சிறுகதைகள்

பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம் ஒன்றில் பதுங்கிக்கொண்டது. அதிலிருந்து சராசரி உயரம் கொண்ட ஒருவன் குதித்தான். பருத்த உருவம் காரணமாக கழுத்து காணாமல் போயிருந்தது. நல்ல அடர்த்தியான கேசம். பின்தலையில் பங்க் இருந்தது. முதன்முதலாக வெளிஉலகத்திற்கு வந்தவன் போல சுற்றுமுற்றி நோட்டமிட்டான். அந்த நோட்டம் சிறுநீர் கழிப்பதற்குத்தான் என்று மேற்கு நோக்கி கால் மடித்து உட்கார்ந்த போது தெரிந்தது. சிறுநீர் கழித்தான் என்பதை விட அதை சாக்காக வைத்து நீண்ட நேரத்தை கழித்தான் என்பதே உண்மை. நிதானமாக எழுந்தவன் முகத்தில் நிலத்துக்கு பாசனம் செய்த விவசாயியின் பெருமிதம்.

யார் இவன் என்ற ஆர்வத்தை விட எதற்கு வந்தான் என்கிற ஆர்வமே அதிகமாக இருந்தது. வண்டிக்கு பின்னால் திறந்துவிட்டான். திறக்கும்போது தான் அதில் ஆட்கள் இருந்தார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண் இறங்கினாள். வெகு சுமார். தலை முழுக்க செம்பட்டை முடி. வைட்டமின் குறைபாடு அல்லது தலைக்கு தேங்காய் எண்ணெய் குறைபாடு காரணமாக இருக்கலாம். மாட்டுக்கு கட்டும் சலங்கையை இவள் காலில் அணிந்திருந்தாள். லேசாக அவள் காலை நகர்த்தினாலே சப்தம் பக்கத்து பஞ்சாயத்து வரைக்கும் கேட்கும். மூக்குத்தி வித்தியாசமாக வளையம் போல இருந்தது. சுமாரான அவளுக்கு கொஞ்சம் வசீகரமாக இருந்தது உண்மை. அந்த வசீகரமும் அவள் போயிலை துப்பும் போது மறைந்து போனது. பின்பு சீரான இடைவெளியில் மூன்று ஆண் குழந்தைகள் இருந்தன. நிச்சயம் இதை பரமு சித்தப்பா பார்த்திருந்தால் கடவுளை வசை பாடியிருப்பார். வாக்காளி தவமா தவமிருந்தும் நாலு பொட்டைகளை குடுத்த கடவுள், கண்டவனுக்கும் ஆம்பள புள்ளையா குடுக்குறான் பாரு! ஆறு ஆண்பிள்ளையை பெற்றெடுத்த முன்னாள் பிரசிடெண்ட் இறுதிக்காலத்தில் ஒன்ற இடமில்லாமல் உசிலம்பட்டி பஸ்டாண்டில் அனாதை பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பிரச்சனை பாலினத்தில் இல்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தை போல பரமு சித்தப்பாவும் ஏற்றுகொள்ளவே மாட்டார்.

வண்டியில் இருந்து இறங்கிய மூன்று குழந்தைகளுக்கும் சரியாக பத்து மாதம் தான் இடைவெளி இருக்கும் என தோன்றியது. இயற்கை பெண்ணின் கர்ப்ப காலம் ஐந்து மாதம் என்று நிர்ணயம் செய்திருந்தால் இந்த குழந்தைகளுக்கு இடையே ஐந்து மாதம் இடைவெளிதான் இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த தாய்க்கு பேறுகாலம் என்பது சொற்ப நாளாக இருந்திருக்க வேண்டும்.

இதை யாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் போன்ற நால்வருக்கும் அவன் பணிவான வணக்கத்தை வைத்தான். பிரசிடென்ட்டை பார்க்க வேண்டும் என்றான். எல்லா கிராமத்திலும் விலாசம் சொல்லவே நேர்ந்துவிட்ட ஆட்கள் இருப்பார்கள். ஆனால் இவன் தோற்றம் கருதி குத்து மதிப்பாக விலாசம் சொல்லப்பட்டது. எதிர்த்து எதுவும் பேசாமல் நடந்து சென்றான். அதில் விலாசத்தை வேறு யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற மமதை  தெரிந்தது. திரும்ப மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

வண்டியின் பெட்டிக்குள் ஒரு முனங்கல் சப்தம். அவன் வெகுதூரம் போய்விட்டான் என்பதை அறிந்து பெட்டிக்குள் எட்டிப்பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. மெதுவாக வந்து எட்டிப்பார்த்தேன். S வடிவில் ஒரு மூதாட்டி சுருண்டு படுத்திருந்தாள். மிகவும் சோர்வாக இருந்தாள் என்பதை விட மிக பலவீனமாக இருந்தாள். கூடவே இரண்டு பூனைகள் எனை பார்த்து கத்தியது. என்னைப் பார்த்து தண்ணி வேண்டும் என்றாள். அருகில் இருந்த பொலிவிழந்த பிளாஸ்டிக் குடுவையில் இருந்த தண்ணீரை குடுத்தேன். குடிக்க கூட சக்தி இல்லாதவளாக பாதி தண்ணீர் கீழே சிந்தியது. பார்க்க சகிக்காமல் வெளியே வந்து பழைய இடத்திலேயே உட்காந்து கொண்டேன்.

வெளியூரின் பெருமையாக சொல்லிக்கொண்டாலும் உள்ளூர் பவுசு அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவனுக்கு தான் தெரியும். அப்படித்தான் எங்கள் கிராமம். நானுறு குடும்பங்கள் இருந்தாலும் அதில் நாற்பது ஜாதிகள் இருக்கும். அந்த ஊரில் உள்ள பெரும்பான்மை ஜாதியிடம் மற்ற ஜாதிக்காரர்கள் கொஞ்சம் பணிவாகத்தான் நடந்து கொள்ளவேண்டும்.

சற்று நேரத்தில் அந்த கணவன், மனைவி கால் டஜன் குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள். தங்களுக்குள் எதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த குழந்தைக்கும் கால் சட்டை இல்லை. மூன்று குழந்தைகளும் சுழற்சி முறையில் அழுது கொண்டிருந்தார்கள். இவர்களை கவனிக்கும் என்னை பற்றி எந்த கவலையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். அதுவே இவர்கள் மீது சுவாரசியம் கூட காரணமாக அமைந்துவிட்டது. அரசு வேலைக்கு படித்துக்கொண்டிருக்கும் எனக்கு இவர்களை கவனித்ததில் மதிய நேரம் அன்று விரைவாகவே வந்த உணர்வு. வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு குரல் கேட்டது. ஒரு யாசகத்துக்கு உண்டான ஆண் குரல். சில்லறை கொடுக்க வெளியே சென்ற அம்மா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். வரவர அம்மா பிச்சைக்காரர்களிடம் கூட நட்பு கொண்டாட ஆரம்பித்துவிட்டாள் என தோன்றியது. அப்படியே வெளியே சென்றேன். ஊர் ஆலமரத்தில் தங்கியிருந்த குடும்பம் தாங்கள் கொண்டு வந்த வண்டியோடு பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு இயந்திரவண்டியின் உதவியோடு யாசகம் கேட்கும் நிகழ்வு சமூகத்துக்கு புதிதில்லை என்றாலும் எங்கள் கிராமத்துக்கு அது புதுசு. பிச்சை கேட்கும் இந்த தம்பதிகளை விட அதி சிறந்த பிச்சைகாரர்கள் என் கிராமத்தில் உண்டு. ஆனால் அவர்கள் கேட்பதுமில்லை, போடுவதுமில்லை. இவர்களின் யாசகம் கேட்கும் தொணி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதாகப்பட்டது, பழைய உணவு வேண்டாம். அரிசி, பருப்பு, சில்லறை காசுகள், பழைய துணி மட்டும் போடுங்கள் என்று சற்று உரிமையுடன் கலந்த பணிவு அதில் தெரிந்தது. எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல பொதுவாக பிச்சை எடுப்பவர்களுக்கென்று சில தகுதிகள் வேண்டும். தலை எண்ணெய் படிந்து வாரியிருக்க கூடாது, தொந்தி, தொப்பை கூடாது, குறிப்பாக குளித்திருக்கக்கூடாது, கை கால் உணர்வில்லாமலோ அல்லது இல்லாமலோ இருந்தால் சிறப்பு, பார்க்கவே பரிதாபமாக இருந்தால் விரும்பத்தக்கது.  இப்படி இருக்கும் சமூகத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டியில் இவர்களது தொழில் எப்படி எடுபடும் என்று கொஞ்சம் கவலையாகக் கூட இருந்தது.

எங்கள் கிராமம் ஆங்கிலேயேர்களால் நிர்மாணிக்கப்பட்டது. மிக நேர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும். திருடிவிட்டு ஓடினால் கூட திருடன் நேராகத்தான் ஓட வேண்டிய கட்டாயம். ஆகையால் யாசகம் கேட்கும் இந்த தம்பதிகளை எங்கள் வீட்டு திண்ணையில் இருந்து கொண்டே வேடிக்கை பார்க்கலாம்.  கிராமத்தில் இருந்து இப்போது செத்துப்போன நிறைய தாத்தாமார்கள் ஆங்கிலேயர்களிடம் சேவகம் புரிந்தவர்கள். சில தாத்தாக்கள் ஆங்கிலேயே பெண்களையும், சில ஆங்கிலேயர்கள் எங்கள் கிராமத்து பெண்களையும் மணந்து கொண்டதாகவும் அதன் காரணமாகவோ கிராமத்தில் ஐந்து சதவீத மக்கள் இந்திய-ஆங்கில கூட்டுத்தயாரிப்பில் உருவானவர்கள் போல இருந்தார்கள் என்று சொல்லப்பட்டது.

சிலர் சில்லறையை போட்டார்கள் என்றாலும் பலர் அடித்து விரட்டாத குறையாக துரத்திவிட்டார்கள். வங்கியில் வேலை பார்க்கும் முத்தையாதான் எங்கள் ஊர் முதல் பட்டதாரி. அவர் படித்து பிஏ பொருளாதாரம் என்றாலும் என்ன படிக்கலாம் என்பதை இவரிடமே யோசனை கேட்பார்கள். எந்த விண்ணப்பபடிவம் என்றாலும் இவர்தான் நிரப்பி கொடுப்பார். இவர் குரலும் கணீர் ரகமாக இருக்கும். இயல்பாக சாப்பிட்டாயா? என்பதை கூட அதட்டலாகத்தான் கேட்பார். வங்கி வேலைக்கு சென்றதால் இவரின் மதிப்பு இன்னமும் கூடிப்போனது.  வங்கிக்கு செல்லும் நேரத்தைத் தவிர சட்டை போடாமல் திண்ணையில் உட்காந்து கையில் குச்சி இருந்தால் பல்லை குத்திக்கொண்டு இருப்பார். இத்தனைக்கும் பற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல்தான் இருக்கும். அப்படிப்பட்ட முத்தையா வீட்டுக்கு முன்னால் தான் இவர்கள் நிற்கிறார்கள்.

விடுமுறை என்பதால் முத்தையா வீட்டில் தான் இருந்தார். கன்னடம் கலந்த தமிழில் தம்பதிகள் யாசகம் கேட்ட போது முத்தையா முதல் அழைப்பிலேயே வெளியே வந்தார். வந்தவர் உழைப்பின் மகத்துவத்தை கடினமான மொழி கொண்டு இவர்களை திட்டினார் என்பதை விட கொட்டினார். பேசிகொண்டிருக்கும் போது அவ்வப்போது அடிக்க கை ஓங்கினார். போலீசில் மாட்டிவிடுவேன் என்று மிரட்டினார். தம்பதிகள் கூனிக்குறுகி நின்றார்கள். குழந்தைகளில் இரண்டு வீறிட்டு அழத் தொடங்கியது. கூட்டம் சற்று கூட ஆரம்பித்தது. சிலர் முத்தையாவோடு சேர்ந்து கொண்டனர். சில இரக்க குணமுடைய நல்லவர்கள் முத்தையாவை அமைதிப்படுத்த முயன்றனர். யார் என்ன சொன்னாலும் இவர்களை திட்டிவிட்டுத்தான் ஓய்வேன் என்பதில் முத்தையா உறுதியாக இருந்தார். பொதுவாக இவர் பிச்சைகாரர்களை இவர் திட்டுபவர் கிடையாது. போனா வாரம் கூட ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் பிச்சை போட்டுவிட்டு ஒரு ரூபாய் போக மீதம் நான்கு ரூபாயை வாங்கிக்கொண்டவர்தான். இன்று இவருக்கு என்னானது என்று தெரியவில்லை. பிச்சைக்காரனின் அடர்த்தியான முடி இவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். காரணம் முத்தையா விசாலமாக யோசித்ததன் விளைவாக கணிசமான கேசத்தை இழந்திருந்தார். இது என்னுடைய அனுமானம் மட்டுமே. சம்பந்தமே இல்லாமல் இந்த தம்பதிகளை வறுத்து எடுக்க காரணம் புரியவில்லை.

சற்று நேரத்தில் கூட்டம் கலைந்தது. முத்தையாவும் திட்டி கொஞ்சம் சோர்வாக உணர்ந்திருப்பார் போல. துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றார். தம்பதிகளை பார்த்தேன். மிக சோர்வாக இருந்தார்கள். அவர்களது முகம் மிகுந்த அவமானம் அடைந்தவர்கள் போல இருந்தது. மரியாதை இழந்து தான் பிச்சை எடுக்கிறார்கள். எனிலும் அவர்கள் முற்றிலும் சுயமரியாதையை இழந்தவர்கள் அல்லர். பணத்தை வீசி எறிந்துவிட்டு அதை எடுத்துச் செல் என்று கூறினால் நூறில் எழுபது பிச்சைக்காரகள் அதை எடுக்காமலே செல்வார்கள். ஒருவன் இறக்கும் வரை கூடவே சொற்ப அளவு தன்மானமாவது ஒட்டிக்கொண்டு வரும். இது இந்த தம்பதிகளுக்கும் பொருந்தும்.

அடுத்தடுத்த வீடுகளுக்கு செல்லாமல் தம்பதிகள் ஆலமரத்துக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்கள். எண்ணெய் ஊற்றா விட்டாலும் பெடல் போட்டும் இயக்கும் வண்ணம் அவர்கள் வாகனம் இருந்தது. அவர்கள் போகும் வேகம் நிச்சயம் ஊரை காலி செய்துவிட்டு போகவேண்டும் என்ற முனைப்பு அதில் இருந்தது. அவர்களின் வருகை முதற்கொண்டு கவனித்து வரும் எனக்கு அதில் கொஞ்சம் வருத்தமே. கை, கால்கள் நன்றாக இருந்தும் பிச்சை எடுக்கிறார்கள் என்றாலும் கூட பிச்சை எடுக்கும் பணத்தில் அவர்கள் அடுக்குமாடி வீடு கட்டிக்கொண்டு வசதியாக வாழப்போவதில்லை. அந்த பணத்தில் மூன்று வேளை உணவு கிடைக்கலாம். அதிகபட்சம் பராமரிப்பு இல்லாத திரையரங்கில் உட்காந்து ஒரு பழைய எம்ஜிஆர் படம் பார்ப்பார்கள்.

முத்தையாவின் பரிணாமம் எப்படி இன்று வேறுவிதமாக வெளிப்பட்டதோ அப்படித்தான் இன்று வந்த தம்பதிகள் மீது என் கரிசனமும். மனிதர்கள் மீதான பொதுவான அபிப்பிராயம் மாறுவதற்கு அனுபவம் ஒரு காரணம் என்றாலும் சிலநேரம் நடக்கும் சம்பவங்களும் ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.

வழக்கமாக படிப்பதற்கு அந்த ஆலமரத்திற்கு செல்வது வழக்கம். மதியவாக்கில் நடந்த சம்பவத்திற்கு பின் அங்கு செல்லவே பிடிக்கவில்லை. வீட்டிலேயே புத்தகத்தை திறந்து வைத்தாலும் எதோ ஒரு குறைஉணர்ச்சி அழுத்துகிறது. தாளமுடியாமல் ஆலமரம் சென்றேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக அந்த தம்பதிகள் அங்கேயே டென்ட் அடித்து ஒரு தற்காலிக குடில் அமைத்திருக்கிறார்கள். பார்க்கவே கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவர்களையே பார்த்தேன். ஒரு எண்ணம் வந்து அவர்கள் குடில் நோக்கி நடந்தேன்.

அந்த கணவனிடம் காயம்பட்ட வடு அறவே இல்லை. ஒரு பிராணியை தீயில் வாட்டிகொண்டிருந்தான். மனைவி குளிக்கும் வாளியில் மாவு போட்டு பிசைந்து கொண்டிருந்தாள். வயதான தாய் வாய் திறப்பதும் மூடுவதுமாக இருந்தது. குழந்தையில் ஒன்று தூங்கிக்கொண்டிருக்க இரண்டு கேள்வியே படாத விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

நான் அருகில் சென்றதும் அவன் எழுந்து நின்று வணங்கினான். அவனது வணக்கம் எப்படியும் இதற்கு முன் கோடி முறை நிகழ்ந்திருக்கும் என தோன்றியது. அந்தளவுக்கு வணக்கத்தில் ஒரு நேர்த்தி. மனைவியும் ஓடிவந்து வணக்கம் வைத்தாள். முழுமையான மனிதனுக்கும் வேலையில்லாதவனுக்கும் இடைநிலை பிரிவில் உள்ள எனக்கு  வைக்கப்பட்ட முதல் வணக்கம் இதுவே. என் கையும் பதில் வணக்கத்திற்கு போனதும் பதறிவிட்டார். மரியாதையை கொடுத்துவிட்டு பதில் மரியாதையை நிராகரிப்பவனை சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்த்தேன். அவனே பேச ஆரம்பித்தான். சமூகத்தை மதிப்பிடும் அளவுக்கு அறிவை பெற்றிருக்கும் நானே அவரை “அவனை” என மனதுக்குள் விளிப்பது சமூகத்தின் மற்றொரு உபபிணி.

நான் நினைத்தது போலவே தமிழக-கர்நாடகா எல்லைக்கு அருகில் உள்ள கிராமம் தான் இவர்களது சொந்த ஊர். இவர்களது கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் இது போல வாகனம் உள்ளது என்றும் ஊர் ஊராக சென்று இப்படி பிழைப்பு நடத்தி வருடத்தில் ஒரு மாதம் ஒன்று கூடுவார்களாம். தந்தையின் சகோதரி மகளை மணம் புரிந்திருக்கிறார் என்று சொல்லும்போது மட்டும் லேசாக சிரித்தார். அவர் மனைவிக்கும் சிரிப்பு. இந்த நேரத்தில் ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் தாயை உடன் அழைத்துவந்துவிட்டதாக சொல்லும்போது முகத்தில் எந்த சலனமும் இல்லை. வருசமானால் வயசாகத்தான் செய்யும், வயசான சாகத்தான் வேண்டும் என்ற மானுடவியலை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தான்(ர்).

முத்தையா அப்படி சொன்னது உங்களுக்கு வருத்தமாக இல்லையா? என்றேன். அதற்கு பதிலாக வெறும் சிரிப்பு மட்டுமே கிடைத்தது. விடைபெரும்போது, இரவில் உங்கள் ஊரில் வந்து சந்திக்கிறேன் என்றார். எனக்கு புரியவில்லை. எதற்கு இரவில் ஊருக்கு வருகிறார். பகலில் வந்ததற்கே இப்படியென்றால் இரவில் ஊருக்குள் வந்தால் முத்தையா வகையறா இவர்களை திருடர்கள் என்றல்லவே முடிவு செய்யும்? பொறுக்கமுடியாமல், ஏன் என்றேன். வந்து பாருங்கள் என்று மட்டும் சொன்னார். என்ன விபரீதம் என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்துவிட்டேன்.

பகல் மங்கி இரவுக்கு போனது. எனக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நிகழப்போகும் விபரீதத்துக்கு நானே மௌனசாட்சியாகி விடுவேனோ என்று பயம் கூட வந்தது. தெருவில் நாய் குரைத்தது. வழக்கமாக குரைப்பது தான். இன்று ஏனோ அந்த நாய் குரைக்கும் காரணத்தை அறிய ஓடினேன். அவிழ்ந்த வேட்டியை அள்ளி முடிந்து ஓடும் வேகத்தை பார்த்த அம்மாவும் என்னுடன் ஓடிவந்தார். வெளியே எந்த நாயும் இல்லை. என்னுடன் ஓடி வந்த அம்மா பதட்டமாக என்னை பார்த்தார். எந்த சலனமும் இல்லாமல் போய் உட்காந்தேன்.

மணி சரியாய் ஒன்பதிருக்கும். மைக் செட் குழாய் பேசுவதற்கு முன்னால் ஊளையிடும் சப்தம் கேட்டது. ஊர் கோவிலில் இருக்கும் மைக் செட் சப்தம் கருவறையில் குடிகொண்டிருக்கும் கணம் பொருந்திய கருமாரியம்மனுக்கே கேட்காது. அந்தளவுக்கு அற்பமான குழாய் அது. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு சப்தமாய்?

ஆர்வமாய் வெளியே வந்தேன். என்னை போன்ற வேலையில்லாத மக்கள் எனக்கு முன் ஓடினார்கள். அது மகுடி சப்தம் கேட்டு மயங்கிய மானங்கெட்ட பாம்புகள் போலிருந்தது.

“எனதினிய அன்பு மக்ளுக்கு, இன்னி சிறிது மணியாவில் இன்னிசை நாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் வருக!”

இது எங்கேயோ சமீபத்தில் கேட்ட குரல். அதிக நேரம் யோசிக்கவில்லை. அந்த மரத்தடி குடும்பத்தலைவனின் குரலே தான். ஆச்சர்யம் அதையும் தாண்டி அதிர்ச்சி. சப்தம் கேட்டு நெருங்க நெருங்க மைக்செட் சப்தம் தெளிவாக கேட்டது. காய்ந்து போன மக்கள் எனை இடித்துக்கொண்டு சென்றனர்.

ஊர் பொதுக்கிணறு பாழுங்கிணறாக மாறியதால் அதை மூட கிராம நிர்வாகம் முடிவு செய்து வீட்டுக்கு ஒரு ஆண்மகன் முன்னின்று அருகில் உள்ள குளத்தை தூர்வாரினோம். தூர்வாரியதை வைத்து பொதுக்கிணறு வாயை அடைத்தோம். இப்போது அந்த அடைபட்ட பகுதி வட்டமான சிறுமேடை போன்று இருக்கும். அந்த வட்டத்தில் தான் அவன் நின்றுகொண்டிருந்தான். காலையில் நம்மிடம் பிச்சை எடுத்தவனா இப்படி நிற்கிறான் என்று பாதிப்பேர் நம்பவில்லை. நான் வெகுஅருகில் போய் நின்றேன். எனை பார்த்து அவன் சிநேகமாக சிரித்தது கொஞ்சம் கௌரவமாக இருந்தது.

இரண்டு மூன்று ரேசன்கடை வெள்ளை வேட்டியை ஒன்றாக தைத்து அதை இருபுறம் மூங்கில் கம்புகளால் விரித்து கட்டப்பட்டிருந்தது. அதனை நோக்கி இருபுறம் ஒளி வெள்ளம் என சொல்ல முடியாவிட்டாலும் ஒளி பாய்ச்சப்பட்டு இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது யார் வேண்டுமானாலும் இது மேடை என்று ஒப்புக்கொள்ளும் வண்ணம் இருந்தது. மேடைக்கு அருகிலேயே மூன்று குழந்தைகளும் வருடம்வாரியாக உட்காந்திருந்தது. இவர்களின் வாகனம் ஒரு ஓரமாக இருந்தது. அதற்குள் இருக்கும் வயதான பாட்டி குறித்த யோசனையெல்லாம் இப்போது இல்லை.

இதோ முதல் பாடல் என்று சொல்லிவிட்டு வெள்ளை வேட்டிகளுக்கு பின்னால் மறைந்தான். அது கேசட் மாற்றுவதற்கு என்று நினைக்கிறேன். இப்போது மொத்த கிராமமே இங்குதான் நின்றது. நடக்கும் நிகழ்ச்சிக்கு இலவச மின்சாரம் கொடுத்து அனுமதியும் கொடுத்த ஊர் பிரசிடென்ட்டுக்கு மடக்கு சேர் போடப்பட்டு மத்தியில் உட்காந்திருந்தார்.

ஓ ஓ ஓ ஓ …. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா…ஓ!

பின்னால் எந்த லட்சியமும் இல்லாமல் நின்று கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் மெதுவாய் மேடையை நோக்கி முன்னேறியது. உண்மையாகவே கண்ணை நம்பமுடியவில்லை. பேரழகியாக நின்று கொண்டிருந்தாள். காலையில் கணவனுடன் பிச்சை எடுத்தவளா இவள்? என்று ஒரு பெண் வாய்விட்டே கூறினாள். முன் வரிசையில் நின்றும் கண்ணை கசக்கி கொண்டு அவளை ரசித்த அந்த ஆண்கள் கூட்டத்தில் நானும் ஒருவன். பாடல் முடியும் வரை அவள் ஆடிய நடனம் ஒரு பாம்பே எழுந்து நின்று ஆடியது போல இருந்தது. எடக்கு மடக்கான அவள் அசைவில் கூட்டமும் சேர்ந்தே அசைந்தது. மூன்று குழந்தை பெற்றவளா இவள் என்று கூட்டமே ஆர்ப்பரித்தது. பாடல் முடியும் வரை கண்கள் வேறு பக்கமே திரும்பவில்லை. பாடலின் ஒரு கட்டத்தில் கணவனும் இணைந்து கொண்டு ஆடினான். ஒரு தொழில்முறை நடனக் கலைஞர்களை மிஞ்சிய ஆட்டம் அது. பாடல் முடிந்ததும் பிச்சை போடாத கைகளின் கரவொலி அதிர்ந்தது. இவனுகளுக்கு கை கூட தட்ட வருமா என்று திகைப்பாக இருந்தது. அந்தளவுக்கு ஒருங்கிணைந்த சீரான கைதட்டல் அது.

பாடல் முடிந்ததும் பழைய துணி சுற்றியிருந்த அந்த மைக்கில் நன்றி நன்றி என்று சொன்னான். அந்த தொணி, பிச்சை போட வக்கில்லாத பிச்சைக்காரர்களா, உங்கள் கைதட்டல் யாருக்கு வேண்டும்? என்பது போல இருந்தது. அடுத்த பாடல்,

பனி விழும் இரவு நனைந்தது நிலவு என்று ஒலித்தபடி கணவன் மனைவி இருவரும் பொத்தாம் பொதுவாக குடும்பம் நடத்த முற்பட்டார்கள். எனிலும் அதிக ஆபாசமில்லாமல் அற்புதமாக இசைக்கு ஏற்ப ஆடினார்கள். தன்னார்வலராக மாறிய ஊர் தலையாரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் போல கூட்டத்தை ஒழுங்குபடுத்தி உட்கார வைத்தார். இதற்கிடையில் வயதுக்கு வந்தபின் ஊர் நிகழ்வில் தென்படாத இளம்பெண்கள் கூட கலந்து கொண்ட அற்புத நிகழ்வாக மூன்றாவது பாடல் அமைந்துவிட்டது.

திருவிழாவுக்கு காசு கூட்டிட்டு வந்த குரூப் கூட இப்படி ஆடமாட்டனுங்க என்று வெளிப்படையாகவே பேச்சு கிளம்பியது. மொத்தத்தில் ஊருக்கு மறக்க முடியாத நிகழ்வாக மாறிகொண்டிருந்தது. அடுத்து அடுத்து என்று பதினைந்து பாட்டுக்கு ஆடிவிட்டார்கள். கூட்டம் அசையாமல் வேடிக்கை பார்த்தது. ஆடியவர்களும் அசரவேயில்லை. இடையிடையே கை தட்டி மகிழ்ந்தது. கணவன் மனைவி சண்டையையே கால் வலிக்க காத்திருந்து ரசிக்கும் கிராமத்துக்கு இன்று எதிர்பாராத விருந்தே நடந்துள்ளது. அதுவும் எதிர்பார்க்காத ஆட்களிடமிருந்து!

ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்துவிட்டது. முடிவில் ஏதேனும் உண்டியல் குலுக்குவார்கள் கூட்டம் காசே போடாமல் புறக்கணித்து விடுமே என்று கூட கவலையாக இருந்தது. கூடவே என் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் எடுத்து கையில் வைத்துக்கொண்டேன்.

“நிகழ்ச்சியை ரசிச்ச அனவருக்கும் நன்றி” என்று குழாயை கழற்ற ஆரம்பித்துவிட்டார். நிறைய பேர் நெருங்கி வந்து பாராட்டும் போது அவர் அதை சட்டையே செய்யவில்லை. ஊர் பிரசிடென்ட் மட்டுமல்ல பல கிராம மக்கள் அவர்களை வீட்டுக்கு சாப்பிட அழைத்தது மட்டுமின்றி கையில் பணத்தை திணிக்க முயற்சித்தார்கள். அவர் எதையும் வாங்கிக்கொள்ளவே இல்லை. சிலர் மட்டும் விபரமாக தூங்காமல் விழித்துகொண்டிருந்த அந்த மூத்த குழந்தையிடம் பணத்தை கையில் திணித்தனர். கூட்டத்தில் முத்தையாவும் தர்மசங்கடத்தின் உருவாக தென்பட்டு மறைந்தார். காலையில் பிச்சைக்காரனாக தெரிந்தவர் இரவில் ஒப்பற்ற நடன கலைஞனாக உருமாறிய ஆச்சரியம் ஊருக்குள் அடங்க ஒருவாரமானது. எங்கோ இருந்து வந்த ஒரு குடும்பம் ஒட்டுமொத்த ஊர் மக்களையும் பிச்சைகாரர்களாக மாற்றிய விஷயம் எத்தனை பேருக்கு உரைத்தது என்று தெரியவில்லை. எது எப்படியோ இப்போது ஊருக்குள் எந்த பிச்சைக்காரர்கள் வந்தாலும் அவர்களது முகத்தில் ஒரு கலைஞன் தென்படுகிறான்.

*****

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button