சிறுகதைகள்
Trending

அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி

சிறுகதை | வாசகசாலை

பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளும், உடைகள் மற்றும் அலங்கார நிலையங்களும் நிரம்பி வழியும் சாலை அது. சான் ஃப்ரான்ஸிஸ்கோ பே(bay) ஏரியாவின் முக்கியமான சாலைகளுள் அதுவும் ஒன்று.

அதன் சாண்டா க்ரூஸ் என்ற நிறுத்தத்திலிருந்து தான் நான் தினமும் அலுவலகத்திற்கு பயணப்படுவேன். என்னுடன் குறைந்தது ஒரு பத்து பேராவது பேருந்துக்காக தினமும் காத்திருப்போம்.

ஒரு திங்கள் காலை பொழுதில் பேருந்திற்காக காத்திருக்கும்போது அன்றைய பணிகளை  திட்டமிட்டபடியே நின்றிருந்தேன். ஒரு கணினி திரைக்கு முன் அமர்ந்து மணிக்கணக்காக நான் பார்க்கும் வேலையை பற்றி சிந்தித்து  கொண்டிருக்கையில் ஒரு முதியவர் அருகில் வந்து நின்று அத்தனை முகமலர்ச்சியுடன் உற்சாகமாக

“ஹாஆஆய்” என்றார். ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒரு நபரிடம் பேசுவது போல அதில் அத்தனை எனர்ஜி இருந்தது.

பதிலுக்கு புன்னகைத்து நானும், “ஹாய்” என்றேன்.

வெள்ளை நிற ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டும் ஜீன்ஸ் ஷார்ட்சும் அணிந்திருந்தார். தலையில் வட்டவடிவிலான தொப்பி ஒன்று அணிந்து படு ஸ்டைலிஷாக இருந்தார். வயது நிச்சயமாக அறுபதை கடந்து விட்டிருக்கும். தன்னை ஜேக் என்று அறிமுகப்படுத்திகொண்டார்.

ஜேக் என்றதும் எனக்கு டைட்டானிக் ஜேக் முகம் நினைவில் வந்து போனது. இவருக்கும் முடி கற்றைகள் நெற்றியில் அழகாக வந்து விழுந்திருந்தது. முதுமையின் சுருக்கங்களில் கூட ஒரு வசீகரம் இருந்தது.

தன்னுடைய பார்வையை சாலையின் பக்கம் திருப்பி, “இதோ வந்து கொண்டிருக்கிறதே இந்த பேருந்து ஓக் ட்ரைவிற்கு செல்லுமா?” என்றார்.

நான் பயணிக்க வேண்டிய பேருந்து தான் வந்துகொண்டிருந்தது. “அது அடுத்த நிறுத்தம் தானே…செல்லும்” என்றேன்.

“அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமானால் எத்தனை டாலர்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டும்?”

“இரண்டு டாலர்கள்.”

“கடைசி நிறுத்தத்திற்கு செல்லவேண்டுமானால் எவ்வளவு?”

“அதற்கும் இரண்டு டாலர்கள் தான்.”

தோற்றத்திலும், ஆங்கில உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் அமெரிக்கரை போலவே இருக்கும் இவர் நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறாரா என்று  நான் எண்ணுகையில்,

“அடுத்த பேருந்து நிறுத்தம் வெறும் இருநூறு மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது, அதற்கும் இரண்டு டாலர்கள், கடைசி நிறுத்தம்  பல மைல்கள் இருக்கிறது அதற்கும் இரண்டு டாலர்களா? இதற்கு நான் நடந்தே சென்று விடுவேன்” என்று ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தார். அருகிலிருந்த அனைவரும் சிரித்தோம். கிளம்பிவிட்டார்.

இங்கிருக்கும் பேருந்துகளின்  டிகெட்டிங் சிஸ்டம் அப்படியானது. இரண்டு டாலர்களுக்கு மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் . அதைக்கொண்டு அந்த பேருந்தின்  எந்த நிறுத்தம் வரையிலும்  செல்லலாம்.

ஒரு டிங் டாங் சத்தத்துடன் எதிரே பேருந்தின் தானியங்கி கதவு திறந்தது. வரிசையில் நின்று பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன்.

ஜேக் ஒரு காலத்தில் அவரின் ரோஸுடன் மகிழ்ச்சியாக ஃபெரியில் (ஸ்ட்ரீமர் போட்) எதிர் காற்று முகத்தில் அறைய கைகள் விரிக்க பயணிப்பதை போல ஒரு கற்பனை காட்சி மனதில் தோன்றியது. மையமாக  எனக்குள் புன்னகைத்துவிட்டு பேருந்தின் சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்க துவங்கினேன்.

**

செவ்வாய்கிழமை.

அதே சாண்டா க்ரூஸ் பேருந்து நிறுத்தம். பேருந்து வர சில நிமிடங்கள் இருந்தது. வழக்கமாக அந்த பேருந்திற்காக காத்திருக்கும் அதே பயணிகள், சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலை என்று அதே காட்சி. கை கடிகாரத்தை பார்த்துவிட்டு பேருந்து வருகிறதா என நான் சாலையை எட்டி பார்த்துவிட்டு திரும்ப அருகே  ஜேக் தாத்தா நின்றிருந்தார் . இன்று நான் அவரை எதிர்பார்க்கவே இல்லை .

ஒரு ஆச்சரிய முகம் காட்டி, “ஹாய்” என்றேன்.

பதிலுக்கு அவர், “ஹாய் இந்த பேருந்து ஓக் ட்ரைவ் செல்லுமா?”என்றார்.

சட்டென்று என் புன்னகை மறைந்துவிட்டது. அவர் என் பதிலை எதிர்பார்த்து என் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்..

“செல்லும்.” என்று கூறிவிட்டு திரும்பிக்கொண்டேன்.

“அங்கே இறங்க வேண்டுமானால் எத்தனை டாலர்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டும்?”

அவரை திரும்பி பார்க்காமல் பேருந்து வரும் திசையை பார்த்தபடியே “இரண்டு டாலர்கள்.” என்றேன்.

“கடைசி நிறுத்தத்திற்கு செல்லவேண்டுமானால் எவ்வளவு?” அப்போதுதான் முதல் முறை கேட்பது போலவே கேட்டு கொண்டிருந்தார்.

‘இரண்டு டாலர்கள்தான்.”

“அதெப்படி அடுத்த நிறுத்ததிற்கும் இரண்டு டாலர்கள் கடைசி நிறுத்தத்திற்கும் இரண்டு டாலர்களா? இதற்கு நான் நடந்தே சென்று விடுவேன்”

அதே வெடிச் சிரிப்பு .

இந்த முறை நான் சிரிக்கவில்லை.

நியாயமாக, “என்னா தாத்தா லொள்ளா?”

என்று தான் கேட்டிருக்க வேண்டும். அயல் நாட்டில் அடக்கி வாசிப்போம் என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

நேற்று இருந்த ஜேக் தாத்தாவின் இமேஜ் இன்று க்ராக் ஜேக் ஆனது.

பொதுவாக இந்த ஊர்க்காரர்கள் குறும்பாக பேசுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு பரிகாசம் செய்வதில் வல்லவர்கள். சளைக்காமல், முகத்தை  சுளிக்காமல் விவாதம் செய்வதில் கில்லாடிகள்.இந்த ஊருக்கு வந்த புதிதில் உடன் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் இந்தியாவைப் பற்றி ஆர்வமாக பேச ஆரம்பித்தார் .

“ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசுவீர்களாமே… அப்படியா???” என்று ஆரம்பித்தார்.

“ஆமாம் பெரும்பாலும் அனைத்து மொழிகளுக்கும் எழுத்து வடிவம் உண்டு.” என்று நான் கூறியதைக் கேட்டு அவர் வியந்து போனார்.

பேச்சு வரலாற்றின் பக்கம் திரும்பியது. நான் சோழ மன்னர்களின்  பெருமைகளாக வட இந்தியா , ஜாவா ,சுமித்திரை தீவுகள் வரைக்கும் அவர்கள் கொடி பறந்ததையும் , வங்காள விரிகுடா கடலை சோழர்கள் வங்காள ஏரி  என்றே குறிப்பிட்டிருப்பதையும் விளக்கி கடலை ஒரு ஏரியை போல கடந்துவிடும்  ஆற்றலை  அவர்கள் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்று சோழர்களின் பெருமைகளை  அடுக்க ஆரம்பித்தேன்.

பின் உணவு வகைகள், உடை, பண்டிகைகள் என்று பேச்சு நீண்டு இந்தியாவின் பெருமைகளை நான் நீட்டித்து கொண்டிருந்தபோது  அவ்வளவு அழகாக வியந்து கேட்டுக் கொண்டிருந்தவர் சட்டென்று ஒரு இடத்தில் நிறுத்தி

“இன்னும் மக்களை ஜாதியின் அடிப்படையில் வகைப்படுத்தி தான் கல்வியும் , பணியும் வழங்கப்படுகிறதா??” என்றார்.

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. சுமூகமாக சென்று கொண்டிருக்கையில், சட்டென பவர் கட்டான லிஃப்ட்டில் ஜெர்க்கானது போல இருந்தது  அந்தக் கேள்வி.

இந்தியாவில்  இருக்கும்  சாதிய வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வு மனப்பான்மை, இன்றைய சூழலில் இட ஒதுக்கீட்டின் தேவை என்று எவ்வளவு விளக்கியும், ‘ இது ஒரு பிற்பட்ட சமூகம் தானே’ என்ற பிம்பம் மட்டும்  மாற்ற முடியாததாகவே இருந்தது.

அதற்குமேல்  தொடர  எனக்கு பிரியமில்லை என்பதை என் முகபாவனையில் காட்டிவிட்டு  பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

அப்போது அவர் முகத்தில் தோன்றி மறைந்த அந்த நக்கலான  சிரிப்பு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

மும்பையின் அடையாளம் அம்பானியா? இல்லை தாராவியா? என்று அலசும்போதே இரண்டும் இல்லை ஐஸ்வர்யா ராய் என்று சிரித்துக்கொண்டே அந்த விவாதத்தை முடித்துக்கொள்ள இவர்களால் முடிகிறது என்று அறிந்த நாள் முதல்  இந்தியா பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அளவாக பதில் கூறி நிறுத்திக்கொள்வேன்.

**

புதன் கிழமை.

இன்று ஜேக் தாத்தாவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்றும்  வந்து அவர் அதே கேள்வி கேட்டால் பதிலடி ஒன்றை  கொடுத்துவிட்டு நகர்ந்து  விட வேண்டும் என நினைத்திருந்தேன்.

அவர் எந்த திசையில் இருந்து வருவார் என்று தெரியாததால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர் திசையில் இருந்து சாலையைக் கடந்து வந்து என்னை அப்போது தான் பார்ப்பது போன்ற ஒரு பார்வையை வீசி விட்டு சென்று வேறு யாருடனோ பேச ஆரம்பித்தார். பிறகு குழந்தையுடன் நின்றிருந்த பெண்மணி ஒருவருடன் பேசினார். சைனீஸ் மொழி மட்டுமே அறிந்த ஒரு பாட்டியிடமெல்லாம் ஏதோ பேசினார். யாரும் அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. எல்லோரும் பேருந்தை எதிர் நோக்கியே நின்றிருந்தார்கள்.

எனக்கு சீட்டுக்கட்டில் இருக்கும் ஜோக்கர் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. ரம்மி சேராமல் இந்த ஜேக் அல்லாடுவது போல் தோன்றியது. எனக்குள் சிரித்துக்கொண்டேன். பேருந்து வந்ததும் நாங்கள் அனைவரும் ஏறிக்கொண்டோம். தினமும் இதே நேரத்திற்கு நிறுத்தத்திற்கு வருகிறார் அங்கு நிற்கும் யாருடனோ பேசுகிறார். ஒருநாளும் அவர் பயணித்ததில்லை.

**

வியாழக்கிழமை.

ஜேக் தாத்தா இன்று எனக்கு முன்பாகவே நிறுத்தத்திற்கு வந்திருந்தார். இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். நான் வந்ததை அவர் கவனிக்கவில்லை. நான் அவருக்கு சற்று தள்ளி இருந்த இடத்தில் நிற்க முடிவு செய்தேன். அவரை கடந்து செல்லும் பொழுது,

“என்ன இரண்டு டாலர்களா? இதற்கு நான் நடந்தே போய் விடுவேன்” என்று யாரிடமோ கூறிவிட்டு அதே வெடி சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் . முதல் நாள் நகைச்சுவையாகவும், இரண்டாம் நாள் சற்று நக்கலாகவும் தோன்றிய ஒரு விஷயம் இன்று ஏதோ ஒரு வித தேடலுக்கான விஷயமாக மனதில் பட்டது. மனதை ஏதோ செய்தது.

எப்போதோ படித்த அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது.

அந்த கதையில் அர்மெனிய மொழி பேசும் வயதான ஒருவர் ஜெர்மனியின் ஒரு கிராமத்தில் அகதியாக தஞ்சம் புகுந்து ஒரு முடி திருத்தம் செய்யும் கடையில் பணிபுரிவார். அவர் மற்றும் அவரது மகன், இருவர் மட்டுமே அந்த ஊரில் ஆர்மெனிய மொழி பேசுபவர்களாக இருப்பர். அவருடைய மகன் சிறுவயதிலிருந்து ஜெர்மனியில் வளர்வதால் அவன் ஜெர்மானியனாகவே வளர்வான். அவன் தாய் மொழியை அறிந்து இருப்பானே ஒழிய பற்றுடையவன் அல்லன். தினமும் பணியை முடித்துக்கொண்டு வரும் அவர் அர்மெனிய புத்தகம் ஒன்றை எடுத்து வாசிப்பார். சத்தமாக, சரளமாக , உற்சாகமாக வாசிப்பார். பால்ய நண்பனை சந்தித்து அளவளாவுவது போன்ற ஒரு உணர்வை அவருக்கு அது கொடுக்கும். அதே நேரம் உலகெங்கிலும் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய மொழிகளில் அவருடைய தாய் மொழியும் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையை அளிக்கும். தன்னுடைய சந்ததிகள் தன் தாய்மொழியை பேசப்போவதில்லை என்பது அவருக்கு துக்கமாக இருக்கும். ஜெர்மனிய மொழியில் காதலை கூட பகிர்தல் எனும் பொருள்பட தான் கூறுகிறார்கள்.ஆனால் தன்னுடைய குறைந்தபட்ச ரசனைகளை,ஈடுபாடுகளை ,ஆர்வத்தை தன்  தாய்மொழியில் பகிர்ந்து  கொள்ள  முடியாத இந்த புலம் பெயர்ந்த வாழ்க்கையை எண்ணியபடி அவருக்கு தூக்கம் தொலைத்த இரவுகள்  கவிவதாய் இருக்கும்.   இழந்த காதல், நட்பு, உறவு, தேசம் இவற்றின் நினைவுகளை மீட்டெடுத்துப்பார்த்து மீண்டும் துய்ப்பதை அவர் மனம் விரும்பும்.

சமயத்தில் தனியாக அறையில் அமர்ந்து அர்மெனிய மொழியில் உரக்க பேசிக்கொண்டிருப்பார். பிழையில்லாமல் சரியான உச்சரிப்புடன் பேச முடிந்ததை எண்ணி மகிழ்வார். காற்றில் அந்த எழுத்துக்கள் பரவுவதாக கற்பனை செய்து பார்ப்பார். பின் அதை சுவாசிப்பதாக எண்ணி பெருமூச்சு விடுவார். மொழியைப் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் தனிமையில் அதைத் தாங்கிப் பிடிக்கும் முதியவரின் முகம் ஏனோ சாண்டா க்ரூஸ் நிறுத்தத்தில் பார்த்த ஜேக் தாத்தாவுடன் பொருந்திப்போவதைப் போல் தோன்றியது. அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் தனிமையை துரத்தவும் வேறு எதற்காகவும் அவர் இப்படி பேசிக்கொண்டு இருக்கலாமென தோன்றியது.

உறவை தேடுவதும் அன்பை தேடுவதும் ஒன்றுதானே . அவரின் நடவடிக்கைகளை மட்டுமே வைத்து அவரை மூன்று நாட்கள் கணித்த எனக்கு இன்று அதற்கான காரணம் புரிந்தது . உளவியல் ரீதியான பார்வை கிட்டும்போது எதையும் அணுகுவது சுலபமாவது புரிந்தது.

**

வெள்ளிக்கிழமை.

இன்று ஜாக் தாத்தாவை பார்ப்பதற்காக மட்டுமே பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதாக தோன்றியது. சாலையைக் கடக்கும் பொழுதே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருக்கும் அவரை பார்த்து விட்டேன்.

தனியாக நின்று கொண்டிருந்த அவரிடம் சென்று “ஹாய்” என்று உற்சாகமாகக் கூறினேன்.

ஆச்சரியமாக என்னை பார்த்து

“ஹாஆஆய் “என்றார். அதே எனர்ஜி.

தூரத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது.

“இந்த பேருந்து ஓக் ட்ரைவ் சொல்லுமா?” என்றேன்.

வெடிச்சிரிப்பு!!!

ஒட்டுமொத்த பேருந்து நிறுத்தமும் எங்களின் சிரிப்பில் இணைந்து கொண்டது.

********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button