கவிதைகள்

பாக்கியராஜ் கோதை கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

1.

இன்று
ஒருவரைக் கொன்றேன்,
நாளை
இரக்கம் வந்து அவரை
உயிர்பிக்கவும் செய்வேன்,
வன்மம் என்னில் தங்கும்பொழுது
அவரை என்னவும் செய்வேன்,
அன்பு ஊற்றெடுக்கும்பொழுது
அவரைக் கொஞ்சவும் அழைப்பேன்,
அவரை ஆக்கிய எனக்கு
எல்லாம் இயலும்தான்
புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.

***

2.

தாத்தாவோடு
காவல் இருக்கும்
சோளக்கொல்லை பொம்மைக்கும்
இரண்டு கவளம் உணவினை
கூடுதலாக வைக்கச் சொல்கிறான்
விடுமுறைக்கு வயலுக்கு வந்த பேரன்.

***

3.

நாளிதழ்களை முதல் ஆளாகப் படிப்பதில் சிக்கலில்லை
பயணத்தில் காலதர் இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை
மாத்திரைப் பெட்டியைத் தேட அவசியமில்லை
நேரம் கடந்தும் உண்ணலாம்
கால் பரப்பி உறங்கலாம்
பேட்டரி தீர்ந்த பின்பும் பார்ப்பதற்குக் கைப்பேசி ஒன்றும் கிடைத்திருக்கிறது
இழப்பின் வலியை வருடிக் கொடுக்கும்
மரணம் தரும் சிறு சிறு சலுகைகள்
நாற்காலியின் சாய்வு சுகம்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button