வானத்திற்கு வெளியே ஒரு ஜன்னல்
மேலே போன பந்தை வெய்யிலில் கண்கள் கூச
தவறவிட்டு விட்டேன்.
சூரியனைக் கோபங்கொண்டு
முறைத்தேன்
ஒளியின் அடர்த்தியால்
விழிமூடி விலகியது
கூச்சம் பொறுத்துப் பார்த்துக்கொண்டே யிருந்ததில்
சூரியனின் ஒட்டுமொத்த
ஒளிக்கீற்றையும்
சிறைபிடித்து விட்டன கண்கள்
ஒளியற்ற சூரியன்
இப்போது ஒரு வட்ட வடிவ
ஜன்னலைப் போலத் தெரிகிறது.
அதன் கதவுகள் தன்னை
மூடிவிடுமாறு துடிக்கின்றன.
***
கடைசியில் முடிவது
பேச வேண்டிய விஷயங்கள்
பெருமலையென என்முன்
குவிந்திருக்கின்றன
உன்னிடம் பேசுகையில்
குளிர் நீருக்குள் கையைவிட்டு
ஒரு கூழாங்கல்லையே
உனதுள்ளங் கையில்
சேர்க்க முடிகிறது.
***
சொந்த வீடு
சரி உன் வீடு எங்கே இருக்கிறது
இதோ இந்த வான்வெளியின் கீழ்
நிலம் சூழ
சுற்றிலும் கடல் சூழ
மலைகளும்
காடுகளும்
கட்டிடங்கள் சூழந்த
வேப்ப மர வாசல் கொண்ட வீட்டில்,
எட்டாயிரம் வாடகை கொடுத்து தங்கியிக்கும் நான்
சொந்த வீட்டைத் தேடித்தான் அலைந்து திரிகிறேன்
சொந்த வீட்டைத் தேடித்தான்
தாத்தா உடலைக் கழற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறார்
அப்பாவுக்கு
மீசை நரைத்து விட்டது
எனக்கு முளைக்கத் தொடங்கியுள்ளது
சரி சரி வருகிறேன்.
*****