நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி
அவள் பள்ளிகொண்டபுரம்
மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து.
பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையானது அதன் இருளோடும் குளிரோடும் நினைவில் இருக்கிறது. கருவறை இருளில் இருந்து சுடர் வெளிச்சத்தில் துலங்கி வரும் பத்மநாபசுவாமியின் பதினெட்டு அடி கருத்த சயனத் திருமேனியின் சித்திரம் மனதில் எழுகிறது.
அனந்தன் காடானது திருவனந்தபுரமாக மாறிய புராணக்கதையும், அதன் வரலாறும் நாவலில் சொல்லப்படுகிறது. அவ்வளவு பெரிய ஆலயத்தைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளும், விழாக்களும் , ஆலய அமைப்பும், நகரமும், கோவில் சார்ந்த கலைகளும் நாவல் முழுக்க நிறைந்திருக்கின்றன.
பத்மநாபபுரம் தன் அத்தனை அழகுகளுடனும், சந்தடிகளுடனும் நாவலின் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கிறது.
நாவலின் மொழியானது சமஸ்கிருத மலையாளம் கலந்த தமிழ். எழுதும் களத்தைச் சார்ந்து இவ்வாறுதான் எழுதமுடியும். புத்தகத்தின் பின்னால் மலையாள வார்த்தைகளுக்குப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கலப்பான மொழி கவித்துவமானது.
திருவனந்தபுரத்தின் அதிகாலையை எழுத்தாளர் ‘மோனதபஸ்’ என்றும் ‘மோனமான சாந்தியில் இயற்கையன்னை கிறுகிறுத்துக் கிடந்தாள்’ என்றும் சொல்லுமிடங்களில் அந்த அதிகாலை கண் முன்னே வருகிறது.
அனந்தன் நாயரின் குடும்ப வாழ்வுடன், அந்த நகர் மக்களின் வாழ்வியல் முறைகளும், கோட்டைகளும், தம்புராட்டிகளின் அரண்மனைகளும், கடற்கரையும், தறவாட்டு வீடுகளும் நாவலில் இடம்பெறுகின்றன.
எனக்கு இந்த நாவல் நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்ததற்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு. கல்லூரியில் என் அறைத்தோழிகள் கேரளப்பெண்கள். உண்மையில் அந்த வயதில் இந்த நாவலில் வரும் கேரள சமூக சூழலைப் புரிந்து கொள்ள அவர்களே காரணம். அவர்களுடன் உரையாடியே இதன் மைய இழையைப் பிடித்தேன். இல்லையெனில் அந்தவயதில் அனந்தன் நாயரின் கார்த்தியாயனியைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. தோழிகள் மூலமே கார்த்தியாயனியை நான் மனதில் வரைந்து கொண்டேன். அனந்தன் நாயரின் அழகான பாரியாள். ராணிகள் முதல் இல்லத்துப்பெண்கள் வரையான பல பெண்களின் வாழ்வு நாவலில் சொல்லப்படுகிறது.
தறவாட்டு வீடுகளில் தாய்வழி சொத்துரிமை பேணப்படுகிறது . அந்தவகையில் சொத்துரிமையை இழக்கும் அந்தப் பெரிய குடும்பம் சிதறுகிறது. அனந்தன் நாயர் தனியே வாடகை வீட்டில் குடியேறுகிறார். அவரால் கீழ்மத்தியத்தர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. பெற்றோர்களை இழந்து சொந்த பந்தங்களின் நெருக்கம் குறைகிறது. அனந்தன் நாயரின் சிறு கூட்டில் அதிகாரம் தன் ஆயுதத்துடன் ஊடுருவுகிறது. அந்தக் கூட்டை சிதைக்கிறது.இ து நாவலின் மையமான பேசுபொருள்.
திருவனந்தபுரம் பால்குளங்கரை தறவாட்டு வீட்டு அனந்தன் நாயர் தனது ஐம்பதாவது பிறந்தநாளின் அதிகாலை பிரம்ம முகூர்த்த்தில் பத்மநாபசுவாமி ஆலயத்தின் நிர்மால்ய பூஜைக்காக வருவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அவர் நடந்து வரும் ஆலயத் தெருக்களின் வழியே தன் வாழ்வின் பழைய நினைவுகளுக்குள் செல்கிறார்.
அனந்தநாயரின் மனமானது புறத்திலும் அகத்திலும் மாறிமாறி சஞ்சரிக்கிறது. தெய்வத்தைக் காண வந்தும் அதை நினைக்காமல், அவரின் மனம் வாழ்வின் சிக்கல்களையே நினைத்துக் கொண்டிக்கிறது. அவர் போராடி நிகழ்காலத்திற்கு மனதைக் கொண்டு வந்தாலும் அது மறுபடியும் இறந்தகாலத்தில் லயித்து விடுகிறது. இதற்கெல்லாம் மையமான காரணம் கார்த்தியாயனி. ஆதியில் பெண் பார்க்க செல்லும் அனந்தன் நாயர் இவ்வளவு அழகான பெண் தனக்கு வேண்டாம் என்று நினைக்கிறார். ஆனால் அவரின் எண்ணத்தை யாரும் கேட்கவில்லை.
நாவலின் அடுத்த இழை அனந்தன் நாயரின் அக்கா. செல்வாக்காக வளர்ந்து வேதாந்திக்கு மணம் முடிக்கப்பட்ட அவர் இளம் விதவையாகிறார். எவ்வளவோ எடுத்துரைத்தும் மறுவிவாகத்தை மறுத்து தன் ஒரே மகனான பாஸ்கரனுடன் வாழ்கிறார்.
அடுத்த இழை அனந்தன்நாயரின் அத்தை. தன் மேல் அபரிமிதமான அன்புடன் இருக்கும் கணவனை உதறி மருத்துவம் பார்க்க வந்தவரைக் கணவராக ஏற்று குடும்பத்தை உதறி செல்கிறார்.
அனந்தன்நாயரின் சகோதரர்களின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையோடு பத்மநாபபுர மக்களின் மேல்தட்டு, மத்தியத்தர, கீழ்த்தட்டு வாழ்க்கை நாவலின் போக்கில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.
வயிற்றுபசி, காமம் மற்றும் ஞானப்பசி இம்மூன்றும் மனிதரின் முக்கியமான பசிகள் என்று நீல.பத்மநாபன் நாவலில் குறிப்பிடுகிறார். நாவல் மாந்தர்களின் வழியே இந்த மூன்று குறியீடுகளும் வெளிப்படுகின்றன.
அனந்தன் நாயரின் துயரம் மிக்க வாழ்வு ஒரு பிரார்த்தனையைப் போல நாவலில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
‘உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் நடமாடும் அக்னி பர்வதம்’ ,
‘உமித்தீயாக கவலைகள் புகைகின்றன’ ,
‘யாரையோ பழி தீர்க்கத் தன்னையே வீழ்த்தும் செயல். இந்த பாதைதான் நடந்து தொலையாதா..’ ,
‘ஒவ்வாரு பொறியும் தீப்பற்றி எரியும் வலி’ ,
‘எப்போதோ தொடங்கிய நடை..நடந்து தொலைக்காமல் வேறென்ன வழி’ ,
‘இருக்கும் இடமும் காலமும் பிரச்சனை இல்லாமலாகிவிட்ட நிலையில் உயிர்ப்பறவை பறக்கும் முன் சாந்தி கிடைக்காதா..’
என்பன போன்ற வரிகள் அனந்தன் நாயரின் மனநிலையை சரியாக உணர்த்துகின்றன.
அடுத்ததாக பாஸ்கரன் நாயர் என்ற கதாப்பாத்திரம். சிறு வயதிலேயே வேதாந்தியானவர். தன் தந்தை விட்ட இடத்திலிருந்து தன் ஞானத்தைத் தேடுகிறார். சாமானியரால் புரிந்து கொள்ள முடியாத வாழ்க்கைப் பாதைகளில் செல்பவர்.
நாவல் முழுதும் அனந்தன் நாயர் நடந்தும், பேருந்திலுமாக செல்லும் திருவனந்தபுரத்தின் ஒவ்வொரு இடமும் அவரின் பல நினைவுகளை அலை மோத செய்கின்றன. அனந்தன் நாயர் கார்த்தியாயினி தம்பதியருக்கு பிரபாகரன் மற்றும் மாதவி என இரு குழந்தைகள். அனந்தன் நாயருக்கு உடல் நோயும், வாழ்க்கைச் சிக்கல்களும் துவங்கும் இளமையிலேயே தன்னுள் தனித்தவராகவும், மனதினுள் ஓயாத அலைகளுடனும் இருக்கிறார்.
மாதக் கடைசியில் கைகளைப் பிசைந்து கொள்ளும் கீழ்மத்தியத்தர வாழ்க்கை மற்றும் அதற்கே உரிய மனநிலைகளுடன் இருக்கும் அனந்தன் நாயரின் வாழ்வில் சூறாவளியாக தாசில்தார் விக்கிரமன் உள்ளே நுழைகிறார்.
அவரே வலிந்து நாயருக்கு பதவி உயர்வை வாங்கித் தருகிறார். அதை மறுக்கும் வலிமையில்லாத அனந்தன் நாயர் இரண்டு நாள் சிந்தனைக்குப் பிறகு பதவி உயர்வை ஏற்கிறார். மனைவியிடமும் அவரின் ஐயத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
விக்கிரமன் தொடர்ந்து அழையா விருந்தாளியாக நாயர் வீட்டிற்கு வருகிறார். அவர் வருகையால் வீட்டில் எந்த நேரமும் ஓயாத போராட்டமாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் காலையில் கார்த்தியாயினி விக்கிரமனுடன் சென்று விடுகிறார்.
அதன் பிறகு அனந்தன் எந்த புது பந்தத்திலும் ஈடுபடாது தன் நொய்ந்த உடலுடன், புறம் பேசும் சமூகத்திற்கு ஈடு கொடுத்து தந்தையாக தன் கடமையை சரி வர செய்கிறார். புறத்தில் மிக அமைதியாக இருக்கும் அவர் தன்னுள் சதாசர்வகாலமும் எரிந்து கொண்டிருக்கிறார். மனதினுள் எந்த நேரமும் ஓயாத போராட்டம். எந்த இடத்திலும், எந்த மனநிலையிலும் அவருடன் கார்த்தியாயினியின் நினைவு இருந்து கொண்டே இருக்கிறது. வாசிப்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் எதற்கு இந்த மனுசர் ஓயாமல் துன்பப்படுகிறார் என்று தோன்றும்.
வாசிக்கும் பொழுது நம் மனதில் எழும் கேள்விகளை நாவலின் இறுதியில் அனந்தன் நாயரிடம் அவர் மகன் பிரபாகரன் கேட்கிறான். அவர் மகள் அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். நாவலின் முடிவில் ,ஒரு பிறவித் துன்பத்தை ஏன் அனந்தன் நாயரின் மனம் சுமந்தது? என்ற வாசகர்களின் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
அனந்தன்நாயரின் பிள்ளைகளில் மாதவிக்குட்டியின் மனநிலையும், பிரபாகரின் மனநிலையும் முட்டி மோதும் விவாதங்கள்தான் நாவல் நம்முள் எழுப்பும் கேள்விகள். முதலாவதாக எந்த வித சித்தாந்தங்களையோ கொள்கைகளையோ பிடித்துத் தொங்காமல் வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். இரண்டாவதாக தனக்கென சில பிடிமானங்களைத் தளர்த்தாமல் வாழ்வை வாழ்ந்து முடித்து விடுதல். இதில் இரண்டாவது வாழ்க்கை முறைக்கு மிகுந்த மனவலிமை தேவை. இந்த இரு கருப்பொருட்களும் நாவல் முழுக்க விரிந்து பரவி செல்கிறன.
பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்தியாயனி அனந்தன் நாயரை சந்திக்கிறார். அப்பொழுது அனந்தன் நாயர், ‘ இந்த ஒருமுடிவில் நிலைச்சு இந்த ஜென்மத்தை கடத்தி விடு’ என்று சொல்லும் இடம் அவரின் ஆன்ம பலத்தை காட்டுவதாக இருக்கிறது.
உடல்வலிமை குறைந்து மனம் அலைபாயும் இடங்களில் அவருக்கு ஆத்மபலம்தான் கை கொடுக்கிறது. அவரின் துயரங்கள் சென்ற வழியில் அவருக்கான ஆன்மீகப்பாதை திறக்கிறது. அதைப் பற்றிக் கொண்டு துயரம் நிறைந்த வாழ்வைக் கடத்துகிறார். சில மனிதர்கள் நுண்ணுணர்வுடன் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை துயரமானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை கண்டுகொள்கிறார்கள்.
அனந்தன் நாயரின் லௌகீக வாழ்விற்கான ஒரே பிடிமானம் பிள்ளைபாசம். அவர் ஒரு ஐடியல் தந்தையாக இருக்கிறார். ஒரு தந்தையாக நம்மனதை அவர் ஆட்கொள்வதை தவிர்க்க முடியாது. இந்த நாட்டில் தனியொரு ஆண்மகனுக்கு ஆண்டியாக வாழ இடமா இல்லை. என்னை இங்கே கட்டி வைத்திருப்பது நீங்கள் மட்டுமே என்று பிள்ளைகளிடம் சொல்லும் இடத்தில் தந்தையாக அவர் பேருரு எடுக்கிறார். விட்டுத் தொலைத்து சன்னியாசம் செல்வதை விட, உடல் மனதை உருக்கி கடமையை ஏற்றுச் செய்யும் மேலான இடம் இது.
திருவனந்தபுரமே அவருக்கு அவளாகத் தெரிகிறதோ?! என்று வாசிக்கும் பொழுது தோன்றுகிறது. பதவி, செல்வம், அதிகாரத்தின் பிடி என்பது எத்தனைக்கு நிஷ்டூரமானபிடி என்பதை நாவல் சரியாகக் காட்டுகிறது. அனைத்து இடங்களிலும் செல்லுபடியாவது செல்வமும் ,அது தரும் அதிகாரமும் தான்.
ஆனால் நாவல் இவ்வாறு அதிகாரத்தின் பேருருவைக் காட்டுவதன் மூலம் அதிகாரம் செல்லுபடியாகாத சூட்சுமமான இடங்களை நமக்கு சுட்டிவிடுகிறது. மனித மனதின் ஆழம் அது. தெய்வம் சயனம் கொள்ளும் கருவறை போன்றது. தெரிந்தும் தெரியாமலும் இருப்பது.
நடைமுறை வாழ்க்கையின் நியதிகள் வேறு. நியதி மீறல்கள் வேறு. மனதின் ஆழத்தின் நியதி எப்பொழுதும் ஒன்றே. அனந்தனின் நெஞ்சில் பள்ளி கொண்ட திருமகளென கார்த்தியாயனி பள்ளிக்கொண்ட இடம் அனந்தன் நாயரின் மனம்.
எப்படி எழுதினாலும் நாவலை சொல்லி விட முடியவில்லை. அது அள்ள அள்ள நழுவுகிறது. சூரியனின் கதிர்கள் என வெவ்வேறு திசைகளில் செல்கிறது. வாசிப்பவர்கள் அவரவர் எடுக்கும் கைப்பொருள் இந்த நாவல்.