தொடர்கள்
Trending

அடையாளம்: 7- பேராசிரியர் சோ. மோகனா- உமா மோகன்

 இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தின் சோழம்பேட்டை என்ற காவிரிக்கரையின் செழிப்பான சிறு கிராமம், சோமசுந்தரம் என்ற தன் தந்தை பெயரோடு ஊர்ப்பெயரின் பெருமையையும் நினைவூட்டும் சோ.மோகனா என்ற பெண்ணைப் பெற்றது 1949 ஆம் ஆண்டு மே  11ஆம் நாள். பெரியசாமி -லட்சுமி தம்பதியரின் மருமகள் அலமேலு கடுமையான உழைப்பாளி. கணவர் சோமசுந்தரம் தபால்காரராக அரசுப்பணியில் இருந்தபோதும், இருந்த சொற்ப வசதிகள் நண்பர்களோடு சேர்ந்து தொழிலும் செய்ய முனைந்து, ஏமாந்து போனதில் குடும்பம் எப்போதும் சிரமதசையில்தான் இருந்தது.

லோகநாதன், பிரேமா, ரவீந்திரன் என்று மேலும் மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். மோகனாவின் நினைவுகளில் இப்போதும் சோழம்பேட்டையின் பெரிய சுத்துக்கட்டு கூரைவீட்டின் பின்பக்கமிருந்த பெரிய குளத்தின் அலைகள் மோதுகின்றன. பின்னிருந்த மூங்கில்குத்து வழியே பார்த்த சூரிய வெளிச்சம் கல்வியின் வெளிச்சமாகத் தெரிந்து தன்னை வழிநடத்திய நாட்களை மறப்பதில்லை. 

மோகனாவை நான்கு வயதில் தாத்தா, கிராமத்தில் இருந்த ராமாபுரம் ஆரம்பப்பள்ளி என்ற தனியார் (இப்போது அரசுப்பள்ளி) பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தார். நெல்பரப்பி “அ” எழுதச் சொல்லி மிட்டாய் கொடுத்த அந்த ஆசிரியர் அறிந்திருக்க மாட்டார் இந்தப் பெண் பின்னாளில் எப்போதும் “அ- அறிவியல்” என்றே எழுதப் போவதை.

கழுதையும் நாயும், குரங்கும் முதலையும் போன்ற படக்கதை சார்ட்டுகள் தொங்கும் அந்தப் பள்ளி ஒரு வீடுதான். பதினைந்து இருபது பிள்ளைகள் இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்தனியாக இருப்பதே வழக்கம். தோழி அறிவுக்கொடியின் வீட்டுக்குப் பக்கத்தில் பள்ளி இருந்தது. மூன்றாம் வகுப்பில் பள்ளி வேறு தெருவுக்கு மாறியது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே மணி பார்க்க,செய்தித்தாள் வாசிக்கக் கற்றது, அறிவுக்கொடியின் வீட்டுக்கு பெரியார் வந்தபோது பள்ளியில் கொடியேற்றியது, அறிவுக்கொடியும் மோகனாவும் தாயின் மணிக்கொடி  பாடியது, மூவலூர் நெட்டை வாத்தியார், Merchant of venice கதை கேட்டு வெனிஸ் பார்க்க ஆசைப்பட்டது (இன்னும் அந்த ஆசை பாக்கி இருக்கிறதாம்) நயாபைசா அறிமுகம் ஆன நாட்கள், பள்ளி அக்கிரகாரத்துக்கு வந்தது  எனத் தொடக்கப்பள்ளி அனுபவங்கள்…

ஆறாம் வகுப்புக்கு கூறைநாடு முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்ந்தார். இது ஒற்றை வரியில் கடக்கும் விஷயமாக இருக்கவில்லை.வீட்டின் வறுமை நிலை சிறுமி மோகனாவின் கால்பவுன் காது தோட்டைக் கூட அடகு வைக்கும் கதியில் இருந்தது. வீட்டின் எதிர்ப்புறம் பங்காளிகள் வகையறா இருந்தார்கள். மாலை நேரமானால் அவர்கள் வீட்டில் இருந்த படங்கள் நிறைந்த ராமாயணப் புத்தகத்தை, அந்த வீட்டு தாத்தா பாட்டி, மோகனாவை வாசித்துக்காட்டச் சொல்வார்கள். வீட்டுக்குக் கொண்டுவந்தும் படிக்கலாம். ஆனால் இரவே திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவர்கள் மகன்தான் கரும்பாயிரம் சித்தப்பா. நன்றாகப் படிக்கும் மோகனாவை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் என்று படிக்காத கூலித் தொழிலாளியான கரும்பாயிரம் விரும்பினார். கூறைநாடு முதலாளி வீட்டுக்குத் தன் தவிட்டு மூட்டைகளோடு மோகனாவையும் ஏற்றிப் போனார். “நல்லாப் படிக்கிற பொண்ணு…நோட்டு புத்தகம் வாங்க உதவுங்க“ என்று வேண்டினார். ஒரு பத்து ரூபாய் நோட்டையும் காப்பியையும் அந்தச் சிறுமிக்குக் கொடுத்தார்கள்.

 ஆறு தாண்டி படிக்கப்போன ஊரின் முதல் பெண் ஆனார் மோகனா. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே ஆறுமரக்கா நெல்லைத் தலையில் சுமந்து வருவது, தினமும் மோர் வாங்கி வருவது என்று துடிப்பான குழந்தை. அரிசி தின்றுகொண்டே இருக்கும் மோகனாவை “கல்யாணத்துல மழை வரப் போகுதுடி “ என்று எச்சரிப்பார் பாட்டி லட்சுமி. ஒரு குழந்தை பிறந்தவுடன் ரவிக்கை அணிவதை விட்டு விட வேண்டும் என்ற வழக்கப்படி ஜாக்கெட் போடாத, சிவப்புக்கல் அட்டிகை அணிந்த லட்சுமி ஆத்தா சிறு மளிகைக்கடை வைத்திருந்தார். கைச் செலவுக்கென்று பிடிவாதம் செய்து  இரண்டணா வாங்கிக்கொள்ளும் மோகனா பெரும்பாலும் அதைச் சேர்த்து வைத்து அத்தை பிள்ளைகளுக்கு உடைகூட வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஒன்பதரைக்கு வீட்டில் கிளம்பி ஆறு கிலோ மீட்டார் தூரம் இரண்டு மின்கம்பங்களை ஓடிக் கடப்பது, பின் ஒரு கம்ப தூரம் நடப்பது – இடையில் நாவற்பழங்களைப் பொறுக்கும் வேலை வேறு – குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருந்தார்.! பள்ளி பத்து இருபதுக்குத் தொடங்கும்.

மதிய உணவு வேளையில் மற்ற மாணவர்கள் மெதுவாக சாப்பிட்டுவிட்டு படித்துக்கொண்டிருக்க மோகனாவின் கால்கள் ஓரிடத்தில் இருக்க விடாது. சில சமயம் இலந்தைவடை வாங்கித் தின்றுவிட்டு, சற்று தாமதமாகி, வகுப்பு தொடங்கிவிட்டால் “மாடு மேய்க்கப் போடீ…“ என்றெல்லாம் திட்டு வாங்கினாலும் அலட்டிக் கொள்வதில்லை. மாலையும் ஏதாவதொரு சாக்கு சொல்லி சற்று முன்பே கிளம்பி சில நாட்கள் மயூரா ஹோட்டலில் ரவா தோசையோ, உப்புமாவோ வாங்கித் தின்றுவிட்டு, விளையாடி, ஒருவழியாக ஆறுமணிக்கு வீடு சேர்வார். 

ஆனால் படிப்பில் சுட்டி என்பதால் தலைமை ஆசிரியர் தேவசகாயம் அதிகபட்சமாக “டெவில் குட்டி” எனத் திட்டுவார். அடிப்பதில்லை.

ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வரை ஹிந்தி படித்தார்.

ஏழாம் வகுப்பில் குஞ்சிதபாதம் சார், ஒன்பதாம் வகுப்பில் போட்மெயில் சார்  எடுத்த ஆங்கிலக் கவிதைப் பாடங்களைக் குறிப்பு எடுப்பதும், அவற்றை உடனே ஆசிரியர்களிடம் காட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு தேர்வு எழுதுவதும் வழக்கம்.

அம்புரோஸ் டீச்சருக்கு குழந்தை பிறந்தபோது பார்க்கப்போன ஒரே மாணவி.

ஆறாம் வகுப்பில் படித்த தோழி ஜெகதம்பாவுக்கு அறுபது வயது மாப்பிள்ளையை சொத்துக்காக மணமுடித்து வாழ்வை அழித்த கதையையும் பார்த்ததுண்டு. 

மோகனாவுக்கும் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்திவிட வேண்டியதுதான் என்ற மிரட்டல் வீட்டில் இருந்தது. அத்தை மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவும் பேச்சு இருந்தது.

மதிப்பெண்கள்தான் மோகனாவின் பிடிவாதத்துக்குத் துணை நின்றன.

பத்தாம் வகுப்பில், ஏழு வகுப்புகள் General maths  எடுத்த மாணவர்களைக் கொண்டிருக்க, Composite maths எடுத்த குறைவான மாணவர்களின் வகுப்பில் மோகனா இருந்தார். பொதுத் தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் பள்ளியின் நுழைவுத் தேர்வுகளை எழுத முடியாமல் கடுமையான அம்மை நோய் தாக்கியது. இருந்தபோதும் முந்தைய தேர்வுகளின் நல்ல மதிப்பெண்களால் மோகனாவுக்கு சிறப்பு அனுமதி தந்தது பள்ளி நிர்வாகம். 

எஸ்.எஸ்.எல்.சி முடித்தபிறகு தோழிகளிடம் பேசியபோது எப்படியும் ஒரு டைப்பிஸ்ட் வேலைக்காவது போய்விடுவேன் என்று குறிப்பிட்டார்.

மிக நல்ல மதிப்பெண்கள் கிட்டின. வீடோ படிப்பை நிறுத்தத் துடித்தது.

அழுது, ரகளை செய்து, பட்டினி கிடந்து லட்சுமி ஆத்தாவின் ஆதரவைப் பெற்று கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். கணிதப் பிரிவில் சேர்த்துக் கொண்டனர். உயிரியல் படித்தால் மருத்துவம் படிக்கலாம் என அதன் பிறகு அறிந்துகொண்டு கல்லூரியில் தீவிர முயற்சி செய்து பிரிவு மாறினார். மகளிர் கல்லூரியில் செய்முறை வகுப்புகளுக்கு வசதியில்லை. தொடக்க காலம். ஆடவர் கல்லூரிக்குத்தான் செல்ல வேண்டும். மோகனாவின் DISSECTION சோதனைகள் எல்லோரையும்விடச் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டு கிடைத்தது. 

பள்ளியில் படிக்கும்போதே ஆங்கிலவழிக் கல்விக்கு மாறியது சற்று கடினமாக இருந்தது.கல்லூரி காலத்தில் ஒரே அறைத் தோழிகளான அறிவுக்கொடி, சாவித்திரி, மோகனா எல்லோருக்குமே ஆங்கிலம் பிரச்னையாகத்தான் இருந்தது.எனவே தோழியர் எடுத்த தீர்மானம் – அறைக்குள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ஒரு தப்புக்கு பத்து பைசா தண்டம் கட்ட வேண்டும்.

M B B S கிடைத்தும் போக முடியாத வீட்டுச் சூழல்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை அறிவியல் சேர்ந்தார். அப்பாவின் தங்கை கணவர்தான் படிக்க வைத்தார். கல்லூரி விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது வயலில் இறங்கி வேலை செய்வதும் உண்டு.

படிப்பு மட்டும்தான். கல்லூரியில் மொபைல் லைப்ரரி என்றே மோகனாவுக்குப் பெயர். நூலகத்திலேயே பழியாகக் கிடப்பார். ஆறாம் வகுப்பில் கள்ளோ காவியமோ வாசிக்கத் தொடங்கிய பழக்கம். அறிவியல்  மாணவி என்றாலும் சிலப்பதிகாரம், ராமாயணம் எனப் படிப்பதும் தோழி சாவித்திரியோடு, உரையாடல், விவாதம் எனத் தொடர்வதும் உண்டு. ஐந்து மதிப்பெண் கேள்விக்கு பத்து பக்கம் எழுதும் ஆள் என்று பேராசிரியர் எஸ்.எம்.கந்தசாமி கிண்டலாகப் பாராட்டுவார்.

ஆங்கிலமும் அப்படியே. நடித்துக் காட்டிப் பதிய வைத்த பேராசியர்களை நன்றியோடு நினைவு கூர்கிறார் மோகனா.

வேறு எந்த சிறப்பு பங்கேற்புகளுக்கும் வாய்ப்பில்லை. கிண்டல் செய்தால் சண்டைபோடத் தயங்காத துணிச்சலான பெண்.

பின்னாளில் கல்வி அமைச்சரான பொன்னுசாமி அப்போது மோகனாவுக்குப் பேராசிரியர். இவருடைய செய்முறைத்தேர்வு ரெகார்ட் நோட்டுகளை முன்மாதிரியாக பொன்னுசாமி எடுத்து வைத்திருந்தார். 

பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட சீனியர் ஒருவர், இளங்கலை முடித்து வீடு சென்றிருந்தபோது மோகனாவுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அனுப்பினார். வெளியில் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்டு வீட்டில் முடங்க வேண்டாம் என்பதுபோல் எழுதியிருந்தார். 

அவர் ஒரு ஆண் – மோகனா ஒரு பெண் – எனவே எழுதப்பட்டது காதல் கடிதம் என்ற முடிவுக்கு வந்தனர் வீட்டார். அத்தை வீட்டுக்குப் போயிருந்த மோகனாவை அழைத்து வந்து கடுமையாக நடத்தினர். மோசமான நடத்தை கொண்ட பெண் என்ற அனுமானத்தால், அவருக்குப் பிடித்த அல்வாவை வாங்கிவந்து, விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்று, கொள்ளிடக் கரையில் தூக்கிப் போடுவது என்பதுவரை திட்டம் நீண்டது. மோகனாவின் விளக்கத்தைக் கேட்க யாரும் தயாராக இல்லை. ஆதரவாக நிற்கும் லட்சுமிப் பாட்டி இறந்துவிட்டதால் நிராதரவான சூழல்.

தன்னை நம்பாவிட்டாலும், எதிர்வீட்டில் இருந்த படித்தவர் ஒருவரிடம் கடிதத்தை எடுத்துச் சென்று விளக்கம் கேட்குமாறு போராடினார் மோகனா.

முதலில் அவமானம் என மறுத்தாலும் ஒருவழியாக அவரிடம் கேட்டு உண்மையைப் புரிந்து கொண்டனர் குடும்பத்தார். 

B SC யில் மூன்றாவது இடம், தமிழில் முதல் வகுப்பு என்றெல்லாம் தேர்ச்சி பெற்றாலும் ஒருவரிடமும் பகிர்ந்து மகிழும் சூழல் கூட இல்லை வீட்டில். தோழி சாவித்திரிக்கு மட்டும் கடிதம் எழுதினார். மேற்படிப்புக்கு அனுமதிக்கவில்லை. வீட்டிலும் பல பிரச்னைகள். கீற்று முடைந்து சம்பாதித்து முக்கால் ரூபாய் வாங்கி அதைக்கொண்டு சமைத்துப்போடும் அளவு நெருக்கடி. உறவினரின் சீண்டல் தொல்லை ஒருபுறம். 

கொஞ்சம் சமாளித்து ஓராண்டு இடைவெளி ஆனாலும் பரவாயில்லை என்று முதுகலை பயில அண்ணாமலைப் பல்கலைக்கே விண்ணப்பித்து  இடமும் கிடைத்துவிட்டது. தந்தை இப்போதும் மறுக்கிறார். சீண்டும் உறவினரின் உதவியை ஏற்க மோகனா விரும்பவில்லை.

தந்தையிடம் ”வீடு, கொல்லை எல்லாம் தாத்தா சம்பாத்தியம். எனக்கு அதில் உரிமை உண்டு. அடகு வைத்தாவது என்னைப் படிக்க வை.“ என்று போராடினார் மோகனா. அறுபதுகளில் குக்கிராமமான  சோழம்பேட்டையின் பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இப்படி ஒரு அதிரடிப் பெண்ணைத் தாங்காதுதானே! 

இவர்களையே நம்பியிருக்க முடியாது என்று தோழி சாவித்திரிக்கு தன் கல்விக்குப் பொருளுதவி செய்யும்படியும், வேலைக்குச் சென்று திருப்பித் தந்துவிடுவதாகவும் கடிதம் எழுதினார். அவர் ஒப்புக்கொள்ளவே கல்லூரிக்குக் கிளம்பினார். இவரோடு போராட விரும்பாமல் எக்கேடோ கேட்டுப் போ என்ற முடிவைப் பெற்றோர் எடுத்தனர். யாரையும் காதலிக்க மாட்டேன் என்ற சத்தியத்தைச் செய்துவிட்டு கிளம்ப வேண்டியிருந்தது.

சித்தப்பா பித்தளை அண்டாவைப் பத்து ரூபாய்க்கு அடகுவைத்துக் கொடுத்தார். சிதம்பரம் செல்ல வழிச் செலவுக்கு அதுதான் காசு.

சென்றதும் விடுதிக் கட்டணம் இருநூறு, கல்லூரிக் கட்டணம் இருநூறு ரூபாய் வேண்டும். சாவித்திரி தந்தார். ஒரு வருடம் முழுக்க தோழியர் சாவித்திரி, அம்சவல்லி, தனபாக்கியம் மூவரும்தான் உதவினர். மீண்டும் தந்தையிடம் தொடர்ந்து போராடி கொல்லையை அடகு வைத்து அடுத்த வருடம் சமாளித்தார். 

பின்னாளில் மோகனாவின் கல்வி உதவியைப் பெற்றிருக்கிறவர்கள் (உறவுகளைத் தவிர்த்து) குறைந்தது இருநூறு பேராவது இருப்பார்கள். கல்விக் கட்டணம் கட்டுவது, தன் வீட்டிலேயே கூட தங்கவைத்துப் படிக்க வைப்பது மட்டுமல்ல, சக பேராசிரியர்களிடம் சற்றேறக் குறைய மதிப்பெண் பெற்று தோல்வியின் விளிம்பில் நிற்கும் மாணவர்களுக்காக வாதாடும் வழக்கமும் மோகனாவுக்கு உண்டு. அப்படி மோகனா வாதாடித் தேர்ச்சி பெற வைத்தவர்களில் பலர் பின்னாளில், அறிவியல் வல்லுராக, வங்கியாளராக, ஆசிரியர்களாக மின்னுகின்றனர்.

இரவில் பொரிவிற்றுவிட்டு காலை சற்று தாமதமாக வரும் ஒரு மாணவருக்கு தண்டனை கிடைக்கவிருந்த சூழலில் மோகனா கல்லூரியில் பரிந்துரைத்து, அவரை முதுகலை படிக்கவும் வற்புறுத்தி இன்று அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரியும் ஆசிரியருமாக அம்மாணவர்  விளங்குகிறார்.

மோகனா ஒய்வு பெற்ற  நாளில் திடீரென ஒருவர் வந்து காலில் விழுகிறார், “அம்மா, எனக்கு அரசுப்பணி கிடைத்திருக்கிறது “என்று. பேண்ட் இல்லை என்பதற்காக கல்லூரி வரத் தயங்குகிறார் ஒரு மாணவர் என்பதை அறிந்துகொண்டு, ஆள் விட்டு அழைத்துவரச் செய்து வேட்டி அணிந்து வருவதிலும் குறைவு இல்லை என்று ஊக்கமொழி தந்து படிக்க வைத்தார். அப்படிப் படித்தவர்தான் காலில் விழுந்து வணங்கியவர். 

கல்லூரியில் படிக்கும்போது மூன்றே சேலைகள்தான் இருக்கும் மோகனாவிடம். அவற்றையும் துவைத்து படுக்கைக்கடியில் மடித்து வைத்து மிடுக்காக அணிவதே வழக்கம். வறுமையோ, வசதியோ தோற்றப் பொலிவில் எப்போதும் கவனம் உண்டு.

பலவருடம் முன்பு இவரிடம் படித்தவர்கள் கூட மோகனாவைத் தேடிவந்து வணங்கிச் செல்வதன் காரணம் தான் பெற்ற அறிவை, பொருளை, பரிவை எப்போதும் அள்ளிக்கொடுத்தே வாழ்ந்து வருவதுதான். தன் விலங்கியல் பிரிவு மாணவர்களிடம் மட்டுமல்ல, பிற பிரிவு மாணவர்களும் நாடி வருமளவு கனிவு காட்டுவார். வேலை வாய்ப்புக்கான வழிகாட்டலையும், உதவிகளையும் தொடரும் பேராசிரியரை யாருக்குத்தான் பிடிக்காது!

71 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதுகலைத் தேர்வு. ஜூலையில் முடிவுகள் வெளியாக, ஆகஸ்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வேலை காலி இருப்பதை எதிர்வீட்டு நண்பர் மூலம் அறிந்து சேர்ந்துவிட்டார். ஓராண்டு அங்கு பணி புரிந்தார். அப்போது பிள்ளையார்பட்டி சென்று வருவதுண்டு. பணியிடத்தில் நிலவிய பாலியல் சீண்டல் வெறுப்பைத் தந்தது. 

பொதுவுடைமை இயக்கத்துக்கு வந்தபின்தான் மதிக்கத்தக்க ஆண்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் மனநிலையே வந்தது என்கிறார் மோகனா.

காரைக்குடி வேலை தற்காலிகமானதாகவே இருந்தது. கோடைகால ஊதியத்தைத் தவிர்க்கும்பொருட்டு அங்கு அனைவரும் அப்படித்தான் பணி புரிய வேண்டும்.அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போது, நிர்வாகம் விரும்பினால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளும்.

இதுபோன்ற கல்லூரி ஆசிரியர்களின் சிக்கல்களுக்காக உருவான இயக்கமான மூட்டா(மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) குறித்து அப்போது மோகனா அறியவில்லை. எட்டு மாதம் பணி புரிந்தவர்க்கு கோடைவிடுப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறையைச் சுட்டி தானே நிர்வாகத்திடம் கடிதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

இதனிடையே பழனி ஆண்டவர் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். அக்கல்லூரி முதல்வர் மோகனாவுக்கு முதுகலை செய்முறைத் தேர்வு மேற்பார்வையாளராக வந்தவர். அப்போது மோகனாவின் Record உருவாக்கப்பட்டிருந்த சிறப்பைப் பாராட்டி மாணவர்களுக்கு முன்மாதிரியாகக் காட்ட வேண்டும் எனத் தம் பழனி கல்லூரிக்கு எடுத்து வந்திருந்தார். ஆக, மோகனாவின் வாழ்க்கை பழனியில் தொடங்கு முன்பே அவருடைய குறிப்பேடு வந்து சேர்ந்துவிட்டது. மோகனா பேராசிரியப் பணியிலிருந்து ஒய்வு பெற்றபோதுதான் மீண்டும் அவர் கைக்கு வந்தது. அதுவரை அதுவும் முன்மாதிரி!

பழனியில் பணியில் சேர்ந்தபிறகு, அரசுக்கல்லூரி  விரிவுரையாளர் பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ள முனைந்தபோது முதல்வர் அருணாசலம், இங்கேயே முதுகலை வகுப்பு எடுக்கும் வாய்ப்பும் அளிக்கிறேன் போகவேண்டாம் என்று தடுத்தார். மோகனாவுக்கோ பழனி பிடிக்கவில்லை.(இப்போது பழனியைத் தவிர வேறெந்த ஊரும் பிடிக்கவில்லையாம்) மயிலாடுதுறையில் அரசுப்பணி பார்க்கலாம் என்று ஆசை இருந்தது. வேதியியல் துறையின் அருணந்தி உள்ளிட்ட சக பேராசிரியர்கள், ”அரசுப்பணி என்பது பணி மாறுதலுக்குட்பட்டு ஊர் ஊராய்ப் பெட்டி தூக்க வேண்டும், ஓரிடமாய் நிம்மதியாக இருங்கள்” என்று அறிவுறுத்தவே கிடைத்த அரசு வேலையில் சேராமல் விட்டார். 

ஆடவர் கல்லூரியின் ஒரே பெண் ஆசிரியர்.அப்போது INSTRUCTOR. பழனி பெண்கள் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவியர், ஆடவர் கல்லூரியில் சேர்ந்திருந்த சில மாணவியரோடு இவரும் விடுதியில் தங்கியிருந்தார்.

அறைத் தோழியாக இருந்த ஜெயமணி வாழ்விலும் வழிகாட்டுவார். அவரே மூட்டா குறித்து அறிமுகம் செய்தார். மோகனாவின் தொழிற்சங்க வாழ்க்கை தொடங்கியது.

தனி வாழ்வும் பணி வாழ்வும் ஒருபுறமிருக்க, பேச்சாலும் எழுத்தாலும் அறிவியலை வெகு மக்களிடம் எடுத்துச் செல்பவராக, உழைக்கும் பெண்களின், அடித்தட்டு உழைப்பாளர்களின், உரிமைப் போராளியாக, பாலின சமத்துவப் போராளியாக மோகனாவின் வாழ்க்கை இன்றுவரை நீள்வதில் அயரா உழைப்பிருக்கிறது.

எளிமையாக அறிவியலைப் பகிரும் முயற்சியில் எழுபது நூல்களை எழுதியிருக்கிறார்.

பாடநூல்களை உருவாக்கியிருக்கிறார். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான சிறார் அறிவியல் இதழ் “துளிர் “ஆசிரியர் குழுவில் முப்பத்தைந்து ஆண்டு காலமாகப் பணியாற்றியவர்.

அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான “விஞ்ஞானச் சிறகு” இதழிலும் ஆசிரியர் குழு உறுப்பினர். 

பெண்களுக்கான “அறிவுத் தென்றல்” மாத இதழின் ஆசிரியர்.

தேசியக் குழந்தைகள் அறிவியல் அமைப்பில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தேசிய, மாநில அளவில் ஒருங்கிணைப்பாளர், கருத்தாளர், மதிப்பீட்டாளர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் நான்காண்டுகாலம் தலைவர் உட்பட  எல்லா நிலைகளிலும் பணியாற்றி இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்பு தொடர்கிறது.

வானியல், வான் நோக்குதல், தாய்-சி (சீனத் தற்காப்புக் கலை)பிரிவுகளில் தேசிய,மாநில அளவிலான கருத்தாளர்.

அறிவியல் சார்ந்த பல்வேறு தேசிய அளவிலான அமைப்புகளில் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினர்.

சமதா-பாலின சமத்துவத்துக்கான அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்.

சமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகள் 

திண்டுக்கல் மாவட்ட உழைக்கும் மகளிர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் (90-92) இரண்டாண்டுகள் அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர்.

தேசிய அறிவொளி இயக்கத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி கருத்தாளர்.

அறிவொளி பாடப் புத்தகங்களையும்,பாடல்களையும் எழுதியவர்.

தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ,தற்சார்பு போன்றவற்றை வலியுறுத்தும் இந்திய அரசின் நிகழ்வில் கருத்தாளர்.

அறிவியல் போற்றும் வீதி நாடகங்களை உருவாக்குதல், நடிகர்களுக்குப் பயிற்சியளித்தல், தாமே நடித்தல்… 

அறிவியலைப் பிரபலமாக்கி வெகுமக்களிடம் கொண்டுசெல்வதற்கான முயற்சியில் கலைப் பயணங்கள், மாநாடுகள், கூட்டங்கள், கட்டுரைகள் என எல்லா வழிகளிலும் பயணிக்கும் முன்னோடி மோகனா.

சுற்றுச் சூழல், சட்ட விழிப்புணர்வு, பாலின சமத்துவம், வானியல் நிகழ்வுகள் என மோகனா நடத்தும் அல்லது பங்கேற்கும் அல்லது வழிகாட்டும் நிகழ்வுகள் தினக்குறிப்பின் பக்கங்கள்தோறும் உண்டு. 

இவற்றில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி கூட்டங்கள், மகளிர் அமைப்பு, காவல் துறை போன்றோருக்கான  விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், துறைசார் பயிற்சிகளும் அடங்கும்.

இப்படிச் சுழன்று கொண்டேயிருக்கும் மோகனாவின் தனி வாழ்வு சுழல் நிரம்பிய தடம்தான். இவரைத் தவிர குடும்பத்தில் யாரும் கல்வியைத் தொடரவில்லை. பெற்றோர் ஏற்பாடு செய்த வாழ்க்கைத் துணையையே ஏற்றார். பாலிடெக்னிக் படித்து இவரைவிடக் குறைவான சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த காட்டுமன்னார்கோயில் பன்னீர்செல்வம் மணமகன் ஆனார். 1975 ஏப்ரல் 18 புகுந்தவீடு சென்ற மோகனா இயல்பாக ஆற்றிய வீட்டுக் கடமைகள் பார்த்து ஊர் வியந்ததுண்டு. மாமனார், மாமியார், நாத்தனார் என அனைவரின் அன்பையும் வென்றார்.

ஆனால், பழனி திரும்பிய சில காலத்தில், கணவர் நிரந்தரப்பணி இல்லாதவர் என்பது தெரிந்தது. வேறு வேலை தேடும் ஆர்வமின்றி, திரைப்படம் பார்க்கவும், வீண் செலவு செய்யவுமாக இருந்ததோடு, கடுமையான ஆணாதிக்கவாதியாகவும் இருந்தார்..

ஆசான் என்று மோகனா மதிக்கும் சக பேராசிரியரான அருணந்தி உள்ளிட்ட நண்பர்கள் வரும்போதெல்லாம் உரையாடலில் இணைந்துகொள்ளவும், அவர்களோடு பழகவும் செய்தாலும் கூட பன்னீர்செல்வம் கணவர் என்ற பதவியின் முழு அதிகார வீச்சை  மோகனாவிடம் காட்டியதன் உச்ச உதாரணங்களில் ஒன்று ஏழு மாத கர்ப்பிணியை எட்டி உதைத்ததில் குழந்தை ஒருமாதம் முன்கூட்டியே பிறக்க நேர்ந்தது. மகன் பிறந்த ஐந்தாம் நாள் இந்த சூழலின் கொடுமை தாளாமல் தற்கொலை முடிவோடு வீட்டைவிட்டு வெளியேறியும் விட்டார் மோகனா. குழந்தையின் முகமே முடிவை மாற்றியது. 

சக பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினர், மாணவிகள், அண்டைவீட்டுக்காரர்கள் என்று பலர் உதவியைக் கொண்டே பிரசவம், குழந்தை வளர்ப்பு, தனது மற்றும் குழந்தையின் சுகவீனங்கள் அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. உதவி செய்ய மோகனாவின் தங்கையோ, மாமியாரோ வந்தாலும் கூட கணவரின் அதிகாரம் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தது.

இதனிடையே இதயநலம், மன அழுத்தம் சார்ந்த சிக்கல்களுக்காக, பாண்டிச்சேரியில் ஐந்தாண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார் மோகனா. 

மாமனார், மாமியார், நாத்தனார், தங்கள் வீட்டுப்பிள்ளையின் தவறுகளையும் மருமகளின் இயல்பையும் உணர்ந்திருந்தனர். மாமனார் தனது சொத்தை மோகனாவின் மகன் வினோபா கார்த்தியின் பெயரில் எழுதி, மோகனாவையே காப்பாளர் எனக் குறிப்பிட்டு உயில் எழுதும் அளவு புரிதல் இருந்தது. ஆனால் அவற்றை மோகனா விட்டுக்கொடுத்தார். 

அடி, வசவு, அக்கறையின்மை, அடக்குமுறை, வீண்செலவு, அவமானங்கள் என்று நீண்ட மணவாழ்க்கையின் முற்றுப்புள்ளியை மகன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மோகனா வைத்தார். விவாகரத்துக்கும் கணவர் ஒத்துவராமல், பணியிடத்துக்கெல்லாம் சென்று அவமானப்படுத்துவதும், சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துவதுமாக இருந்தார். கல்லூரி நண்பர்கள், முதல்வர் ஆதிலட்சுமி எனப் பலரும் துணை நின்றனர். ஐந்தாண்டுகாலப் போராட்டத்தின் பின் மோகனாவுக்கு விடுதலை கிடைத்தது. 

இதற்கிடையிலும் மற்றவர்கள் காட்டிய ஒட்டுதலுக்காக அந்தக் குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைத் தன் பொறுப்பில் நடத்தவும் தவறவில்லை.

இந்த வாழ்வு தனக்குத் தந்த ஒரே பரிசு தன் மகன்தான் என்கிறார் மோகனா. தான் பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்தின் மெட்ரிக் பள்ளியில் மகனைச் சேர்த்தால் சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிந்தும், அதைத் தவிர்த்து, தமிழ்வழிக் கல்வியிலேயே சேர்த்தார். மிகச் சிறு வயதிலிருந்தே தாயின் சுமைகளை உணர்ந்த பிள்ளை. சமையல், வீட்டுவேலை என அம்மாவுக்கு உதவுவது வழக்கம். கல்லூரியில் ஆசிரியர் போராட்டம் நடக்கும்போது, சங்க கூட்டங்களுக்கு என்றெல்லாம் மகனை அழைத்துக் கொண்டே சென்றுவிடுவார். சேட்டை செய்யாத குழந்தை. இளம் வயதில் தான் கற்க விரும்பிய பரதக் கலையை மகனுக்குக் கற்பித்து அரங்கேற்றமும் செய்தார்.

தன் துயரக் கதையை ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மகனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வயதிலேயே, ”இனி உங்களுக்குத் துன்பம் வராது பார்த்துக் கொள்கிறேன் அம்மா…” என்று தன் மகன் உறுதியளித்த பாங்கில் நெகிழ்ந்து போனார்.

பணியில் சேர்ந்தபோதிலிருந்தே, ஆசிரியர் சங்க நடவடிக்கைகளில் மோகனா தொடர்ந்து ஈடுபாடு காட்டினார். பணிப்பாதுகாப்பு, பேறுகால விடுப்பு, பணி நிரந்தரம், பல்கலைக்கழக மானியக் குழு தந்த ஊதிய விகிதங்கள் எனப் பல விஷயங்களை முன்னிட்டு நடைபெற்றுவந்த மூட்டா கூட்டங்கள், மாநாடுகளில் தவறாது கலந்து கொள்வார். பேசுவார்.

1977  கல்லூரி ஆசிரியர் போராட்டம்,மறியல்,தேர்வு புறக்கணிப்பு. வாசலில் காவல் பலமாக இருக்க, பின்பக்கமாகச் சென்று கல்லூரிக்கு உள்ளே போராட்டம் தொடங்கினர். கைதானவர்களில் இவர் ஒரே பெண் என்பதால் உதவி கண்காணிப்பாளர் தன் சொந்தப் பொறுப்பில் இவரை விடுவித்து மாலையே வீட்டுக்கு அனுப்பினார். அப்போதைய கோரிக்கை நிறைவேறியது.

அடுத்த ஆண்டு போராட்டத்தின்போது, பெண்கள் கல்லூரியின் பேராசிரியர்களும் வந்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரையில் எட்டு நாள் சிறைவாசம்.

பிற கல்லூரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டாலும் போராட்டங்கள் நடைபெற்றன. மூட்டாவில் பல்வேறு பொறுப்புகளையும் மோகனா ஏற்றிருந்தார். தமிழக அளவிலான கல்லூரி ஆசிரியர்களின் சங்கமாக JAC உருவானது. அகில இந்திய கூட்டமைப்பு உருவானது. மாநில அளவிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாவற்றிலும் மோகனாவின் பங்கு உண்டு. போராட்டங்களுக்குத் திட்டமிடும்போது தென்தமிழகம் முழுவதும் பயணித்து பெண்களைப் பங்குபெறச் செய்வதற்கு இவரையே அனுப்புவார்கள். ”நான் ஒரு ஆள்திரட்டி” என்பது அவர் வாசகம். 

ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் 45 நாட்கள். அச்சடித்த கட்டி சோறு, உப்புமா என்று உண்டு, பொதுக் கழிப்பறை, குளியலறையில் புழங்கிக் கிடந்தாலும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டதால், உள்ளேயே, உரையாடல், பட்டிமன்றம், மற்ற தண்டனைக் கைதிகளுக்கு கதை, பாடல், இலக்கியம் சொல்லித் தருவது, ஆறுதல் கூறுவது என்று கழித்தனர். சக்தி பெருமாள், பிரேமா அருணாசலம் டாக்டர்.வசந்திதேவி (அப்போது திண்டுக்கல் பேராசிரியர்) போன்றோர் சக கைதிகள். அப்போதுதான் நிறைய, வரலாற்றுச் செய்திகளையும், பாடல்களையும் வசந்திதேவி பகிர நெருக்கமான அறிமுகம் கிடைத்தது.

இந்தப் போராட்டத்தில் சிறைவாசத்தில் உயிர் துறந்த இருபத்திரண்டு பேரை வலியுடன் நினைவு கூர்கிறார் மோகனா. நீண்ட போராட்டத்தின் பின்னரே கோரிக்கைகள் நிறைவேறின. மிக நீண்ட காலத்துக்குப்பின் 2006 ஆம் ஆண்டு போராட்டத்தின்போது பணி நிறைவுக்குப் பின் பணி நீட்டிப்பில் இருந்தபோதும், ஓய்வூதிய பணப்பலன்களுக்குப் பிரச்சனை  வரலாம் என நண்பர்கள்  தடுத்தும் ஏற்காமல் கலந்து கொண்டார்.

அறிவொளி இயக்கத்தில் இணைந்திருந்த காலமே தனது முப்பத்தெட்டு ஆண்டுகால கற்பிக்கும் பணிக்கு மகுடம் எனக் கருதுகிறார் மோகனா. 1991ல் தமிழகத்துக்கு அறிவொளி வந்தது. அதற்கு முன்னரே பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்டுவிட்ட அறிவொளி இயக்கச் செயல்பாடுகளை, பேரா.அருணந்தி உள்ளிட்டவர்களோடு சென்று பார்வையிட்டு வந்திருந்த மோகனா மிகுந்த ஆர்வத்தோடு, கற்பித்தல், பாடநூல் உருவாக்கம், ஒருங்கிணைப்பு, பயிற்சி என்று பங்கேற்றார். ”தினமும் பதினான்கு முதல் முப்பது கி.மீ.கூட என் சிவப்பு அவந்தியில் சுற்றிய நாட்கள் பரவசமானவை.” என்கிறார்.

மோகனாவின் தொழிற்சங்க, அறிவியல் இயக்க, பொதுவுடைமை இயக்க ஈடுபாடு,செயல்பாடுகளுக்கு முக்கிய காரணியாக இருந்த பேரா.அருணந்தியை ஆசான் என்றே குறிப்பிடுகிறார். ஆசிரியர் சங்கத்தில் இணைந்து செயல்படவைத்த காலம் தொடங்கி, வீட்டுக்கு நண்பர்களுடன் வருகை தந்து அனைவருமாக அரசியல் நிகழ்வுகளை விவாதிப்பது, அறிவொளி, அறிவியல் இயக்கம் எனப் பன்முகச் செயல்பாடு அவருடைய தூண்டலில் நிகழ்ந்தது என்றால் மிகையில்லை. குடும்ப நண்பராக, இவரது மகன் வினோபாவின் வழிகாட்டியாக, பல சிக்கலான சூழல்களில் தைரியத்தோடு செயல்பட வைத்த அருணந்தி நோய்வாய்ப்பட்ட போது, மோகனா உடனிருந்து கவனித்துக் கொண்டார். அவர் மறைந்த பிறகு, சிலகாலம் அவருடைய மனைவி மோகனா வீட்டில்தான் தங்கி இருந்தார். இருவீட்டுப் பிள்ளைகளும் நண்பர்கள்.

தன் அறிவியல் வாழ்வில் முக்கியமானவர்கள் என்று குழந்தைநேய கருத்தாளர்-கல்வியாளர் பேரா.இராமானுஜம், அறிவியல் இயக்கத்தின் தற்போதைய தலைவர் டாக்டர். தினகரன், அருணந்தி வழி அறிமுகமாகி தொடர்ந்து எழுதவும் இயங்கவும் ஊக்குவித்துக் கொண்டே இருக்கும் பேரா.ச.மாடசாமி, முதுகலைப் பருவத்தில் அறிவியல் இயக்கத்தில் இணைந்து இன்று விஞ்ஞான் பிரசார் என்ற மத்திய அரசு அமைப்பின் அறிவியலாளராக இருக்கும் TVV  என்று அழைக்கப்படும் த.வி.வெங்கடேஸ்வரன், போன்றோரைக் குறிப்பிடுகிறார் மோகனா.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அறிவியல் கொள்கைகள் சார் உரையாடல்களை முன்னெடுக்கும் கூட்டமாக 1980 முதல் நடைபெற்று வந்த தமிழ்நாடு அறிவியல் அமைப்பு  1986 முதல் மக்கள் இயக்கமாக ’தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ எனச் செயல்படத் தொடங்கிய நாட்கள் முதல் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் நிகழ்த்தும் நழுவுபடக் காட்சி போல விவரிக்கிறார் மோகனா.

அறிவொளியிலும், அறிவியல் இயக்கத்திலும் தொண்டர் படையாக வந்து சேர்ந்து இன்று முக்கிய பொறுப்பாளர்களாக, இதழியலாளர்களாக, விஞ்ஞானிகளாக உலகெங்கும் விளங்குபவர்களில் இவர் மகன் வினோ, அருணந்தியின் மகன் ஸ்ரீகணேஷ், வள்ளிதாசன், சுஜாதா, விஜயானந்த், சுகந்தி, சாமுவேல்ராஜ் என்று பலரையும் மகிழ்வோடு பட்டியலிடுகிறார்.

த.வி.வி அறிமுகம் செய்த வள்ளிதாசன் பின்னாளில் மோகனாவின் முதல் மகன் என்றே சொல்லப்பட்டதையும், குழந்தை எழுத்தாளராக இந்த அம்மாவை அந்த மகன் உருவாக்கியதையும் நெகிழ்வோடு பகிர்கிறார்.

மகனின் நண்பராகப் படிக்க உதவி செய்த ஜோதிகுமார் மோகனாவின் வளர்ப்பு மகன் என்று சொல்லுமளவு நெருக்கமானார். மகனின் நண்பன் ரபீக் வீடு கட்டுவதிலிருந்து எங்கு செல்லவும் தாங்கும் பிள்ளையாக இருப்பதுவரை உறவானார். கோகுல், கமர்,  டாக்டர் ஸ்ரீதர், மலைச்செல்வி என்று ஒவ்வொரு காரணத்தில் அறிமுகமாகி பிள்ளைகளாகச் சொந்தம் கொண்டாடும் பட்டியலால் பெரிய குடும்பிதான் மோகனா.

எல்லா வகை அசைவமும் விரும்பிச் சமைக்கவும் உண்ணவும் கூடியவராக இருந்த மோகனா நாற்பது தாண்டியதும் அவற்றைக் கைவிட்டு மீன் மட்டும் சாப்பிடுவது, நரசூஸ் காபி நாளொன்றுக்கு இருபது என்ற பழக்கத்தைக் கைவிட்டு பால் குறைத்து சத்துமாவுக் கஞ்சிக்கு மாறியது என்று ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர். இரவு எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுவது தொட்டில் பழக்கம். பதினெட்டு வயது முதல் உடற்பயிற்சி செய்பவர். நண்பர் பழநிச்சாமியுடன் நடைப்பயிற்சி செல்வதுண்டு.

அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு மருமகள் பத்மாவின் இரண்டாவது பிரசவத்துக்கு ஒருமுறை சென்று வந்தார். இரண்டாம் முறை சுற்றிப்பார்க்க அழைத்திருந்தார்கள் மகனும் மருமகளும். 2010 செப்டெம்பரில் கிளம்ப வேண்டிய சமயத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனைகள் நீள, புற்றுநோய் வந்திருப்பது உறுதியானது. கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க நண்பர்களின் திட்டமிடலில் சேர்ந்தார். டாக்டர் கார்த்திகேஷ் கவனிப்பில் மீண்டார். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே வாசிப்பு, உடலில் கழிவு சேகரத்துக்காகத் தொங்கும் குழாயை ஜோல்னாப்பையில் போட்டுக்கொண்டு வாக்கிங் என்று பார்க்க வந்தவர்களை பிரமிக்க வைத்தார். அப்போதும் என்ன குறை தெரியுமா? தன் சிகிச்சையைப் படிப்படியாகப் படம் எடுக்க வேண்டும். பின்னால் மற்றவர்களுக்குப் போட்டுக் காட்டி விளக்க வேண்டும் என்ற இவரது அறிவுறுத்தலைச் சுற்றியிருந்தவர்கள் செய்யாமல் விட்டு விட்டார்கள் என்பதுதான். 

புற்றுநோய் அறுவை சிகிச்சை,தொடர்ந்து வேதி சிகிச்சைகள் எனப் பல மாதங்கள் சென்ற நிலையில் தோற்றப் பொலிவின்றி, உடல்வலு குன்றி சிரமப்பட்டபோது கோகுல் அறிமுகம் செய்ததுதான் தாய்ச்சி என்னும் சீனத் தற்காப்புக் கலைப் பயிற்சி. நடக்கக்கூட முடியாத நிலையில் ஒற்றைக்காலால் நின்று செய்ய வேண்டும் என்பது பிரமிப்பாகத்தான் இருந்தது. 

”கால்சியம் இழப்பு காரணமாக விழுந்துவிடக் கூடாது: எலும்பு உடையும்”  என்ற எச்சரிக்கையும் இருந்தது. இவரது முன்னாள் மாணவர் ரவி இப்போது ஆசிரியர். விழுந்து விடாமல் தாங்கிப்பிடித்து அவர் கற்பிக்க தினமும் முப்பது நிமிட தாய்ச்சி பயிற்சி, முன்பை விட அதிக வலுவுள்ளவராக மோகனாவை மாற்றியிருக்கிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப்பின் இடது தோள்பட்டையின் செயல்பாடு சரியாக இருக்காது என்பதைத் தன் பயிற்சியால் மாற்றிக் காட்டியிருக்கிறார். நிறைய பயணிக்கிறார். சுற்றுலா ஆர்வத்தில் உலகத்தின் உச்சி வரை சென்றதும் அந்தமான், கேங்டாக், டார்ஜிலிங், தாய்லாந்து என்று நண்பர்களோடு பயணித்திருக்கிறார். அடுத்தடுத்த நிலைகளை விடாது கற்கிறார்.

 இந்தியாவிலேயே தாய்ச்சி முதுகலைப் பட்டயம் முடித்த அதிக வயதான முதல் பெண் மோகனாதான். முதுகலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த முதல் எண் இவருடையதே.

புற்றுநோய் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பி, மிக நீண்ட முயற்சிகளுக்குப் பின், தற்போது, சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முழுநேர ஆய்வாளராகப் பதிவு செய்து கொண்டுள்ளார் மோகனா. தமிழகத்தில் புற்றுநோயாளிகளின் சமூக பொருளாதார நிலையமும் அதன் தாக்கமும் குறித்து ஆய்வு செய்கிறார்.

பணி ஒய்வுக்குப் பின்னர் சிஐடியு-தொழிற்சங்கப் பணியோடுதான் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, துப்புரவுப் பணியாளர்கள், சிகை திருத்தும் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், பால்பண்ணைத்  தொழிலாளர்கள், மாட்டுத்தீவனத் தொழிற்சாலை ஊழியர்கள் என்று பல பிரிவினருக்காக கோரிக்கைகளை முன்வைப்பது, போராட்டங்களை நடத்துவது, பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது, எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார். 

மோகனா தொழிற்சங்கப் பணியில் இறங்கியபோது நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பிரச்னை துப்புரவுத் தொழிலாளர் பணி குறித்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழனியில் பணிபுரிந்த 43 துப்புரவுத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்து விட்டனர். அதுகுறித்து வழக்கு நடைபெற்று எங்கெங்கு காலியிடம் இருக்கிறதோ அங்கு அவர்களுக்கெல்லாம் பணி நியமனம் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பும் வந்துவிட்டது. பழனியிலும் ஆள் தேவை இருந்தது. ஆனால் அங்கும் சரி, வேறு ஊரிலும் சரி, அவர்களுக்கு பணி அளிக்கப்படவில்லை. அதில் இருவர் இறந்தும் விட்டனர். மோகனா வந்தவுடன் இந்த விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டு போராட்டம் நடத்தினார். அப்போதிருந்த திமுக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஒருபைசா கொடுக்காமல் முந்தைய தேதியிட்ட பணப்பலன்களோடு பணி நியமனம் அத்துணை பேருக்கும் வழங்கப்பட்டது. இதில் தொழிலார்களோடும்,தொழிற்சங்கத்தோடும் துணை நின்றவர்களை மறக்காமல் பாராட்டுகிறார் மோகனா.

கையால் மலம் அள்ளும் முறையை ஒழித்தாயிற்று என்று அரசாங்கம் பதிவு செய்தபோதும் ஆயக்குடியில் இந்தக் கொடுமை நடந்து கொண்டுதான் இருந்தது. இதற்கு வேறெப்படியும் தீர்வு காண முடியாது இருந்தபோது,  தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் தனக்கு வேண்டிய நிருபரிடம் சொல்லி படமெடுக்கக் கேட்டுக் கொண்டார். செய்தியில் இந்த கொடுமையான காட்சி ஒளிபரப்பாகவும் அதிகாரிகள் அரண்டு போயினர். அப்போதுமிப்படி நடக்கவில்லை என்று எழுதித்தர துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க, அவர்கள் மோகனாவிடம் ஆலோசனை கேட்டனர். வெளியூர் சென்றிருந்த இவரது அறிவுரைப்படி அவர்கள் உறுதியாக மறுக்கவே வேறுவழியின்றி விரைவில் அங்கே கழிப்பறைகள் கட்டப்பட்டன. 

எளிமையான சத்தான உணவு, தாய்ச்சி, நடைப்பயிற்சி, வாசிப்பு, எழுத்து, போராட்டம், கூட்டம், பயிற்சி என்று நேரத்தையும் பணியையும் சேர்த்தே நிர்வகிக்கும் மோகனா தன்னோடு நூறு வயதைத் தொடப்போகும் தாயையும் வைத்துப் பராமரிக்கிறார். நலம் கேட்கவும் உதவி செய்யவும் ஊரெங்கும் ஏன் மாநிலமெங்கும்  உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறார். அன்பை மட்டுமல்ல, பொருளையும் தாராளமாகத்தான் செலவு செய்கிறார். தனக்காக இல்லை. கட்சிக்காகவும், கல்விக்காகவும் செலவு செய்ய சமயத்தில் கடன் வாங்கியும் கொடுப்பதுண்டு.

”கடன் வாங்கியா?” என்று வியந்தால்…”பரவாயில்லை தோழர்…மகன் அவரைப் பார்த்துக் கொள்வார். எனது சொத்தோ சேமிப்போ….இப்படிப் பயன்படட்டும்“ என்கிறார் வந்தவழி மறவாத மோகனா. ”கரும்பாயிரம் சித்தப்பாவின் கூரைநாட்டு முதலாளி கொடுத்த பழைய பத்துரூபாய்த்தாளில் பெருகியதுதானே இந்த வருமானம்.” எனச் சிரித்தபடி முடிக்கிறார்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button