3 ரூபாய் கூலி உயர்வு கேட்டால் வன்புணர்ந்து கொலை செய்யலாம் என்ற திமிரைக் கொடுப்பது எது?
மா.கதிர்வேல்
![Article 15](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/images-2019-06-29T145037.869-608x405.jpeg)
Article 15.
இன்னும் இந்தப் படம் கொடுத்த தாக்கத்திலிருந்து வெளியில் வர முடியவில்லை. தொடர்ந்து இந்தியாவிலிருக்கும் கிராமப் பகுதிகளில் எங்காவது சாதியின் பெயரால் கொலை, வன்புணர்வு, வன்முறை ஆகியன நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதைப் பற்றிய எந்த விதமான அக்கறையும், கவலையும் மத்திய மாநில அரசுகளுக்கு இருப்பதில்லை. ஏன், சக மனிதர்களுக்குக் கூட இந்த கொடூரங்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. இது இன்று நேற்றல்ல. சுமார் பலநூறு வருடங்களாகத் தொடரும் அவலம்.இந்தப் புரிதலற்றவர்களை சமூகத்தில் எவ்வளவு அநீதிகள் நடந்தாலும் ‘தனக்கென்ன’ என்று நகர்பவர்களைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் படமல்ல இது, அவர்களைக் கன்னத்தில் அறையும் படம்.
உபி மாநிலத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு மேலதிகாரியாக வரும் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா) சாலையின் ஓரமாக இருக்கும் கடையில் குடிக்க நீர் வாங்கி வர சொல்ல, அதற்கு சக அதிகாரிகள் தயங்குகிறார்கள்.அயன், அவர்களிடம் ஏன் எனக் கேட்க, “ இல்ல சார், அவங்க ‘பாசி’ சாதி… ஷெட்யூல் காஸ்ட்… அவங்க கிட்ட நாங்க எதுவும் வாங்க மாட்டோம்” எனச் சொல்ல, அதையும் மீறி அயன் தண்ணீரை வாங்கிக் குடிக்கும் போதே கதை நெருப்பாகப் பற்றுகிறது.
கிராமம் என்றாலே வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்திருப்பவர்கள் எனத் தொடர்ந்து ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. உண்மையில் அங்கு வெள்ளந்தி மனிதர்களாக இருப்பவர்கள் யார், அப்படி இருப்பதால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவது என்ன? அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலாக, “அவர்கள் வேறு யாருமல்ல. தாழ்த்தபட்ட மக்கள் தான். அவர்களை சுரண்டுபவர்கள் காவி வெறியர்களும் சாதி இந்துக்களும் தான்…” என்பதை நேரிடையாகவே போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் அனுபவ் சின்ஹா.
காவல் நிலையத்திற்கு மூன்று சிறுமிகள் காணாமல் போய் விட்டதாகப் புகார் வருகிறது. காணாமல் போனவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் வெள்ளந்தி மனிதர்களாக இருந்தால் என்னவெல்லாம் நடக்குமோ அவை எல்லாம் இதில் நடக்கிறது. சக காவல்துறை ஊழியர் அயனிடம்” “சார் அவங்க அப்டிதான் சார்… திடீர்னு ஓடிப் போவாங்க. அப்புறமா வந்துருவாங்க. அவங்களல்லாம் கண்டுக்கக் கூடாது சார்” என்கிறார். இதில் வரும் ‘அவங்க’ என்ற வார்த்தையில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.அதைத்தான் அயனும் அவர்களுக்குச் சொல்கிறார்.
காணாமல் போன சிறுமிகளைத் தேட எத்தனிக்கும் அயனை காவல் துறையினரே எதிர்க்கின்றனர். அத்தனைக்குப் பின்னாலும் பூதாகரமாக அரூபமாகச் சூழ்ந்துள்ளது சாதி.
உண்மையில் அந்த சிறுமிகளுக்கு நேர்ந்தது என்ன என்பது தெரிய வரும் போதுதான் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்கிறது. அந்த நடுக்கம் இன்னும் போகவில்லை. சாதியின் கோரமுகம் எவ்வாறானது என்பதை இந்தப் படம் நெடுகிலும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சிறுமிகள் வன்புணரப்பட்டுத்தான் கொல்லப்பட்டார்கள் என்பது புலப்பட, அதற்குக் காரணமானவர்கள் யாரென தெரியும் போது மொத்தக் காவல் நிலையமும் ஆடிப் போகிறது.
ஒரு திரைப்படம் தான் சொல்ல வருவதை முழுமையாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த, தாக்கத்தை ஏற்படுத்த கதை மட்டும் நன்றாக இருந்தால் போதாது.நடிகர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியம். இத்திரைப்படத்தில் அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சக போலிஸ் அதிகாரியாக வரும் குமுத் மிஸ்ரா மற்றும் மனோஜ் பாவா. ஆயுஷ் குரானைப் பற்றி சொல்லவே தேவையில்லை.ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் நம்மை மிகவும் வியப்புக்குள்ளாக்குகின்றன. ‘இமேஜ்’ என்ற கிறுக்குத்தனமான போலியான ஒரு வட்டத்திற்குள் அகப்படாத ஒரு முழுமையான கலைஞன் ஆயுஷ் குரான்.
படம் சொல்ல வருவது சாதியம் என்பது அதிகார மையத்தில் இருப்பவர்களையும் அதிகாரிகளையும் ஆட்டுவித்தால் என்ன ஆகும் என்பதைத் தான். “let’s be Indian firstly lastly” , அண்ணல் அம்பேத்கரின் இந்த வரிகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நேர்மையாக படம் எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்மையாக எடுத்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சிறுமிகளைத் தேடும் அயனிடம், சிறுமிகளின் பெற்றோரே “அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் அது தெரிந்துதான் நாங்களே கொலை செய்து விட்டோம்” எனப் பொய் சொல்கின்றனர். வெள்ளந்தி மனிதர்களைச் சுரண்டும் சாதிக் கயவர்களின் கோர முகத்திற்கான எடுத்துக்காட்டு அக்காட்சி.
![மா.கதிர்வேல்](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/Ma-Kathirvel.jpeg)
காவி பயங்கரவாதம் மற்றும் சனாதானத்தை எதிர்த்து மிகுந்த நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திரைப்படம் இது.