
மூன்று வீடுகள்
நான்காம் முறையாகக்
கூடிப் பிரிந்த பின்
வாகாய் உடல் பரப்பித்
தளர்கிறாள் தலைவி
அந்தி மந்தாரைச் செடியொன்று
அப்போதுதான் பூக்கத்
தொடங்கியிருக்கிறது
தீடீரென்று
உள்ளொளி துலங்க மிணுங்கும்
தன் மனைவியை
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
முதல் வீட்டி லொருவன்
“இப்போதான் புதுசா பாக்குறீங்களாக்கும்?”
என வெட்கத்தில் சலித்துக் கொண்டவளுக்கு
கண்டிப்பாக நினைவிருக்கும்
முன்னெப்போதும்
இத்தருணத்தில் அவன் தன்னைப்
பார்த்ததே இல்லையென்பது.
**********
திறந்தே கிடக்கும் இரண்டாம் வீட்டின்
பின்வாயிற்கதவு வழி
அவசரமாக நுழைகிறது
அரவமொன்று
உடல் நைந்து போய்
கந்தலாகக் கட்டிலில்
கிடக்கிறாள்
பத்து நாளாய் தீட்டு நிற்காத
பெண்ணொருத்தி
படுக்கையெங்கும் பாவிக் கிடக்கும்
ரத்த வாடையினூடே
கண்ணீர் வீச்சமும் சேர்ந்து கொள்கிறது
வலி நேரத்தில் வயிறு தடவும்
கை வாய்க்காதவர்கள்
துர்பாக்கியசாலிகள்
மெதுவாக
இளஞ்சூட்டில்
அவள் வயிறோடு ஊர்கிறதந்த
கோடைகாலப் பெருஞ்சர்ப்பம்.
**********
முதல் கவிதையை எதேச்சையாகப்
படித்து விட்ட
மூன்றாம் வீட்டவன்
அவசர அவசரமாகப் பாய்கிறான்
இவனுடல் பிடிக்காத
மனைவி மீது
மிச்சம் வைக்காமல்
அவளைப் பருகித் தணிந்து
விலகுகையில்
அவள் மாரில் காய்ந்து நிற்கிறது
ஒரு துளிக் குருதி
உள்ளொளி துலங்கும் முகம்
பார்க்கும் ஆவலோடு
அவள் முகம் பார்த்தவன்
மிரண்டு நிற்கிறான்
அந்தக் கண்களிலிருந்து
வெறுப்பின் சர்ப்பமொன்று
வெளியேறிக் கொண்டிருக்கிறது.
**********