கவிதைகள்
Trending

அ.ரோஸ்லின் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

காற்றை உட்கொண்டவன்
————-

நாட்கள்
தூசியைப்போல
பறந்து கொண்டிருந்தன.
அதன் ஒரு துகளாக
அவள் மிதந்தலைகிறாள்.

நிறமழிந்த
ஓவியம் என
அவள் அன்பு
உருமாறியிருப்பதை அவன் அறியாதவனில்லை.

சின்னஞ்சிறு  விலங்கின்
பின்தொடர்தலாக
அவளை அவன்
கண்டுபிடித்திருந்தான்

உண்மையின்  அசைவுகளில்
இடம் பெயர்ந்த  சிநேகம்
உறுதியற்ற  வார்த்தைகளில்
கழன்று வீழுகின்றது.

காற்றை உட்கொண்டு பிழைக்கும்  காருண்யத்தை
அறிந்தவன் அல்லவா.

உதிர்ந்த   கனிகள்
உவப்பைத் தருமோ…?

***

அழிஞ்சிலின் தொடுதல்
—————————————-

ஒரு விடாய்இசைப் பாடல்
எப்படி இருக்கும்?
இரத்தச்சூட்டின் தடங்களுடன்,
அடிவயிற்றின்  முனகலுடன்
காய்ந்த அழிஞ்சில்  கிளையின் தொடுதலென
நெடுவரியெங்கும்  தன் சிவந்த கொடுங்கனிகளைப் பறித்தபடி செல்கிறது,
குருதிச் சந்தம் வழிய வழிய.

ஆவதும் அழிவதும்
———————————

மொத்தம் 10 கோழிக்குஞ்சுகள்
பிறந்திருந்தன.
நாளாக ஆக குறைந்து கொண்டே போனது எண்ணிக்கை.
எது பிடித்துத் தின்றிருக்கும்?

இன்று உன்னுடையது நாளை மற்றொருவருடையதாகிறது.
இரவில் பஞ்சாரத்தில் தூங்கும் குஞ்சுகளின் கனவில்
சிவவாக்கியர் வந்து போகிறார்.
ஆவதும் அழிவதும்
இல்லை இல்லை இல்லையே.

இஸ்ரேலிய எலி
—————————

பனி வெள்ளை நிற
ஆடையைப் போல் மலையின் தோள்களைத் தழுவி நின்றது.

மேட்டிலிருந்து சரிவை நோக்கி மிகுந்த அழுத்தத்துடன் விழுகின்றன,
அடர்வு மிகுந்த பனித்துகள்கள்.
பகலற்ற நாட்களின் குளிர்காலப் பொழுதுகள்
கொடும் வண்ணத்தில் புலரும்.

வாழ்தல்
உயிர்
போராட்டம்
பசி
கடந்து
மீள்வோமா என்பதே சந்தேகம்.

பசியைத் தொடர்ந்தால் மட்டுமே வாழ இயலுகின்ற
பனி அணில்கள்
பங்கருக்குள்ளேயே  வாழ்வதைப் போலத்தான்
இப்போதைக்கு.

பசித்தாலும் பரவாயில்லை. கழுகுக்கு இரையாகாது பிழைத்தால் போதும் இந்த நொடி.

உண்பதற்கு ஏதுமில்லை
வாழ்வதற்கான யாதொரு சூழலும் இன்றி
மரண நெருக்கத்தில் கிடந்தேன் என்று கூறிய எலி இஸ்ரேலிலிருந்து வந்திருந்தது.
துளியூண்டு ரொட்டித்துண்டிலேயே தான் வயிற்றை நிரப்பிக் கொண்டேன்,
எக்ஸ்ட்ரா உணவு கேட்டால் அடி விழுவதாகவும் சொல்லிப் புலம்பியது.
சரி சரி ஆஷ்விட்ஸ் போ
என்றதுதான் தெரியும்
எங்கேயோ ஓடி
தூக்கு மாட்டிக்கொண்டது
ஹிட்லர் எலி.

சித்தரின் ஸ்டூடண்ட்
———————————-

பாறையின் முதுகில்
பதுங்கியிருந்த தவளை
நண்டை  ஒரே வாயிலடைத்து
விழுங்கியது.

வாயில் நண்டு கடித்து விட்டால்…
கடினமான ஓடு தவளையால் செரிக்க முடியாது போனால்,

ஊஹூம்
கடுவெளிச்சித்தரின் ஸ்டூடண்டாக்கும் இது.

ஆனந்த வெள்ளத்தில் மூழ்கு
மிகு களி கூர்ந்து.

லைவில் வந்த சிறுத்தைப்புலி
———————————————————-

சிறுத்தைப்புலி
லைவ் வீடியோவில் வருகிறதென வலைதளத்தில் பார்த்தேன்.

எல்லோரும் வழமையாய் அதற்கு ஹை சொன்னார்கள்.
அவ்வளவு பெரிய விலங்கு
கண்களைச் சுருக்கியபடி
கமெண்ட்ஸை படிக்க ஆரம்பித்தது.
தான் லாக்டௌனில் நலமுடன் இருப்பதாகவும்
மேலும்
பல்விளக்கிக் கொண்டே பேசியது.  வீடியோவை காண்பவர் எண்ணிக்கை 4112 என்பதை திரையில் கண்டு,
முழுக்கோழியும் பூனை மீன்களும்
காலை உணவுக்குத்
தயாராக இருப்பதாகக் கூறி
அனைவரையும் நலம் விசாரித்தது.

அனைவருக்கும்
வாழ்வு சிறக்க வாழ்த்துகள்
எனக் கூறியபோது,
குளிப்பதற்கு
தண்ணீர் எடுத்து
வைக்கச்சொன்ன  தோழியின் ஞாபகம்  வந்துவிட்டது  அதற்கு.
களைப்பாய் இருக்கிறபடியால் இன்னுமொரு நாளில்
லைவ் வருவதாகக் கூறி
சிறுத்தையாய்ப் பாய்கிறது
காலிக் குடத்தோடு…

மாம்பெண்
———————–

தோட்டத்தில்
தளிர் இலைகளைத்
தடவியபடி கேட்டாள் மகள்
இது எவ்வளவு வழவழப்பா இருக்கும்மா.

இலையின் நுனியில்
படிந்திருந்த
சிவந்த பசும்  இலைகளை
நானும் பார்த்தேன்.
அது பிறந்த சிசுவின் ஈரத்துடன் இருந்தது.
நீயும் அப்படித்தான் இருக்கிறாய் பெண்ணே
என்று கூறியபடி அவளைத் தொட்டேன்.
பசும் வாசனையுடன் ஒரு மாந்தளிராக விலகியோடுகிறாள்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button