கடந்த ஓராண்டு காலமாகவே அச்சு ஊடகத்துறையின் போக்கு பற்றி துறை சார்ந்த சில நண்பர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். சமீபத்தில் பெங்களூரில் பத்திரிக்கையாளர் இரா.வினோத்தை சந்தித்த போது அச்சு ஊடகத்துறையின் சரிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஏன் இது பற்றி பொதுத்தளத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று அப்போது அவர் கேட்டார். விகடன் குழுமத்திலிருந்து சில இதழ்கள் நிறுத்தப்பட்டதும் அச்சு ஊடகத்தின் தொய்வு மற்றும் அதன் இன்றைய சவால்கள் பற்றி விவாதிக்கப்படும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் படித்த பெரும்பாலான பதிவுகள் ‘தடம்’ இதழ் நின்று போனதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அனுதாபப் பதிவுகளாகவே இருந்தன. அதற்கு எதிராக எழுதப்பட்ட பதிவுகளுமே கூட இலக்கியக் குறுங்குழு விவாத அளவிலேயே நின்று விட்டது.
ஊடகத்துறைக்கு வந்த நாளில் இருந்து இன்று வரையிலும் அச்சு ஊடக வடிவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்கிற முறையில் இப்பதிவினை எழுதுகிறேன். இதற்குள் நுழையும் முன் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வெகுஜன இதழ்கள் பற்றிப் பேசுகிறோம் என்பதால் நாம் பெரும்பான்மையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாசிப்பு என்பது இலக்கிய வாசிப்பு மட்டுமே அல்ல. வடை மடித்துக் கொடுக்கப்பட்ட துண்டுச் செய்தித்தாளில் உள்ள செய்தியைக் கூட எண்ணெய்ப் பிசுக்கோடு படிப்பதும் வாசிப்பே. இந்த நோக்கில்தான் நாம் வெகுஜன ஊடகங்களை அணுக வேண்டும்.
அச்சு ஊடகத்துறையின் இன்றைய சவால்களை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். அகம் என்பது அதன் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவுப்புலத்தில் இயங்குபவர்கள் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்தைப் பற்றியான காட்டமான விமர்சனத்தை முன் வைப்பது பல காலந்தொட்டுத் தொடர்வது. ஆகவே நாம் வெகுஜன இதழ்களின் வாசகர்களை மட்டும் கருத்தில் கொள்வோம். நீண்ட கால வாசகர்கள் பலர் கடந்த பத்து ஆண்டு கால வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்தைப் பற்றிக் குறைபட்டுக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், மதன் என அவர்கள் பெரும்பட்டியலையே நீட்டி முழக்கி, அன்றைய சூழலோடு சமீபத்தைய சூழலை ஒப்பிடுகையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுவதாகத் தெரிவித்தனர். சினிமா மற்றும் அரசியல் செய்திகளே பெருத்த இடத்தை நிரப்பிக் கொள்கிறது என்கிற குற்றச்சாட்டு இவர்களிடத்தில் முதன்மையானதாக இருக்கிறது. இந்த விமர்சனத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது அதே போல முழுமையாக நிராகரித்து விடவும் முடியாது. தலைமுறை இடைவெளியில் இயல்பாகவே எழுகிற வாதம்தான் இது. இன்றைக்கும் மத்திம வயதைக் கடந்தவர்கள்தான் பெரும்பான்மையான வாசகர்களாக இருக்கிறார்கள். இளம் தலைமுறையில் வெகுஜன இதழ்களுக்கான வாசகப்பரப்பே உருவாகவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே முந்தைய இரண்டு தலைமுறை வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் விரும்பும்படியான உள்ளடகத்துக்குள் இருந்துதான் புதுமைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் அச்சு ஊடகத்துக்கு ஏற்பட்டன. கிட்டத்தட்ட பழைய பிடியை விட முடியாமலும் புதிய அடியைத் தொட முடியாமலும் இரண்டுக்கும் நடுவே நிற்கிற நிலைதான். வாசகர்களின் பொது மனநிலைக்கு ஏற்ப இயங்க வேண்டிய கட்டாயம் வணிக இதழ்களுக்கு இருக்கிறது.
காட்சி ஊடகம், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகம் ஆகிய மூன்றும்தான் புற சூழலில் அச்சு ஊடகத்துக்கான சவால்களாக விளங்குகின்றன. பழைய வடிவம் தேய்ந்து புதிய வடிவம் எழுவதே பரிணாமம். அதை யாராலும் மறுக்கவே முடியாது. ஒரு செய்தி அச்சில் ஏறுவதற்குள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு ஓய்ந்து விடுகிறது. காட்சி ஊடகம் நேரலையில் ஒளிபரப்புவதோடு விவாத நிகழ்ச்சிகள் வாயிலாக அதன் பல கோணங்களையும் அலசி விடுகிறது. இதையெல்லாம் கடந்து ஒரு வார இதழ் அச்செய்தியை முற்றிலும் வேறொரு கோணத்தில் அணுக வேண்டிய தேவை உருவாகிறது. அத்தேவை எந்த அளவு பூர்த்தி செய்யப்படுகிறது என்பது முக்கியமான கேள்வி.
அச்சு ஊடகத்துறையின் சரிவுக்கு அதன் உள்ளடக்கத்தின் போதாமைகள் மட்டுமே காரணம் என்பதும் முழுமையான உண்மை இல்லை. தமிழில் செறிவான பல கட்டுரைகள் எழுதப்பட்டும், அது வெகுஜன இதழ்களில் வெளியாகியும் வருகின்றன. அப்படியிருக்கையில் இன்றைக்கு வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி விட்டதுதான் அச்சு ஊடகத்துறையின் சரிவுக்கான மிக முக்கியக் காரணம். டிஜிட்டல் ஊடகங்கள் எந்த ஒரு செய்தியையும் 250-300 வார்த்தைகளுக்குள்தான் தர வேண்டும் என்கிற தெளிவோடு இருக்கின்றன. ஏனென்றால் அதை விட பெரிய கட்டுரைகளை வாசிப்பதற்கான சூழல் இங்கில்லை. பெரும்பான்மைச் சமூகம் வாசிப்பதில் பொறுமையும், ஈடுபாடும் காட்டுவதில்லை. ஆகவேதான் டிக்டாக், யூ ட்யூப் போன்ற தளங்கள் அவர்களை பெரிதும் ஈர்க்கின்றன. அன்றே கண்டு பிடித்தவன் தமிழன் என்று தலைப்பிட்டு எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை வேண்டுமானாலும் நாம் எழுத முடியும். பெரும்பான்மைச் சமூகம் சமூக வலைத்தளங்களில் சிலிர்த்துப் போய் அதனை பகிரும். இன்றைக்கு இணையத்தில் நம் கேள்விகள் அத்தனைக்குமான பதிலும் கொட்டிக் கிடக்கின்றன. இப்படி பரப்பப்படும் கட்டுக்கதைகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியக் கூட யாரும் தயாரில்லை. எதையும் தேடி வாசிக்காத போது யார் என்ன சொன்னாலும் நம்பி விடுகிற மனநிலையில்தான் பலரும் இருக்கிறார்கள். ஆகவேதான் சீமான் போன்றோர் பேசும் அடிப்படையற்ற, வெற்றுப் பரபரப்பு விசயங்களைக் கூட உண்மையென நம்புகிறார்கள். ஹீலர் பாஸ்கர் போன்றோர் பரப்பும் இலுமினாட்டி கட்டுக்கதையை பதைபதைப்போடு பகிர்கிறார்கள். விக்கிபீடியாவில் மேய்ந்த தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்துப் பேசும் மதன் கெளரியின் வீடியோக்கள் மில்லியன் பார்வைகளை எட்டுகின்றன. ஹீலர் பாஸ்கர் தனது உரைகளின் காணொளிக் காட்சிகள் மூலம்தான் பரவலாகக் கவனிக்கப்பட்டார். அதையே அவர் புத்தகமாக எழுதியிருந்தார் என்றால் இந்த அளவுக்கான பரப்பை அவர் சென்று சேர்ந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. மிகவும் மேம்போக்கான சமூகம் வாசிக்கவே தயாரில்லை என்கிற போது உள்ளடக்கம் பற்றிய தெளிவு எங்கே இருக்கப் போகிறது.
வெகுஜன ரசனை என இங்கே வகுத்து வைக்கப்பட்டிருக்கும் விசயங்களுக்கே வருவோம். சினிமா பற்றிய செய்திகள், கிசுகிசுக்கள், நடிகர், நடிகையரது பேட்டிகள் என எல்லாமே யூ ட்யூபில் கொட்டிக் கிடக்கின்றன. எழுத்து வடிவில் ஒரு நடிகையின் பேட்டியைப் படிப்பதைக் காட்டிலும் காட்சி வழியாகவே காண முடியும் என்கிற நிலையில் இங்கு எதனைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது முக்கியமானது. சமையல் குறிப்புகளை எடுத்துக் கொள்வோம். இன்றைக்கு யூ ட்யூபில் கிராமத்து உணவுகள் தொடங்கி, சீன உணவுகள், மேற்கத்திய உணவுகள் என அனைத்துக்குமான செய்முறை விளக்கங்களையும் நேரடியாக செய்தே காண்பிக்கிற யூ ட்யூப் சேனல்கள் பெருகி விட்டன. வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்கிற யூ ட்யூப் சேனல் 32 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு வீடியோவும் சராசரியாக 10 லட்சம் பார்வைகளைத் தாண்டுகிறது. இது பற்றி யூட்யூப் சேனல் நடத்தி வரும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சமையல் பயிற்றுவிக்கும் யூ ட்யூப் சேனல்களின் வெற்றிக்கான காரணத்தைச் சொன்னார். செய்முறைகளைத் தெரிந்து கொண்டு சமைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மட்டும் அவை பார்க்கப்படுவதில்லை. பிடித்த உணவுகள் சமைக்கப்படுவதை பார்ப்பதில் மட்டுமே உண்டாகுகிற நிறைவுதான் இத்தனை லட்சம் பார்வைகளுக்குக் காரணம் என்றார். அதாவது இதுவும் போர்னோகிராஃபி போலதான். இப்படியாக வெகுஜன ஊடகங்கள் தங்களது நிரந்தர அம்சங்களாகக் கொண்டிருந்தவற்றை எல்லாம் மேற்சொன்ன ஊடகங்கள் பங்குபோட்டுக் கொண்டன. இவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டு அச்சு ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது இப்போதைய முக்கிய விவாதப் பொருளாகிறது.
வெகுஜன இதழ்களின் பிரதான நோக்கம் வணிகம்தான். லட்சியவாத நோக்கெல்லாம் இங்கே எடுபடாது. சிற்றிதழ் வேண்டுமானால் எந்த சமரசமுமின்றி குறிப்பிட்ட அளவு பிரதிகளை அச்சிட்டு நடத்திக் கொள்ளலாம். அதற்கான பொருட்தேவையை அது சார் ஈடுபாடுள்ள நண்பர்களிடமிருந்து பெற்று நடத்துவது என்பது வணிக இதழ்களுக்குப் பொருந்தாது. ஆகவே பெரும்பான்மைச் சமூகம் வாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகி நிற்கும் வரையிலும் இது போன்ற இதழ்கள் நிறுத்தப்படுவதில் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை.
வாழ்த்துகள்