ஒரு ரியாலிட்டி ஷோவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் நடப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.
” ஹார்ட்டுக்குள்ள பச்ச குத்தியே….” பாடலுடன் துள்ளலாக விடிந்தது பிக் பாஸ் போட்டியாளர்களின் நேற்றைய காலை. காலையில் எழுந்தவுடன் வீட்டில் இருப்பவர்களுக்கு தபால் அனுப்பவதையே முதல் வேலையாக வைத்திருப்பார் போல பிக் பாஸ். நேற்று மீரா மிதுன் வீட்டில் உள்ளவர்களுக்கு ரேம்ப் வாக் சொல்லிக் கொடுக்கப் பணிக்கப்பட்டார். அவரும் சொல்லிக் கொடுக்க வழக்கம் போல அபிராமி போக்கு காட்டினார். பின்பு அனைவரும் கலந்து கொண்டு ரேம்ப் வாக் ஷோ நடத்தினர். அதில் தான் பாசமலர்களாக வலம் வந்த சாண்டிக்கும் மோகன் வைத்யாவிற்கும் மோதல் தொடங்கியது.
“என்னன்னே தெரில குருநாதர் என் கிட்ட பேச மாட்றாரு?” எனப் புலம்பிக் கொண்டிருந்த சாண்டியின் சார்பாக கவின் சென்று மோகன் வைத்யாவிடம் என்ன ஏதென்று விசாரித்தார். ரேம்ப் வாக் ஷோவிற்காக மோகன் பிரத்யேகமாக அணிந்து வந்த பைஜாமா, குர்தா உடையைப் பார்த்து சாண்டி தன் பாணியில் பங்கமாக கலாய்த்து விட்டார் போல. அதற்குத் தான் தலைவர் அப்செட்டாகி இருக்கிறார். விடுவாரா சாண்டி? அலேக்காக அவரை பாத்ரூமிற்கு அள்ளிச் சென்று கதறக்கதற காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மன்னிக்க வைத்து விட்டார்.
இந்தப் பக்கம், அபிராமி தன்னிடம் நடந்து கொள்வதைச் சொல்லி பாத்திமா பாபுவிடம் அழுது கொண்டிருந்தார் மீரா. அவர் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அபிராமி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, ஹர்ட் பண்ணிருந்தா சாரி எனச் சொல்லி ஸ்கோர் செய்து விட்டார். உடனே அனைவரும், “அதான் சாரி சொல்லிட்டால்ல விடுமா அடம் புடிக்காத” என மீரா பக்கம் திரும்ப, “எது உண்மை பொய்னு எனக்கு தெரியும். எனக்கு இவ உண்மையா மன்னிப்பு கேக்குறான்னு தோணல” என்ற முரண்டு பிடித்தார் மீரா. டக்குனு என்ட்ரி ஆன நம்ம நாட்டாமை சேரன், “உங்களுக்குள்ள வெளில என்ன வேணா நடந்துருக்கலாம். இந்த வீட்டுக்குள்ள அதெல்லாம் மனசுல வச்சுட்டு நடந்துக்காதீங்க.” அவ்ளோ தான் பஞ்சாயத்து முடிஞ்சது கிளம்புங்க என முடித்து விட்டார்.
பின்னர், முந்தைய தினம் பாதியில் நிறுத்தப்பட்ட லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மீண்டும் தொடங்கியது. “உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் எது?” என்ற கேள்விக்கு பதிலளித்த சேரன், ” என் மூத்த மகள் பிறந்த நாள் தான் எனக் கூறி அவர் காதல் திருமணம் செய்து சென்னையில் வந்து சிரமப்பட்ட கதையைச் சொன்னார். கிட்டத்தட்ட தவமாய்தவமிருந்து திரைப்டத்தில், சேரன்-பத்மப்பிரியா கதை தான். இயக்குனரின் சொந்த அனுபவங்கள் தானே பெரும்பாலும் திரையை நிறைக்கின்றன. இறுதியாக சேரன் ஒன்று சொன்னார். “எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடிவில் எனக்கொரு மகிழ்வு காத்திருக்கும்” என. அது சேரனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.
பின்பு பேசிய தர்ஷன், மாடலிங் துறைக்கு வந்த புதிதில் தான் சந்தித்த அவமானங்களையும் கஷ்டங்களையும் விவரித்து, யாழ்பாணத்தில் போர் நேரத்தில் தன் குடும்பம் சந்தித்த இன்னல்களையும், தங்களை வளர்க்க பெற்றோர் பட்ட சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சேரன் பேசத் தொடங்கியதில் இருந்து அழத் தொடங்கிய மதுமிதா தர்ஷன் முடிக்கும் போதும் அழுது கொண்டே தான் இருந்தார். எதற்கு அழுகிறார் என யோசித்துக் கொண்டே இருக்கும் போதே அடுத்து அவர் பெயர் அழைக்கப்பட தேம்பிக் கொண்டே தான் பேசவே தொடங்கினார். தன்னையும் தன் மூன்று சகோதரிகளையும் தந்தையில்லாமல் வளர்க்க தாய் பட்ட கஷ்டங்களையும், தந்தையைப் பார்க்காமலே போய் விட்டதன் வலிகளையும், அதனால் தான் இன்னமும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதையும் சிறு குழந்தையென தேம்பி அழுது கொண்டே சொன்னார். நம்புங்கள் அழும் போது கூட மதுமிதா அத்தனை அழகு.
பின்பு வந்த சரவணன், தன் பங்குக்கு ஒரு சோகக்கதையைச் சொன்னார். ஆனால், அது சோகமாகவே இல்லை என்பது தான் நகை முரண். அவர் மீது கோபமே வந்தது. துயர நேரங்களில் தன்னைப் பார்த்துக் கொண்ட, கை கொடுத்துத் தாங்கிய பல வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். குழந்தை இல்லாமல் போனதற்கும் திருமணத்திற்கு முந்தைய இவர்களது நடவடிக்கைகள் தான் காரணமாம். தாய் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் தான் இரண்டாம் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட கதையை சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி முடிந்து விட்டது. ப்ச்.
பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ, முதல் வாரமே இது போன்ற ஒரு அழுது வடியும் டாஸ்கை கொடுத்திருப்பது டிஆர்பி க்காக மட்டுமே என்பதில் துளி கூட மாற்றுக் கருத்தேயில்லை. வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட கேள்விகள் தான்.
ஆனால் நேற்றைய தினத்தில் எனக்கு ஒன்று தோன்றியது. வேறு கேள்வி வந்தாலும் கூட போட்டியாளர்கள் தங்கள் துயரங்களைத் தான் பகிர்ந்து கொண்டனர். எவ்வளவு தூரம் சென்றாலும், தன் ஆழ்மனதை விடாமல் அரித்துக் கொண்டேயிருக்கும் அவலங்களுக்கான வடிகாலை அவர்கள் தேடிக் கொண்டார்கள் என்றே தோன்றியது. துறை சார்ந்து இயங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும், எப்போதோ நடந்த விஷயத்தை இப்போதைய நண்பரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை. சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயமும், ஈகோவும் வேறு தடுக்கும்.
ஆனால், அத்தகைய சம்பவங்கள் கண்ணுக்குத் தெரியாமல் துரத்தும் புகையென நமைச் சூழ்ந்து கொண்டு மூச்சடைக்க வைக்கும். இந்நிலையில் தான் அனைவருக்கும் இப்படிப்பட்ட ஒரு ஆசுவாசம் தேவையாயிருக்கிறது. கேட்கவில்லையெனில் யாரும், ” எனக்கு ஆண்களைக் கண்டால் பயம் என்றோ, என் முதல் மனைவி இரண்டாம் மனைவியைத் திருமணம் செய்து கொள்ள தாலி வாங்கிக் கொடுத்தாள் என்றோ, என் மனைவியின் பிரசவ வலியின் போது புரியாமல் நடக்க வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றேன் என்றோ பகிர்ந்து கொண்டு கண்ணில் நீர் தழும்ப வருந்த மாட்டார்கள்.
அனைத்திற்கும், அனைவருக்கும் தங்கள் சுமைகளை இறக்கி வைக்க ஒரு தோள் தேவை தானே?