இணைய இதழ் 108சிறுகதைகள்

அவரா இவர்? – கண்ணன் விஸ்வகாந்தி

சிறுகதை | வாசகசாலை

மகள் சாத்விகாவின் குரலில் ‘நீ நின்ன திருக்கோலம்’ அன்றைய காலையில் அமிர்தமாக இருந்தது. அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிய பிறகு பெருமாளின் முன்பு பாடும் பாக்கியம் கிடைத்தது.

பெருமாள் அலங்காரங்களுடன் பட்டாடை அணிந்து, தலையில் கிரீடத்துடன், ஜொலித்தார். நானும் மனைவியும் கண்களை மூடி பாட்டை ரசித்தபடியே, கடவுளை வணங்கியபடி நின்றிருந்தோம்.

அப்போது கட்டையாக குட்டையாக ஒருவர் தன்னுடன் வேறு ஒருவரை தரிசனம் செய்ய அழைத்து வந்திருந்தார்.

எங்களைப் பார்த்து, “இங்க நின்னு பாடக் கூடாது. வெளிய ஹாலுக்கு போய் பாடுங்க” என்றார். எங்களுக்கும் மகளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

மனைவி, “ஏங்க, சடாரி கூட இன்னும் வெக்கலீங்க” என்றாள். மூவரும் கொஞ்சம் தயக்கமாக உள்ளேயே நின்றோம்.

“ஏங்க, ஒங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா?” என்றார்.

எப்படித்தான் எனக்கு அப்படி ஒரு கோபம் வந்ததோ தெரியவில்லை.

பூசாரியைப் பார்த்து, ”யாருங்க இவரு, சாமி கூட கும்பிட விட மாட்டேங்கிறாரு?” என்றேன்.

“கொஞ்சம் பொறுமையாய் பேசுங்க”.

“என்னங்கப் பொறுமையாப் பேசறது?”

சத்தம் போட்டபடியே வெளியே வந்து ஹாலில் உட்கார்ந்தேன்.

அன்றைய தினம் அப்பா அம்மாவுக்கு வருடாந்திரம் படைக்கும் தினம்.

முதலில் இருவருக்கும் தனித்தனியேதான் படைத்து வந்தோம். பிறகு அப்பா இறந்த தினத்தன்று இருவருக்கும் சேர்ந்தே கும்பிடலாம் என முடிவானது.

பெரும்பாலும் வருடக் கடைசியில் டிசம்பர் மாத இறுதியில் திதி வரும். வெளிநாட்டில் இருக்கும் தம்பியும் விடுமுறையில் வந்தால், தனது குடும்பத்துடன் கலந்து கொள்வான். அயோத்தியா பட்டினத்தில் இருக்கும் அண்ணன் வீட்டில்தான் கும்பிடுவோம்.

அன்றைய தினம் சனிக்கிழமை ஆதலால், அண்ணனின் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலில் கும்பிட்டு விட்டு, அண்ணன் வீட்டுக்குச் செல்வதென முடிவெடுத்தோம்.

விடிகாலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து விட்டோம். ஆறு மணிக்கு ஓட்டுநரை வரச் சொல்லி இருந்ததால், ஒருவர் பின் ஒருவராக எல்லோரும் குளித்து ரெடியானோம். மனைவி சட்னி அரைத்து தோசை வார்க்க, சூடாக காலை உணவு முடித்து விட்டுக் கிளம்பினோம்.

வழியில் டீசலுக்கு மட்டுமே ஒரு இடத்தில் நிறுத்தினோம். கோவிலை அடைந்தபோது, மணி எட்டாகியிருந்தது.

அது ஒரு பழமையான பெருமாள் கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதால், புதிய பொலிவுடன் திகழ்ந்தது. கோபுரத்தில் அருமையான சிற்பங்கள்.

கோவிலின் உள்ளே நல்ல விசாலம். உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் ஆண்டாள் சன்னதி அமைந்திருப்பது கோவிலின் சிறப்பு.

என்னைத் தொடர்ந்து மனைவியும் மகளும் வந்து சன்னதி எதிரில் இருந்த கூடத்தில் அமர்ந்தனர்.

“கோபம் நமக்குத்தான் கெடுதல். ஏன் சத்தம் போடுறீங்க?” .

“கேட்காம பாடியிருந்தாச் சொல்லலாம். அனுமதி வாங்கிய பிறகுதானே பாடினோம்” என்றேன்.

வேறு ஒரு பெருமாள் பக்தர் எங்களுடன் அமர்ந்து கொண்டார்.”இவனுங்க அப்படித்தான் சார். நான் அடிக்கடி இங்க வருவன். பாடுவேன். என்னோட சேர்ந்து பாடுங்க” என்றபடியே அனுமன் சல்சாவைப் பாட ஆரம்பித்தார்.

நாங்களும் கூடவே பாடினோம். அந்த நபர் தனது நண்பருடன் தரிசனம் முடித்து விட்டு கூடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து, சத்தமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டே இருந்தார்.

பூசாரி முதற்கொண்டு யாரும் அவரைக் கண்டிக்கவில்லை.

பிறகு ஆண்டாள் சன்னதியில் வழிபட்டோம். அங்கிருந்த அர்ச்சகர் துரை, “மார்கழி மாதக் கடைசியில் மகளோடு வாருங்கள், இங்கு ஆண்டாள் சன்னதியில் சேவிக்கலாம். ஈஓ கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன். இந்த நம்பருக்கு நாளை மறுநாள் கால் பண்ணுங்க” என்று தனது கைபேசி எண்ணைப் பகிர்ந்தார்.

பிரசாதம் சாப்பிட்டு விட்டு, அண்ணன் வீட்டுக்குச் சென்றோம்.

நடந்ததைச் சொன்னபோது, அண்ணன் மகன் ராம் சொன்னான்.. “அந்தாளு ஒரு ரவுடி மாதிரி. மார்க்கெட்ல பூக்கடை வச்சிருக்கான்”.

“அவரு பேச்ச விடுங்க. சாமி கும்பிடற வேலையப் பாருங்க” என்றாள் மனைவி.

“ஏங்க, கரண்ட் இல்லங்க. வடக்கி மாவு அரைச்சிக்கிட்டு வந்திடுங்க” என்றார் அண்ணி, அண்ணனிடம்.

“நீ மத்த வேலயப் பாரு சந்துரு. நானும் ராமுவும் பாத்துக்கிறம்” என்று சொல்லி, ராமுவுடன் டிவிஎஸ்ஸில் கிளம்பினோம்.

மாவு அரைக்கும் இடத்துக்கு அடுத்த வீடு, எங்கள் விளையாட்டு டீச்சரின் வீடு. டீச்சர் வீட்டில் இல்லை. வெளியே இருந்து வேடிக்கை பார்த்து விட்டு, மாவு அரைத்தவுடன் வீடு திரும்பினோம்.

அதற்குள் மனைவி, சம்பங்கியும் பட்டன் ரோஸும் கலந்த மாலையைக் கட்டி முடித்திருந்தார்.

வடை போட்டு முடித்தவுடன், ஒரு சிறிய டேபிளில், அப்பா அம்மா போட்டோவை வைத்து, மாலையைப் போட்டேன்.

சேலையை மடித்துப் போட்டு, பின்னர் அதன் மேல் வேட்டியும் துண்டும் வைத்தார் அண்ணன் சந்துரு.

“ஏங்க, வேட்டி கட்டிக்கிட்டு வந்திருக்க” என அவருக்கு ஆணை வந்தது.

அண்ணி ஐந்து வாழையிலைகளைப் போட்டு, உப்பு வைத்தார். பிறகு மூன்று வகைக் காய்கறிகள், வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், இலையில் வைத்தார். பிறகு சாதம் வைத்து, உப்பு பருப்பு, கத்தரிக்காய் சாம்பார், ரசம் ஆகியவற்றை, ஐந்து இலைகளிலும் ஊற்றினார். அண்ணன் மகள் பிரியா பலகாரங்கள், உளுந்தவடை, காரவடைகளை இலைகளில் வைக்க, பூஜைக்கு ரெடியானோம்.

இதற்குள் வளர்ப்பு நாய் லாரா உள்ளே வர அடம்பிடித்து கத்த ஆரம்பிக்க, ராம் அதை நன்றாக சங்கிலியில் பிணைத்துக் கட்டி விட்டு வந்தான்.

அண்ணன் ஊதுபத்தி காண்பித்த பின்னர் தேங்காய்களை உடைத்து வைத்து விட்டு, நீர் விளாவிய பின், கற்பூரம் காட்ட, மனசெல்லாம் அப்பா அம்மா ஞாபகம்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, சாமி கும்பிட்டு விட்டு, சாப்பிட அமர்ந்தோம்.

அனைவரும் தரையில் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பினோம்.

“சரி சந்துரு, பசங்களக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாங்க. எங்காவது கோவிலுக்குப் போயிட்டு வரலாம்” என்றபடியே கிளம்பினோம்.

வழியில் அமுலில் காபி குடித்து விட்டு, மகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு, கிளம்பி வீடு வந்து சேர, மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அடுத்த நாள், அர்ச்சகர் துரைக்குப் போன் செய்தேன். “சார், இப்ப நான் சீரங்கத்துல இருக்கன். வியாழக்கிழமை கூப்பிடுங்க” என்றபடியே வைத்து விட்டார்.

வியாழனன்று வேலையில் பிஸியாக இருந்தவனை, மனைவியின் குரல் ஞாபகப் படுத்த, அர்ச்சகர் துரையை கைபேசியில் அழைத்தேன்.

“சார், ஈஓ நேத்திக்கு வந்தாரு. ஆனாப் பேச முடியல. ஒங்களால, சேலத்தில அவரைப் பார்க்க முடியுமா?” என்றார்.

“இல்ல சார். வேல அதிகமா இருக்கு. பரவாயில்லை சார். மற்றொரு முறை பார்க்கலாம்” என்று வைத்து விட்டேன்.

“அவ நெனச்சதெல்லாம நடக்கும். நிச்சயமாப் பாடுவா பாருங்க” என்றார் மனைவி.

அடுத்த நாள், துரையே அழைத்தார் – ”ஈஓ பர்மிஷன் குடுத்துட்டாரு. நீங்க எப்ப வேணும்னாலும் ஆண்டாள சேவிக்கலாம்”. உடம்பெல்லாம் சிலிர்த்தது. “சனிக்கிழம காலையில ஆறரை மணிக்கு கோவில்ல இருப்போம் சார்“ என்றேன்.

சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, தயாராகிவிட்டோம். ஓட்டுநர் ஐந்து மணிக்கு வந்தவுடன் காபி குடித்து விட்டுக் கிளம்பினோம்.

கோவிலை அடைந்தபோது ஆறரை மணி ஆகியிருந்தது. அர்ச்சகர் துரை மிகவும் பரபரப்பாக இருந்தார். ஆண்டாள் சன்னதியில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆயிரம் கரங்களுடன் தகதகவென ஆதவன் எழுந்து கொண்டிருந்தான். புறாக்கூட்டம் கோபுரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் ஒரே ஒரு வெள்ளைப் புறாவும் இருந்தது.

“சார், ஆரம்பிச்சுடலாமா?” என்றேன். “கொஞ்சம் இருங்க . பிரசாதம் கொடுக்கணும். அதுக்குத்தான் ஒங்கள நேரமா வரச் சொன்னேன்”.

சிறிது நேரம் நாங்களும் வரிசையில் நின்று ஆண்டாளைக் கண் குளிர தரிசனம் செய்தோம்.

சற்று நேரத்தில்,”நீங்க ஆரம்பிக்கலாம்” என்றார். “பவர் மட்டும் வேண்டும் சார்” என்றேன். “பிளக் பாயிண்ட் இருக்குது. ஒயர மட்டும் குடுங்க”.

கொண்டு சென்றிருந்த ஜமக்காளத்தை விரித்தேன். வண்டியிலிருந்து வீணையைக் கொண்டு வந்து வைத்து விட்டு, பிக்கப்புக்கு ஒயரைக் கொடுத்தவுடன், பவர் பாயிண்ட்டில் செருகினார். வயர்லெஸ் மைக் அவரிடமே இருந்தது. முதலில் வீணையில் இருந்து மகள் சாத்விகா ஆரம்பித்தாள்.

நான் நின்று கொண்டே வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர், வீணை இசையைக் கேட்க எங்கள் அருகில் நிற்க ஆரம்பித்தனர்.

“சாருக்குச் சேர் போடு” என்று ஒரு குரல் கேட்டது. யாரோ ஒருவர் சேரைக் கொண்டு வந்து போட்டார். மனைவி கீழேயே அமர்ந்து கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

“சாருக்கும் மேடத்துக்கும் டீ குடு” என்றது மீண்டும் அதே குரல். யாரோ ஒருவர் எங்களுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார். குடித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தேன். நான் கண்டது நிஜம்தானா என்று கண்கள் நம்ப மறுத்தன. சென்ற முறை, பாடியதில் இடைமறித்து வெளியே அனுப்பியவர்தான் இப்போது உபசரித்துக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நன்றி சார்” என்றேன். “அம்மாவுக்கும் சேர் போடச் சொல்லட்டுமா?”

“இல்ல சார், பரவாயில்லை”.

வீணை நிகழ்ச்சி முடிந்து, வாய்ப்பாட்டு ஆரம்பித்தது.இப்போது நல்ல கூட்டம். சாத்விகா 27-ஆம் பாசுரமான ‘கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ பாடலும் பாடினாள்.

சாத்விகாவின் குரல் அற்புதமான அனுபவத்தைத் தந்தது. நிகழ்ச்சி முடிந்து எழும்போது, இரண்டு பெண்கள் சாத்விகா அருகில் வந்து, “நீ நின்ற திருக்கோலம் பாட்டை இன்னும் ஒரு முறை பாடும்மா” என்றார்கள். சாத்விகா பாட அனைவரும் சுற்றி அமர்ந்து கேட்டனர். முடிந்ததும், அவளே மீண்டும் ‘மாலை மாற்றினாள்’ பாடலை மீண்டும் ஒரு முறை பாடினாள்.

“ரொம்ப நல்லாப் பாடறம்மா. நல்லா வருவ” என ஆசிர்வாதம் செய்தனர்.

ஆண்டாள் சன்னதியில் வழிபட்டோம். அர்ச்சகர் துரை சொல்லிக் கொண்டு இருந்தார் – ”இன்னக்கி கூடார வள்ளி நாள். 27 நாட்கள் உபவாசம் இருந்து ஆண்டாள் நாச்சியார், இன்று தனது உபவாசத்தை முடித்துக் கொண்டு, திருப்பாவையில் 27-ஆம் பாசுரமான ‘கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா’ என்ற பாடலைப் பாடி, இறைவனுடன் கலந்த அற்புதமான நாள். நல்லா சேவிச்சுங்குங்க. எல்லா நலமும் வளமும் நல்லா இருப்பீங்க!”.

எங்களை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று, அக்கார அடிசில் கொடுத்தார். மகளுக்கும் மனைவிக்கும் பிளவுஸ் மற்றும் வளையல்கள் பிரசாதம் தந்தார்.

பிரசாதம் பெற்றுக் கொண்டு, எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தேன். வீணையை வண்டியில் வைப்பதற்கு வெளியே எடுத்துச் செல்லும் போது, கோவில் வாசலில் அவரைப் பார்த்தேன். ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தார். குள்ளமான உருவம். தாட்டீகமான உடல். மத்திம வயதிருக்கும். வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்திருந்தார்.

“சார், வணக்கம்” என்றேன் சம்பிரதாயமாக.

“பாப்பா நல்லா பாடுனா. ரொம்ப சந்தோஷம். நான்தான் கோவில் கமிட்டி மெம்பர். கமிட்டி செல்வம்னா எல்லாருக்கும் தெரியும்.

இந்தக் கோயில், இப்ப இருக்கிற மாதிரி இல்ல சார். கோபுரத்தில ரவுடிக் பசங்க சீட்டாடிக்கிட்டு இருப்பாங்க. பெண்கள் கோயிலுக்கு வரப் பயப்படுவாங்க.

நான் மார்க்கெட்டுல பூ வியாபாரம் பண்றேன். ஒரு நாள் வந்து, எல்லாரையும் தொரத்திட்டன். பயந்திட்டானுங்க.

கோயிலைச் சுத்தம் பண்ணி, கும்பாபிஷேகம் பண்ணினேன்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒய்ப் இறந்துட்டாங்க சார். இதே ஸ்கூட்டியிலதான் வந்துக்கிட்டு இருந்தம். லாரிக்காரன் ஒருத்தன் பின்னாடி வந்து இடிச்சிட்டு நிக்காம ஓடிட்டான்.

தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அட்மிட் செஞ்சி கொஞ்ச நேரத்தில உயிர் போயிடுச்சு சார்.

எங்கையிலேயே கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு ஒடச்சிட்டன் சார்” என்றார்.

அப்படிச் சொல்லும் போது, கைகளை உயர்த்தி போட்டுடைப்பது போலவே செய்தார்.

அவரின் கண்கள் கலங்கியிருந்தன.

திடீரென பர்ஸை எடுத்து, “இவதான் சார் ஒய்ஃப்” என்றார்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த யாசகம் கேட்கும் பெண் சொன்னாள் – ”அவ்வளவு அழகான இருப்பாங்க”.

“இன்னொரு கண்டத்துலயும் இந்தப் பெருமாள்தான் காப்பாத்துனான். ஆறு மாசத்துக்கு முன்னாடி, கால்ல அடிபட்டிடுச்சி. நடக்க முடியாதுன்னு நினைச்சேன். இப்ப பரவாயில்லை சார்” .

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு, கைக்குட்டையால் முகம் துடைப்பது போலக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

“ஏப்ரல் மாசம் இன்னொரு நிகழ்ச்சி இருக்குது சார். தொரை கிட்ட ஒங்க போன் நம்பர் இருக்குது. கூப்படறன்” என்றார்.

“சார், ஒங்க போன் நம்பர் குடுங்க” என்று சொல்லி நம்பர் வாங்கிக் கொண்டு, வீணையை எடுத்துக் கொண்டு, வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வீணை எனது மனசை விட மிக லேசாக இருந்தது. தூரத்தில் அவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.

-vkannan10@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button