நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;21 – ‘வரலாறு முக்கியம், அமைச்சரே!!!’ – சுமாசினி முத்துசாமி
தொடர் | வாசகசாலை
இந்த வாரம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தி உலகின் பெரும்பாலானோருக்குக் கொண்டாட்ட செய்தி ஆகி விட்டது. எந்தெந்த நாடுகளில் எல்லாம் இனவாதமும், வெறுப்பரசியலும் தலையெடுக்க நினைக்கிறதோ அங்கு எல்லாம் பைடனின் வெற்றி ஒரு நம்பிக்கை கீற்றைப் பாய்ச்சியுள்ளது. மரபிற்காக நடத்தப்படும் பதவியேற்பு விழா இந்த வருடம் திகில் படத்தின் கிளைமாக்ஸ் ‘எல்லாம் சுபமே’ என்ற கடைசி காட்சி போல் இருந்தது. தலைமையின் வலிமை என்ன என்பது வலுவான தலைவர்களால் மட்டுமல்ல, அதற்கு எதிர்மறையான தலைவர்களாலும் உணர வைக்க முடியும்.
நம்பிக்கைகளைத் தூக்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு வந்த எத்தனையோ கோடி பெண்களில், ஒரு பெண்ணின் வாரிசு இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி. எவை எல்லாம் தடைகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமோ அவை எல்லாவற்றையும் தகத்தெறிந்து இன்று மேடம் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆகி இருக்கிறார் கமலா ஹாரிஸ் அவர்கள். அவர் அந்த ஊதா உடையில் பளிச்சென்ற சிரிப்போடு பதவியேற்ற பொழுது உலகமே கொஞ்சம் குளுக்கோஸ் குடித்து, புத்துணர்வு பெற்றுவிட்டது போல் எனக்குத் தோன்றியது. இது அரசியல் சார்பை மீறி அனைவருமே ஏற்றுக்கொள்ளும் ஒரு தனி மனுஷியின் வெற்றி. வருங்கால சந்ததியினருக்குக் காட்டப்பட்டுள்ள நம்பிக்கையின் பாதை.
இந்த பதவியேற்பு நாளில் நடந்த சிறப்புகள் பல. ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என்று உலகின் மூத்த ஜனநாயகமே மார் தட்டி(!)கொண்டதில் ஆரம்பித்து, அமண்டா கார்மனின் வெகு சிறப்பான கவிதை, லேடி காகாவின் தேசிய கீதம் என்று மிகப் பிரமாதமாக விழா நடந்தது. கொரோனா என்ற கிருமியின் தாக்கமும், சில பொய்யுரைகளால் பெருகி இருந்த அச்சுறுத்தலும் இந்த விழாவின் சோபையைக் குறைத்துத் தான் விட்டது. எந்த விதமான மிகச் சிறந்த நிகழ்வுக்கு பிறகும் அந்த நிகழ்வின் ஸ்பெஷல் மொமெண்ட்ஸ்/ சிறப்புத் தருணங்களின் தொகுப்பைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்க்கும் பொழுது, வரிசை கட்டி ஊடகங்கள் எல்லாம் திருமதி பைடனில் ஆரம்பித்து அவரின் பேத்திகள், பேரன்கள் வரை அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரைப் பற்றியும் பட்டியலிட்டிருந்தனர். கமலா ஹாரிஸின் குடும்ப பயோ-டேட்டாவும் அமெரிக்காவிற்கு இப்பொழுது அத்துப்படி. அந்த நிகழ்வில் நன்றாகப் பேசியவர்கள், பேசிய வார்த்தைகள், முக பாவனைகள், பேஷனாக உடையணிந்தவர்கள் என்று ஊடகங்கள் பேச அவ்வளவு முக்கியமான விஷயங்கள் பல இருந்தன. முதிர்ந்த அரசியல்வாதியான சாண்டர்ஸ் அவர்கள், குளிரைத் தவிர்க்கப் போட்டிருந்த கையுறைகளில் ஆரம்பித்து சிலவகை ‘சொதப்பல்கள்’ என்று நம்பப்படுபவையும் மீம்களிலும் வலம் வர ஆரம்பித்து விட்டன.
இப்படி செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருக்கும் பொழுது, First Lady Dr Jill Biden அவர்களின் உடையைப் பற்றி ஒரு செய்திக் குறிப்பு பார்த்தேன். முன்னாள் First ladies பதவியேற்பு நிகழ்வில் என்ன உடைகள் உடுத்தி இருந்தனர், அவை பறை சாற்றிய உட்கருத்துக்கள் என்ன என்றும் ஆராய்ந்து விளக்கி இருந்தனர். அதோடு மட்டுமல்லாது, முன்னாள் first ladies இந்த உடைகளை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக அளித்து விடுவதும் வழக்கம் என்பதை அறிந்துக்கொண்டேன். இந்த உடைகள் மியூசியத்தில் காட்சிமுறை படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி ஆச்சரியத்தைத் தந்தது. உடைகளில் என்ன இருக்கிறது?. இவற்றிற்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்று தான் பொதுவாக நமக்குத் தோன்றும். ‘இதை எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமா?’ என்று தான் எனக்கும் முதலில் தோன்றியது. ஆனால் இது போன்ற சிறு விஷயங்களில் தான் அமெரிக்கா தனித்து இயங்குகிறது.
இந்த உடைகளை வரிசைப் படுத்தும்பொழுதே, ஒரு மனைவியின் பங்கு காலத்தின் ஓட்டத்தில் எப்படி மாறியுள்ளது. நாட்டை வழிநடத்தும் கேப்டனின் இணையர், எப்படி இன்னொரு முக்கிய கேப்டன் ஆகிறார். பெண்களின் முன்னேற்றம் எப்படி இந்த உடைகளின் வகைமைக்குள் புதைந்துள்ளது என்பதையெல்லாம் காட்சி வடிவில் விளக்கியுள்ளனர். அதையும் மீறி, தன் நாட்டின் முகவரியாக இருக்கும் ஒருவர் அந்த நாட்டிற்கான பொதுக்கருத்தை எப்படி தன் உடல்மொழிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார் என்பதையும் ஆவணப்படுத்த முயல்கின்றனர்.
மிச்செல் ஒபாமா அவர்கள் 2008ல் பொதுவான கடை ஒன்றின் அதிக விலையில்லாத கையுறைகளை அணிந்திருந்தார். அது அவரை ‘பொது மக்களின் First Lady’ என்று அன்பினால் நிறைத்தது. American history மியூசியத்தில் இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நம் தேசத்தந்தை உடைகளில் எளிமையைக் காட்டியது அவரை உலகின் ‘மகாத்துமா’ ஆக்கியதில் பெரும் பங்கு என்றால் அது மிகையில்லை. இதே இந்திய மண் தான், இன்று, மிக விலையுயர்ந்த ப்ராண்டட் Maybach போன்ற அணிகலன்களையும், பத்து லட்சத்திற்கு மேல் விலையுள்ள உடைகளை உடுத்தும் தலைவர்களையும் காண்கிறது. நம் நாட்டில் இவற்றை வரிசைப் படுத்தும் அருங்காட்சியகங்களும் இல்லை. மக்களின் மறதியும் தலைவர்களுக்கு உதவியாகவும் ஆகிவிடுகிறது. வரலாறு, ஆண்டுகளையும் சில எண்களையும் மனப்பாடம் படுத்துவதற்காக மட்டுமில்லை. அதையும் மீறி மனிதர்களுக்கு சில முன்னுரைகளை எடுத்துரைக்க வேண்டும்.
அமெரிக்காவின் சிறப்புகள் என்று நான் எந்தவித மாற்றுக் கருத்தில்லாமல் நினைப்பது மூன்று விஷயங்களை;- இவர்களின் நூலகக் கட்டமைப்பு, இவர்களின் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு, ஒப்பீட்டளவில் சிறிய வரலாறுதான் என்றாலும் அதைப் பறைசாற்ற இவர்கள் நிறுவியுள்ள அருங்காட்சியகங்கள்..! இவற்றில் முதல் இரண்டைப் பற்றி நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த வாரம் இவர்களின் அருங்காட்சியகங்களின் சிறப்பைப் பார்ப்போம்.
ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தின் அடையாளம், அறிவின் தேடலையும் மாறிக்கொண்டே இருக்கும் கலாச்சார பாரம்பரியத்தின் உட்கருத்தையும் எந்தவொரு தனி மனிதனுக்கும் பொதுவாக கைக்கு எட்டும் தூரத்தில் வைப்பதில் உள்ளது. பணம் படைத்தவனுக்கும் விளிம்பு நிலையில் வாழும் ஏழை எனப்படுபவனுக்கும் இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது. இதை நூலகங்கள் மூலமாகவும், அருங்காட்சியகங்கள் மூலமாகவும் அமெரிக்கா நாடெங்கிலும் நிலை நாட்டியுள்ளது.
உலகில் அதிக அருங்காட்சியகங்கள் இருக்கும் நாடு, அமெரிக்கா தான். இங்கு 35000ம் மேல் அருங்காட்சியகங்கள் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மட்டும் 681 அருங்காட்சியகங்கள். நியூயார்க் நகரத்தில் 414… வாஷிங்டன் டிசி, சிகாகோ, சான் டியாகோ போன்ற நகரங்களில் இரண்டு சுற்றி வந்தால் ஏதோ ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட முடியும். உலகின் தலைசிறந்த அருங்காட்சியகங்கள் பாரிஸில் தான் உள்ளது என்று பலரும் கூறுவார்கள். ஆனால் அமெரிக்காவிலோ ‘ரொம்ப பெரிசு’ வகை தனி, வித்தியாச வகைகள் தனி, நிறுவனங்கள் சார்ந்த அமைப்பு ரீதியான அருங்காட்சியகங்கள் தனி என்று வகை வகையாக வைத்துள்ளனர்.
அருங்காட்சியகம் என்றால் ஆள் அரவம் இல்லாத அமானுஷ்ய இடம் போல நம்மூரில் இருந்து வந்தவுடன் என் மனதில் தோன்றியது. அருங்காட்சியகத்திற்கு எல்லாம் போக வேண்டுமா என்றும், அது சோர்வான செயல் போலத்தான் முதலில் பலருக்கும் தோன்றும். இரண்டு மூன்று இடங்களுக்குப் போய் வந்தபிறகு தான் இந்த எண்ணம் முற்றிலும் மாறி விடும். லேசர் ஷோ, குழந்தைகளுக்குச் செயல் முறை விளக்கம், விளையாட்டுகளோடு விளக்கம் அளிக்கும் முறைகள், சிறப்பம்சங்கள் பற்றிய சிற்றேடுகள், துண்டுப் பிரசுரங்கள், அன்றும் இன்றும் என்பது போன்ற ஒப்பீடுகள், இது எல்லாம் போதாதென்று சில இடங்களில் சிறு சிறு இலவச பொதிகள் என்று ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இங்கு பெரும்பாலான அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. இவற்றையும் மீறி அமெரிக்காவில் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘விற்பனை மனநிலை’ இங்கும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் இருக்கும் அருங்காட்சியகங்களை சும்மா ஏறி இறங்கி, பார்ப்பதற்கே ஒரு வாரம் தேவை. வரலாறு மற்றும் கலைத்துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, நியூயார்க் நகரில் இருக்கும் ‘MET மியூசியம்’ கிட்டத்தட்ட ஒரு அற்புதம் போல் தான் தோன்றும். (பாரிஸின் லூவ்ர் இதனிலும் சிறப்பு). வரலாறு மற்றும் கலைத்துறையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஒருநாள் முழுவதும் இங்கு சுற்றினாலும் ஆர்வம் குறையாது. நடந்து, நடந்து சோர்ந்து போன என் மகனின் கால் வலியினால்தான் நான் வெளியே வந்தேன். தனியாக மீண்டும் ஒருமுறை, ஒரு வாரத்தில் தினம் தினமும், மீண்டும் மீண்டும் METற்கு செல்ல வேண்டும் என்று என் bucket list கணக்கில் வைத்துள்ளேன். அத்தனை விஷயங்களை, அத்தனை அழகியலோடு அங்கு வைத்துள்ளனர்.
தனித்துவத்தோடு சிறப்பு அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளது. உதாரணத்திற்கு, மனித உடலில் போர்க் காயங்கள் மற்றும் நோய்களின் விளைவுகளை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்த 1862 ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் மருத்துவ அருங்காட்சியகம் (National museum of Health and Medicine) நிறுவப்பட்டது. 5,000 க்கும் மேற்பட்ட வகை வகையான எலும்புக்கூடுகள், 10,000ம் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட உறுப்புகள், மேலும் 12,000ம் அதிகமான உடல்கூறு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. மருத்துவம் படிக்கும் அல்லது படிக்க நினைக்கும் மாணாக்கர்களுக்கு இங்கு இந்த இடம் வரம். புகைப்பிடிப்பவரின் நுரையீரலையும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் நுரையீரலையும் இங்கு ஒப்பிட்டு பார்வையாளர்கள் பார்க்க முடியும். இங்குள்ள மாதிரிகளில் வயிற்றின் உட்புறத்தைத் தொட்டுப் பார்க்கலாம், சிறுநீரக கற்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். முதுகெலும்பு வளையாமல் நேராக உட்கார்ந்தால் மூளை எவ்வாறு இயங்கும் என்பதையும் அறியலாம்.
உலகின் மிகப்பெரிய விஷயங்களின் உலகின் மிகச்சிறிய பதிப்புகளின் தொகுப்பை உள்ளடக்கிய அருங்காட்சியகம், சிறைச்சாலைகள் பற்றியவை, கொடுங் குற்றங்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்கள், சர்க்கஸ் பற்றி, கழிப்பறைகளைப் பற்றி என்று வகை வகையாக இங்கு ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இதை எல்லாம் விடுங்கள், மனிதனின் இறுதி ஈமச்சடங்கு முறைகளைப் பற்றிக் கூட ஆவணப்படுத்தி இங்குள்ள ‘ஈமச்சடங்கு சேவை தொழிலுக்கு’ இவர்கள் அருங்காட்சியகம் மூலம் ஊக்கம் கொடுக்கின்றனர்.
பழமைகளில் இருந்து பாடம் படிப்பதற்காக மட்டுமல்ல,
ஒத்த கருத்துடைய தனி மனிதர்களை ஒன்றிணைப்பதற்காக மட்டுமல்ல,
விரிவான தேடல்களுக்கு விடையளிப்பதற்காக மட்டுமல்ல,
புதிய வழிகளை எதிர்காலத்திற்கு வகுப்பதற்காகவும் இந்த அருங்காட்சியகங்கள் துணை புரிகின்றன. மக்களை உறுதியுடன் துரதிஷ்டங்களின் இடுக்கில் இருக்கும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்ந்து விட வழிகளையும் இந்த அருங்காட்சியகங்கள் கற்றுத்தருகின்றன. இங்குக் காணும் பழம்பொருள்கள் மக்களைக் கால பேதங்கள் கடந்து, நில, வளிமண்டல பேதங்களைக் கடந்து, மனதின் எண்ணவோட்டங்களையும் மீறி, நேருக்கு நேர் வேறு ஒரு உலகத்தில் தொடர்பு கொள்ளவைக்கக்கூடியவை. இவை தரும் படிப்பினைகள் நாளைய சமூகத்தைக் கட்டமைப்பதற்கு முக்கியமானவை என்பதை இங்கு ஆட்சியாளர்களும் நம்புகின்றனர்.
சரி, நம் நாட்டிற்கு வருவோம். நம் அருங்காட்சியகங்களின் ஒட்டுமொத்த நிலைமை பரிதாபகரமானவை என்பதுதான் பொதுக் கண்ணோட்டம். ஆனால், அவற்றையும் தனி மனித, தனி கோட்பாடுகளின் ஆதாயத்திற்காக அழித்துக் கொண்டிருப்பது அதனிலும் பெருங்கொடுமை. சில நூறு ஆண்டுகளின் வரலாற்றை வகைப்படுத்த அமெரிக்காவில் ஊருக்கு ஊர் அருங்காட்சியகங்கள் உள்ளன. நம் நாட்டிலோ பல நூறு, சில ஆயிரம் காலத்துக் கதைகள் கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் கீழடியின் செம்மையைப் பறைசாற்றவே பல போராட்டங்கள் தேவைப்படுகின்றது.
உடைகளில் கூட வெளிநாட்டுத் தலைவர்களின் ஆளுமை தாக்கத்தை எளிதில் நம் தலைவர்கள் பகட்டோடு உள்வாங்கி விடுகின்றனர். சமூகத்தின் ஆதி நாதமான இது போன்ற விஷயங்களுக்கும் அவர்கள் அதே அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் அருங்காட்சியகங்களைக் காணும் அனைத்து இந்திய உள்ளங்களின் ஆசை.
நாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டால் நம் வருங்கால பாதையும் வழி தவறி விடும் என்பதை நான் முழுவதும் நம்புகிறேன்.
தொடரும்…