னை கடத்துவது பற்றி.
*** *** ***
எனக்கான அந்த இரவு
.
வானின் நீலத்தைப் பிரித்தெடுத்து
கடலில் கொஞ்சத்தை சேர்க்கிறேன்.
பழுத்த இலைகளிலிருந்து
அதன் நிறத்தைப் பறிக்கிறேன்.
கனியாக முடியாமல் தவிக்கும்
அந்த ஞாபகக் காய்களில் சேர்க்கிறேன்.
வண்ணத்துப் பூச்சிகளிலிருந்து
சில ஓவியங்களை அள்ளிக் கொள்கிறேன்.
அள்ளிய ஓவியத்தில் ஒன்றை
உனக்குப் பரிசளிக்கிறேன்
நீ மகிழ்வதற்கென.
மழைத் துளியிலிருந்து ஈரத்தை
பிரதி செய்கிறேன்,
நீ நனைவதற்கென.
பனியிலிருந்து குளிரையும்
சூரியனிலிருந்து சூட்டையும்
சமனாக எடுத்துக் கொள்கிறேன்.
இரவு
தூக்கம்
இன்பம்
கலகலப்பு
இப்படியாய் முதலிரவை எழுத
பிரயத்தனம் செய்கிறேன்.
ஒரு கவிதையை முழுமைப்படுத்தவென.
*** *** ***
நிசி பிசாசுகளின் சந்தை தினம்
முற்றிலும் மாறுபட்ட இரவது
சப்தம் அடங்கிய நிசியில்
நிசப்தம்
என் பாதத்தின் சப்தத்தை
அந்த நீீலக் கண்களுடைய நாய்க்கு
பரிசளிக்கிறது.
நேற்று செய்த தவறிலிருந்து
நான் விடுபடுகிறேன்.
இரவு தவறுக்கானது என்பதில்
உடன்பாடிருந்ததில்லை.
திருட்டுத்தனமான பயணத்தின்
ஒரு ஆதிக் கதை ஞாபகிக்கிறது
மதிலைத் தாண்டும் கடுவன் பூனையின்
கத்தலில் மாட்டிக் கொள்கிறது
தவறு.
இரவின் நடு நிசியென்றாலே
பிசாசுகளின் சந்தை தினமென
சின்ன வயசில் உம்மாச்சியின்
கதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இப்போது தவறு எனது
மாறுபட்ட இரவில் நடந்தேறுவதில்
உங்களுக்கு உடன்பாடிருக்காது என்பதால்
நான் இதனை ஒரு சாத்தானிடம்
கொடுத்து விட்டு படுத்துறங்கப் போகிறேன்.
முடிந்தால் தவறு செய்வதிலிருந்து
விடுபடுங்கள் என்றுதான் இந்தக்
கவிதையை முடிக்க வேண்டுமென்றில்லை.
*** *** ***