சிறுகதைகள்
Trending

பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி

சிறுகதை | வாசகசாலை

எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா  இப்படிப்  பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி  நாளும் அதுவும்  தனக்கு இப்படி விடிந்ததே  என்று  அடக்கி  அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே எழுந்து குழம்பிற்கு  மிளகாய்ச் செலவெல்லாம் வறுத்து அரைத்துவிட்டாள். இம்முறை மிக்சியை விட்டுவிட்டு அம்மியைக் கழுவி அரைத்தாள்.

சந்தனம் போல் நெகு  நெகு என்று திருப்தியாக வழித்து எடுத்தாள். நன்கு கொதிக்க வைத்து பலகாரச்சீட்டுக் கறியை மஞ்சள்  போட்டு வேக வைத்து கலக்கிக் கொதிக்க வைத்தாள். அசரடிக்கும் மணம் கொஞ்சம் கர்வப்படுத்தியது இவளை. பேசாமல் இறக்கி வைத்திருக்கலாம். “என்னங்க, உப்பு சரியா இருக்கான்னு சொல்லுங்க” என்று  கணவனைக் கூப்பிட்டாள்.  சனி  இப்படி நாவில் வந்து உட்காரும் என்று  அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வந்த அவனாவது கரண்டிக் குழம்பை  நாவில் விட்டுப் பார்த்ததோடு  சென்றிருக்கலாம். குழம்பு கொதித்துக்கொண்டிருந்த சட்டிக்குள் கரண்டியை விட்டு ஒரு கிளறு கிளறினான்.

“பாதிக் கறிய வறுவலுக்கு எடுத்து வச்சிருக்கியா?” என்றான். “இட்லிக்கும்  மதிய சோத்துக்கும் சேர்த்து குழம்பாவே  கூட்டிவச்சிட்டேங்க” என்று முடிக்கக் கூட இல்லை.  எள்ளும் கொள்ளும் வெடிக்க, “கொழம்பா  இது? கொழுப்புதான் மெதக்குது… வருசம் பூரா பணத்தைக் கொடுத்துட்டு லொக்கா  லொக்கா னுட்டுப் போனா இப்படித்தான் இருக்கும். சீட்டு வேண்டான்னாக்  கேட்டுத் தொலையறியா?”  என்று கத்தியபோது  பேசாமல் இருந்திருக்கலாம்… “நீங்கதான கூறு  பார்த்து எடுத்தது… நல்ல கூறாப் பார்த்து எடுக்கத்  துப்பில்லாம இப்பக் கத்துங்க” என்றாள். “ஆமாண்டி  எனக்குத்தான்  துப்பில்ல. துப்பிருந்தா வேலைக்குப் போற பொண்ணு வந்தத வேண்டாம்னு படிச்சவன்னு  உன்னக்கட்டிருப்பனா?” என்று சத்தமிட்டுவிட்டு பட்டாசுப்  பெட்டியை எத்தித் தள்ளிவிட்டு  வெளியே  போய்விட்டான்.

கொஞ்ச நேரம் ஆகியும் வரவில்லை. பசங்க கண்ணு  முழிச்சதும் அப்பா எங்க பட்டாசு விடனும்னு கேட்பாங்களே  என்று நினைத்தபோது கண்ணில்  மறுபடியும் நீர் பெருகியது அவளுக்கு.  அப்பா இருந்தவரை  தலைதீபாவளியைப் போலவே ஊருக்குப் போய்விடுவார்கள். அம்மா இவளை ஒரு வேலை  செய்ய விடாமல் தாங்குவாள். எல்லாம் கனவாப் போச்சே என்று  நினைத்தாள். குழம்பு கொதிக்கும் சப்தம் கேட்டு அடுப்பை நிறுத்திவிட்டு இட்லி ஊற்றக் கூட மனசில்லாமல்  அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டாள். மெல்ல மெல்ல வெளிச்சம் வரத் துவங்கியது. ஆங்காங்கே எழுந்த வெடிச் சத்தம் இவளுக்குள்  திகிலைக் கிளப்பியது.  கோவித்துக்கொண்டு பண்டிகை நாளன்று இறந்து போனவர்களின்  ஞாபகம் வந்தது. “அப்பா காப்பாத்துப்பா” என்று  முணகிக் கொண்டேயிருந்தாள். ஒருமணி  நேரம் கடந்திருக்கும்.

’சரக் சரக்’ என்று  செருப்பை விடும் சப்தம்… அவன்தான்.  அவளுக்கு உயிர் வந்தது. நல்லவேளை, பசங்க எழுந்திரிப்பதற்குள் அவன்  வந்துவிட்டது நிம்மதி தந்தது. இட்லி ஊற்றப்  பரபரத்த  மனசை  அடக்கினாள்.

அவனுக்கும் தெரியட்டும்,  நமக்கும் கோபம் வரும்னு…

அவன் கட்டிலில் குப்புறப் படுத்தான்.  அவனே வந்து பேசட்டும் எனத் திரும்பி உட்கார்ந்தாள். கொஞ்ச நேரம் முடிந்ததும் அவன் குறட்டை விடும் சப்தம்  கேட்டது.  ’நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படம்  மாதிரி வெள்ளரிக்காயைக்  கண்ணில் வைத்துவிட்டுத் தூங்கிப்  போன  ஞாபகம் வந்து சிரித்தாள். பசங்க எழுந்து பேசினா  சண்டை மாறிடும் என்று  நினைத்தாள். அதுகளோ ராத்திரிப்  பூரா ஆட்டம் பாட்டம். கோலத்துக்கு கலர் பொடி போட்ட அசதி… நல்லாத் தூங்குதுக.. இவளுக்குள் பசி வேறு  மெல்ல எழுந்தது. ராத்திரிப் பால் எடுத்து வைத்திருந்தாள். குழம்பை இறக்கியதும் காபிப் பாத்திரம் வைப்பதாக இருந்தாள்.  அதற்குள்தான் இத்தனை சண்டை.

கோசலைக்காவும் இவளும் ஒண்ணு மண்ணாப் பழகுவதைப்  பார்த்து அந்த வீதியே கண்ணு வைக்கும். கோசலைக்கா மாசா மாசம்  நூறு ரூபாய் சீட்டுப் பிடிக்கும்.அந்த வீதி அடிக்குந் தலைக்குமா  முப்பது வீடும் சேர்ந்துக்குவாங்க. தீபாவளி முடிந்த அடுத்த மாதமே சீட்டு ஆரம்பமாகும். பதினோரு  மாசம் கட்டனும். ஒரு மாசம் அக்கா போட்டுக்கும். ஒரு சில்வர் பாத்திரம் ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரம், ஒரு கிலோ ஆட்டுக்கறி இத்தனையையும் அந்த ஆயிரத்து நூறுக்குள்ளயே அக்கா சரி பண்ணீரும். புதிதாய்க்  குடிவந்த பக்கத்து வீட்டு பாபு,  ’அக்கா வேற லெவல்’ என்று நேற்று சொன்னான். படிக்கும்   காலத்தில்  எதற்கெடுத்தாலும் ’சான்சே இல்ல’ என்று  சொல்லிக் கொண்டிருந்ததை  நினைத்துப் பெருமூச்சு விட்டாள் இவள். கோசலைக்காவின் கெட்டிக்காரத்தனம்  இதை வருசாவருசம் சாதிக்க வைத்தது. ’ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கிக் குட்டில போட்டு’ என்று உருட்டிப்  பெரட்டி காசு பண்ணி விடுவாள். இத்தனைக்கும்  கோசலைக்கா வீட்டுக்காரர்  ஏதோ ஒரு அரசாங்க உத்தியோகத்தில்இருக்கிறார். உதிரிப்பூக்கள் பட விஜயன் மாதிரியே இருப்பார். ஆனால் நல்ல மனுசர்.  ஆனா அக்கா வட்டமா பெரிய பொட்டு மட்டும் வச்சுட்டுப் போய்  நின்றாலே போதும். நகையே போடாட்டியும்  மூக்குத்தி அம்மன் மாதிரி  அப்படி ஒரு  அம்சம்.

காலை நூறு ரூபாய் வாங்கிட்டுப் போன காய்க்காரம்மா காய வாங்கி வித்துட்டு நூத்தம்பதாக் கொடுத்துரும். இப்படி அக்காவை நம்பி ஒரு அம்பது பேராச்சும் வியாபாரம் பண்ணுவாங்க. எழுதி வாங்காமத்தான் எல்லோருக்கும்  அக்கா பணம் தரும். ஆனால் இதுவரை யாருமே அக்காவை ஏமாற்றியதில்லை. இவ பார்க்க ஏழு வருசமா பலகாரச்சீட்டு நடக்குது…எப்பவும் சில்வர் சம்புடப் பாத்திரம்தான் வாங்குவாள். “நூறு சம்புடம் இருந்தாலும் அத்தனைக்கும் ஒரு வீட்ல வேலை இருக்கும்”  என்பாள். இவளைத்தான் எப்போதும் கடைக்கு கூட்டிப்  போவாள். இந்த முறை இவள் கொப்பரை என்று மூடி போட்ட  பாத்திரத்தைக் கையில் எடுத்து அழகாயிருக்கு என்றதற்காக  அதையே வாங்கினாள்.

கோசலைக்கா  பேரமே  பேசமாட்டாள். இவளைப் பார்த்ததுமே,  “மத்தவங்களுக்கு எழநூத்தம்பது ரூபாய்  உங்களுக்கு ஐநூறு”  என்றார் கடைக்காரர்.  அக்கா ஒன்றுமே பேசாமல் பணத்தை எண்ணிக் கொடுத்தாள். அக்கா கூடக் கடைக்குப் போவதே நம்மை  கம்பீரமாக்கும். வந்து எல்லோரிடமும் வாய் ஓயாமல் புகழ்ந்தார், “பாத்திரம் ராணியோட  செலக்சனாக்கும்”  என்று.  அதனாலேயே கண்பட்டதோ…

ஆள்வைத்துப் பலகாரம் போடும்போதும் கோசலைக்காவுக்கு இவள் பக்கத்தில் இல்லாவிட்டால் கை ஓடாது. ஆடுகள் மூன்று குட்டி ஒருவாரம்  முன்பே இறங்கிவிட்டது. பொடியன் அதுக்கு  கருப்பு, சங்கிலி, பெப்பர் என்று பெயரிட்டான். ராத்திரி  கெடாய் வெட்டு. வெட்டுக்கூலியே ஐயாயிரம்…ஆட்டுத்தோலையும் வெட்டியவருக்கே கொடுத்துவிடுவாள். தலையும் குடலும் எப்போதும் பங்கு பிரிப்புக்கு வராது. அக்கா அடுத்த நாள்  புளிக்குழம்பு வைத்து சிலருக்குக்  கொடுப்பாள். மூன்று கூறு அக்காவுக்கு. மிச்சம் முப்பது கூறாக வைப்பார்கள்.  சீட்டுக்காரர்கள் ஆளுக்கு ஒன்று எடுக்க வேண்டும். யார்முதலில் எடுப்பது என்று ஒருமுறை சலசலப்பு வந்ததும், முப்பது துண்டுச் சீட்டில் முப்பது எண் எழுதி ஆளுக்கு ஒருசீ ட்டு எடுக்கும் நடைமுறை வந்தது.

இந்த வருடம் ராணியின் கணவனுக்கு மூன்றாம் எண் வந்ததாம். அப்படியும் இந்த கதி. நினைக்க நினைக்க அழுகை வந்தது இவளுக்கு. பசங்க எழுந்திரிப்பதற்கான அறிகுறியே இல்லாமல் நன்றாகத் தூங்குகிறார்கள்… அப்பா அடிக்கடி சொல்லும் பாட்டான, “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே…” நினைவிற்கு வந்து  மனம் கனமானது. அவன் வேறு பசி பொறுக்கமாட்டான்… சண்டையில்லாவிட்டால் இந்நேரத்துக்கு இட்லி சாப்பிட்டிருக்கலாம் என்று நினைத்ததும் நீர் குபுக் என்று கண்ணிலிருந்து  கொப்பளித்தது.

கேட் திறக்கும் சப்தம் கேட்டது. கோசலைக்காதான்.  ஒரு கையில் இட்லிப் பாத்திரம் நிறைய கறிக்குழம்பு. கொப்பரை நிறைய இட்லி ஆவி பறந்தது இன்னொரு கையில்…  “இன்னும் இட்லி ஊத்துலையே…” என்றபடி உள்ளே வந்தாள். சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். “இதென்ன நோம்பிநாளு அதுவுமா தூக்கம்…?” என்று அதட்டினாள்.

“ஏந்தம்பி  கொழுப்புக்கறி யாரும் எடுக்கமாட்டாங்கன்னு ஓரமா வச்ச கூறை எடுத்தியேப்பா… கறிக்கு ஆசப்பட்டு எங்க வீட்ல ஒருத்தி  போய்ச் சேர்ந்தாளேன்னுதான் நான் இந்தக் கறிச் சீட்டே ஆரம்பிச்சேன். நோம்பியன்னைக்கு இந்த வீதியே மனசாற கறிச்சாறு சாப்பிடனும். நீ என்னப்பா எம் பொறந்தவனாட்டமில்லயா… எல்லாத்து முன்னாடியும் சொல்ல முடியலை… பிரிட்ஜ்ல இருக்கற நல்ல கறிய அப்புறமா கொடுத்துவிடறேன்.. இப்ப இட்லியச் சாப்பிடுங்க… எந்திரிங்கடா பசங்களா…”  என்று எழுப்பினார்.

“அக்கா இவ வச்ச குழப்பும் நல்லா இருக்குது… ராணி, அக்காவுக்கு நம்ம குழம்பக்கொடு.”

என்று உற்சாகமாக சத்தமிட்டான் இவன்.  அதோடு இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்தான்.

“அக்கா, அப்புறம்ஒண்ணு, இனிமே  கறிக்கூறு  எடுக்கறதுக்கு  அந்தந்த  வீட்டுப் பொம்பளைகளையும்  கூப்பிடலாம்க்கா…”

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. பலகாரச்சீட்டு யாரையும் ஏமாற்றாமல் பண்டிகையை கொண்டாட உதவிய கோசலையக்கா.. நெகிழ்வான யக்கா தான்.
    -தஞ்சிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button