பாடப்புத்தகங்களிலோ,வரலாற்றுக் குறிப்புகளிலோ நீங்கள் படித்த,கேள்விப்பட்ட மனிதர்களோடு இணைந்தது இவர் வாழ்வு !மகாத்மா காந்தி,வினோபா பாவே ,சௌந்தரம் அம்மாள்,ஜே.சி.குமரப்பா,அம்புஜம் அம்மாள் எனப் பலரின் பெயர்களோடுதான் இவர் வாழ்வைப் பேச முடியும்!
இந்த ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்தியத்தின் பழுத்த முகம்.! தன் பணி குறித்த பெருமையோ. விதந்தோதலோ இல்லாத சாந்தராணி !
சாதியத்தின் கொடிய சாயல் படர்ந்திருந்த தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் எளிய தலித் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணால் ஒரு சித்தாந்தத்தின் நெடிய அடையாளமாக மாற முடியுமா ?
முடிந்தது!அதன் பின்னால் ஒரு ஜீவனுள்ள சத்தியம் இருந்தது !
பெருந்துன்பங்களைத் தாண்டியது எவ்வாறு என்பதற்கு அவர் தரும் விளக்கம் “மனரீதியாக நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கவில்லை என்றால்,உங்கள் இலக்கு உங்கள் மனதில் தணல்போல் தகிக்கவில்லை என்றால் எளிதில் அணைத்துவிடுவார்கள் “என்பதே !
கிருஷ்ணம்மாள் பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டை ராமசாமி-நாகம்மாள் தம்பதியினரின் பன்னிரண்டாவது குழந்தை.”எங்க அண்ணன் ஒன்று செய்தால் நானும் திருப்பி செய்வேன்.ஏன் பொம்பளப்புள்ள செய்யக்கூடாதா எனக் கேட்பேன் “என்று சொல்லி சிரிக்கிறார்.இளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.ஊரில் ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லை.கூலி வேலையால் குழந்தைகளைக் காத்து வந்தாலும் மகளின் படிப்பு ஆசையைத் தடுக்கவில்லை தாய். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருந்த தட்டிப் பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டார்.
அதிகாலையில் சொல்லித்தரும் ஆங்கிலப்பாடத்தை அன்றே திருப்பிச் சொல்லும் துடியான இச்சிறுமிக்கு நல்லது செய்ய வேண்டும் என அன்பு மிகக் கொண்டார் தலைமை ஆசிரியை ஆலிஸ் .அங்கிருந்தபோது கேட்ட கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் கிருஷ்ணம்மாளை ஈர்த்தன.அவர் பாடும் பாடல்களைத் தொடர விருப்பம் கொண்டார்.புதுமண்டபத்தில் இருந்த ஒரு புத்தகக்கடையோரம் போய் நின்று கொள்வார்.காசில்லாவிட்டாலும் வாசிக்கும் ஏக்கம் கொண்டிருப்பதைக் கடைக்காரரிடம் சொல்ல,படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடு என திருவாசகம்,திருவருட்பா,தேவாரம் போன்ற கையடக்கப் புத்தகங்கள் இரவலாகக் கிடைத்தன.
அந்த சிறு பிரசுரங்கள் கிருஷ்ணம்மாளின் வாழ்வோடு இயைந்தன.இந்த தொண்ணூற்று நான்கு வயதிலும் “எல்லாம் செயல் கூடும் “என்ற வள்ளலாரின் தாரக மந்திரம்தான் அவரை நடத்துவதும்,அவர் தரும் நம்பிக்கையுமாக இருக்கிறது.
எட்டாம்வகுப்புவரை படிப்பில் வழிநடத்திய ஆசிரியர் ஆலிஸ் விடுமுறையில் வீடுதிரும்பி அம்மாவைப் பார்க்கப் போகிறேன் என்ற கிருஷ்ணம்மாளைப் புதிய வாழ்வு பெற வேண்டும் நீ எனச் சொல்லி சௌந்தரம் அம்மாளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.
இனி இவள் உங்கள் அடைக்கலம் என்று சொல்லி ஒப்படைத்த வேளை பொன்வேளைபோலும்.கிருஷ்ணம்மாளின் ஏதோவொரு பாங்கு டாக்டர் சௌந்தரத்தை ஈர்த்தது.இனி இவள் என் மகள் என்று அரவணைத்தார்.அங்கு அவர் பராமரிப்பில் ஏற்கனவே சில பெண்கள் இருந்தபோதும் கிருஷ்ணம்மாள் செல்லப்பெண் ஆனார் .
பகலில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் சௌந்தரம் இரவில் சமூக மருத்துவர் ஆகிவிடுவார்.காவலர் ஒருவர் உடன்வர தாமே காரோட்டிக்கொண்டு வெளியில் கிளம்பிவிடுவார். கிருஷ்ணம்மாளும் அம்மாவோடு.விதிவசத்தால் அபலைகளான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் அவர்களை அழைத்துவந்து அபயம் தருவதற்குத்தான் இந்த புறப்பாடு.இளம் விதவைகளுக்கும் அடைக்கலம்.
வந்துசேரும் பெண்களுக்குக் குறைந்தபட்ச எழுத்தறிவு தரும் பொறுப்பில் கிருஷ்ணம்மாள்.கூடவே கிருஷ்ணம்மாளின் கல்வியும் தொடர்ந்தது.நான்காம் வகுப்பு படித்திருந்தால் செவிலியர் ஆகலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி அபயம் வந்த பெண்களின் புனர்வாழ்விற்கு ஏற்பாடு செய்தார் சௌந்தரம்அம்மாள்.இளம் விதவைகள், அபலைப் பெண்கள் என ஐம்பத்திரண்டு பெண்களின் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு அந்த வயதிலேயே கிடைத்தது கிருஷ்ணம்மாளின் வாழ்க்கையை வடிமைப்பதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது .
அமெரிக்கன் கல்லூரி மாணவியாகி முதல் தலித் பெண் பட்டதாரியானார் கிருஷ்ணம்மாள்.கல்லூரியில் பயிலும் காலத்தில் மதுரைக்கு காந்தி வருகை தந்தார்.அண்ணலின் காரியதரிசியாக இருந்த சுசீலா நய்யாருக்கு மொழிபெயர்ப்பு போன்ற உதவிகளுக்காக சௌந்தரம் அம்மா இவரை நியமித்தார்.அண்ணலின் அருகே மூன்று நாட்கள்.பழனி திருக்கோயில் தரிசனத்தின்போது அண்ணலின் முன்னிலையில் திருப்புகழ் பாடிய அரிய வாய்ப்பும் அமைந்தது.காந்தியச் சிந்தனைகளைத் தேடிப் படிக்கலானார்.
டாக்டர் சௌந்தரம் அம்மாளின் கணவர் ராமச்சந்திரன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அறிமுகமானவர் ஜெகந்நாதன்.விடுதலைக்குப் பின்னரும் அரசியல்வழி செல்லாது காந்திய வழியில் ஆஸ்ரமம் அமைத்து சேவைகளைச் செய்து வந்தவர்.
கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் திருமணத்துக்கு உறுதுணை ராமச்சந்திரன்தான்.இளம் வயதிலேயே தன் தாய் உட்படப் பெண்களின் வாழ்வில் திருமணம் சிக்கல்களை ஏற்படுத்துவதைப் பார்த்திருந்த கிருஷ்ணம்மாளுக்கு திருமணத்தில் ஆர்வமில்லை.அத்தோடு,அவர்கள் குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்.பட்டதாரியான மகளுக்கு நாடிவரும் நல்ல வரன்களை விட்டு சாமியார் போலத் திரியும் ஒருவரைக் கட்டுவதா என அவர்களுக்குக் கோபம். தாழ்த்தப்பட்ட குலத்தில் பெண்ணெடுப்பதா என மாப்பிள்ளை வீட்டிலும் எதிர்ப்பு.
கிருஷ்ணம்மாளின் எளிமையும்,கொள்கை சார்ந்த செயல்பாடுகளும் கண்டதால் ஜெகந்நாதன் இவரே தமக்கேற்ற துணை எனத் தீர்மானித்தார்.அந்த முடிவு ஒரு மாபெரும் சரித்திரத்தின் தொடக்கம்.
எவ்வித ஆடம்பரங்களும் ,கூட்டமும் இல்லாது சௌந்தரம் அம்மாள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் முன்னிலையில் ஜெகந்நாதன் தாமே நூற்ற நூலை மனைவியின் கழுத்தில் அணிவித்தார்.அவ்வளவுதான் திருமணம்.
திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டு ஆளாக வந்திருந்த ஒரே ஆளான அவரது அண்ணன் இந்த மோதிரத்தையாவது அணிந்துகொள் என்று வலியுறுத்தியபோது மணப்பெண் அவளே ஒருபொட்டு நகையின்றி இருக்கும்போது எனக்கெதற்கு என்று மறுத்துவிட்டதாக அய்யா குறிப்பிட்டிருக்கிறார்.
திருமணம் ஆகி மாப்பிள்ளை வீடு சென்றபோது தொடக்கம் கடினம்போலத் தோன்றினாலும்,அவரது தாயின் அன்பு சூழலை மாற்றியது.அங்கு விருந்துண்டு கோவை சென்றனர் தம்பதியர்.அதன்பிறகு மாப்பிள்ளை வழக்கம்போல ஏதோ போராட்டத்துக்குப் போய் இரு மாதங்கழித்துத் திரும்பினார்.மனம் மாறி வாழ்த்த வந்த கிருஷ்ணம்மாளின் தாயோ வெம்பிப்போனார்.
குடித்தனம் தொடர்வதைவிடத் தன் வழிக்கு ஏற்றது கிருஷ்ணம்மாளை ஆசிரியப் பயிற்சியில் சேர்ப்பது என்று முடிவு செய்தார் ஜெகந்நாதன்.மனைவி சென்னையில் ஆசிரியப் பயிற்சி பெற அவரோ வினோபாவின் பூதான இயக்கத்தில் இணைந்து கொண்டார்.வட மாநிலங்களில் குறிப்பாகப் பீகாரில் பூதானப் பயணம் நடைபெற்ற காலத்தை சொல்லலாம் -ஜெகந்நாதன் பாவுக்கு செயலாளர். திருமணம் ஆகிவிட்டதால் விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கும் போக முடியாது.எல்லோரும் வீட்டுக்குப் போகும்போதும் சிறப்பு அனுமதி கேட்டு சமையலரோடு விடுதியில் இருந்த நாட்களைச் சொல்கிறார் அம்மா ஒரு புன்னகையோடு.
ஆனால் அய்யா செய்யும் காரியம் எப்போதும் சிரிக்கும்படி இருக்காது.
ஒரு கட்டத்தில் வினோபா, தமிழகத்துக்குப் பாதயாத்திரை வருமுன்பாக நீ போய் நிலங்களைத் தானமாகப் பெற ஏற்பாடு செய்.தமிழ்நாட்டின் பூதான் இயக்கத் தலைவன் நீதான் என்று கூறுகிறார்.வினோபாவுக்கு காரியதரிசியாக இருக்கும் தான் சென்றுவிட்டால் இங்கு யார் அவரைப் பார்த்துக்கொள்வார்கள் என்ற கவலைதான் ஜெகந்நாதனுக்கு.ஆசிரியப் பயிற்சியை முடிக்கும் மனைவி கிருஷ்ணம்மாள் பீகாரில் வந்து நடைப் பயணத்தில் உடன் வர வினோபா சம்மதித்தால் தான் தமிழகம் செல்வதாகக் கூறுகிறார்.பாவும் ஏற்கிறார்.
இதனிடையே ஆசிரியப் பயிற்சி தேறியவுடன் பள்ளிக்கல்வி ஆய்வாளர் பணிக்காக காமராஜர் அனுப்பிய உத்தரவு கிருஷ்ணம்மாளின் கைக்கு வந்துவிட்டது.மாபெரும் மனப்போராட்டம்.நிலையான வாழ்வுக்கு உதவும் நல்ல அரசுப்பணி.அடிமட்ட நிலையிலிருந்து, கடுமையான சூழல்களிலிருந்து,போராடிப்பெற்ற கல்வி ஒரு இருக்கை தந்து அழைக்கிறது.
இன்னொரு பக்கம் நிலமற்ற தலித்துகளின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால் ஒரு துண்டு நிலமாவது சொந்தமாக அவர்களிடம் இருக்க வேண்டும் என்ற மாபெரும் நோக்கை முன்வைத்து வினோபா நடத்தும் வேள்வி.
சங்கடமான நேரங்களிலெல்லாம் சரணடையும் ஒளிச் சுடரைச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அனிச்சையாகத் தன் கைகள் வேலைக்கான உத்தரவு தாளைக் கசக்கிக் கிழித்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். பிறகென்ன..புறப்பட்டாயிற்று பீகாருக்கு…
படிப்புக்காக இளம் மனைவியைப் பிரிந்த கணவர் இப்போது சமூகப் பொறுப்பை முன்னிட்டு இடம் மாற்றம் செய்யச் சொல்லிவிட்டு சலனமின்றி தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட்டார்.கணவர்மேல் சற்று கோபம்தான் .ஆனாலும் பாதயாத்திரைப் பணிகளில் தொய்வு கிடையாது. தயிரை மட்டும் ஆகாரமாகப் பருகிவிட்டு கீதையை,தேவாரம்,திருவாசகத்தை பாடிக்கொண்டு போகும் வினோபாவோடு நடை…
அச்சோப் பதிகத்தைப் பாடிக் காட்டுகிறார்…வினோபா பாடுவாராம் இவரிடம்.நான் ஒளிந்துகொள்வேன் அவர் கேள்வி கேட்பாரே என்று வெட்கமுடன் சிரிக்கிறார் .நூறு மில்லிக்கும் குறைவான தயிர் மட்டும் ஒரு நாளுக்குப் பதினெட்டு முறை ஒவ்வொரு கீதை அத்தியாயத்துக்கும் அருந்தி வாழ்ந்த மகான் .சாதாரண ஊழியராகவே வாழ்ந்த தலைவர் வினோபா .என்று நினைவில் நெகிழ்கிறார்….
தமிழகத்தில் பூதான முன்னெடுப்பில் நடந்த வரலாற்றை இந்தத் தம்பதியின்றி எழுத முடியாது.திருமணமாகி மூன்று வருடங்களுக்குப்பின் தம்பதியர் சேர்ந்து வாழ்ந்த நாட்கள் இந்த பாதயாத்திரை சந்தர்ப்பங்கள்தான்.
கிருஷ்ணம்மாள் கருவுற்று எட்டு மாதங்கள்வரை தொடர்ந்து கூட்டங்கள் பாதயாத்திரை எனச் சென்றுகொண்டிருந்தார்.முதல்வர் கண்டித்தபிறகு காந்திகிராமத்துக்கு சென்று சேர்ந்தார்.மகன் பிறந்த செய்தி வினோபாவுக்குச் செல்ல பூமிக்குமார் என அவர் பெயர் சூட்டினார்.
கைக்குழந்தையை மடியில் கிடத்தியபடியே கூட்டங்களில் பேசுவது வழக்கமாகிப்போனது.மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பெற்று அவ்வப்போது பிரித்தும் கொடுத்துவிட்டார்கள்.
பூமிதானத்தின் அடுத்த பகுதியாக கிராமதானம் பற்றித் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது கலியாம்பூண்டி என்ற கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது .
தனது நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாகத் தருவதாக ராமகிருஷ்ண ரெட்டியார் என்பவர் ஒப்புக்கொள்ள,அருகிலுள்ள மற்ற நிலக்காரர்களும் மெல்ல உடன்பட்டனர். ஆனால் சிறு அளவு நிலம் வைத்திருந்த தலித் ஒருவர் உடன்பட மறுத்துவிட்டார்.கிராமதானம் நடக்க வேண்டும் என்ற தமது வாக்குறுதியைக் காக்க விரும்பிய ராமகிருஷ்ண ரெட்டியார் ஊரில் நிலவிய சாதி ஏற்றத் தாழ்வுகளை மறந்து துண்டுநிலச் சொந்தக்காரரான அந்த தலித்தின் காலில் அனைவர் முன்னிலையிலும் விழுந்து வேண்ட உணர்ச்சிவயப்பட்டு அவர் ஒப்புக்கொண்டார்.கண்ணீர்மல்க ஒருவரையொருவர் கட்டித்தழுவ மற்றவர்களும் இதில் இணைய நோக்கம் நிறைவேறும் தருணத்தில் புதிய சிக்கல் வந்தது.ராமகிருஷ்ணன் தருவதாகச் சொன்ன நூறு ஏக்கர் அவர் மனைவி பெயரில் இருந்தது. அந்த அம்மா கையெழுத்திட மறுத்துவிட்டார்.
தன் வாக்கைக் காப்பாற்றியே தீரவேண்டுமென நினைத்த ராமகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.கலங்கிய அவர் மனைவி தானும் இந்நோக்கத்தை ஏற்பதாகக் கூற கிராமதானம் நிறைவேறியது.(தொண்ணூறு வயது தாண்டிய அந்த அம்மா சமீபத்தில் கிருஷ்ணம்மாளைச் சந்தித்த சம்பவத்தை தன்னறம் சிவராஜ் முகநூலில் நெகிழ்வுடன் பகிர்ந்திருந்தார்)
1956ல் வினோபா தமிழகம் வந்து கிட்டத்தட்ட ஒருவருடம் யாத்திரை மேற்கொண்டார்.கிட்டத்தட்ட ஐயாயிரம் கிராமங்கள் கிராமதானம் செய்திருந்தன. குழந்தையான மகன் பூமிக்குமாரோடு பயணம் தொடர்ந்த தம்பதியரின் தத்துவ தரிசன வாழ்வு அதில் இணைந்திருந்தது.குழந்தையும் வினோபாவின் கூட்டங்களில் பாடல்கள் பாடுவது வழக்கமாயிற்று.கணவனும் மனைவியும் வேறு வேறு கிராமங்களில் பணி புரிவார்கள்.பெண்கள் குழுக்களை அமைப்பது வழிநடத்திக் செல்வது,பூதான நிலம் கேட்பதற்கான கமிட்டிகளை அமைப்பது போன்றவை அம்மாவின் வேலை.பணம்,வாகனம் எதுவும் கிடையாது. காந்தியவாதிகள்,வினோபாவின் சீடர்கள் என்பதால் வரவேற்றுத் தங்க வைப்பார்கள்.
அதற்காக எந்த சமரசமும் கிடையாது.
ஒரு கிராமத்தில் வரவேற்றுத் தங்க வைத்தார் நிலக்கிழார் ஒருவர்.அன்று மாலை அவரது நிலத்தில் பணியாற்றிய தலித்துகள் கூலிக்காக வந்தபோது, இருட்டிவிட்டபிறகு பணம் தருவதில்லை.நாளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார். இதை அன்றிரவு நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டு அம்மா கண்டித்தார்.
“எங்கள் விருந்தாளியாக இருந்துகொண்டு எங்களையே கண்டிப்பதா…” என்ற ஆவேசத்துக்கு அம்மாவின் பதில் “கண் முன் நடக்கும் அநீதியை நான் ஏற்பது எப்படி…” விளைவு..பெட்டி படுக்கைகள் வீசி எறியப்பட்டன.அவரைப் பகைக்க மற்றவர்களும் விரும்பவில்லை.தண்ணீரைக் குடித்துவிட்டு குழந்தையோடு தெருவில் தூங்கினார்.
இத்தனை பாடுபட்டு நிலங்களைத் தானமாகப் பெற்றபிறகு உள்ள நடைமுறைகள் பற்றிய கருத்து வேறுபாடுகளால் குமரப்பா இதிலிருந்து விலகினார்.
தானம் பெற்ற நிலங்களைப் பிரித்து அளிப்பது,கூட்டு விவசாய முறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றில் சித்தாந்த ரீதியிலான புரிதலின்மை,கருத்து வேறுபாடுகள்,அரசு இயந்திரத்துக்கே உரிய நடைமுறைக் குழப்பங்கள் பின்தொடர்வதில் சிக்கல்களை உருவாக்கின.வினோபாவின் முறை மிகவும் மென்மையானது.தருகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு பிறகு மறுப்பவர்கள் ஏராளம்.அவர்களைவிட்டு விலகுவது பாவின் வழி.ஆனால் தமிழகத்தில் கிருஷ்ணம்மாள் -ஜெகந்நாதன் தம்பதியர் இதை மக்கள் போராட்ட இயக்கமாக மாற்றினர்.தானமாகப் பெறுவதைவிட பணம் கொடுத்து வாங்கி உதவலாம் என்ற சிந்தனை இவர்களிடம் வளர்ந்தது.
வத்தலகுண்டு போராட்டம்,வேலம்பட்டி சத்தியாக்கிரகம் என போராட்டம் சிறைவாசம் பிறகுஅரசாங்கப் பேச்சுவார்த்தை எனத் தீர்வுகளை நோக்கிய உறுதியான நடை தொடர்ந்தது.
முதல் சத்தியாக்கிரகம் கோனியப்பட்டி கிராமத்தில் சிறு நில விவசாயிகள் வாங்கும் விவசாயக்கடனுக்காக பன்மடங்கு மதிப்புள்ள அவர்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. 4000 ரூபாய்க் கடனை அடைத்துவிட்டால் நாற்பதாயிரம் ரூபாய் நிலம் கிடைக்குமே என்ற யோசனையில் மதுரை சென்று சுப்பராமனைச் சந்தித்து கடன் கேட்டார். வத்தலகுண்டில் அரிஜன நிதிக்காக நான்காயிரம் இருக்கிறது போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லிவிட்டார்.
மதுரையிலிருந்து வத்தலகுண்டு செல்ல பேருந்துக்கு காசில்லை.நடந்து நடந்து பேருந்து நிலையம் சென்றபின் செய்வதறியாது காத்திருக்கிறார் (பணம் கையில் வைத்துக் கொள்வதில்லை என்பது கொள்கை.வருத்தமில்லை இதற்காக).”என்னம்மா இங்கே…” என்று அடையாளம் கண்டு கேட்ட கல்லூரி நண்பரை ஒரு டிக்கெட் எடுத்துத் தாங்க என்று கேட்டு வத்தலகுண்டு சென்று பணம் பெற்றுப் போனால் “நீ யார் பணம் தர “என்று துரத்துகிறார்கள்.உடன் வந்த சுப்பன் என்ற இளைஞரைத் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் இறந்தே போனார்.அவர் மகளை சேவாஸ்ரமத்தில் சேர்த்துப் படிக்க வைத்து அவர் குடும்பத்தைக் காக்கும் நிகழ்வுகளையும் சேர்த்தே சொல்கிறார் அம்மா.
இந்த சம்பவத்தின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் இவர் பின் சேர வழி பிறந்தது.ராமநாதபுரம் கலவரத்துக்குப்பின் அமைதி முயற்சியில் ஈடுபட்ட மூன்று மாதகாலம் தங்கள் செயல்பாடுகள் பற்றிய பரிசீலனையையும் இவர்கள் மேற்கொண்டனர்.தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் மட்டும் பணியாற்றுவது என்ற நிலையை மாற்றி மேல்சாதியினர் மத்தியில் மாற்றம் ஏற்படவும் செயல்படவேண்டும் என்பது புலனாயிற்று.:கிராம சுயராஜ்யம் என்ற இலக்கு நோக்கி செயல்பட கிராமசபா உருவாக்கினர்.
அம்புஜம் அம்மாள் தூண்டுதலில் சௌந்தரம் அம்மாளின் கட்டாயத்தில், 1958 – 1962 காலகட்டத்தில் கிராம சேவை மையங்களின் பொறுப்பை ஏற்றிருந்தார். எட்டுவயதுவரை மகனுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆசிரியர் இவர்தான்.1962ல் மகள் சத்யா பிறந்தார்.எட்டு மாதங்களுக்குப்பின் மகளை அம்மாவிடம் விட்டாயிற்று.
இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமாக உருவான association of Sarvodaya farms ASSEFA நிலச் சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது.1993 வரை ஜெகந்நாதன் இதன் தலைவராக இருந்தார். ஆனால் அரசின் குறைகளை விமர்சிப்பது என்பது நிறுவனத்தில் சாத்தியமில்லை என்பதால் பின்னாளில் இருவரும் விலகினர்.அரசின் மலிவு விலை மதுவை எதிர்த்துப் போராட்டம் இறால் பண்ணைகளை அகற்றும் போராட்டம் என்று எங்கு மக்களுக்குக் கேடு நடந்தாலும் அயராது எதிர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது பழக்கமாகிவிட்டது.
அப்படித்தான் கீழவெண்மணிக்குப் போய்ச் சேர்ந்தார் கிருஷ்ணம்மாள். 1968 கிறிஸ்துமஸ் இரவில் இனமறியாத உணர்வுகள் கொந்தளிக்க காந்தி கிராமத்தில் இருக்கிறார்.காலை செய்தித்தாள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக நாற்பத்து நான்கு பெண்களும் சிறுவர்களும் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடும் செய்தியைச் சுமந்து வந்தது.
உடனே குன்றக்குடி அடிகளாரோடு தொடர்பு கொண்டு கீழவெண்மணிக்குச் சென்றார்கள்.சுமுக சூழலைக் கொண்டுவர கிருஷ்ணம்மாள் அங்கேயே தங்கிச் செயல்படுவது என முடிவாயிற்று. கம்யூனிஸ்ட்டுகள்,தலித் மக்கள், நிலவுடைமையாளர்கள் என ஒவ்வொரு தரப்போடும் இணக்கம் ஏற்படுத்த கடும் முயற்சிகள் தேவைப்பட்டன.ஒரு வருட காலம் பாதயாத்திரைகள், அமைதிக்கூட்டங்கள் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
ஒரு பாட்டில் நீராகாரம்,நாலு வாழைப்பழம் கட்டிய சேலையோடு ஊர் ஊராகப் போவதுதான் வேலை.என்கிறார் அம்மா.கையில் பை வைத்திருந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் எனவே கட்டிய சேலையோடுதான் நடை.
பூதான இயக்கத்தின் அனுபவத்தில் அவர்கள் கொண்டிருந்த எண்ணம் உறுதிப்பட்டது.ஒரு துண்டு நிலமாவது சொந்தமாக இருந்தால் உழைப்பவர் சுயமரியாதையோடு வாழ முடியும் என்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்தினர்.
கீழவெண்மணியில் எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் ஜெர்மானியத் தொழில் அதிபர் ஒருவரின் உதவியோடு மூன்று ஆண்டுகளில் வாங்கித் தரப்பட்டது.
வலிவலம் சத்தியாக்ரகம் சாதிக்கொடுமையை,கூலி ஏய்ப்பை,நில உரிமையை முன் வைத்து நடந்த போராட்டம்.இத்தகைய போராட்டங்களில்,அடி உதையும் ,சிறைவாசமும் கிருஷ்ணம்மாளை அச்சப்படுத்தவில்லை.ஒடுக்குமுறைகளை ஒடுக்கத் துணிந்து நின்றார்.இவர்களது பணியைக் கேள்விப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயணன் பீகாரில் உள்ள நிலப்பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என அழைத்தார்.மூன்று மாதம் சுற்றிப்பார்த்து அறிக்கை தர நினைத்துப் போனவர்கள் மூன்று வருடம் பாடுபட்டனர்.இடையில் நெருக்கடிநிலை வேறு அறிவிக்கப்பட கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.போலீசார் அழைத்துச் செல்கையில் வழியில் தப்பித்து வந்த கிருஷ்ணம்மாள் வெளியில் இருந்து அனைவரையும் கவனித்துக் கொண்டார்.வேற்று மாநிலக் கைதிகளை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பியபோது தமிழகம் திரும்பினர்.
குலமாணிக்கம் அம்மாவின் நிலப்போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஊர்.அங்கு சென்றபோது பெண்களையே காணோமே என்று பார்த்திருக்கிறார். பொழுது விடிந்த போது வந்த பெண்கள் தங்கள் வீட்டுக் கோழி நிலக்கிழார் ஒருவர் வீட்டு நிலத்தில் மேய்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாகச் சொன்னார்கள்.வேதனையில் துடித்த அம்மா அவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்க முனைந்தார். குத்தகைதாரர் மூலம் தனக்குப் பயனில்லை என்று சொன்ன கூத்தாநல்லூர் இஸ்லாமிய முதியவர் நியாயமான விலை தந்தால்கொடுக்க முன்வந்தார்.
ஜெகந்நாதன் இத்தாலியைச் சேர்ந்த தொண்டுள்ளம் கொண்ட ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்க உடனே ஒரு லட்ச ரூபாய் மதுரைக்கு வந்துவிட்டது.ஆனால் இருக்கும் பணம் பற்றி அறியாது இன்னும் வரவில்லை என்று அந்த அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள்.காந்திகிராமம் திரும்பி வள்ளலார் படத்தின் முன் மூன்று நாட்கள் நீர்கூடப் பருகாது யார் முகமும் பாராது தனிமை வேண்டல்(பிரச்னை தீவிரமானால் இப்படிச் செய்வேன் எனக்கென்று ஒரு தெளிவு வரும் என்கிறார்)
பிறகுபோய் ஒருவழியாக வாங்கிக்கொண்டு மன்னார்குடி திரும்புமுன் அந்த குத்தகைதாரர் தன் உறவினர் மூலம் தானே வாங்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.”என்னிடம் கொடுத்த உறுதிமொழிப்படி நடந்துகொள்ளுங்கள்…” என்ற வேண்டுகோளோடு ஒரு லட்ச ரூபாயை வைத்த கணம் நினைவிழந்து வீழ்ந்துவிட்டார் அம்மா..எண்பத்துமூன்று ஏக்கருக்கு அந்தத் தொகை போதாது.அப்போது அம்மாவுக்குத் தோன்றிய யோசனைதான் வங்கிக்கடன் பெறுதல். அதற்கு சென்னை தலைமையகம் செல்ல சரியாகப் பத்தொன்பது ரூபாய் ஒருவர் கொடுத்து உதவ ,யாரிடம் கடன் கேட்கப் போனாரோ அவர்கள் வீட்டிலேயே ஒருவாய் காபி கொடுங்கள் என்று கேட்டு குடித்துவிட்டு ஆலோசனை கேட்டிருக்கிறார்.
நிலத்தை அடமானமாக வைத்துக் கடன் பெறலாம் என்ற தேர்வு கிடைத்தது.ஒரு அமைப்பின் பெயரால்தான் கடன் பெற முடியும் என்ற நிபந்தனையில் ‘லாப்டி’ (LAND FOR TILLERS FREEDOM) பிறந்தது.
இதன் மூலம் நிலம் உள்ளவர்களிடம் வேண்டி,நிதி உள்ளவர்களிடம் ஓரளவு பணம் பெற்று ,முன்பணம் தந்து ,அந்த நிலத்தையே அடமானம் வைத்து ,நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை உடைமையாக்கித் தருவது. சாத்தியமானது.பூதானம்,கிராமதானத்தில் இருந்த குறைகள் களையப்பட்டு லாப்டி உருவானது.
கிருஷ்ணம்மாளின் தலித் மக்கள் நிலம் வாங்க உதவி செய்யும் திட்டம் அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.சர்வோதய அமைப்பு இந்த செயல்பாடுகள் முரணானவை என்றபோது “மக்களுக்கு சேவை செய்ய எனக்கு சர்வோதயம் ஒரு கருவி முரண்பட்டால் அதுவும் வேண்டாம் என விலகினார்.
பல்லாயிரக்கணக்கானவர்கள் தலா ஒரு ஏக்கர் நிலம் பெற வழி செய்ததோடு,கைவினைத் தொழில் பயிற்சி,தலித் மாணவிகளுக்கு கணினி பயிற்சி,ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் என கீழத் தஞ்சைப் பகுதியில் விரிவான சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புப் பணிகளை இவர் உருவாக்கிய லாப்டி செய்து வருகிறது.
தன் நூறாவது வயதில் ஜெகந்நாதன் காலமானார்.மகன் பூமிக்குமார் கம்போடியாவிலும்,மகள் சத்யா செங்கல்பட்டிலும் மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.கிருஷ்ணம்மாள் இப்போதும் காந்திகிராம சேவா மையம்,கூத்தாநல்லூர்,கீழ்வேளூர்,செங்கல்பட்டு என்று தனது சேவைப் பயணங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
“சத்தியம் தோற்பதில்லை எல்லாம் செயல் கூடும்” என்று நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.
- பெற்ற விருதுகள்
- சுவாமி பிரணவானந்தா அமைதி விருது(1987)
- ஜம்னலால் பஜாஜ் விருது (1988
- பத்மஸ்ரீ விருது (1989)
- பகவான் மகாவீர் விருது (1996)
- சம்மிட் பௌன்டேசன் விருது –சுவிட்சர்லாந்து (1999)
- ஓப்ஸ் பரிசு –சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
- மாற்று நோபல் பரிசு என்ற right livelihood award
- பத்ம பூஷன் (2020)
நன்றி
திரு .சிவராஜ் ,குக்கூ காட்டுப்பள்ளி
புகைப்படங்கள்: ராஜி சுவாமிநாதன்
தொடரும்….