சிறுகதைகள்

அலகிலா – பிந்துசாரா

சிறுகதை | வாசகசாலை

“கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த வரியில் உண்மை இல்லாமலும் இல்லை”.

ரகு அங்கு வந்து இறங்கும்போதே பெருங்கூட்டம் குழுமியிருந்தது. காற்று வாங்க வந்து  கடலையும் திரள் மையத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தவர்கள்தான் முதலில் தென்பட்டனர். சட்டென வெளிவட்ட திரள் மொத்தமும் திரள் மையத்தைப் பார்ப்பதும் பின்னர் இரண்டொரு நொடியில் ஒருவருக்கொருவர் வார்த்தை பரிமாறிக்கொள்வதையும் பார்த்தபடியே நடந்து நெருங்கினான்.

தொண்டை கமற உச்ச குரல் ஒலிக்க மீண்டும் வெளி திரள் மையத்தைப் பார்க்க ரகு மையத்தை நோக்கி வேகமாக ஓடினான். சூழ்ந்து நின்றிருந்தவர்களை ஒதுக்கியும் “ப்ரெஸ், வழி விடுங்க, ப்ளீஸ் ப்ரெஸ்” எனச் சொல்லிய படியே ஒட்டி நின்றவர்களின் ஊடாக நுழைந்து உள்ளே வந்தான். கேமிராக்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மின்னிக் கொண்டு இருக்க, மற்றவர்கள் இயல்பாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

“மீன வருக்காட்டி ஒரு பிடி சோறு எறங்காதே அவனுக்கு, இப்போ என்ஞாமி எங்கன போன ந்நீநீ” என மார்பில் அடித்துக்கொண்டு ஒருத்தி பெருங்குரலில் பேசினாள். அதைப் பேசினாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அத்தனை உச்ச குரலில் அப்படி அத்தனை நேரம் பேசிக்கொண்டு இருப்பதுதான் உட் திரளை இயல்பாகவும் வெளித் திரளைப் பதட்டமாகவும் வைத்திருக்கிறது.  அர்த்தம் விளங்காததால்தான் இயல்பான வாக்கியங்கள் கூட பெரும் பதட்டம் அளிக்கின்றன.

ரகு ஒரு ரிப்போர்ட்டரிடம் “என்ன நிலவரம்”  எனக் கேட்டான்.

“ஒரு சேஞ்சும் இல்ல, நேத்து மாதிரியேதான், சாம்சனுக்கு மீன் வறுத்தது, பொறித்தது, வேகவச்சது, குழம்புல போட்டதுன்னு எல்லாமே இருக்கனும் இல்லனா சோறு எறங்காது, இதுதான் இன்னும் மூணு நாளுக்கு ஹெட்லைன் ” என மெதுவாகச் சொல்லிச் சிரித்தான்.

“நேத்து நான் வரல, சேகர் சார் வந்தாரு, இன்னிக்கு என்னை அனுப்புனாரு, நிலவரம் என்ன”. சேகர்தான் இனிப் புது நியூஸ் எதுவும் வராது, உன் ஸ்டைலில் ஏதாச்சும் டிரைப் பண்ணு என அனுப்பியிருந்தார்.

“ஒண்ணும் புதுசா இல்ல, ராபர்ட் மேட்டரப்போ நீ வந்தல்ல”

மணலில் அமர்ந்து ஒருவர்மீது ஒருவராகச் சாய்ந்திருந்த நான்கு பெண்களைப் பார்த்தபடி ரகு மெதுவாகத் தலையசைத்தான்.

“அதே தான், சைக்லோன் அனவுன்ஸ் பண்ண அன்னிக்குக் காலைல போட் கிளம்பிருக்கு, அன்னிக்குப் பகல் முழுசும் டிரை ஸ்கை, காள்ம்  சீ, போட் எங்கப் போச்சுன்னு தெரியல, தேடிப் போனவங்க கண்ணுல படல, செவன் டேஸ் நவ் ” என்றான்.

“கூட போனது எத்தன பேர் ” ரகு அந்தப் பெண்களைக் கூர்ந்து பார்த்தான், குண்டான ஒரு பெண் அனேகமாக சாம்சன் தாயாக இருக்கலாம், மூன்று சின்னப் பெண்கள் ஒட்டிய கன்னம் அதில் கண்ணீர் வடிந்து வடிந்து உப்புக்கரை  இருந்தது, கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. ஒருத்தி மட்டும் சேலை கட்டியிருந்தாள் , மற்றவர்கள் சுடிதார். அதிகமாகப் போனால்  15, 16 வயதிருக்கலாம் .

“மொத்தம் மூணு பேர்நெருங்கி வந்து மெதுவாக “ரண்டு கரை ஒதுங்கிடுச்சு, மார்னிங் 3 போல, அனேகமாக இப்போ போஸ்ட் மார்ட்டம் ஆரம்பிச்சிருக்கும், அவங்க குடும்பத்த எல்லாம் போலீஸ் அங்கக் கூட்டிப் போயாச்சு” என்றான்.

“ம்ஹும் ,அப்போ சாம்சன்”

“தெரியல, அனேகமாக நேவி  இன்னிக்குச் சாயந்திரம்வரைத் தேட வாய்ப்பிருக்கு, அப்புறம் அப்பிசியலா டெட்னு அனவ்ன்ஸ் பண்ணிடுவாங்க, இங்க இருக்க மீன்காரங்க இன்னும் ரண்டு மூணு  நாள் தேடலாம், யாருக்கும் ஹோப் இல்ல, இதோ இங்க அழுவுற  இவங்க கூடப் பாடியாச்சும் கொடைக்கனும்னு தான்” அவன் முடிக்கவும் “மீன” எனக் குரல் துவங்கியது.

ரகுவிற்கு  ஒரு பார்வை கூர்மையாகத் தன்மேல் விழுவது போலத் தோன்றியது.  அவர்களை மீண்டும் ஒருமுறை பார்த்தான். குண்டான பெண் தலை மட்டும்தான் கலைந்திருந்தது, மற்ற மூவரும் தலை வாரி முடித்திருந்தனர். சேலை கட்டி இருந்தவள் பின்னலிட்டு அதை மார்பிலிட்டிருந்தாள், கண் மை கூட வைத்திருந்தது போலத் தெரிந்தது, மற்ற இருவர் முகம் தெரியவில்லை. அவன் சொன்னது உண்மைதான் எனத் தோன்றியது.  சேலை கட்டியவள்  அரற்றலோடு சேர்த்து  காதில் உரசிய சிறு முடியை ஒதுக்கியபடியே இருந்தாள், கதறி முடித்த கணம் தோளில் சேலையை இருத்திக் கொண்டாள், கண்ணீர் வழிந்தபோது மட்டும் துடைத்துக் கொண்டாள்.

ரகு அவளை ஆச்சரியமாகப் பார்த்தான், புடவை கட்டி பழக்கம் இல்லாதவள் போல, ஆனாலும் கஷ்டப்பட்டுக் கட்டியிருந்தாள். முந்தானையை  என்ன செய்வது எனத் தெரியாமல் கையில் மாற்றி மாற்றிப் பிடித்தபடி இருந்தாள், புடவை என்றாள் அழகு என நம்பும் ஜீவன்களில் ஒன்று போல என எண்ணிக் கொண்டான். அவளைப் பற்றிக் கேட்க தோன்றியது, குறைந்தது அவள் பெயராவது தெரிய வேண்டும்.

“இவங்க என்ன ரிலேஷன் சாம்சனுக்கு”

“என்ன, ஓ இவங்களா , அது அவன் அம்மா, அவங்க ரெண்டு பேரும் தங்கச்சி, இந்தப் பொண்ணு அவன் வைப்” என ஒவ்வொருவரையாகக் கை காட்டினான்.

“வாட், பொண்டாட்டியா, என்ன வயசு சாம்சனுக்கு ”

“ம்ம் மே பி 18 ஆர் 19” அவன் குழப்பமாகத் தலையசைத்தான்.

பைக்கை நிறுத்திவிட்டுக் கேமராவுடன் சுரேஷ் வந்தான்.

“நீ கொஞ்சம் போட்டோஸ் எடு சுரேஷ், எதனா அப்டேட்னா போன் பண்ணு , நா கொஞ்சம் வெளிய விசாரிச்சிட்டு இருக்கேன்.

ரகு வேகமாக வெளியே வந்தான். நீளமாக இரண்டு மூச்சு இழுத்து  விட்டுச் சுற்றிப் பார்த்தான்.

கைலியோடு பீடி பிடித்தபடி  கொஞ்சம் பேர், லூசாக டீசர்ட் ஷார்ட்ஸ் என வாக்கிங் வந்த சிலர் எனக் கலைந்து நின்றிருந்தனர். யாரிடம் பேசுவது எனக் கொஞ்சம் சுற்றிலும் பார்த்தான்.  கடற்கரையோர ஆடம்பர வாசிகள் சிலர், புதிதாக எழும் பங்களாக்களின் கட்டுமான பணியாளர்கள் சிலர். யாரிடமும் தெளிவாகத் தகவல் இருக்காது எனத் தோன்றியது. சாம்சன் அம்மா மீண்டும் “மீன” என ஆரம்பிக்க,  விரல் சுட்ட பீடியை  வீசிவிட்டு “என்ன வாத்யாரே  பாடி வண்ட்டாமா” எனக் கன்னம் தொங்கிய ஒருவரிடம் கேட்க, அவர் மறுத்து “தெரியலப்பா ” என்றார்.

ரகு வெளித் திரளைக் கடந்து  வந்தான். மணல் முடிந்த இடத்தில் வரிசையாக பங்களாக்கள். ஒவ்வொன்றுக்கும் இடையேவும்  இரண்டு கார் ஒன்றாகச் செல்லும் அளவு சாலை. சாலை முடிவில் கடற்கரை பைபாஸ், அதில் கொஞ்சம் தூரம் போனால் டீக்கடை இருக்கும்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.  மீண்டும் வலுவாக ஒரு பார்வை தன்னைத் துளைப்பதை  உணர்ந்தான். திரள் மையத்தைப் பார்த்தான். முட்டிக் கொண்டு நின்றனர் மக்கள்.

மெதுவாக நடந்து தொலைவாக வந்து நின்றான். நிலைக்குத்தி இருந்த உணர்வை என்ன எனச் சொல்ல இயலவில்லை. திரும்பி பங்களாக்களைப் பார்த்தான். பெரும்பாலும் கண்ணாடி மாளிகைகள். வார இறுதி உல்லாசத்திற்கானவை. திருடன் கொள்ளையடிக்க  எதுவும் இருக்காது. பெரிய பைகளில் கொண்டுவந்ததைக் குடித்து, சாப்பிட்டு விட்டுத் திங்கள் காலை கிளம்பி விடுவர்.

ஒவ்வொரு மாளிகையாகப் பார்த்தபடியே வந்தான். மாளிகை வெளியே சற்றே மேடேற்றப்பட்ட புல்வெளியில் டீபாய்  போட்டு அருகே நாற்காலியில் ஒருவர் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்தபடி இருந்தார்.  அவர் மிகுந்த சுவாரசியத்துடனான உடல் மொழியுடன் கூட்டத்தைக் கூர்ந்து பார்த்தபடி இருந்ததை ரகு உணர்ந்தான்.

ரகு அவரை நோக்கி நடந்தான். சரிந்து ஏறிய மணலில் கால் புதைய ஏற முன்னால் சுவர் முட்டி நின்றது. எட்டடி சுவர். கொஞ்சம் பின்னால் சென்றால் தான் அவர் தெரிவார், ஆனால் கத்தி பேச வேண்டும் என ரகு எண்ணிக்கொண்டு இருக்கும்போதே ஒருத்தி நடந்து வந்தாள்.

“ப்ளீஸ் வெல்கம்” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றவளைச் சில நொடிகள் பார்த்து நின்று விட்டு ரகு பின் தொடர்ந்தான்.

பங்களாவில் நுழைந்து அவன் நெருங்கும் போதே அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்தவர் ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி நீட்டி இருக்கையைக் கை காட்டினார். “நான் ஹெரால்ட்”

ரகு அமர்ந்தான். “நான் ரகு, ப்ரெஸ் ரிப்போர்ட்டர்” என்றான்.  அவரைக் கவனித்தான். அவர் இந்தியர் இல்லை என உணரமுடிந்தது. “ஏன் என்னை உள்ள கூப்டீங்க”

“சொல்றேன் ,சொல்றேன்” எனத் திரளை நோக்கிக் கூர்ந்திருந்தார்.

ரகு அங்குத் திரும்பிப் பார்த்தான். சற்றே உயர நோக்கில் திரள் முழுதையும் பார்க்க முடிந்தது. ஒரே நேரத்தில் வேவ்வேறு இடங்களில் இருந்த நபர்களின் அசைவுகளைக் கவனிக்க முடிந்தது . மிகச்சிறிய விழியசைவில் எந்தப் புள்ளியையும் தொட முடிந்தது. ரகு, சுரேஷை அழைத்து வந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டான்.

“எவ்வளவு நேரம் இவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கீங்க சார்” என ரகு கேட்டான்.

ஹெரால்ட் வாட்சைப்  பார்த்தார், “வாவ், ரொம்ப நேரமாப்  பார்த்துட்டு இருக்கேன்” எனச் சிரித்தார்.

“நீங்க என்ன பிஸ்னஸ் சார் பண்ணுறீங்க, இப்போ வெக்கேஷன் வந்தீங்களா ” என ரகு கேட்டான்.

“ஓ இல்ல இல்ல, இப்போ நா வொர்க்கிங்” என இடைவெளி விட்டுத் திரளைப் பார்த்தபடி இருந்தார். ரகு அவரைக் குழப்பமாகப் பார்த்தான்.

“யூ சீ அய் யாம் அ ப்ரொபஷெனல் கேம்ப்ளர், சூதாடி”

ரகு அந்தப் பதிலில் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தான். அவர் கோப்பையைப் பிடித்திருந்த விதமே அவர் அலட்சிய சிகரம் என உணர்த்தியது. ஆனாலும் அவரிடம் கேட்டுப் பெறச் சில விஷயங்கள் இருக்கலாம். குறைந்தது இரண்டு கோப்பை மதுவிற்கு இழக்க கொஞ்சம் நேரம் இருக்கிறது. .

ரகு அவரை நோக்கி லேசாகத் திரும்பி அமர்ந்து கொண்டதும் ஹெரால்டு இயல்பாகப் பேசத் துவங்கினார். கோப்பையை நிரப்பிக் கொண்டார்.

“நான் சூதாடியும் ரொம்ப நாள் ஆயிடுச்சு, இப்போ நான் சூதாடிகூட இல்ல,வெறும் பார்வையாளன். நான் ஆட ஆரம்பித்த காலத்தில் பணம்தான் சூதாட காரணம். பணம் பணம்னு ஒரு கட்டத்தில் எனக்கு எதிரில் இருக்கறவன் பணத்துக்காக ஆடாதவன் எனத் தெரிஞ்சுது. அவனுக்குத் தேவை ஆட்டத்துக்கான கிக். அந்த ஆட்டத்துல அவன் விட்டது இப்போ மதிப்புக்கு 50 மில்லியன் டாலர். அதுக்கு அப்புறம்தான் சூதாட்டத்தோட இன்னொரு வடிவம் தெரிஞ்சுது. உண்மையான வடிவம். காலைல எழுந்ததும் குதிரை ரேஸில் 1 மில்லியன் பெட் கட்டுறவன எனக்குத் தெரியும். ஏன் தன்னோட முக்கிய முடிவுகள சூதாடி முடிவெடுக்குற பெருங்கோடீஸ்வரனைத் தெரியும். அவன் விலைக்கு வாங்குன எல்லாத் தொழிலும் சூதாட்டத்தோட முடிவ வச்சுத்தான், தோத்தவன் அவன் கிட்ட வித்து தான் ஆகனும் . ஒரு கேன்சர் நோயாளி சாவானா பொழைப்பானானு பந்தயம் வச்சு அவன் இருந்த நாட்டுக்கே கேன்சர் பற்றிய நோய் ஆராய்ச்சிக்கு நன்கொடை கொடுத்து அவனைக் காப்பாத்துன சம்பவம் தெரியும். அதுக்கு அப்புறம்தான் யோசிச்சேன். ஒருவேளை நன்கொடை தந்தவர் சாவதற்குப் பெட் கட்டிருந்தா . அப்போ தோணுச்சு, இந்த இரக்கமில்லாத சூதாடி சமூகத்துக்குப் பாரபட்சம் இல்லாத களம் வேணும்னு. ஏமாத்த முடியாதது.

கடலை நோக்கிக் கையை விரித்துக் காட்டி ” அவங்க யாரையும்விட இரக்கமில்லாதது, எந்தச் சூதாட்டத்தையும்விட யூகிக்கமுடியாதது ” என்றார்.

“அப்போ சாம்சன் மேல இப்போ சூதாட்டம் நடந்திட்டு இருக்கு” என்று கேட்டான் ரகு.

“சாம்சன், யாரு சாம்சன்” என்றார் ஹெரால்டு.

“இப்போ கடல்ல இருக்கவன், ஐமீன் கப்பல்ல போன மூணு பேர்ல ஒருத்தன், நேத்துக் கரை ஒதுங்குன தாமஸ் ஹென்றியில் இல்லாதவன்” என்றான் ரகு.

“ஓ ” என்றார் ஹெரால்டு.

“அவன் பெயர் எனக்குத் தெரியாது, யூசி முன்னாடி சொன்ன மாதிரி நான் பார்வையாளன். இந்தப் பெட்டிங்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, ஆனால் யெஸ், ஆமா சாம்சன் மேல பெட்டிங் இருக்கு, அவன் பிழைச்சாலும் செத்தாலும் பல கோடிகள் கைமாறும்”.

“இது தப்பில்லையா, ஒருத்தன் உயிரில் விளையாடுவது” என்றான் ரகு.

“இல்லை இல்லை அவன் உயிரோட யாரும் விளையாடலை. இன்னும் சொல்லப் போனால் நாளைக்கு நீங்க போடப் போற ஹெட்லைன்ஸ் மேலதான் எங்கபெட்.  சாம்சன் உயிரில் அவன் சாவின்மீது அதிக ஆர்வத்தோடு இருப்பது நீங்கதான். லுக், யூப்ரேஸ் பீப்பிள்தான். அங்க முழுசா ஒரு நிமிஷம்கூட கேமரா ப்ளாஸ் நிக்கலை, வேறவேற ஆங்கிள் வேறவேற பேட்டர்ன் புல்ஷீட்”.

ரகு எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். ஹெரால்டு ஒரு சிகரெடை எடுத்துப் பற்ற வைத்தார். புகையை வெளியே விட்டதும் முகத்திற்கு முன் பரவியிருந்த புகையைக் கையால் கலைத்து விட்டார்.

“மக்கள் கடலோட போக இருந்த பல காரணங்கள் இப்போ இல்லாம ஆயிடுச்சு. இந்த மக்களெல்லாம் கடலுக்கு எதுக்குப் போகுது, முற்றறிந்த ஞானத்த தேடியா, காலத்தைக் கையில் வைத்து உருட்டும் வித்தை தேடியா, சாகாவரம் தேடியா, இதெல்லாம் தேடி யாருமே கடலுக்குப் போனதில்ல எப்பயும், அந்தக் காலம் போல இல்லாம மக்கள் இப்போ உண்மையிலேயே கடல்ல இறங்குறாங்க போகும் போதே என்ன வேணும் எங்கத் தேடனும்னு தெரிஞ்சு போறாங்க. ஆனாலும் கடல் இன்னமும் புதிர்தான். மனுஷனுக்கு முழுசா திருப்தியோட  ஒன்ன விட்டொழிக்கனும்னா இன்னமும் கடல்தான் அதுக்கு ஒரே வழி. சமுத்திரம் மொத்தமும் அதுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கு”  என்றார் ஹெரால்ட்.

அவர் கண்கள் கடலைப் பார்த்திருந்தன . பார்த்திருந்தன  என்றால் நிலைக்குத்திக் கூர்ந்திருப்பது போல இல்லை. மொத்தக் கடலையும் விரிந்து பார்த்திருந்தன. அவர் கண்களில் ஒரு சமுத்திரம் விரிந்திருந்தது.

“ஆனாலும் எல்லாத்தையும் அது மறைச்சே வச்சிடுறது இல்ல. அதுக்கான நேரம் வரும்போது எல்லாமே கரை வந்துதான் சேருது” எனக் கூறினார்..

“இப்போ தாமஸும், ஹென்றியும் ஒதுங்குன  மாதிரியா” என்றான் ரகு. அவர் பேசியது இயல்பாக எப்போதும் அவர் சொல்லும் வரியாக இருக்கலாம். அல்லது தன்னோட ஆத்ம வரியாக அவர் நினைத்துக் கொண்டு இருப்பதாக இருக்கலாம். எல்லாப் பெரிய மனிதரும் அப்படி ஒன்றை வைத்திருப்பது உண்டு. பெரும்பாலான தமிழகப் பெரியவர்களுக்கு அது சமீபத்திய வார இதழில் வந்ததாக இருக்கும். அந்த வரி எப்படிக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவர்கள் வாழ்வை மாற்றியது எனத் தினமும் இரண்டு இளைஞர்களிடம் சொல்வதை லட்சியமாக வைத்திருப்பர்.

ஹெரால்ட் பேசாமல் அமர்ந்திருந்தார்.

ரகு கேட்டான் “சரி சொல்லுங்க, அந்தக் காலத்துல  நீங்க எப்படிக் கடல்ல இறங்குனீங்க”

“நாங்க இறங்குனது கடல்ல இல்ல, காத்துல. தரையில இருந்து காத்துல ஏறி இன்னொரு தரையில எறங்கிடுவோம். அங்கிருந்து இன்னொன்னு மத்தொன்னுனு போயிட்டே இருப்போம். காத்து தவறிட்டா மறுபடியும் வர வரைக்கும் தரை வாசம்தான். அதனால கப்பல்ல இருக்கவங்களுக்குத்   தரைக்கு ஒரு வீடும் குடும்பமும் இருக்கும். அவங்க திரும்பி வரும்போது வீட்டுப் பெண்கள் ஆணுக்குப் பிடிச்ச அலங்காரத்தில் இருப்பாங்க அவங்க திரும்பிப் போற வரைக்கும் அப்படித்தான் இருப்பாங்க. ஒரு நகரமே தன்னைத் தானே அலங்காரம் செஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும். அப்படி ஒருமுறை கிழக்காகப் போய் வடக்கிலிருந்து என் தாத்தா திரும்பி வந்தபோது தூக்கிட்டுப் போக நான் மட்டும்தான் இருந்தேன். அதுக்கு அப்புறம் கப்பல்தான். கடல்தான்”.

“கடலா, நீங்க ப்ரொபஷெனல் சூதாடினுதான சொன்னீங்க” ரகு கேட்டான்.

ஹெரால்ட் சிரித்தார்,  மீதமிருந்த ஒயினை வாயில் ஊற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் மெதுவாக ஒரு ஜென்டில்மேன் போல அருந்தினார். “வெற்றிகரமான சூதாடியோட அடிப்படையே இழப்பயும் லாபத்தையும் ஒரே மாதிரியாப் பாக்குறதுதான். அதக் கற்றுக் கொடுத்தது கடல்தான்”. சொல்லி முடித்ததும் இரண்டு முறை விக்கினார். கொஞ்சமாக மூச்சடக்கியவாறே கோப்பையை நிரப்பிக் கொஞ்சமாகக் குடித்தார்.

ரகு அவரிடம் நிறையக் கேட்க விரும்பினான். ஆனால், எந்தக் கேள்வியும் அவன் மனதில் இல்லை. இப்போது அவரே சொல்ல கூடிய மனநிலையில் இருப்பது தெரிந்தது. “என்ன” என மட்டும் கேட்டான்.

ஹெரால்ட் அந்தக் கேள்வியில் திடுக்கிட்டார். ஒரு சிறிய ஏப்பத்தை விட்டுவிட்டு “நான் கடல்ல போனது இப்போ இல்ல அது ரொம்ப காலம் முன்னாடி,  என் தாத்தா அவரோட கூட்டிட்டுப் போய் கப்பல்ல ஏறுகிறவரைக்கும் அவர் கடல் கொள்ளையர் எனத் தெரியாது. வணிகர்ன்னுதான் நினச்சிட்டு இருந்தோம். அப்போ எனக்கு ஏழு வயது. தாத்தா செத்தும் 14 வயசு வரைக்கும் அந்தக் கப்பல்லதான் இருந்தேன். அதாவது அந்தக் கப்பல் ப்ரெஞ்ச் போர்க்கப்பலால மூழ்கடிக்கபடுற வரைக்கும், கேப்டன் ஜோன்ஸ் வழிநடத்துன அந்தக் கப்பல் பேரு விர்ஜின் மேரி, நா பாத்ததுலயே பெரிய பாய்மரக் கொடி அந்தக் கப்பலோடதுதான். அந்தக் கப்பல் கூட ஆறு துணைக் கப்பல் வரும் 1000 பேர் கொண்ட ஒரு சிறிய கப்பல் ராணுவம் அது, அந்தக் கப்பலை நாங்க யாரும் அப்போ எதிர் பார்க்கலை” என்றார்.

“அப்போ நீங்க ஒரு முன்னால் கடல் கொள்ளையர்” என்றான் ரகு.

ஹெரால்ட் கையில் இருந்த கோப்பையைத் தூக்கிக் கடலை நோக்கிக் காட்டினார். “சிறந்த கடல் கொள்ளையன்” என்றார்.

“எப்படித் தெரியுமா, ஏன்னா இப்போ உயிரோட இருக்குற ஒரே பைரேட் நான் தான். அப்படிதான், ஐ சர்வைவிட்  விர்ஜின் மேரி”.

“இல்லையே இப்போகூட சோமாலியால பைரேட்ஸ் இருக்காங்க, கரீபியன்ல கூட கொஞ்சம் ஆக்டிவிட்டி இருக்கு, ஏன் வரலாற்றுலயே இப்போதான்…” என ரகு சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஹெரால்ட் இடை மறித்தார்.

“பூல்ஸ், இவங்க யாரும் பைரேட்ஸ் இல்ல, ஒரு பைரேட் ஷிப்ல  தரை தொடைக்கக் கூட இவனுங்க தகுதியானவங்க இல்ல, ஐ நோ ரியல் பைரெட்ஸ்” என்றார்.

“புல் ஷீட்” என்றான் ரகு, “மோட்டர் கப்பல் வந்து இருநூறு வருஷம் ஆயிடுச்சு. 1912 டைட்டானிக் சிங்க். ஓல்ட் ஏஜ் பைரேட்ஸ் எல்லாம் செத்து முந்நூறு வருஷம் இருக்கும்”.

“இருக்கலாம், பட் தட் மீன் நத்திங். நான் சொல்லுறது நடந்ததுன்னு நீ நம்பனும்னு அவசியம் இல்லை, இது எனக்கு நடந்திருக்கலாம், என் தாத்தாவுக்கு இல்லனா அவரோட தாத்தாவுக்குனு யாருக்கு வேணாலும் நடந்திருக்கலாம், நடக்காமல் போயிருக்கலாம்” ஹெரால்ட் ரகுவைப் பார்த்தார். தொடரட்டுமா என அவர் கண்கள் கேட்டன.

ரகு மெலிதாகத் தலையசைத்து “வாட் எவர்” என்றான்.

“ஒரு பைரேட் எப்பவும் கடலைப் பாத்துப் பயப்படுவான். ஏன் ஒரு போர் கப்பல் பைரேட் எப்பவும் கடலைப் பார்த்து பயப்படுவான். அந்தக் காலத்துல கப்பல்ல கால வச்ச எல்லாருமே கடல பார்த்துப் பயந்தவங்கதான்.  அது உயிர் பயம் இல்ல. எல்லையே இல்லாம சாத்தியங்கள் இருக்குற வெளிய பத்துன பயம். நீச்சல் எல்லாம் கிணத்துக்கும் குளத்துக்கும்தான். காட்டாருக்கு இல்ல. கடலுக்கு இல்லவே இல்ல, கடல் உன்னைத் தேடித் தேடிக் கொல்ல முயற்சிக்காது, ஆனால் உன்னைக் காப்பாற்ற சின்னச் சாத்தியத்தைக் கூட நகர்த்தாது”.

“கடல் ஆயிரம் கையோடு எழும்போது எத்தன பெரிய கப்பலும் தக்கைதான். தெரியுமா… கடல்ல பெரிய தண்டனையே கடலுல குதிக்கச் சொல்லுறதுதான். பெரிசா கை கால கட்டனும்னு அவசியம் இல்லை. கடல விட பெரிசா மனுசன் எந்தச் சித்ரவதையையும் தந்துட முடியாது. இன்னொன்னு சொல்லுறென், நீ படங்கள்ளகூடப் பாத்திருக்கலாம், கப்பல்ல ஒரு பலகை வெளியே நீட்டி இருக்கும். அது மேல ஒரு ஆள் இருப்பான், கத்தியக் காட்டி அவன மிரட்டிக் குதிக்க வைப்பாங்க. அது ஒரு ஆதிச்சடங்கு. ரொம்ப ரொம்ப பழைய சடங்கு. எவ்வளவு பழசுனு சொல்லவே முடியாது. இந்தக் கடலும் மனிஷனும் உரச ஆரம்பிச்சுகிட்ட காலத்தில் இருந்து இருக்கலாம்.  அதுக்கும் முன்னாடி இருக்கலாம்”.

“பலி. கடல்ல திசை தவறி, இல்ல இல்ல திசைக்கும் கடலுக்கும் சம்பந்தம் இல்ல. திசை நிலத்துக்கு மட்டும்தான். காத்த பிடிச்சுப் போற கப்பலுக்குத் திசை எல்லாம் இல்ல. கடல் ஒரு நொடியில இருநூறு அடி பாதாளமா விரியக் கூடியது. சில நேரம் இருநூறு அடிக்கு மேலயும் தூக்கி விட்டுடும். கப்பலுல இந்த மாதிரி நிலைமைல எந்த மனுஷனும் செய்யக் கூடியதுதான். கடலுக்குக் குருதி பலி. அது பசி அடங்க ஒரு மனுஷன கடல்ல வீசிடுறது”

“அது கடலோட சீற்றத்த அடக்குமா தெரியாது, கடல்ல விழுந்தவன் எப்படிச் சாவான்னு தெரியாது, ஏன் கப்பல்ல இருக்கவங்க தரை போய் சேருவோமானு தெரியாது, கடலோட அழகே அது தான். அங்கப் பாரு ஒவ்வொரு அலையும் பெருகி எழுந்து வர்றத, அதுல நீ நிச்சயம் மணலைத்  தொடும்னு  எந்த அலைய நினைக்கிறியோ அது நிச்சயம் மணலைத் தொடாது, பாரு நீயே பாரு…”.

ரகு கடலைப் பார்த்தான். பெரிதாக எழுந்த ஒரு அலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மணலுக்குப் பத்தடி முன்பு வலுவிழந்து இல்லாமலாகியது. அதன் பின்னே வந்த சிறிய அலை கரையைத் தொடும் முன்பு பெரிதாக எழுந்து பரவிய மணலைத் தாண்டி மேட்டில் படரிச் சிதறியது.

“ஆனா இது செஞ்சுதான் ஆகனும் . அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அருகி கடற் கொள்ளையர்கள் மட்டும் செஞ்சாங்க. அதுவும் துரோகிகளுக்கு மட்டும். துரோகத்துக்கு ஒரு பைரேட்ஸ் சீ த்ரோவைப் பயன்படுத்துறான் என்பதே அது எத்தனை பயங்கரமானது என்பதுக்கு அத்தாட்சி. நானும் அப்படித்தான் அந்தப் பலகையில் இருந்து குதிச்சேன்”.

“நீங்களா ” என்றான் ரகு.

“ஆமா ஆமா விர்ஜின் மேரி வந்தப்ப” என்றார்.

“கப்பலில் முதலில் நான் ஏறும்போது மெலிந்த வெளுத்த சிறுவனாக இருந்தேன். நிலையில்லாமல் ஓடி ஓடி விழும் சிறுவனாகத்தான் கப்பலில் இருந்தவர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால்… என்னால் ஓடாமல் இருக்க முடியவில்லை. அசைந்து கொண்டே இருக்கும் கப்பலில் அமர்நதிருந்தால் அதிகம் தலை சுற்றும், நின்றோ நடந்தோ  அந்த அசைவை நிகர் செய்ய வேண்டும். அதோடு சிறுவனாக ஓடுவதுதான் தலை சுற்றலைத் தவிர்க்க சிறந்த வழி என நான் நம்பினேன்.  பாய் இறக்கப்பட்ட பிறகு நான் இன்னும் அதிகமாக ஓடினேன்”.

“அப்போது எங்கள் வழிமுறை வித்தியாசமானது, வழக்கமான கடற்கொள்ளையர்களுடையது அல்ல. நகரில் இருந்து கடைசி கப்பல் கிளம்பும் முன்னர் நாங்கள் கிளம்புவோம். ஏற்றுமதிக்கு எனப் பெற்ற பொருட்கள் அங்கேயே எங்கள் கடைகளில் மறைத்துவிட்டு காலிப்பெட்டிகளைக் கொண்டு நிரப்பி, பொருட்களால் நிரம்பியது போலவே கப்பலில்  கிளம்புவோம். நடுக்கடலில் கப்பலை நிறுத்திக் காத்திருப்போம். நாங்கள் காத்திருப்பதில் ஒரு சூட்சமம் உள்ளது. பாயை முழுதாக மேலேற்றி விட்டுக் கிழிந்த பாய் ஒன்றை அதில் தொங்க விடுவோம். கச்சிதமாக எரிக்கப்பட்ட பாய் அது. கடலில் நிலையாக இருப்பதற்கும் தள்ளிப் போய்விட்டால் திரும்பி வரவும் அதுவே போதுமானது. மனிதர்கள் எல்லாரும் பதுங்கிக் கொள்வோம். காலிப் பெட்டிகளை உடைத்துக் கடலில் வீசி விடுவோம். எங்கள் பாய்மரமும் ரகசிய அறை கொண்டது. சரியாக 11 பேர் அதில் பதுங்கி இருக்க முடியும். அதற்காகவே உட்புறம் குடைந்தது.  கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது போலவே காத்திருப்போம். நானும் சேர்ந்தபோது எனக்கு பதுங்கிடம் தேடுவதை விட என்னை அதில் வைப்பதுதான் அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. மெலிந்த என் உடலை ஒடுக்கி கொண்டுதான் நான் அதில் பதுங்க முடிந்தது. பின்னர் சிறுவன் ஒருவன் தனியாக இருப்பது அடுத்த கப்பலை நெருங்கி வர வைக்க உதவும் என என்னை மேற்தளத்தில் விட்டனர். என் கையிலும் காலிலும் துணி சுற்றி வெட்டுப் பட்டவன் போல தோன்றச் செய்தனர்”.

“அப்படி நெருங்கி வரும் கப்பலைத் திருடி அதைத் அடுத்த நகரில் போய் வியாபாரம் செய்வீங்க” என்றான் ரகு.

“ஆமாம், ஆனால் எங்கள் பாதுகாப்பு மற்றும் ரகசியத்திற்கு ஒரு விலை இருந்தது. வரும் கப்பலில் இருப்பவர் ஒருத்தர் கூட தப்பக் கூடாது. அனைவரும் கொல்லப்பட்டனர். முதலில் அதைப் பார்த்த பின்பு நான் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம் காய்ச்சல் என்பது மரணம்தான். நான் மெலிந்த, ஏழு வயது சிறுவன். காய்ச்சலின் அறிகுறிகளான தடுமாற்றம், நடுக்கம், குளிர் என எல்லாவற்றையும் கடல் நான்கு மடங்காக ஆக்கிவிடும். அப்போது என்னைப் பார்த்து கொண்டது யார் எனத் தெரியவில்லை. தாத்தாவாக இருக்கலாம். எனக்கு அவர் மறந்தே போய்விட்டார். ஆனால், நான் எப்படியோ பிழைத்துக் கொண்டேன். கொள்ளையின்போது பதட்டத்தில் இருந்து உற்சாகமாக நான் மாற அதிக காலம் ஆகவில்லை. கடைசியாக, என்னிடம் கத்தி தரவில்லை என்பதே என் குறையாக இருந்தது. கத்தியும் தந்தார்கள். பட்டையான அதே நேரம் எடையிலாத வாள்”.

ரகு நிமிர்ந்து அமர்ந்தான். “அப்போ உங்களுக்கு என்ன வயசு” என்றான்.

“பதிமூன்று இருக்கலாம், அப்போதுதான் அவளைப் பார்த்தேன், வேர்க்கடலையும் பருத்தியும் ஏற்றி வந்த வணிகக் கப்பலில்.  அவளுக்கும் என் வயதுதான் இருக்கும். மிரண்ட கண்களோடு  நின்றிருந்தாள். அறைக்குள் ஓடு என அவளை நோக்கிக் கத்திய எந்தக் குரலும் அவளை அடையவில்லை. தொலைவில் இருந்தே அவளை நான் பார்த்து விட்டேன். நான் தேடிய உருவம். கப்பலைத் தாண்டிப் போய் அவள் முன் நின்றேன். அடுத்த சில நிமிடங்கள் நான் எதையும் உணரமுடியவில்லை. காலம் எங்கள் இருவரிடமும் மட்டும் இருந்து விலகிப் போயிருந்தது. அவளைக் கொல்லு, அவளைக் கொல்லு என என்னைச் சுற்றி ஒலி எழந்தது. அப்போதுதான் சுற்றிப் பார்த்தேன். அவளின் கப்பலில் எல்லோரும் இறந்து விட்டிருந்தனர். சுற்றிலும் எழுந்த ஒவ்வொரு குரலுக்கும் நான் ஒவ்வொரு முறை அவளைக் கொன்றேன், என் மனதில். அவள் மார்பில் கத்தியை இறக்கினேன் ஒரு முறை. வயிற்றில் ஒருமுறை, கழுத்தில் ஒரு முறை… எனப் பல விதங்களில் அவளைக் கொல்வதாக கற்பனை செய்தேன். ஆனால் நானோ என் கையோ அசையவில்லை. எங்கள் கேப்டன் வரும்போது அவளின் தலையைத் தனியாக வெட்டி உயர்த்தி பிடித்திருப்பது போல எண்ணிக்கொண்டு இருந்தேன். அவர் அவளைப் பிடித்து தூக்கிச் சென்றார். பலி பலகையில் நிறுத்தினார். என் மார்பு பட்டத்தைத் துடித்தது. என்னை பார்த்துப் போ என்பது போலத் தலையசைத்தார்.  அவர் பேசுவதற்கு மறுப்பு கிடையாது. கடற்கொள்ளையர்கள் விதி அது. அவரின் ஒரு சொல்லை மறுத்தாலும் அது அறைகூவல் விடுத்து மொத்தமாகத் துண்டித்துக் கொள்வது தான். நான் அவளிடம் போனேன். அப்போதுதான் அவளின் கண்களைப் பார்த்தேன். நடந்ததை அப்போதுதான் ஒருவாறாக அவள் கிரகித்திருந்தாள். நான் கத்தியைத் தூக்கி அவளின் முகத்தை நோக்கி நீட்டினேன். அப்போது மட்டும் எப்படி என் கை அசைந்தது எனத் தெரியவில்லை. ஆனால் செய்தேன். அவள் என்னைப் பார்த்துத் தலை அசைத்தாள் மிக மெலிதாக. எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. என்னைத் தூங்க வைக்கும்போது அம்மா செய்வது போல. அவள் சாய்ந்து கடலில் விழுந்தாள். கடல் அவளை மோதி சற்றே விலகித் தெறித்தது. கப்பலில் இருந்த அனைவரும் உற்சாகமாக ஒலி எழுப்பினர். கை தட்டினார்கள். சிலர் வந்து என் தோளில் கை வைத்துப் பெருமைப்பட்டனர். நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவள்  நீந்திப்போய் அங்கு ஒரு பலகையைப் பிடித்துக் கொண்டாள்”.

“யெஸ் யெஸ்…, அப்போ அவங்க அந்தப் பலகையைப் பிடிச்சு தப்பிச்சிருப்பாங்க தானே, அவங்கள மறுபடியும் பாத்தீங்களா” என்றான் ரகு அவன் குரலில் சிறிது உற்சாகம் கூடியிருந்தது.

“ஹாஹ்ஹா ஹா” ஹெரால்டு குலுங்கிச் சிரித்ததில் கோப்பையில் இருந்து கொஞ்சம் தரையில் ஊற்றியது. ரகு புரியாமல் பார்த்தான்.

“நான் ஓடிப்போய் கப்பலின் முனையில் இருந்து கத்தினேன். பலகையை விட்டுடு  என. என்னைப் பார்த்து மேலும் சிலர் கத்தினர். அடித் தொண்டையில் இருந்து கத்தினேன். பலகையை விட்டுடு பலகையை விட்டுடு எனக் கப்பலே ஆக்ரோஷமாக க் கத்தியது. நாங்கள் கத்திய சத்தத்தில் கப்பலே அமிழ்ந்து எழுவது போலத் தோன்றியது. நான் அவளின் கண்களையே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் கண்களில் ஏதோ தெரிந்தது. நான் எப்போதும் அறிந்தது. எப்போதும் என் உடன் இருப்பது போன்ற ஒன்று”.

ரகு கேட்டான் “அவங்க கண்ணில் சமுத்திரத்தைப் பார்தீங்களா”

தன் விழிப் பரப்பில் மெலிதாகப் படர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ஹெரால்ட்.

“கடல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரி. எப்போதாவது அபூர்வமாகப் பார்ப்பவனுக்கு அலைகடல். அதைத் தாண்டி கடலைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. மீனவர்களுக்கும் வணிகர்களுக்கும் கடல் சாந்தமான அன்னையில் இருந்து ரௌத்திரமான ராட்சசி.  முத்து குளிப்பவர்களுக்குக் கடல் ஆழ்ந்த அமைதி, இதமான அழுத்தமும் குளிச்சியான இருளும் கொண்டது. இது ஒவ்வொரு தனி மனுசனுக்கும் மாறும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறும். ஆனால் கடலின் ஒட்டு மொத்தப் பண்பு எனச் சுட்ட வேண்டுமெனில் அதன் எதிர்பாராத தன்மையைதான் சொல்ல வேண்டும். சாந்தமான கடல் பரப்புதான் இருப்பதிலேயே ரொம்ப ஆபத்தானது. கடற்பரப்பில் இரண்டு சக்தி செயல்படும். நீருக்கு மேலே காற்று. நீருக்குக் கீழே நீரோட்டம். கப்பல் காத்திலயும்… ஆமை மாதிரி உயிரினங்கள் நீரோட்டத்திலயும் பயணம் செய்யும். இந்த இரண்டு சக்தியும் ஒண்ணையொன்னு பெரும்பாலும் வெட்டிக்கும். நிதானமான பெரிய அசைவுகள் கடல் பரப்பில் வரும். காற்று கடைசியாக் கரையைச் சந்திக்கும் வழி கொண்டது. நீரோட்டம் கடைசியாச் சமுத்திரத்தை சந்திக்கும் வழி கொண்டது. இந்த வெட்டு ஏற்படுத்தும் அலைகள் எங்க க் கொண்டு போகும்னு சொல்லவே முடியாது. அதை மனுஷன் இன்னும் ஆராயக்கூத் தொடங்கல. வழக்கமாக் கைவிடப்பட்ட கப்பல்கள் போன இடங்கள்தான் நேவி முதலில் தேடும் இடங்கள். இரண்டாவதா தொலைந்த இடம்னு நம்பப்படுகிற இடத்தைச் சுற்றிப் பத்து நாட்டிக்கல், இருபது நாட்டிக்கல் எனக் கொஞ்சம் கொஞ்சமா அதிகப்படுத்தி தேடுவாங்க. ஆனா இந்தக் கடல் அலைகள் அதிகபட்சமா எதாவது தீவில் போய் தள்ளி விடலாம். இல்லனா கடைசி வரை கடலில் தான் சுத்தி விட்டுட்டு இருக்கும். பசியோடு தாகத்தோட. கடல்ல மாட்டிக்கிடவங்களுக்குச் சூட்டுப்புண் சேத்துப்புண் என ரெண்டுமே வரும். உடம்ப கொஞ்சம் கொஞ்சமா அரித்துத் திண்ணும் வழி எல்லாமே அதுக்குத் தெரியும்”.

ரகு சாம்சனை நினைத்துக் கொண்டான். “அப்போ சாம்சனும் இப்படித்தான் கடலில் சுத்திட்டு இருப்பார்னு சொல்லுறீங்க”

“இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம், ஆனா உன்ன இங்க க் கூப்பிட்டது அதுக்கு தான்” ஹெரால்டு ஒரு பேப்பர் எடுத்தார். அதில் ஏதோ எழுதி மடித்து ஒரு கவரில் போட்டு நீட்டினார். ரகு அதை வாங்கிக் கொண்டதும்.

“அதை இப்போ பிரிக்காதே , நாளை காலை ஐந்து மணிக்கு இங்க நடக்க போறத நான் எழுதிருக்கேன். அதாவது சாம்சன் கிடைப்பானா, இல்லை அவன் பிணம் கிடைக்குமானு. உங்க பேப்பர் ப்ரெஸ்ங்கிம் டைம் என்ன, 11 ஒ க்ளாக் இருக்குமா. நீ விரும்பினா இந்த த் தகவலை நீ பப்ளிஷ் பண்ணலாம். அதுல இருக்கிறது நிச்சயம் நடக்கும். இட் வில் பீ எஸ் பிக் திங் பார் யூ” என்றார்.

ரகு புரியாத மாதிரி முகத்தை வைத்திருந்தான். “என்ன சொல்றீங்க, சாம்சன் கிடைப்பானா மாட்டானானு உங்களுக்கு எப்படித் தெரியும்” என்றான்.

“தெரியும்னு நான் சொல்லலை, ஐ ஆம் கெஸ்ஸீங், என் கெஸ்ஸீங் எப்பவும் தப்பானதில்லை , நீ என் வீட்டுக்கு வருவனு உன்னைப் பாத்ததும் கெஸ் பண்ணேன். லுக் வேர் யூ ஆர்” என்றார்.

“வாட் எவர், அப்படி கெஸ் பண்ண முடியுன்னா போய் கோஸ்டல் கார்ட் கிட்ட எங்க தேடனும்னு சொல்லலாம்ல, ஏன் இப்படி விளையாடிட்டு இருக்கீங்க” ரகு கொஞ்சம் கோபமாகவே கேட்டான். அவன் மனதில் அவள் சேலையைத் தோளில் இழுத்து விட்டுக் கொள்ளும் காட்சி ஒரு கணம் வந்து போனது.

“நான்ஸென்ஸ், கோஸ்டல் கார்ட் கிட்ட நான் போய் என்ன சொல்லனும், நான் ப்ரொபஷனல் சூதாடி, எனக்கு சாம்சன் இப்போ மிதக்குற இடம் தெரியும், நீங்க அங்கப் போய் தேடுங்கன்னா, ஸ்டுபிட். லுக் நோ ஒன் கேன் ஹெல்ப் இம் நௌ” என்றார்.

ரகு ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சில நொடி விட்டுப் பேசாமல் திரும்பிக் கொண்டான். அந்த கார்டை மேசை மீது வைத்து விட்டுக் கோப்பையை எடுத்துக் குடித்தான்.

“உங்களை ஏன் பலகையில் இருந்து தள்ளுனாங்கனு எனக்கு இப்போ புரியுது, பட் நீங்க இன்னும் உயிரோட இருக்குறத தான் என்னால புரிஞ்சுக்க முடியலை” என்றான்.

“நான் ஏன் உயிரோட இருக்கேன்னு எனக்கும் தான் புரியலை, ஆனா உனக்கு எதுவும் புரியலை, புரிஞ்சாநீ இப்படிப் பேச மாட்ட, பலகையில் இருந்து யாரும் என்னைத் தள்ளி விடலை நானேதான் குதிச்சேன். ” என்றார்.

ரகு நிதானமில்லாமல் இருந்தான். கோப்பையை அவனே மீண்டும் நிரப்பிக் கொண்டான்.

“வழக்கம் போல எங்களோட அடுத்த பயணத்துல நாங்க பாயை ஏத்திட்டுக் காத்திருந்தோம். நாங்க எதிர்பார்த்தது பருத்தியும் கோதுமையும் ஏத்துன கப்பலுக்கு. பெட்டிகளை உடைச்சுப் போட்டாச்சு, எரிஞ்ச பாயை ஏத்தியாச்சு, எல்லாரும் பதுங்கியாச்சு. ஆனா வந்தது விர்ஜின் மேரி, தொலைவில் இருந்து அதைப் பாக்கும்போது பத்து குட்டியோட  வர்ற பன்னி மாதிரி இருந்துச்சு. நான் அதைச் சொன்னபோது யாரும் சிரிக்கலை. விர்ஜின் மேரி இப்படி தகவல் இல்லாம வெறுமனே வர்ற ரோந்து கப்பல் இல்லை. கேப்டன் ஜோன்ஸ் 1000 கொள்ளையர்களைக் கொன்னவர்னு பேர் எடுத்தவர். வானம் இடிஞ்சு தூரல் போட்டுச்சு, நாங்கள் புரியாமல் நின்றிருந்தோம். பாயை மாற்றி வேகமாகச் சென்றாலும் விர்ஜின் மேரியின் வேகத்திற்கு நாங்கள் தப்பிக்க முடியாது. கேப்டன் பதுங்கி இருந்து எத்தனை பேர் கொல்ல முடிகிறதோ கொன்று விட்டு இறப்பது என முடிவெடுத்தார். எல்லாரும் ஆயுதங்களோடு கலைந்தனர். எனக்கு அப்போது இரண்டு வழிகளில் இடைஞ்சல் இருந்தது. ஒன்று நான் மேற்பரப்பில் இருப்பது வீரர்களைச் சந்தேகபடுத்தும். இரண்டு சிறை பிடிப்பது. உயிரோடு கொள்ளையர்கள் பிடித்துக் செல்லப்பட்டுத் துன்புறுத்தப்பட்டுப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். கப்பலில் உயிருடன் பிடித்துச் செல்ல எளிதான நபர் நானாக இருந்தேன். கேப்டன் என்னிடம் வந்தார். நீ கடலில் குதித்து விடு என்றார். எளிதானது அதுதான் என்று என்னைச் சம்மதிக்க வைக்க முயன்றார். ஆனால், நான் ஏற்கனவே கடலில் குதிக்கத் தயாராகி விட்டிருந்தேன். அவர் வருத்தமும் தயக்கமுமாக என்னுடன் பலகை வரை நடந்து வந்தார். தூரல் தடித்துப் பெருமழையாக ஆனது. நான் ஏறி பலகை முனையில் நின்று திரும்பிப் பார்த்தேன். கத்தி எனக் கேட்டேன். அவர் கத்தியை உருவினார். என்னைப் பார்த்து நீட்டி எதையும் பிடித்துக் கொள்ளாதே என்றார். நான் மெல்லச் சாய்ந்து விழுந்தேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அது படபடப்பாக இருந்தது. உடல் தானாகவே நீச்சலடித்தது. நான் எத்தனை முயன்றும் அதை நிறுத்த இயலவில்லை. முகத்தில் மழை பட்டு வழிந்து மூச்சு திணறியது. மெல்ல மெல்ல காற்று வேகம் அதிகரித்து புயல் வீசியது. எனக்கு அது வரை மட்டுமே நினைவில் இருக்கிறது. விழித்தபோது தரையில் இருந்தேன்”.

“அப்போ கப்பலில் இருந்தவங்க, எல்லாரையும் கொன்னுட்டாங்களா” என்றான் ரகு. ஹெரால்டு அவனில் மதிப்பீடுகளை மீண்டும் மீண்டும் உடைத்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

எல்லாரும் செத்துட்டாங்க, கொல்லப்படாங்களானு சரியா தெரியலை, ஆனா செத்துட்டாங்க, கரையில் கண் முறிக்கும் போதே என்னால் அதை உணர முடிஞ்சது. விர்ஜின் மேரியும் அந்தப் புயலிலே மூழ்கிருச்சு, அதிலிருந்தும் யாரும் பிழைக்கலை.

ரகு மனதில் ஒரு கேள்வி எழுந்தது. விர்ஜின் மேரி உங்களால் தான் வந்ததா என்று கேட்கத் தோன்றியது. கேட்டாலும் ஹெரால்டு மறுக்கப்போவதில்லை எனத் தோன்றியதால் கேட்காமல் விட்டான்.

ரகு கோப்பையை வைத்து விட்டு எழுந்தான். ஹெரால்டு தான் பிழைத்தது பற்றிய வருத்ததில் இருந்தார். அவர் கேட்காதது அது எனத் தோன்றியது. கேட்காதது என நினைத்தது அவர் சொன்ன வரி நினைவிற்கு வந்தது.

“கடல் உங்களுக்கு என்ன தந்தது” எனக் கேட்டான்.

“கேட்காதது, மோர் எக்ஸாக்ட்லி யாருமே கேட்காதது” என்றார். குரல் உடைந்திருந்தது.

“நீங்க சொன்ன ஆதி சடங்கு, அது கேனபலிஸம் தானே” எனக் கேட்டான்.

ஹெரால்ட் தலையசைத்தார்.

“அப்போ ஏன் அவன் கடலில் குதிக்கனும், சண்டை போட்டிருக்கலாமே, அது கூடப் பரவாயில்லை ஏன் இதைச் சடங்கா க் கடைப்பிடிக்கனும்” என்றான்.

“ஏன்னா சில நேரங்களில் மனுஷனின் நடவடிக்கைகள் சமுத்திரத்தை விட பயங்கரமானது, அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது”

***

ரகு  நடந்து மீண்டும் திரள் மையத்திடம் வந்தான்.

சாம்சன் அம்மா களைத்திருந்தார். பெண்கள் அப்போது தான் எழுந்து சென்று விட்டு வந்திருந்தனர். முக ஒப்பனையில் தெரிந்தது. சேலை கட்டியவளைத் தேடினான். அவள் அங்கே இல்லை. கேமராக்கள் எல்லாம் அமைதியடைந்திருந்தன.

ரகு திரும்பி ஹெரால்டைப் பார்த்தான். அங்கேயே அமர்ந்திருந்தார். அவரிடம் பேசியதை மனதில் ஓட்டிப் பார்த்தான்.  தெளிவாக மனதில் இருந்தது. சட்டையில் இருந்து அவர் தந்த கார்டை எடுத்தான். பிரித்துப் படிக்கலாமா என அவன் நினைக்கும் போதே கூட்டம் லேசாக விலக அவன் திரும்பிப் பார்த்தான். அவள்தான். சேலையை மாற்றியிருந்தாள். மதியம் அணிந்திருந்த அடர் வண்ணம் போலில்லாமல் இளம் பச்சைச் சேலை. அவள் அமர்ந்து பின்னலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டாள். பின்னல் அளவிற்கே நீளமாகச் சூடியிருந்த மல்லிகைப் பூவும் முன்னால் வந்து விழுந்தது. அவள் அதிலிருந்து மடியில் விழுந்த ஒரு மலரை எடுத்து விரலில் வைத்துச் சுற்றினாள். ரகு கையில் இருந்த கவரைப் பார்த்தான். அதை பிரித்துப் பார்க்க முடியும் எனத் தோன்றவில்லை, அதைக் கிழித்து போட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஹெரால்ட் கோப்பையை அவனை நோக்கி உயர்த்தினார்.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button