இணைய இதழ்இணைய இதழ் 92சிறுகதைகள்

வெளிச்சம் – கமலதேவி

சிறுகதை | வாசகசாலை

ரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ் அரசுக் குடியிருப்பின் ஸ்பர்டாங்க் சாலை நீண்டது. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பின் முன்னால் வளர்க்கப்பட்டிருந்த மரங்களின் நிழல்படிந்த வழியில் ஒரு ஃபோக்ஸ் வேகன் பீட்டில் கார் நிதானமாக சென்றுகொண்டிருந்தது. எதிரே சுதேசி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். இங்கு யாரைத்தேடி வருகிறாரோ. 

ருக்மிணியின் கல்யாணம் முடிந்தப்பின் உறவுகள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பெரிய அக்காவும் , “பக்கத்துல தானே.. எதுன்னாலும் உடனே ஓடி வந்திடறேன்,” என்று நேற்று சாயங்காலமாக கிளம்பி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்குச் சென்று விட்டாள். அக்காக்கள் கல்யாணமாகி சென்ற போது தங்கை ருக்மிணி இருந்ததால் மனதிற்கு இத்தனை மசமசப்பாக இல்லை. அப்பா வழக்கம் போல பரபரப்பாகவே இருக்கிறார். ஒரு கல்யாண காரியம் சரியாக நடந்து முடிந்த உற்சாகத்தில் இருக்கிறார். அடிக்கடி ருக்கு என்று பெயர் சொல்லி அழைத்தபின் தலையாட்டிக் கொள்கிறார். கடைசியில் பிறந்ததால் ருக்மிணி வீட்டின் ஓடும்பிள்ளை. வீட்டிற்குள் அவளின் கொலுசின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அம்மாவும் அப்பாவும் நிமிடத்திற்கு ஒரு முறை அவளை ‘எங்கேடீ போய் தொலைஞ்சாய்’ என்பார்கள். நிஜத்தில் அவர்கள் இருவரில் யாரோ ஒருவருடன்தான் அவள் தொலைந்து போயிருப்பாள். அந்த சத்தங்கள் இல்லாமல் வீடு வெறிச்சென்று கிடக்கிறது. வெயில் விழுந்து மறையும் நேரத்தில் இன்னும் கூடுதலாக அவள் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை. 

கீழே பேச்சு சத்தம் கேட்கிறது. அப்பாவின் அலுவலகத்திலிருந்து யாராவது வந்திருப்பார்கள். அப்பா மதராஸ் ராஜதானியின் தலைமைச் செயலர். அவரைப் பார்க்க தினமும் பத்து ஆட்களாவது வீட்டிற்கு வருவார்கள். அம்மாவும் அவர்களை உபசரிப்பது வழியனுப்புவது என்று நடந்து கொண்டே இருப்பாள்.

அம்மாவும் அவள் பங்கிற்கு நவராத்திரியில் இருந்து பண்டிகை வழிபாடு என்று ஒன்றுவிடாமல் கூட்டத்தைக் கூட்டிவிடுவாள். இந்த வீட்டின் ஓய்ந்தே இருக்காத தன்மை மீது எனக்கு விலகல் உண்டு. அதனால்தான் மாடியின் கடைக்கோடியில் உள்ள அறையை எனக்கானதாக மாற்றிக்கொண்டேன். 

அம்மா ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யும் பொம்மைகள் அத்தனை அழகாக இருக்கும். அச்சுவார்த்துக் காய்ந்தபின் தன்னுடைய வண்ணங்களுடனும் தூரிகைகளுடனும் அமர்வாள். வெறும் வெள்ளை அச்சுகளை உயிர்க்களையின் சாயல் கொண்ட பொம்மைகளாக மாற்றுவாள். அந்த நேரங்களில் அம்மாவுடன் இருப்பதற்கு சௌகரியமாக இருக்கும். பரபரப்பில்லாமல் மூக்குத்தி ஔிர அகன்ற முகத்தில் ஒரு மோனம் தவழ காரியமே அவளாக அமர்ந்திருப்பாள். தலைமுடியில் சொருகியிருக்கும் பூவின் மணம் மனதை என்னவோ செய்யும். அந்த நேரத்தில் சிறிய ஓசைக்குக்கூட திடுக்கிடும் அவளை எனக்கு அவ்வளவு பிடிக்கும். பின்னால் இருந்து ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போல.

முதலில் அம்மா வரையச் சொல்லிக்கொடுத்தாள். பின்பு ஆதிமூலம் மாமாவும் நந்தாகோபால் அண்ணாவும் ஓவியஆசிரியர்களாக வீட்டிற்கு வந்தார்கள். திரும்பி வரைந்த ஓவியத்தைப் பார்த்தேன். நீர்வண்ண ஓவியம். நிலவொளியை தனக்குள் வைத்திருக்கும் குளக்கரையில் ஒரு ஆலமரம். அதன் இலைகளில் நிலா வெளிச்சம் நெய் பூசியதைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தது. இலைகளின் அடர்த்தியான பச்சை நிறம் குளத்திலும் பிரதிபலித்தது. வரையும் போது கையின் வியர்வை வழிந்து குளத்தின் ஓரம் கலங்கிச் சிதைந்திருப்பதை பார்க்க எரிச்சலாகிறது.

சட்டென்று திரும்பிக்கொண்டேன். தோட்டத்தின் மேற்குப்பக்கம் சுற்றுசுவர் மடிப்பில் இருக்கும் மல்லிக்கைச்செடி வெள்ளை வெள்ளையாய் ஆற்று மணலில் கிடக்கும் கூர்த்த சங்குகளைப் போல மொட்டுவிட்டிருக்கிறது. அப்படியே நின்றுகொண்டிருந்தேன். விளக்கேற்றும் நேரம் அம்மாவுடன் இருக்க வேண்டும். ஓவியத்தை எடுத்து மரப்பெட்டியில் போட்டு மூடினேன்.

பலகாரம் முடிந்ததும் அப்பாவின் கார் ஓசையும், வெளிக்கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. பின்பக்க தோட்டத்திற்கு நடந்தேன். கருங்கல் பாவிய தரை. ருக்மிணி நட்டுவைத்த சந்தனமுல்லை நல்ல வளமாக வளர்ந்திருக்கிறது. இன்னும் பூக்கவில்லை. நான்கு கொம்புகள் நட்டு குறுக்கு கொம்புகள் போட்டிருக்கிறார்கள். இந்தக்கொம்புகள் பந்தலாக மாறும் போது அவள் கல்கத்தாவிலிருந்து வருவாள். 

இத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் அன்றாடம் இவ்வாறு நகர்வதை கணம் கணமாக முதன் முதலாக உணர்கிறேன். விழா நாட்களில் மாடியறையில் இருந்தாலும் தனியாக இருப்பதாக உணர்ந்ததில்லை. ருக்மிணி இடையில் ஓடிவந்து அறைக்கதவை திறந்து, “கீழ வாயேன்…சூடீ,” என்று மலர்ந்த முகத்துடன் சொல்வாள். அவளுக்குப் பின்னால் அம்மா நிற்பாள். நான் மாட்டேன் என்று தலையைப் பிடிவாதமாக ஆட்டும் போது அம்மாவின் முகம் சுருங்கும். அவள் பேசாத நேரங்களிலும் அவள் முகபாவனைகளுக்கு ஏற்ப மூக்குத்தி அவளைக் காட்டிக்கொடுக்கும். அவள் சென்றபின் வீட்டு வேலைகள் செய்யும் நாகம்மாள் ஒருதட்டில் பலகாரங்களுடன் வருவாள். ருக்மிணி தனக்கு பிடித்த பலகாரங்களைத் தட்டில் வைத்திருப்பாள்.

பறவைகளின் சத்தம் அலை சத்தம் போல விடாமல் கேட்கிறது. மேற்கே அந்தி கனமாக கவிழ்ந்து கொண்டிருக்கும் போதே நிலா கிழக்கே எழுந்துவிட்டது. இருளும் ஔியும் சேர்ந்து நீலமாக அந்தியை வரைந்து கொண்டிருந்தன. தினமும் வெவ்வேறு நிறங்கள். ஒருநாள் உள்ள நிறங்களின் கலவையை பிறகு காணவே முடியாது என்பதை ஓவியம் பழகும் போது புரிந்தது. அதனால்தான் ஆகாயத்தை எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கிறது என்று ஆதிமூலம் மாமா அடிக்கடி சொல்வார். தினமும் ஓவியம் சொல்லித்தரும் முன்னும், வகுப்பு முடிந்தப்பின்னும் அவருடன் சேர்ந்து வானத்தைப் பார்ப்பேன்.

 “ஆகாசம் மட்டும்தான் எப்பவும் நம்ம தலைக்கு மேல கூடவே இருக்கறது. நம்மதான் அதுக்கூட விளையாடனும். காலையில வானம் விளையாட்டுப் பிள்ளையாட்டம். பகல்ல கந்தர்வர்களாட்டம். சாயங்கால வானம் கிருஷ்ணனாக்கும். பொல்லாத பிள்ளை. ராவுல அது ஒருமனசுக்கேத்த மாயம்…” என்பார்.

ஒரு நாள், “நேக்கு நேத்து ராத்திரி ஆகாசத்தை பாக்கறச்ச அம்மாவாட்டம் இருந்துச்சு.. வானம் முழுக்க மீன்கள்..எப்டியோ மனசு நிறைஞ்ச வானத்தை அம்மாக்கூட சேத்துக்கறது,” என்று என்னவாவது சொல்வார். ஆகாயத்துக்கும் தனக்குமான நிறைய கதைகளைச் சொல்வார். அதன் பிறகு வானம் அன்றாட அற்புதமாகிவிட்டது.

அவருக்குப்பின் வரைய சொல்லித்தர வந்த நந்தகோபால் அண்ணா, “வரையனுன்னா காலையிலும் சாயங்கலமும் வானத்தைப் பார்த்தே ஆகனும்.. ஆகாசத்துல நடக்கறதுதான் இந்திரஜாலம்..கேட்டியோ,” என்பார்.

அவர் தனியாள் என்பதால் வைகுண்ட ஏகாதசிக்கு அம்மா அவரை அழைத்திருந்தாள். அன்று இரவெல்லாம் விழித்து இதிகாச கதைகளும், பாட்டுகளுமாக நடந்தது. அதிகாலையில் விரதம் முடித்துவிட்டு நந்து அண்ணா கிளம்பும்போது வாசல் வரை அவருடன் வந்தேன். “சூடாமணி.. அங்க பாரு விடிஞ்சும் விடியாத வானத்தை.. நாளைக்கு இத மனசுல வச்சுண்டு வரையனும்,” என்றார்.

“இத்தனை நிறத்தை எப்படி வரையறது,”

“இப்படி பொம்மனாட்டில்லாம் பாத்திரப்பிடாதுன்னுல்ல குனிஞ்சு நடக்க சொல்றா.. வானத்தைப் பார்த்துதான் வேதத்துலருந்து இன்னிக்கு சுப்ரமணிய பாரதி கவிதைகள் வரைக்கும் எல்லாம் நடக்கறது,” என்று சிரித்துக்கொண்டே பெரிய இரும்புக் கதவை தள்ளிக்கொண்டு நடந்தார். மெல்லிய வெளிச்சத்தில் கதவின் பெரிய அல்லிப்பூ கம்பிகளின் இடைவெளியில் அவர்மீது வெளிச்சம் படிய கண்கள் தொடும் தொலைவு வரை நடந்து சென்றுகொண்டே இருந்தார். அவர்களால் உண்டானது இந்த ஆகாயப் பழக்கம். 

அக்காவுக்கு குழந்தை பிறந்த அன்று நான் கடலையும் கருநீல வானத்தையும் வரைந்து கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு ஔி மின்னலை வரையலாம் என்று தோன்றியது. வரைந்ததை யாரிடமும் காண்பிப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஒருவாரம் கழித்து அம்மாவிடம் சொல்லியதும் ஒரு பெரிய மரப்பெட்டிக்கு ஏற்பாடு செய்தாள். அறை மூலையில் உள்ள அதில் என் ஓவியங்களை போட்டு வைக்கத் தொடங்கினேன். இப்பொழுது ஓவியத்திலும் மன லயிப்பு மட்டுப்படுவதற்கு உள்ளங்கை வியர்வையும் ஒரு காரணம். மரங்களில் பறவைகளின் சத்தம் ஓயத்தொடங்கிவிட்டதை உணர்ந்ததும் மனம் ஞாபகங்களில் இருந்து வெளியே வந்தது. நனவும் நினைவுமாக கலந்து கலந்து மனதை நிலைக்கவிடாமல் செய்தது.

அன்று இருளில் நிலாவின் வெளிச்சம் விழத்தொடங்கிய நேரத்தில் வழக்கம் போல தோட்டத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்தேன். கறிவேப்பிலை மரத்தின் பக்கம் நிற்கும் நாகம்மாவிடம் அம்மா இரவு சமையலுக்கு வேண்டிய காரியங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாள். எதிரே சுவரில் வளைந்த இரும்புத்தண்டில் தாமரையின் நீள் மொட்டு போன்ற விளக்கிலிருந்து ஔி சுவரில் படர்ந்து கீழே தரையில் மல்லிகை செடி வரைக்கும் பெரிய நீள்வட்டமாகத் தெரிகிறது. தோட்டத்தின் சாம்பல் இருளில் இருந்து எழுந்த மொட்டாக வெளிச்சம் அசையாமல் நின்றது. காற்றால் ஊதி அணைக்க முடியாத சுடர். 

அம்மா தோளில் கைவைக்கிறாள். வெதுவெதுப்பான கை அம்மாவுக்கு. கைகால் வலிகளுக்காக ஒத்தடம் கொடுப்பதைப்போல இருக்கும் அவள் தொடுகை. என் மூட்டுகளில் எப்போதும் இருக்கும் வலிகளை அறிந்தவள் அவள் மட்டுமே. தினமும் இப்படி வேலை ஓய்ந்த நேரத்தில் வெந்நீர் ஊற்றிய வெல்வெட் பையுடன் வருவாள்.

“சூடாமணி, இன்னைக்கு என்ன வரைஞ்ச,” 

“இன்னக்கு வரையலயே…”

“நீயா பாருன்னு சொல்ற வரைக்கும் சகுந்தலை மாதிரி காத்திண்டிருப்பேனாக்கும்,” என்று சிரித்துக் கொண்டே கருங்கல் தரையில் அமர்ந்தாள்.

சிரிக்கும் போது அம்மாவின் அகன்ற முகம் மேலும் விரிந்தது. எப்போதும் இப்படித்தான். நான் எதையாவது ஔிப்பதும் அம்மா கண்டுகொள்ளவதுமாக ஒரு விளையாட்டு. கணுக்கால் மூட்டு எலும்பில் இதமாக அம்மாவின் கரம் பதிந்தது. வலிக்கிறதா என்று ஒரு நாளும் கேட்டதில்லை. இது அவளுடைய வலி என்பது போலவே இருப்பாள். அவள் கேட்டாலோ நான் சொன்னாலோ மதகு உடைந்துவிடும் என்பது போல ஒரு தடுப்பு இரண்டு பேருக்கும் உண்டு.

இந்தத்தடுப்பு என்னுடைய பதிமூன்று வயதில் உண்டானது. ஒரு நாள் அம்மா காய்ச்சலில் கிடந்தாள். அன்று அம்மாவை தேடிக்கொண்டு அவள் அறைக்குச் சென்றேன். அவளுக்கும் உடம்புக்கு முடியவில்லை என்பதை என் வலி மறைத்துவிட்டது.

“அம்மா வலிக்கறது,” என்று சொன்னதும் அம்மா விசுக்கென்று எழுந்தாள்.

“என்னத்துக்கு எனக்கு அப்படி ஒடம்பு.. குழந்தை வலி தெரியாம அரக்க ஜென்மமா போயிட்டேனே…இல்லல்ல பூதகிக்கூட கண்ணன் மார்த்தொட்டதும் பொண்ணாயிட்டாளே,” என்று புலம்பிக்கொண்டே ஒத்தடம் கொடுத்தாள். அவள் ஜுரத்தின் சூடு என் கால்களில் தெரிந்த அன்றிலிருந்து நான் அவளிடம் சொல்வதை விட்டுவிட்டேன். 

“என்ன யோசனை.. சின்னவள் புக்காத்துக்கு போனப்பிறகு மனசுக்கு கனமாக இருக்குல்ல,” என்ற அம்மாவின் குரல் நினைவுகளைக் கலைத்தது.

நான் அமைதியாக வானத்தைப் பார்த்தேன். நிலா வெள்ளைக்கல் வைத்த ருக்மணியின் நெற்றிப் பிறை போல இருந்தது. கருகருவென்ற சுருள் முடியில் பிறை நிற்கவே இல்லை. பட்டுநூல் வைத்து கோர்த்து பூச்சரத்துடன் கோர்த்துவிட்டார்கள். 

“சூடி..நீ கதை எழுனா என்ன ,” என்று அம்மா கேட்டவாறு அமர்ந்தாள்.

“கதையா…”

“ஆமா…எவ்வளவு புத்தகம் படிக்கிற…கதை எழுத்திப்பாரு,”

“கதையெல்லாம் எழுதனுன்னா நாலு இடத்தைச் சுத்தி வரனும்,”

“அப்படியொன்னும் கட்டாயமில்லை.. மனசு பறக்கனும்ன்னு குமுதினி இங்க வந்தப்ப சொன்னாளே.. ஞாபகம் இருக்கா,” என்று சொல்லிவிட்டு கால்களை நீட்டிக்கொண்டு அரக்கு நிற கொட்டடிச் சேலையை கணுக்கால் வரை இழுத்துவிட்டாள். 

“மாமி நெறய பயணம் பண்ணியிருக்கா…காந்தி கூட இருந்திருக்கா..நான் இங்கயிருக்க கொடைகானலுக்கே சின்னதுல போனதுதான்,”

“ஒருத்தருக்கு கொடுக்கறதையேவா பகவான் மத்தவாளுக்கும் கொடுக்கறார்.. எழுதிப் பார்த்தா தெரியறது…வருதா..இல்லையான்னுட்டு,”

“நமக்கும் எழுத வரதேன்னு அத்தனை சந்தோசமா இருந்ததுன்னு ஒருவாட்டி மாமி சொன்னா,”

“அதைத்தான் சொல்றேன்டீ..எழுதிப்பாருன்னுட்டு.. ருக்கு கல்கத்தாவுக்கு போனபிறகு நோக்கும் முகத்துல களை போயிட்டது,”

பதில் சொல்லாமல் சுற்றுசுவருக்கு வெளியே நீண்டிருந்த காகிதப்பூ மரத்தின் கிளையைப் பார்த்தேன். நிறைய குங்குமநிறப் பூக்களுடன் இலைகள் நிழல் போல அசைந்து கொண்டிருந்தன.

“இனிமே அப்படித்தான் இருக்கும். உடன் பிறந்தவா எல்லாரும் ஒவ்வொருத்தரா வயசுல அவஅவ வாழ்க்கையை பார்த்துண்டு போயிடறது நடக்கறதுதானே..”

கண்களைத் திருப்பாமல் தலையாட்டினேன். அம்மா பேசிக்கொண்டே ஒத்தடம் வைத்தாள். நானும் எதாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அம்மா ஒருத்தியாகவே பேசிக்கொண்டிருப்பது சங்கடமாக இருக்கிறது. எனக்கு வார்த்தைகள் மனதைச் சேரவில்லை. அவை எங்கோ அந்த நாகலிங்க மரத்தைப்போல எந்த சுவர் மறைவிலோ நின்றன. கைவிரல்களில் இதமான சூடு பரவியதும் விரல்களை நீட்டி மடக்கினேன்.

“மத்தவா பேசறது அவ காதுக்கு கேக்காம போயிட்டதால கூட்டத்துல நின்னாலும் தனியா நிக்கறாப்லதான் இருக்கும்…அதாலதான் எழுத ஆரம்பிச்சேன்னு குமுதினி சொன்னாளே நெனவுல இருக்கா.. ,”

“ஆனா, அவா எழுத்தை படிச்சால் சிரிக்காம இருக்க முடியாதே…எப்படி அப்படி..”

“அதுதான் சிருஷ்டி..அதான் சொல்றேன் நீ எழுதற..பகவானே,” என்றவாறு கால்களை நீட்டிமடக்கிவிட்டு எழுந்து நின்றாள். 

“பாட்டிவீட்ல உள்ள பெரிய மேசைய எடுத்துண்டு வந்து போடச் சொல்றேன்…எங்கம்மா எழுதினா..இனிமே மகள் எழுதுவளாக்கும்..சுருக்க உள்ள வா,” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவளின் நிழல் நீண்டு பெரியதாகி அந்த இடத்தை நிறைத்தது. 

அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். ஜன்னலுக்கு வெளியே விண்மீன்கள். கதைகளில் சொல்வதைப்போல என் ஜன்னலில் தெரியும் அந்த விண்மீன் அம்மா. ஆமாம், அவளேதான். தினமும் அறைக்குள் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு செல்லும் அவளேதான். எங்கிருந்தாலும் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறாள். 

அடுத்தநாளிலிருந்து பெரிய மேஜை ஜன்னலுக்கு அருகே கிடக்கிறது. மேஜையில் கையூன்றி நின்றுகொண்டு வசதியாக தோட்டத்தைப் பார்க்கலாம். நாகலிங்க மரத்தில் தினமும் பூக்கள் உதிர்வதும் மலர்வதுமாக இருக்கிறது. அப்பா அவருடைய அலுவலக வேலைகளுக்குள் சங்குசக்கரமாய் சுழல்கிறார். 

வழக்கம் போல் காலையில் அம்மா மர அலமாரிகளுக்குள் உள்ள புத்தகங்களில் பாச்சைப்பூச்சி அண்டாது இருக்க அலமாரிகளுக்கு சாம்பிராணி காட்டுகிறாள். கைகளை, விரல்களை நீட்டி மடக்கி இலகுவாக்கிக் கொண்டிருந்தேன்.

அம்மா இந்த வீட்டில் எத்தனை விதமான மனிதர்களை கொண்டு வந்து சேர்க்கிறாள். அப்பாவின் நண்பர்களின் குடும்பங்கள், இந்த அரசுகுடியிருப்பின் மற்ற அலுவலகக் குடும்பங்கள், சொந்தங்களின் குடும்பங்கள் என்று ஆட்களை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புபவள். அதற்காக எத்தனை மெனக்கெடுகிறாள். பூஜை நாட்களை விழாக்களைப்போல மாற்றுகிறாள். வீட்டில் நிற்கும் கார் மீது அவளுக்கு அத்தனை ப்ரியமில்லை. ரிக்க்ஷாதான் பிடிக்கும். நாலு மனுஷாளை பார்க்கனும் என்பாள். அவளின் அத்தனை மனிதர்களையும் தெரிந்தோ தெரியாமலோ என்னிடமும் கொண்டுவந்து சேர்த்துவிட்டாள். நான் வீட்டை விட்டு வெளியே செல்லாததாலோ என்னவோ வெளி உலகை என்னிடம் கொண்டு வர முயற்சி செய்கிறாள். 

தமிழுக்கு சமஸ்கிருதத்திற்கு கணிதத்திற்கு ஓவியத்துக்கு என்று எத்தனை ஆசிரியர்கள்! 

பாட்டி ஒரு முறை, “சூடாமணிக்காக நீயும் மருமகப்பிள்ளையும் செய்யறதெல்லாம் அதிகபட்சமா தெரியறது..எதுக்கு இப்படி அலட்டிக்கறேள்,” என்று கேட்டாள்.

“இது பிராயச்சித்தம்மா…” 

“வீட்ல ஒரு பிள்ளை முடியாம இருக்கறது உலகத்துல உள்ளதுதானே…பஞ்சம் பசின்னு எத்தனை மனுசாளும், பிள்ளைகளும் கொத்துக்கொத்தா போறதுன்னு உங்கப்பா சொல்றார்,”

“இவ முடியாம பிறக்கலம்மா…நான்தான் பொறுப்பில்லாம இருந்துட்டேன்..பகவான் விக்ரஹம் மாதிரி குழந்தையைக் கொடுத்தான்,”

“மாப்பிள்ளைதானே இவளுக்கு பெரியம்மை பால் வைக்க வேணான்னுட்டார் …நீ ஏன் உன்னை மட்டும் காரணம் காட்டிக்கிற,”

“அவர் சொல்லியிருக்கலாம். வைக்காம விட்டது என் குத்தம்தானே. நா மகாபாவிம்மா…நேக்கு விமோசனமில்லை. பெரியம்மை வந்து எங்குழந்தை வலுவில்லாம போயிட்டா..மத்த பிள்ளைகளை விட வளர்ச்சி கொறச்சலா போயிட்டது என்னாலதான்,” என்று அன்று அவ்வளவு அழுதாள். அதற்குப்பிறகு பாட்டி எனக்காக மாற்றி மாற்றி வீட்டிற்கு வரும் ஆசிரியர்கள், எனக்காக இரவுக்காட்சி படத்திற்கு அனைவரும் செல்வது, இரவு கடற்கரைக்குச் செல்வது பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

அக்காக்களின் திருமணத்திற்கு பிறகு ஒரு வரன் வந்தது. வேண்டாம் என்று சொல்லி நான் வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டேன். அம்மாவும் அப்பாவும் மௌனமாக இருந்தார்கள். 

ருக்மிணி ஆங்காரமாக ஓண்ணில் நீருடன், “வேணான்னு சொல்லு. எதுக்காக வெள்ளைச் சேலை உடுத்தி பாக்கறவா மனசை கஷ்ட்டப்படுத்தற,” என்று கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

அன்று சாயங்காலமாக அம்மா பூஜை அறைக்கு அழைத்து என்னை விளக்கேற்றச் சொன்னாள்.

“தீர்மானமா முடிவெடுத்துட்டியா…இல்ல இன்னும் யோசனை இருக்கா,” என்றவாறு கங்கில் சாம்பிராணியைத் தூவியதும் குப்பென்று புகை எழுந்தது.

“என்னால ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லிண்டு… இதையே திரும்பத்திரும்ப பேசி திரட்டி எடுத்து கஷ்ட்டப்பட முடியாதும்மா..பாக்கறவாளுக்கு தானே புரியனும்,” 

அம்மா முகத்தில் மெல்லிய புன்னகை. தூபம் காட்டியபின் குங்குமத்தை எடுத்து தட்டி வடிவாக நெற்றியில் வைத்தாள்.

“ருக்கு.. வெள்ளை சேலைதானே நோக்கு பாக்கறதுக்கு சிரமமா இருக்கு..நல்லா பளிச்சுன்னு திலகம் வச்சுண்டா போருமே…சுதேசி பொண்ணாட்டாம்,” என்றதும் ருக்மிணி தலையாட்டிச் சிரித்தாள்.

வெளியே அப்படிச்சொன்னாலும் உள்ளுக்குள் அம்மா மெதுமெதுவாகவே ஏற்றுக்கொண்டாள். 

அன்று இருள் அடர்ந்து வானம் அடர்ந்திருந்தது. பத்துமணிக்கு பெண்டுலம் அடித்த கொஞ்சநேரத்தில் வானில் பிறை தோன்றியது. கைப்பிடிக்கத்தி அறியாமல் விழுந்து இருளை சன்னமாக வளைத்துக் கிழித்ததைப் போன்று. உள்ளே அந்தப்பக்கமிருக்கும் ஔிப்பிரவாகம் பிறையின்வழி வழிந்து பரவி இந்தப்பக்கம் வானத்தை நிறைக்கப் பார்க்கிறது. அம்மா மேஜை பக்கத்தில் வந்து நின்றாள்.

“வரைஞ்சதையெல்லாம் இந்தப்பெட்டியில வச்சு பூட்டிட்டியே,”

“உள்ள வச்சிடலான்னு தோண்றதும்மா,”

“இனிமே வரையறதில்லைன்னு வச்சுட்டியோ,”

“தோணும்போ வரையனும்மா,”

அம்மா என்னில் இருந்து பார்வையை எடுத்து பிறையை பார்க்கத்தொடங்கினாள்.

“அந்த வெளிச்சத்தை அதே மர்மத்தோட சூட்சுமமாக்கனும். எப்படி எங்கோயிருந்து வானத்துல் விரியறதோ அப்படி… எங்கோயிருந்து மனசுல இருக்கற வெளிச்சம் விரியனும்..இப்படி கையீரம் பட்டு பாழ்படாத இடத்தில் சௌகர்யமா வானத்துல இருக்கற நட்சத்திரங்கள் போல அது இருந்தால் மனசுக்குத் தேவலையாக இருக்கும்,”

அம்மா புன்னகைத்தாள். எதுவும் சொல்லாமல் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

ருக்மணி சென்றதிலிருந்து மனதிற்குள் இருந்த அலைபாய்தல் மட்டுப்பட்டுவிட்டது. அவள் கல்கத்தா சென்ற மாதிரியே அவள் இருப்பும் மெல்ல மெல்லத் தொலைவாகிவிட்டது. இந்த சில நாட்களாக மனதிற்குள் ஒருவித குறுகுறுப்பு இருந்தது. அது மகிழ்ச்சியா உற்சாகமா என்று தெரியவில்லை. அறைக்குள்ளே நடந்து கொண்டே இருந்தேன். 

நாகலிங்கமரம், மல்லிகை, கல்பாதை, வானம், தோட்டத்தை உலாவரும் தும்பிகள் என்று யாவற்றின் மீதும் பேதம் பார்க்கமுடியாத ஒருவிதமான மயிர்க்கூச்செறியும் உணர்வு. மனம் தனக்கான சொற்கள் கிடைக்காமல் பாரதியின் வரிகளை மறுபடி மறுபடி நெய்தது. சிந்தனை இரண்டாகத் தெரிந்தது. ஒருபக்கம் தரையிலும் மறுபக்கம் வானத்திலுமாக அந்த சிட்டுகளைப்போல விருட்டென்று பறப்பதும், சட்டென்று தத்துவதுமாக ஒரு குதியாளம். ஊட்டிக்குச் சென்றால் பத்மாசினி இப்படிதான் குதிப்பாள். ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் இருப்பாள். ருக்மிணி பத்மாசினி என்று அனைவரும் உடன் இருப்பதைப்போல மனம் உணர்ந்தது. 

எத்தனை முகங்கள். எத்தனை சண்டை சமரசங்கள். வஞ்சங்கள், சஞ்சலங்கள், ஆறுதல்கள், புன்னகைகள், அழுகைகள். பாட்டி காலத்திலிருந்து எத்தனை பெண்கள், குழந்தைகள், திருமணங்கள், இழப்புகள். அத்தனை பேருக்கும் என்னிடம் சொல்வதற்கு ஏதோ இருந்தது. அவர்களிடம் நானும் பேச வேண்டும் என்று தோன்றியது.

ஒரு பெரிய திருவிழா கூட்டத்தில் இருப்பதைப்போல மனம் உணர்ந்தது. கண்கூசும் பொன்வெயிலாக அந்த தெய்வம் கூட்டத்திற்கு நடுவில் தேரில் அமர்ந்திருக்கிறது. அந்த மஞ்சள் வெளிச்சம் ஒவ்வொரு மனித முகத்திலும் கணநேரம் விழுகிறது. அது அவர்களை பொன்னிறமாக மாற்றி பின்பு எளிய சுருக்கங்கள் விழுந்த மனித முகங்களாக்கி முடிவில்லாமல் வானத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. குனிந்து கண்களை தேய்த்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். நிலத்திலும் கண்ணெட்டும் தூரம் வரை வெளிச்சத்தின் நிறக்கலவைகள்.

ஒரு கற்கண்டை நாவிற்கு அடியில் வைத்துக் கொண்டிப்பதை போல…ஒரு பூவைத் தொடுவதைப்போல… ஈரமான கருங்கல் பாதையில் கால்வைப்பதைப் போல மனம் உணர்ந்த ஒருநாள் காலை வேளையில் காகிதங்களை அடுக்கி அட்டையில் வைத்து பேனாவை எடுத்தேன். 

அம்மாவின் அரவம் கேட்கிறது. ‘மனமே முருகனின் மயில்வாகனம்’ என்று பாடிக்கொண்டு சாம்பிராணி புகையுடன் ஒவ்வொரு அறையாக நடக்கிறாள்.

*********

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

  1. மகளுக்கு உடல் ஊனம் என்பதே பெரும் துயரம் அன்னைக்கு. ஒருவிதத்தில் தானும் காரணம் என்று நினைப்பது நித்ய வேதனை. தனிமை மகளை மீளாதுயரில் ஆழ்த்திவிடும் என்று அஞ்சுகிறாள். பிராயசித்தம் தேடுகிறாள். வெற்றியும் பெறுகிறாள். சரளமான மொழிநடை. எழுத்தாளராய் உருவாகும் சித்திரம் சிறப்பு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button