இணைய இதழ்இணைய இதழ் 48கட்டுரைகள்

அலகிலா விளையாட்டுடையான் – ஆர். காளிப்ரசாத்

கட்டுரை | வாசகசாலை

ம்பராமாயணத்தின் முதல் பாடலில்,அலகிலா விளையாட்டுடையான்’ என்று ஒரு பதம் வரும். அதையே யுவன் சந்திரசேகர் படைப்புலகம் குறித்த எந்த ஒரு உரைக்கும் தலைப்பாக வைக்கலாம் என்று நான் கருதுவதுண்டு. ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ நாவலை என்னுடைய துவக்ககால வாசிப்பில் ஒரு அற்புதங்களைச் சொல்லும் கதையாக புரிந்து வாசித்திருக்கிறேன். அதற்குப் பின்னால் ஒரு மறுவாசிப்பில் அது சொல்வது அற்புதங்களை அல்ல, அது அவற்றை கேள்வி கேட்கிறதோ எனத் தோன்றியது. ஒவ்வொரு முறை வாசிப்பின்பொழுதும் ஒரு பிரதியின் நுட்பங்கள் முந்தைய வாசிப்பை விடத் துலங்கி வருவது இயல்பாக நிகழக்கூடியது. ஆனால் முந்தைய வாசிப்பைக் கலைத்துப் போடுவது என்பது யுவன் சந்திரசேகர் அவர்களின் நாவல்களில், சிறுகதைகளில் நிகழ்ந்துள்ளது. யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்த, ‘பெயரற்ற யாத்ரீகன்’ தொகுப்பு வழியாகவும் மேலும் சிறுகதைகளின் வழியாகவும் நான் அவருடைய புனைவுலகிற்குள் வருகிறேன். அவருடைய ஆன்மிகம் மற்றும் தத்துவமானது சூன்யவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவருடைய படைப்புகளில் அற்புதங்களாக வைத்து நமக்கு காண்பிக்கிறார் என்று நண்பர்கள் விவாதிப்பார்கள். எனக்கு இந்த வார்த்தைகள் அளிக்கின்ற விளக்கம் என்னளவில் கவனிக்கத் தக்கதாக இருந்தன. தத்துவங்கள் மீதான ஆர்வம் முக்கியம்தான். அதற்காக அனைத்தையும் தத்துவமயமாக்க வேண்டுமா என்ன? என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கும். நம் கையில் ஒரு ரின்ஸ் ஸ்பேனர் இருக்கிறது என்பதற்காக வீட்டுக் குழாயை அதை வைத்து திறக்க மாட்டோம் அல்லவா…? கையால் திறந்தாலே போதும். டாங்க் நிரம்பியிருந்தால் தண்ணீர் வரும் அல்லது காற்று வரப்போகிறது. 

(மேற்சொன்ன இந்த கருத்துகளுக்கு நான் வருவதற்குமுன் ஒன்றிரண்டு தத்துவ நூல்களை வாசிக்க வேண்டியிருந்தது. மேலும் சில தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளையும் வாசித்து முடித்த பின்அனைத்தையும் தத்துவமயமாக்கத் தேவையில்லைஎன்கிற எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளும் தைரியத்தையும் கைவரப் பெற்றேன் என்று சொல்ல வேண்டும்.)

யுவன் சந்திரசேகர்

யுவனின் நூல்களை வாசிக்கும்பொழுது எல்லாம் இது என்ன வாசகர்களோடு ஆடும் விளையாட்டு என்று எண்ணுவேன். இதற்கு முன்னால் சுவாரசியமான நிகழ்வு ஒன்றைச் சொல்லவேண்டும். விஷ்ணுபுரம் சார்பாக எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அப்பொழுது அதில் இவர் இவர் பேசுவார்கள் என்று ஒரு பட்டியலை எழுத்தாளர் ஜெயமோகன் அளித்தார். அதில் எம்.யுவன் என்று ஒரு பெயர் இருந்தது. என்னுடன் இருந்த சக ஒருங்கிணைப்பாளரும் நண்பருமானவரிடம் இவர் யார் எனக் கேட்கிறேன். அவருக்கும் அவர் யாரெனத் தெரியாமல் எண் வாங்கி அதைக் கைபேசியில் பதிவு செய்தால் ஏற்கனவே சேமிப்பில் இருக்கும் யுவன் சந்திரசேகர் எண் எனக் காட்டியது. நான் நண்பரிடம் இது என்ன புதிய பெயர் வைத்துக் கொண்டாரா எனக் கேட்க, அவர் பதிலுக்கு அது புனைப்பெயராக இருக்கலாம் என்கிறார். அதுவரை யுவன்சந்திரசேகர் என்பதை ஒரு புனைப்பெயராகத்தானே நான் கருதியிருந்தேன் என்றேன். ஆமாம், அதுவும் புனைப்பெயர்னுதான் நினைக்கிறேன் என்றார் அவர். இது என்ன புனைபெயருக்கு ஒரு புனைப்பெயரா என நான் கேட்கிறேன். அதற்கும் சாத்தியம் உண்டு என்பது போல நண்பர் தலையசைக்கிறார். நான் மீண்டும் ஆர்வம் தாங்காமல் அந்த ‘எம்யாருங்க என்று கேட்கிறேன். அவர்தான் அந்த புனைவெழுத்தாளரின் தந்தை என்றால் அது அவருடைய ஒரிஜினல் பெயரோட முதல் எழுத்தா? அப்படி இல்லாட்டி எம்.யுவன் என்பதை இன்னொரு புனைவின் மகன் என்று பொருள்கொள்வதா எனக் கேட்டேன். கொஞ்சம் மேலும் கீழும் என்னைப் பார்த்துவிட்டு, அவரே வருவாரு அவர்ட்டயே கேட்ருங்க என்று சொல்லிவிட்டு நண்பர் நகர்ந்து சென்றார். ஆனால் அந்த விழாவிற்கோ யுவன் சந்திரசேகரால் வர இயலவில்லை. கேள்வி அப்படியே தங்கிவிட்டது. ஆனால் அவருடைய புனைவுகளில் அதற்கான பதிலை வாசகர் அடைந்துவிட முடியும் என்றும் நான் கருதுகிறேன்.

இன்னொரு சம்பவம் உண்டு. சென்றமுறை,தே – ஒரு இலையின் வரலாறு’ என்கிற மொழிபெயர்ப்பு நூலின் அறிமுக விழாவில் பேசுகையில் ஒரு குழப்பம் நிகழ்ந்தது. நான் யுவன் அவர்களின் ஒரு சிறுகதையின் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடும்போது இது அவருடைய குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலில் வரும் என்று சொல்லிவிட்டேன். அவ்வளவு அசட்டையாக நான் வந்திருக்கக்கூடாது என்று உரைத்தது. ஆனாலும் எனக்கு அந்தக் குழப்பம் ஏன் வந்தது என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலான நாவல்களில் கரட்டுப்பட்டி வந்துவிடும். சுகவனம், இஸ்மாயில், கிருஷ்ணன் ஆகியோர் ஏனைய நாவல்களில் வந்துவிடுவதால் நாம் பெயரை மாற்றிச் சொல்லிவிடமாட்டோம். சுகவனம், இஸ்மாயில் மற்றும் கிருஷ்ணனின் அணுகுமுறைகள் மனதில் பதிந்துவிடும். ஏறத்தாழ அனைத்து நாவல்களும் பொதுவாகப் பேசும் விஷயங்களாக, ஒரு கதாபாத்திரத்தின் வெளியேற்றம் அல்லது ஊர் சுற்றல் இருக்கும். ஆனாலும் குள்ளச் சித்தனுக்கும் ஊர்சுற்றிக்கும் உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியும். குள்ளச்சித்தனில் folk மற்றும் நாடகிய தருணங்கள் ஆன்மிகமாக மாறுகிறது. ஊர்சுற்றியில் அது folk தளத்திலேயே இருக்கும். ஒரு வாசகனாக ஆழ்ந்து படித்தால் அது குழப்பமே இல்லை. இது சரிதான் என்று நம்பித்தான் நான் அவ்வளவு தைரியமாகக் கூறியிருக்கவேண்டும். அந்த விளையாட்டில் அது foul ஆகிவிட்டது

யுவன் தன் கதைகளில் அற்புதங்களாகக் கூறுவது அற்புதங்களைத்தானா தற்செயல்களையா என்றும் கவனிக்கலாம். தற்செயல்களுக்கு அவர் ஒரு உருவம் தந்து கதைமாந்தர்களாக ஆக்குகிறாரா அவர்தான் குள்ளச்சித்தன் அல்லது,வெளியேற்றம்பெரியவர் போன்றவர்களா என்று யோசிக்க வைக்கிறார். மறுமுறை, அவர் சொல்வது தற்செயலை அல்ல, அது வேறு ஒன்று எனச் சொல்கிறார். அதை ஒரு தரிசனமாகக் கொள்ளலாம். ஒரு புகழ்பெற்ற ஜென் கதை உண்டு; அதில் சீடன் குருவிடம் கேட்பான், “குருவே ஞானம் எப்படி வருகிறது?” குரு அவனது தலையில் குச்சியால் அடிக்கிறார். “ஆம். புரிந்தது” என்கிறான் சீடன். தியானப் பயிற்சி அல்லது தத்துவப் பயிற்சி இல்லாத எனக்கு இதைப் புரிந்துகொள்ள அசோகமித்திரன் தேவைப்பட்டார். அவருடைய,திருப்பம்’ என்கிற ஒரு கதையில் தொடர் பயிற்சியில் இருக்கும் ஒருவன் ஒரு கணத்தில் கார் ஓட்டுவதை அறிகிறான். இது எனக்கு அந்த ஜென் கதையை விளக்கியது. தியானத்தால் உணரத்தக்க ஒன்றை ஒரு புனைவால் உணர்த்தி விடமுடிகிறது. யுவனுடைய குள்ளச்சித்தன் சரித்திரம் அல்லது வெளியேற்றம் நாவலில் வரும் பெரியவர் அப்படி ஒரு கணப்பொழுதின் உருவ வெளிப்பாடா என்று நம்மை யோசிக்க வைக்கிறார்.

ஒரு வாசகனின் ஆசுவாசம் என்பது எழுத்தாளர் வைத்திருக்கும் புதிரைத் தான் விளங்கிக் கொண்டுவிட்டேன் என்று மகிழ்வதில் துவங்குகிறது. அது ஒரு துவக்கம்தான். பின் அதுவே ஆணவமாகவும் மாறித் தான் எளிதாகக் கண்டுபிடிக்கும் கதையைதான் எழுதுகிறார்கள் என்று நம்ப வைத்து விடுகிறது. ஆனால் அந்தப் புதிரை விளங்கிவிட்டால் மறுபடி வாசிக்கத் தோணுமா? ஒரு குறுக்கெழுத்துப் போட்டியின் கட்டங்களை நிரப்பிய பின்னர் மீண்டும் அதையே இன்னொரு முறை நிரப்பிப் பார்ப்போமா? ஒரு சஸ்பென்ஸ் நாவலில் கடைசி அத்யாயங்களில் அந்தப் புதிர் அவிழ்க்கப்படும். அதன்பின் அதை மீண்டும் வாசிப்பது சுவாரசியம் தருமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். நவீன இலக்கியங்களிலும் நடையில் சுவாரசியம் கூட்டி எழுதுபவர்கள் உண்டு. முதல்முறை சுவாரசியம் அளிக்கும். ஆனால் ஒருமுறை அந்த நுட்பத்தை விளங்கிக்கொண்டால் அதன்பின் சுவாரசியம் அளிப்பதில்லை. ஆனால் இங்கு தன் நாவல்களில் ஒரு புதிரை யுவன் வைத்துக்கொண்டு போவார்நாம் அதை மீண்டும் மீண்டும் வாசித்துப் புரிந்துகொள்வோம். உதாரணமாக குற்றாலிங்கம் என்னும் நபர் வடவைத்தீவேட்கை கொண்டவர். அதாவது பசி. ஒரு வேளைக்கு எழுபது அல்லது எண்பது இட்லி வரை உண்பவர். ஒரு பெரியவரின் தீண்டலும் அதைத் தொடர்ந்து அவர் சொல்லும்,போறும்என்கிற வார்த்தையும் அவரை அதுவரை இருந்த வடவைத்தீயிலிருந்து மீட்டுவிடுகிறது. இதை அற்புதம் என்று சொல்வோமா அல்லது தரிசனம் என்று சொல்வோமா? என்று மறுவாசிப்பில் தோன்றுகிறது

இன்னொரு ஜென் கதை உண்டு. அனைவருக்கும் தெரிந்த கதை. நிரம்பிய கோப்பையில் தேநீர் நிரப்ப முடியாது என்பது அது. புகழ்பெற்ற ஒன்று. ஓர் இலக்கிய வாசகனுக்கு புத்தகங்களைப் படித்துக்கொண்டே போவதில் என்ன நிகழ்ந்துவிட முடியும்? குற்றாலிங்கம் உண்ணும் இட்லிக்கும் ஒருவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும் வேறுபாடு உண்டா என்றெல்லாம் யோசிக்க வைப்பதும் நிகழ்கிறது. அப்படியென்றால் அவர் நமக்குச் செய்வது ஒரு earthing தானா?

ஆர். காளிப்ரசாத் உரை

எண்கோண மனிதன் நாவலின் கதைசொல்லியாக வரும் கிருஷ்ணன் ஒரு எழுத்தாளர். அவர் தன்னுடைய மாமாவினுடைய தேடல் பற்றி இந்தக் கதையை எழுதுகிறார். மாமா யாரைத் தேடுகிறார்? அவர் தன்னைப் போன்ற ஒருவர் ஆனால் புகழின் உச்சியில் இருந்தபோதே காணாமல் போனவர். அவரைத் தேடுகிறார். அவரைத் தேடுவதால் மாமாவுக்கு என்ன பிரயோஜனம் என்ற கேள்வியும் எழுகிறது. தான் பிறந்தநாளில் பிறந்த ஒருவரைப் புரிந்துகொள்ள முயல்கிறார். டிசம்பர் 12 ல் பிறந்த ஒருவரால் ரஜினிகாந்த்தைப் புரிந்துகொண்டுவிட முடியுமா? அப்படியென்றால் அக்டோபர் 2 ம் தேதி பிறந்த ஒருவர் என்னவெல்லாம் செய்துவிடமுடியும்?

இங்கே இன்னொரு இடைச்செருகல் வருகிறது. தன் மாமா தேடும் அந்த நபர் உருவத்திலும் மாமாவைப் போலவே இருக்கிறார். இருவரும் பிறந்தது ஒரே மருத்துவமனையில். வாசிப்பவருக்கு தான் கண்ட திரைப்படக் காட்சிகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. இரு தாய்களுக்கு நிகழ்ந்த பிரசவத்தில் ஒரு தாயின் குழந்தை இறந்துவிட மற்றொரு தாய்க்கு இரட்டைக் குழந்தை பிறக்க உடனே அங்கிருந்த தாதி என்ன செய்கிறார் என்றால்….

இதில் மற்றொரு சுவாரசியம் அந்த உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒரு பெரிய நட்சத்திர நடிகராக மிளிர்ந்தவர். ஆனால் இது ஒரு குடும்ப நாவல் அல்ல, க்ரைம் நாவலும் அல்ல. அப்படியென்றால் இந்த நாவல் யாரைத் தேடுகிறது? 1920 ல் வாடிப்பட்டியில் பிறந்த ஒருவரை சம்பந்தமூர்த்தி தேடுகிறார். அவர் தன்னைப் போலவே உருவம் உள்ளவர். உருவத்தில் தன்னைப் போலவே இருந்த ஒருவரைப் புரிந்துகொண்டால் அவர் தன்னைப் புரிந்துகொண்டவராக ஆகிவிடுகிறார். ஆகவே அது அவருக்கான ஒரு மெய்ஞானத் தேடலாகவும் ஆகிவிடுகிறது

இந்தக் கதை மூன்று தளங்களில் நிகழ்கிறது. முதல் தளம் அவரது வாழ்க்கை வரலாறு. கதையோட்டமாக அவர் தேடும் சோமனுக்கு என்ன ஆயிற்று என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். காணாமல் போனதற்கு காரணம் என்ன? இறுதியாக அவருக்கு என்ன நிகழ்ந்தது எனப் புரிந்துகொள்கிறோம். இரண்டாவது அது ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஒருவர் காணாமல் போனதற்கு ஒரு காரணத்தை நாம் ஏன் தேடுகிறோம்? ஒருத்தன் சும்மா காணாமல் போகக்கூடாதா? காரணத்தை வைத்துதான் என்ன செய்யப் போகிறோம்? இப்போது இன்னொரு புகழ்பெற்ற ஜென் கதை ஞாபகம் வருகிறது. ஒருவன் மலையுச்சியில் நிற்கிறான். அப்போது அவனைப் பார்த்த இருவர் வாக்குவாதம் செய்வார்கள். ஒருவர் அவர் ஆடுகளை மேய்க்கிறார் என்பார். மற்றவர் அவர் நண்பருக்காகக் காத்திருக்கிறார் என்பார். அவரிடமே போய் கேட்பார்கள். அவர் சொல்லுவார்... ‘நான் சும்மா நிற்கிறேன்என்று. இந்தக் கதையில் சோமன் அந்த மாமாவின் பிரதியாக வருகிறார். எந்தக் காரணத்திற்காக அவர் தேடுகிறார். இருவருமே சந்ததி இல்லாதவர்கள் என்று மாமாவே அதன் பாத்திரங்களை வைத்து ஒரு புனைவை உருவாக்கியும் விடுகிறார். அது அவர் காணாமல் போனதற்கான காரணமாக இருக்கிறது.

மூன்றாவதாக, இதில் எது நிஜம் எது கதை சொல்பவரின் புனைவு என்று ஒரு கேள்வி வருகிறது. ஒருவரிடம் உரையாடும்போது முன்பு கதை சொன்னவரிடம் எந்தளவு உண்மை இருக்கும் என்கிற கேள்வியும் எழுகிறது. லைட்மேனான மகாமுனி கையாண்ட ஒரு லைட் விழுந்து முன்பு சோமனிடம் அத்துமீறிய தயாரிப்பாளர் மரணமடைந்தார் என்பது இன்னொருவரின் உரையாடலில்தான் தெரிய வருகிறது. ஆனால் இதை ஏன் மகாமுனி கூறவில்லை? அதில் எத்தனை புனைவு இருக்கக் கூடும்? ஆகவே இறுதியாக நாம் உணர்வது நம் கருத்தை சரிபார்ப்பது மட்டும்தானா என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்.

தனித்துவமான நடை கொண்ட பல எழுத்தாளர்களை வாசிக்கிறோம். அனைவரையும் எளிதில் வரையறுக்க முடிகிறது என்றாலும் யுவன் சந்திரசேகர் கதைகளைப் படித்துவிட்டு அவரைத் தொகுக்கும்போது நாம் ஏன் மிகவும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது? நாவலின் பின்னிணைப்பு மற்றும் பக்கங்களில் உள்ள அடிக்குறிப்புகள் வாயிலாக பிரதியை மறுதலித்தபடி இருக்கிறார். அது அந்த தேடலுக்குள் வாசிப்பவரையும் இழுத்துக்கொண்டு செல்லும் முயற்சியா அல்லது வாசிப்பிற்கு இழுக்காமல் வெளியே நிற்க வைக்கும் முயற்சியா எனக் குழப்பம் நேருகிறது. இப்படி நம்மைச் சிந்திக்க வைக்கத்தான் யுவன் அவர்கள் ஒரு முரண்பாட்டை நாவலுக்குள் வைத்தபடியே இருக்கிறார். அவரே வைக்கும் அத்தனை தடைகளையும் கடந்து, அந்தக் கதாபாத்திரங்களின் உணர்வோடு ஒரு ஒட்டுதல் வாசகருக்கு ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம் கதையின் உணர்வு நிலை. மாமா மருமகன் பாசமோ அக்கா தம்பி பாசமோ அல்லது கணவன் மனைவி பந்தமோ எதானாலும் இவர் வர்ணிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுக்கு ஆட்படாமல் வாசகன் கடப்பது இல்லை. எண்கோண மனிதன் நாவலில் கிருஷ்ணனின் தந்தை இறந்த தருணம். தாய், ஆற்றாமையாக சொல்கிறாள். அவருக்கு என்ன, எட்டெட்டுல மரணம். வரணும்னு வேண்டிண்டார். அவர் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு வருஷம் முன்னமேயே வந்துடுத்துஎன்கிறாள். அடுத்த வரியில் கிருஷ்ணனின் மனவோட்டத்தில் அவன் தந்தை தன் பேச்சில் அடிக்கடி சொல்லும் ஒன்று வருகிறது. ஓரெட்டில் கிடைக்காத தாய்ப்பாசமும் ஈரெட்டில் கல்லாத கல்வியும்என அவன் அப்பா அடுக்கிக்கொண்டே போகிறார். இதில் வேறு என்ன சொல்லிவிட்டார்? வெறும் நாலு வரியில் அந்த மனிதரின் வாழ்க்கை குடும்பத்தின் நிலை என எல்லாம் வந்து விட்டது

இது உணர்வு ரீதியாக வாசகனை ஒன்ற வைக்கிறது என்றால் தர்க்க ரீதியாக வாசகனை விலக்கி வைப்பது மற்றொன்று... மகாமுனி கூறுவதில் எவ்வளவு நிஜம் லட்சுமணன் கூறுவதில் எவ்வளவு நிஜம் என அடிக்குறிப்பின் வழியாக நம்மை அலைக்கழிக்கும் பாங்கு. அது கவனமாக நம்மை விலக்கி வைக்கிறது. கடைசியாக இது சம்பந்தமூர்த்தியின் கதைதான். சோமன் வெறும் சாக்குதான் என்கிறார். அடுத்த பக்கத்தில் காலம் கடந்து நிற்கும் ஒரு பாட்டியாக வந்து சம்பந்தமூர்த்தியா அது யாரு என்கிறார்? அப்பொழுது அது கிருஷ்ணனின் கதையாகவே ஆகிவிடுகிறது

இப்பொழுது நம் முன்னால் ஒரு கேள்வி எழுகிறது. சம்பந்தமூர்த்தியின் வாழ்க்கை முடிந்து போனது. அவருக்கு சந்ததிதிகள் இல்லாததால் அடுத்த தலைமுறைக்கு அவர் ஞாபகம் இருக்கப்போவது ஐயமே. ஆனால் அவருடைய மருமகனாகிய கிருஷ்ணனால் அவர் புனைவுலகில் எண்கோண மனிதனாக நிலைத்து இருப்பார். எதனால்? அவருடைய வாழ்க்கையால் அல்ல, அவருடைய தேடலால் நிற்கிறார். அவருடைய தேடல் யாரைக் குறித்து, சோமனைக் குறித்து. கதைசொல்லியின் மாமா, அவர் தேடும் சோமன் மற்றும் கதையில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அனைவருக்கும் (அப்துல் வஹீப் தவிர) பொதுவான ஒரு விஷயமாக இருப்பது அவர்களின் தனிமையும் ஏக்கமும். கதாசிரியர் சொல்வது போல சோமன் ஒரு சாக்குதான். சம்பந்தமூர்த்தி மாமா, அவர்களின் வழியாகத் தன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு புறம் கறாரான காவலன் முகம், மறுபுறம் ஆண் பெண் கலந்த கலைஞன் முகம் என இரு முகத்துடன் இருப்பவர். இங்கிருந்து வாசகர் தாண்டியும் போகலாம். அது நிஜமாக சம்பந்த மூர்த்திதானா நமக்கு சம்பந்தம் ஏதும் இல்லையா எனப் பார்க்கலாம். மீண்டும் சொல்வது இவையெல்லாம் அதை எடுத்துரைக்க ஒரு காரணம்தான். ஆனால் யுவன் நாவலுக்கு காரணம் எல்லாம் தேவையா என்ன?

(வாசகசாலையின் மாதாந்திர கலந்துரையாடலில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின், ‘எண்கோண மனிதன்’ நாவல் குறித்த உரையின் எழுத்து வடிவம்)

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button