எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்? சுத்தமா பொறுப்பே இல்ல.
அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண் முன்னாடியே நான் ஒரு தடவை, ரெண்டு தடவை எண்ணினோமே? அப்ப எங்கதான் போச்சு அந்தப் பணம்? என்ன கால் மொளச்சு தானா எறங்கி நடந்து போச்சோ?
ஒருவேளை சரவணன், என்னோட பேசிக்கிட்டே பணத்தைக் கண்ல காட்டிட்டு என் கையில குடுக்காம மறந்துட்டு கையோட கொண்டு போயிருப்பானோ…? இருக்காது! நான்தான், பைத்தியக்காரனா போயிட்டேன். எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிக் கேட்டிடலாமா? ச்சே! ஒரு வேளை தப்பா நெனச்சுட்டான்னா? நாப்பது வருஷ ஃப்ரன்ட்ஷிப். இல்ல! அசிங்கமாயிடாதா? ரொம்பத் தப்பு. இதுல என்ன இருக்கு? சும்மா அப்டி இப்டி ஜாடை மாடையா கேட்டுப் பாக்கலாமே!. இல்லையே.. என் கையால பணத்தை எண்ணின ஞாபகம் இருக்கே.
எல்லாத்துலயும் மறதி. பூட்டின சாவிய ஒரு பக்கம் வெச்சா மறதி, கடையில ஒரு சாமான் வங்கினா பணம் கொடுத்திட்டு மிச்சம் வாங்கினேனா இல்லையான்னு மறதி. கல்யாணம்னு யாராவது வந்து பத்திரிகை குடுத்தா அந்தத் தேதி மறதி. இதைவிடக் கொடுமை நீண்டகாலம் பழகினவர்களின் பெயர் மறந்து போவதுதான். தொண்டைக்குள்ள இருக்கும் வெளிய வராம சமயத்துல ரொம்ப தவிச்சுப் போயிடறேன்.
அடுப்புல பாலை வெச்சா பக்கத்துலயே நின்னு எறக்கனும், யாராவது காலிங்க் பெல் அடிச்சாங்கன்னு இந்தப்பக்கம் வந்தா போச்சு. இது வரைக்கும் மூனு பால் பாத்திரம், ஒரு கேஸ் பர்னர் தீய்ஞ்சு வீணாப்போச்சு.
இப்படித்தான், ஒரு தரம் நைட்டு சிம்முல வெச்ச அடுப்பு அனஞ்சு போச்சுன்னு நம்பி கேஸை சரியா மூடாமப் படுத்துட்டேன். விடிய விடிய கேஸ் லீக்காயிருக்கு. காலைல ரொம்ப நேரம் வரைக்கும் தூங்கிட்டனேன்னு பதட்டத்துல எழுந்தவன் நிர்மலாவுக்கு கதவைத் தொறந்து விட்டுட்டு பாத்ரூம்குள்ள போனவன் திரும்ப வந்து பாலை அடுப்பில வெச்சுட்டு பத்த வெய்க்க வழக்கம்போல லைட்டர தேடிகிட்டு இருக்கேன். எப்படியோ ஒரு வழியா லைட்டரைக் கண்டுபிடிச்சு பத்த வெய்க்கப் போகும்போது கிச்சனுக்குள்ள வந்த நிர்மலா, ‘ஐய்யோ!… கொஞ்சம் இருங்க’ன்னு அவசரமா கைல இருந்த லைட்டரைத் தட்டிவிட்டா. கேஸ் லீக்காகற மாதிரி வாசம் வருது பாருங்கய்யான்னு அவ சொன்னபோதுதான் தெரிஞ்சுது. கிச்சன்ல விடிய விடிய கேஸ் லீக்காகியிருக்குன்னு. ஒரு நிமிசம் குப்புன்னு வேர்த்துப் போச்சு. அவசர அவசரமா கிச்சன் ஜன்னலை எல்லாம் தெறந்து விட்டு கேஸ் சிலிண்டரை க்ளோஸ் பண்ணிட்டு வேகமா வெளிய வந்துட்டோம். அவ மட்டும் அந்த நேரத்துல வறலேன்னா பால் காய்ச்ச அடுப்பை பத்த வெச்சவன் கதை அன்னிக்கே வெந்து சாம்பலாப் போயிருக்கும். “சமையல் கேஸ் வெடித்து முதியவர் பரிதாப மரணம்”னு நியூஸ் வந்திருக்கும்.
இப்படியே போனா, கூடிய சீக்கிரம் எனக்கு ‘அல்சைமர்’ வந்து நானும் சிரமப்பட்டு மத்தவங்களையும் சிரமப் படுத்துவேனோன்னு ரொம்ப பயம்மா இருக்கு. ‘அல்சைமர்’ வியாதி வந்துட்டா பெத்த புள்ளைங்கள, கட்டின பெண்டாட்டியக் கூட யாருன்னு கேப்பாங்களாமே? நல்லவேளை…! ச்சே ச்சே! என் கெட்ட வேளை. அவ, என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போயி ரெண்டு வருஷம் ஆயிடுச்சு.
நேத்து நடந்ததை மனசுக்குள்ள அப்படியே ரீவைன்ட் பண்ணிப் பார்த்தா….?
ராத்திரி எட்டு மணிக்கு நியூஸ் பார்த்திட்டிருக்கும்போதுதான் சரவணன், போன் பண்ணினான்.
“என்னடா? பிசியா?”
“என்ன விஷயம்? , எங்க இருக்க?”
“உன் வீட்டு வாசல்லதாண்டா நிக்கறேன்“
கதவைத் திறந்து வெளியே வந்து…
“ஏன்டா எருமை, வாசல்ல வந்து நின்னுகிட்டு எதுக்கு போன் அடிக்கற? காலிங்க் பெல் அடிக்க வேண்டியதுதான?”
“இல்லடா! கொஞ்சம் அவசரம். உள்ள வந்து உக்காந்து பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாது. உனக்கென்ன? நீ சுதந்திரப் பறவை. கேட்க யாருமில்ல. நான் லேட்டா வீட்டுக்குப் போனேன்னா எம் பொண்டாட்டி ஒரு மணி நேரம் திட்டித் தீத்துடுவா..”
“வேண்டாண்டா.! அப்புடி சொல்லாதடா, அதுக்குக் கூட ஒரு ஆளு இல்லையேன்னு ஒரு நாளைக்கு இப்படித் தனியாத் தவிக்கும் போதுதான்டா அந்த அருமை தெரியும்.”
பேசிக்கொண்டே உள்ளே வந்தவன், அஞ்சு நிமிசம் ஊரு கதையைப் பேசினான், அப்பறம் வழக்கம்போல வாக்கிங் போனா முட்டி வலி, போகலேன்னா சுகர் ஜாஸ்தியாயிடுமேன்னு பயம்னு என்னென்னெவோ பொலம்பினான். நான் டீ போட்டுத் தர்றேன்னதுக்கு,
“ஐய்யைய்யோ வீட்ல அவ சப்பாத்தி சுடறேன்னா. பையன் சம்பளம் வாங்கிட்டு வந்து குடுத்தான். பத்து நிமஷத்துல வந்துடறேன்னு சொல்லி பணத்தை எடுத்துட்டு நேரா இங்க வர்றேன். அவசரம்னு வாங்கின பணத்தைக் குடுத்துட்டுப் போலாம்னுதான் வந்தேன்”
என்று சொல்லி கசங்காத புது நோட்டுகளாக அஞ்சு ரெண்டாயிரம் ருவா, நோட்டுகளை எண்ணிக் கையில் எடுத்தான். சோஃபால இருந்து எழுந்தவன் என் கையில் பணத்தைக் குடுத்தான். எண்ணிப் பார்த்துவிட்டு சரியா இருக்கு என்றேன். ‘தேங்க்ஸ் டா’ என்றான், நான் ‘போடா! நீயும் உன் தேங்க்சும்’ என்றேன். பேசிக் கொண்டே வாசல் வரை வந்து அங்கும் ரெண்டு நிமிசம் நின்று பேசி அவனை அனுப்பிவிட்டு கேட்டைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தேன்.
கேட்டைப் பூட்டும்போது பணத்தை என்ன செய்தேன்? பூட்டு சாவி எடுக்கும்போது சிட் அவுட்ல திண்ணைமேல வெச்சிட்டு அப்படியே உள்ள வந்திருப்பனோ?. அப்படித்தான் இருக்கணும். போட்டிருந்த பேன்ட் பாக்கெட்டில் வெச்சேனா? லுங்கிக்கு மாறின போது பணத்தை எடுத்து பீரோவுக்குள் வெச்ச மாதிரி நினைவு இல்லையே. வீட்டுக்குள்ள வந்து ஃப்ரிஜ் மேல வெச்சேனா? போனுக்கு சார்ஜ் போடப் போனபோது டேபிள் மேல வெச்சேனா? எழவு எதுவும் சரியா ஞாபகம் வரமாட்டேங்குதே.
காலைல நிர்மலா, வந்து வேலையெல்லாம் செய்யும்போது வாசலுக்கு வந்தவன், எதிர்வீட்டு சாமிநாதன் கிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தேன்.
“ஜோதிபுரத்துல கொரோனால ரெண்டு கேசு, அவுட்டாம் தெரியுமா?”
“அந்த ஏரியாவிலேர்ந்து நேத்து கூட என் ஃப்ரென்ட் வந்தாரே? எங்கிட்ட அவரு ஒன்னும் சொல்லலயே?”
பேச்சினிடையே குறுக்கிட்ட நிர்மலா…
“ஐய்யா! எல்லா வேலையும் முடிஞ்சுதுங்க…”
“டீ போட்டுக் குடிச்சியா? நாளைக்கு எத்தன மணிக்கு வருவ?”
“குடிச்சிட்டனுங்க… பத்து மணிக்கு வந்தர்றனுங்க” சொல்லிக்கொண்டே அவசரமாக இறங்கி நடந்தாள்.
“ஆமா, என்ன கொஞ்ச நாளா உங்க வீட்டு வேலைக்காரப் பொண்ணைக் காணோம், இப்ப மறுபடியும் ரெண்டு மூனு நாளாத்தான் வர்றா போல?”
“அவங்க அக்கா புருஷன் கொரோனாவுல செத்துப் போயிட்டாராம். இவ அங்க போயி ரெண்டு மூனு நாள் இருந்தா. அதுனால ஒரு பதினஞ்சு நாளைக்கு வர வேண்டாமுன்னு சொல்லியிருந்தேன். நேத்திக்கு இருந்துதான் மறுபடியும் வர்றா…”
“ஏன் சார், அவ பாட்டுக்கு உள்ள வேலை செஞ்சுட்டிருக்கா நீங்க பாட்டுக்கு எங்கிட்ட பேசிகிட்டு இங்கயே நிக்கறீங்க? ஆனாலும் எல்லாத்தையும் நீங்க சீக்கிரமா நம்பிடறீங்க..”
“அஞ்சு வருஷமா வேலை செய்யறா?, அப்படிப்பார்த்தா யாரையுமே நம்ப முடியாது சாமி”
சாமிக்கு வீட்டிற்குள்ளிருந்து அழைப்பு வர அவர் உள்ளே செல்ல, நானும் உள்ளே வந்தேன். கரக்ட்டா பானு வீடியோ கால்ல கூப்பிட்டா.
“அப்பா… என்ன பன்றீங்க?”
“எதிர்வீட்டு சாமிநாதன் அங்கிள் கிட்டப் பேசிட்டிருந்தேம்மா. நீங்க ரெண்டுபேரும் எப்படி இருக்கீங்க? தீபக் இல்லயா?”
“இல்லப்பா அவர் ஹேர்கட் பண்ணிட்டு வர்றேன்னு போயிருக்காரு, டிஃபன் சாபிட்டீங்களா?”
“இன்னும் இல்லம்மா. நிர்மலா உப்புமா பண்ணி வெச்சுட்டு இப்பதான் போனா. இனிமேதான் சாப்பிடனும்.”
“நீ, சாப்டியாம்மா? (குரலைத் தாழ்த்தி) உங்க அத்தை நல்லா இருக்காங்களாம்மா?”
“இருக்காங்கப்பா. மகனுக்கு தலைக்கறி பிடிக்கும்னு செஞ்சிட்டிருக்காங்க. ஏம்ப்பா? உங்களுக்கு ஒடம்புக்கு ஒன்னும் தொந்தரவில்லயே? நான் அவர்கிட்ட பேசினேன்ப்பா. பேசாம நீங்க இங்க வந்திடுங்க. எங்க மாமியார் அடுத்தமாசம் மகளோட வீட்டுக்குப் போறாங்க. வர ஆறு மாசம் ஆகும்.”
“இல்லம்மா அது சரிவராது. மருமகன் வீட்ல ரெண்டு நாளைக்கு விருந்துக்கு வேண்ணா வரலாம். வீட்டோட இருக்கக் கூடாது. அவங்க குடும்பத்துல யாரும் விரும்ப மாட்டாங்கம்மா.”
“ஏம்ப்பா! இது உங்க மக வீடு. நானுந்தான் அவருக்கு ஈக்வல்லா மாசம் நாப்பதாயிரம் சம்பாதிக்கறேன்ப்பா. உங்களுக்கு இங்க இருக்க எல்லா உரிமையும் இருக்குப்பா.”
“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதும்மா. இப்ப இருக்குற மாதிரியே நான் இங்க இருக்கறதுதான் சரி. அது மட்டும் இல்லம்மா. நான் நல்லா நடமாடிகிட்டு இருக்கற வரைக்கும் இந்த வீட்டை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். இது உங்கம்மா, நீ, நான் எல்லாம் ஒன்னா வாழ்ந்த வீடும்மா”
“சரி நான் என்ன சொன்னாலும் நீங்க கேக்க மாட்டிங்க, உங்க பிடிவாதம் அப்படி, ஜாக்ரதையா இருங்க, நைட்டு எட்டு மணிக்கு மேல யாரு வந்து கதவைத் தட்டினாலும் உள்ளயிருந்து பார்த்துட்டு அப்படியே பேசி அனுப்புங்க, பகல்லயும் எப்பவும் கேட்டைப் பூட்டி வையுங்க. யாராவது புதுசா வந்தா வெளியவே நிறுத்திப் பேசி அனுப்புங்க வீட்டுக்குள்ள விடாதீங்க, என்னமோ நான்தான் இங்க கெடந்து தவிக்கறேன். சரிப்பா.. டேக் கேர்..”
“நீ, ஒன்னும் கவலைப்படாதம்மா. நான் இங்க நல்லாத்தான் இருக்கேன். மாப்பிளைய ரொம்பக்கேட்டேன்னு சொல்லு, பை, ம்மா.”
சாப்பிட்டு விட்டு கை கழுவும்போதுதான் நிர்மலாவுக்கு சம்பளம் கோடுக்கலையேன்னு ஞாபகம் வந்துச்சு. சரி நேத்து நைட்டு சரவணன் கொடுத்த பணத்துல மூவாயிரம் கொடுத்துட்டு மீதிய கைசெலவுக்கு வச்சிக்கலாம்னு போயி பேன்ட்டு பாக்கெட்ல பார்த்தப்பதான் அந்த அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு பத்தாயிரத்தைக் காணோம்.
*** *** ***
இந்த எழவு கொரானா எப்பத்தான் ஒழிஞ்சு நாசமாப் போகுமோ தெரியல. ஒரே அப்பார்ட்மென்ட்ல நாலு வூட்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். ஒரே நாள்ல சுனாமி வந்த மாதிரி எல்லாம் போச்சு. செகூரிட்டி ஆபீசுல ஐடி கார்டைப் புடுங்கி வெச்சுட்டானுங்க. நாசமாப் போனவனுங்க. வெளங்காத ஒரு புருசன், படுக்கைல கெடக்கற மாமியாக்கெழவி ரெண்டு பொட்டைக.. அஞ்சு உருப்படிக எப்படி சோறு திங்கறதுன்னு தெரியல. இதுல வூட்டு வாடகை வேற மாசம் மூனாயிரம். அஞ்சு மாசமா வேலைக்கும் போகாம பத்துப் பைசா வருமானமும் இல்லாம, கடவுளே!
அந்த மகராசன் ஐயா ஊட்டுக்கு மட்டும் போயிட்டிருந்தேன். போனமாசம் மச்சான்டரு கொரானவுல செத்துப் போனாருன்னு எழவுக்குப் போனேன். ‘நிர்மலா! நானும் வயசானவன். ஒரு பதனஞ்சு நாளு கழிச்சு வா, அதுவரைக்கும் எப்படியோ நானே சமாளிச்சுக்கறேன்’ னு ஐயா சொல்லிட்டாரு. நான் என்னதான் பண்ணுவேன்?.
புள்ளைக பள்ளிக்கோடம் போயிட்டிருந்தா, ஒரு வேளையாவது அதுக வயிராறத் திங்குங்க, இப்ப அதுவும் போச்சு. அரை லிட்டரு பாலு வாங்குனா அஞ்சு பேரும் ரெண்டு நேரம் காப்பி போட்டுக் குடிப்போம். இப்ப பாலு வாங்கியே அஞ்சு மாசமாகுது. யாருகிட்ட சொல்லியழுகறது இந்த நாறப் பொழப்பை? புள்ளைகளப் பாத்தாலும் பாவமாத்தான் இருக்குது. வேலைக்குப் போர ஊடுகள்ள கொழந்தைக திங்க முடியாம விதம் விதமா பலகாரங்களை தட்டுல போட்டு வீணா குப்பைத் தொட்டில போடறதப் பாத்தா வயிறெல்லாம் வேகும். நம்ம புள்ளைக இதையெல்லாம் கண்ணுல கூடப் பாத்ததில்ல. எல்லாம் விதி. எங்கம்மா வேலைக்காரி, நான் வேலைக்காரி, எம்புள்ளைகளாவது கரையேறுங்களான்னு தெரியல. இல்லை அதுகளும் வேலைக்காரிகதானா?
இந்த ரேசன்ல போடற அரிசிய கடனுக்கு ஆக்கி வெச்சா எப்படியோ தொண்டைக்குள்ள எறங்குது. மாமியாக் கெழவி படுத்துக்கிட்டே சண்டைப் போடறா. அப்பப்ப, அபார்மென்ட்ல மிச்சமாகற சோறும் கொழம்பும் நாக்குக்கு ருசியாக் கெடச்சிட்டிருந்தது. இப்ப அதுவும் கெடைக்கறதில்ல. வீட்டு வேலைக்குப் போறதே சம்பளத்துகூட சேத்தி இந்தப் பழசு பரட்டை கெடைக்கும்னு நம்பித்தான், இப்ப அதுவுமில்ல, அரைகொறை சோத்தை திங்கச் சொன்னா அல்லாத்துக்கும் கோவம் வருது. இதுல கெழவிக்கு வேற காலு புண்ணு ஆறவே மாட்டேங்குது. கெழவிக்கு சக்கரைக்கு ஆசுபத்திரிக்குப் போலாமுன்னாலும் பயம்மா இருக்குது. அங்கபோயி கெழவிக்கு கொரோனா வந்து அது எல்லாத்துக்கும் புடிச்சிருச்சின்னா? குடும்பமே செத்துப் போவமோன்னு பயம்மா இருக்குது.
இதுல மூனு மாசமாச்சு, ஊட்டு வாடகை குடுத்து, ரெண்டு மாசம் எப்பிடியோ செரி பண்ணிக் குடுத்துட்டேன், இன்னைக்கு வேலைக்கு வரச் சொல்லுவாங்க, நாளைக்குக் கூப்புடுவாங்கன்னு பாத்துப் பாத்து நாலு மாசமாயி போச்சு, ஊட்டுக்காரம்மா நேத்தைக்கு சாயந்தரம் வந்து வாசல்ல நின்னு சாமியாடிட்டா, நல்ல நாள்லயே வாயத் தொறந்தா சாக்கடைதான். வெளில நின்னுகிட்டிருந்த புள்ளைகிட்ட ‘உங்கப்பனெங்கெ’ன்னு கேட்டிருக்கா. இந்த வேதாளங்க ‘எங்கப்பா தூங்கறாருன்னு’ சொல்லிருச்சுக.
“நான் வேகாத வெய்யில்ல வாடகை வாங்கறதுக்கு, பஸ்சுமில்லாம நடந்து வந்தா மகாராசன் தூங்கறானாம்மா. நல்லா நாயிப் பீய் திங்கற மாதிரி நாலு நேரம் திங்க வேண்டியது, மட்ட மத்தியானத்துல மல்லாக்கப் படுத்துத் தூங்க வேண்டியது. நீயெல்லாம் ஒரு ஆம்பள? யோவ் வெளிய வாய்யா.”
அவசரமாக வெளியே வந்தேன் நான், தூங்கிகிட்டிருந்த அந்த துப்புக் கெட்ட மனுசனும் அடிச்சுப் புடிச்சுட்டு வந்து நின்னுது. அடுத்த வார்த்தை பேசறதுக்குள்ள நான் முந்திகிட்டு.
“அக்கா நாலு மாசமா ரெண்டு பேருக்கும் வேலையில்லீங்கக்கா, ஒரு பத்து நாளு பொறுத்துக்கங்க அக்கா”
“இந்த லொக்கா, தங்கச்சி ஒறவு மயிரெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஊரு ஒலகமே கஷ்டப்படுதேன்னுதான நானும் இந்த மாசம் குடுப்பே, அடுத்த மாசம் குடுப்பேன்னு வாயப் பொளந்து பாத்துகிட்டிருந்தேன். இப்ப மூனு மாசமாயும் மயிரே போச்சுன்னு புருசனும் பொண்டாட்டியும் புள்ளைகள வெளிய தாட்டி உட்டுப் போட்டு பட்டப் பகல்லயே படுத்துக் கெடக்கறிங்க?”
ஒரு நாளுமில்லாத திருநாளா இந்த ஆளுக்கு சுருக்குனு கோவம் வந்துருச்சு.
“வாடகை குடுக்கலேன்னு பேசறீங்க, குடுக்கத் துப்பில்லேன்னு நாங்களும் பேசாம வாயை மூடிகிட்டு நிக்கறமுன்னு என்ன வேணுமுன்னாலும் பேசுவீங்களா?”
“அடத்தூ! நீயெல்லாம் ஒரு ஆம்பள? உனக்கெல்லாம் ரோச மயிரு வேற பொத்துகிட்டு வருது, அத்தன ரோசமிருக்கறவன், வாடகைய எண்ணி வெய்யி. எனக்கு வேற வேலை மயிரில்லாமத்தான் உன்ற ஊட்டு வாசல்ல வந்து நின்னு தொண்டத்தண்ணி வத்தக் கத்திட்டிருக்கறனா? இந்த பாரு ரெண்டு நாளு டைமு, அதுக்குள்ள மூனு மாச வாடகை ஒம்பதாயிரத்தை ஒட்டுக்கா எண்ணி வெக்கிலியோ, நான் உன்ற சட்டி பானையத் தூக்கி வீதில எறிஞ்சுருவேன் ஆமா, நீ ஆரைக்கூட்டிட்டு பஞ்சாயத்துப் பேச வந்தாலும் எனக்குக் கவலையில்ல, நானென்ன தர்ம சத்தரமா கட்டி உட்டுருக்கேன்?. வாடா போலாம்…” கூட வந்த எடுபுடியோட புறப்பட்டுப் போனாள் வீட்டுக்கார அம்மாள்.
சொன்னால் சொன்னது போல செய்வா இந்தப் பொம்பள. அக்கம் பக்கம் எல்லா ஊட்டு வாசல்லயும் ஆளுக நின்னு வேடிக்கை பார்க்கறாங்க. புள்ளைக ரெண்டும் பயந்துபோயி வந்து ஊட்டுக்குள்ள ஒண்டிகிட்டிருக்குதுக, கையில காசில்லேன்னா நாம வெக்கம் மானம் சூடு சொரணையெல்லாம் பாக்க முடியாதே?, என்ற ஆத்திரமெல்லாம் இந்த ஆளு மேல திரும்புச்சு.
“ஏய்யா? என்ன ஜென்மமய்யா நீ?, இப்படி வந்து வாசல்ல நின்னு மானம் கெட பேசிட்டுப் போறாளே?, உனக்குக் கொஞ்சமாவது ரோசமிருக்குதா?, பொறுப்பு இருக்குதா?, ஒரு அவசர ஆத்தரம்னா ஆயிரம், ரெண்டாயிரம் கூட பொரட்டக் கையாலாகாது, எல்லாத்துக்கும் நானே எழவெடுக்கோனுமுனா எப்புடி?, அவ வந்து சத்தம் போட்டப்ப காசு குடுக்கத் துப்பில்லேன்னா வாயை மூடிகிட்டு சும்மா நின்னிருக்கோணும். இல்லேன்னா, ’அம்மா தாயே! கொஞ்சம் தயவு பண்ணி பொறுத்துக்க சாமி’ன்னு அவ கால்ல உளுந்து கெஞ்சறதை உட்டுப் போட்டு பெருசா ரோசம் வந்துச்சு? உன்ற ரோசத்தைக் காசு கொண்டாறதுல போயிக் காமி போ.” என்னோட பேச்சுத் தாங்க முடியாம பதிலும் பேச முடியாம சட்டைய மாட்டிகிட்டு எங்கயோ போனான்.
ரெண்டு நாளைக்குள்ள காசுக்கு எங்க போறது?. ஊட்டுக்காரி சட்டி பானையத் தூக்கி வெளிய வெச்சுட்டா இந்தப் புள்ளைகளையும் சீக்காளிக் கெழவியையும் கூட்டிகிட்டு எங்க போகறது?
*** *** ***
ரொம்பப் பொறுமையா ரீவைன்ட் பண்ணிப் பார்த்ததுல நேத்திக்கு ராத்திரி முதல் இன்னிக்கு காலை வரை இதுதான் நடந்தது. இதுதான் ஞாபகம் வந்தது. காலைலேர்ந்து நிர்மலாவைத் தவிர வீட்டுக்குள்ள வேற யாருமே வரலையே? ஒரு வேளை…! அவதான்…? பாவம் வீட்டு வேலை செய்யறவ, இல்லாதப்பட்டவன்னு அவ்வளவு சீக்கிரம் அவ மேல சந்தேகப்பட்டுட முடியுமா என்ன? ச்சே, என்ன ஈன புத்தி இது?, எப்படி அது மாதிரி நினைக்கத் தோனுச்சு மனசு?, அல்பம், அல்பம்! ஒருவேளை அப்படியில்லாம இருந்து நான் எங்காவது கை மறதியா வெச்சு தொலஞ்சு போயிருந்தா? ஐய்யோ! அந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபடும்? அதுக்கப்புறம் அந்தப் பாவத்தை எங்க போயிக் கழுவறது? தப்பு தப்பு… காசே கெடைக்கலேன்னாலும் சரி கனவுல கூட அப்படி நெனைக்கக் கூடாது. ஏழை அழுத கண்ணீர்! அழிச்சிடும் அந்தப் பாவம். அதுக்கப்புறம் இந்தக் குடும்பமே வெளங்காமப் போயிடும்.
லட்ச ரூபா செலவு பண்ணினாக்கூட வருத்தமில்ல. ஆனா பத்து ரூபா, காணாமப் போச்சின்னா ரொம்ப வேதனையால்ல இருக்கு, காசை வாங்கின ஒடனே கொண்டுபோய் பீரோவுக்குள் இருக்கும் லாக்கரில் வைத்துப் பூட்டியிருந்தால்? இந்த மன உளைச்சல் இல்லையே, அப்பெல்லாம் பீராவோட சாவி பல நாட்கள் பீரோ கதவிலேயே தொங்கும், அவள் இருக்கும்போது ஒவ்வொரு முறையும் அதற்காகத் திட்டுவாள், வேலை செய்யறவங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன், கஷ்டப்படறவங்க முன்னாடி கேப்பாரில்லாம காசு கிடந்தா அவங்க மனசில சபலம் வரும். தப்பு நம்மளோடது என்பாள்.
பானுகிட்ட சொன்னா அவளும் கோவிச்சுக்குவா. இதென்னடா அநியாயம், பணமும் தொலஞ்சதில்லாம நான் என்னவோ திருடின மாதிரியில்ல குற்ற உணர்ச்சியில வருத்தப்படறேன். வியாபாரத்துல ஏமாந்து போனா எங்கப்பாதான் சொல்லுவாரு, “பொருள் நஷ்டம். புத்தி கொள்முதல்”ன்னு.
ஒரு விதமான சலிப்பு, ஒரு சோர்வு, எரிச்சல், புக்கை எடுத்தா வாசிக்க முடியல, டிவி பாக்கவும் பிடிக்கல, வெளிய போயி யாராவது ஃப்ரன்ட்சைப் பார்த்து வரலாமுன்னா. இன்னிக்கு சண்டே முழு ஊரடங்கு, நிர்மலாவுக்கு நாளைக்கு சம்பளம் குடுக்கணும். சாயந்திரமா ஆறு மணிக்கு மேல போயி ஐய்யாயிரம் ரூபா எடுத்துவந்து வெச்சேன். இந்த மாசம் பத்து நாள்தான் வேலைக்கு வந்திருக்கா. ஆனாலும் முழு சம்பளம் கொடுக்கறதா ஏற்கனவே மனசுக்குள்ள முடிவு பண்ணினதுதான். இப்ப பத்தாயிரம் பணம் போச்சுன்னு அவ சம்பளத்துல ரெண்டாயிரம் பிடிச்சுக்கறது அல்பத் தனம் இல்லயா?.
*** *** ***
நிர்மலாவுக்குக் கதவைத் திறந்துவிட்டு குளிக்கப் போனவன், பாத்ரூமெல்லாம் கழுவி விட்டு நிதானமாகவே வந்தேன். வெளியிலிருந்த சிங்கில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தவளிடம்..
“இந்த மாச சம்பளம் இந்தா நிர்மலா…”
பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்தவள் முகத்தில் சந்தோஷத்துக்கு பதிலாக ஒரு வேதனை தெரிந்தது.
“ஐய்யா போன மாசம் நான் பத்து நாள்தாங்க வேலைக்கு வந்திருக்கேன், இதுல முழு சம்பளம் மூனாயிரமிருக்குதுங்… இந்தாங்க, எனக்கு ஆயன்றுவா போதுங்….”
கதவுக்கு பின்னாலிருந்து என் முகத்தை பார்க்காமல் இரண்டாயிரத்தை நீட்டினாள். ஒரு நிமிஷம் என்னவோ கோவம் வந்தது. ‘உன் காசு எனக்கெதுக்கு?’ என்று சொல்ல வேண்டும்போல இருந்தது. நாக்கு நுனி வரை வந்ததைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.
“இல்ல நாந்தான உனக்கு இருபது நாள் லீவு குடுத்தேன், அன்னிக்கே நான் முடிவு பண்ணினதுதான் நீ வெச்சுக்கோ..”
“இல்லீங் ஐய்யா! மத்தவங்க வீட்ல பத்து நாள் சம்பளந்தான் குடுத்தாங்க. அதானுங்..”
“பரவால்ல வெச்சுக்கோ, உன் கஷ்டம் எனக்கு நல்லாத் தெரியும். நான் மனசாரத்தான் குடுக்கறேன். வெச்சுக்கோ…”
அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்கள் கலங்கியிருந்தன, எந்த நிமிஷம் அழுது விடுவாள் என்று தோன்றியது. அவளை மேலும் துன்பப்படுத்த விரும்பாமல் உள்ளே வந்துவிட்டேன்.
பாத்தாயிரம் தொலைந்துபோன கவலை இன்று கொஞ்சம் தேய்ந்து போயிருந்தது, நியூஸ் பேப்பரை எடுக்கவே இல்லை, அதைப் படிக்கத்தொடங்கினால் இன்னும் அதிகமாகத்தான் மனச்சோர்வு வரும், தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்.
“கெளம்பறங்கய்யா…” முதுகுக்குப் பின்னால் நிர்மலாவின் குரல் கேட்டது. என்னுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் இறங்கிபோய்க் கொண்டிருந்தாள்.
செடிகளுக்குத் தண்ணிர் ஊற்றிவிட்டு உள்ளே வந்தவன் வாஷிங் மெசினில் துணிகளைப் போடலாமென்று ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டேன்… ஸ்டேண்டில் தொங்கிக் கொண்டிருந்த பேன்ட்டின் ஒரு பாக்கெட்டிலிருந்த கைகுட்டையை எடுத்துப் போட்டுவிட்டு மறுபாக்கெட்டில் கைவிட்டபோது விரல்களில் ஏதோ தட்டுப்பட்டது.
“இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நாலு, ஐநூறு ரூபாய் நோட்டுகள் நாலு!”
???????????