இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்
மித்ரா
வழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம் அதுவல்ல.
“மெர்சல் அரசன் வாரான்…” பாடலோடு அட்டகாசமாக விடிந்தது போட்டியாளர்களின் காலை. நேற்று சாண்டி அனைவருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தது போல, இன்று மோகன் வைத்யா அனைவருக்கும் குத்தாட்டம் ஆட சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தபால் வழி செய்தி அனுப்பினார் பிக் பாஸ்.அவரும் அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு “கத்தாழை கண்ணால குத்தாத நீ என்னை…” பாடலுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார்.
“என்னடா இது போட்டி ஆரம்பிச்சு 3 நாள் ஆச்சு, விடிஞ்சு 2 மணி நேரம் ஆச்சு இன்னும் ஏதும் பஞ்சாயத்தைக் காணோமே” என்று நாம் வடிவேலு மாதிரி கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, ” கொஞ்சமாச்சும் ஜெனியூனா பிஹேவ் பண்ணுங்க. காபி குடிச்சுட்டு கப்ப டேபிள் மேலயே வச்சுட்டு போய்டுறீங்க. வந்து 3 நாளாச்சு இதை ஒவ்வொரு முறையும் நான் சொல்லிட்டே இருக்கணுமா?” என ஹை டெசிபலில் கத்திக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் அபிராமி. அனைவரும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, மீரா மிதுன் மட்டும் ” பி கால்ம்” என்றார். உடனே அபிராமி, “நான் ஒன்னும் உன்கிட்ட பேசல” என சொல்லி விட்டு போய் கொண்டே இருந்தார். பின்பு கப்பை மேஜை மீது வைத்த கல்ப்ரிட் ஆன தர்சனை இனம் கண்டு பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் அபிராமி.
இப்போது மீரா அபிராமியை அழைத்து, ” உன் மூட் ஸ்விங்க்கு எல்லாம் நான் ஆள் கிடையாது உன் ஆடிட்யூட் எல்லாம் என் கிட்ட காட்டாத. உனக்கு என் கிட்ட பேச பிடிக்கலைன்னா அதை அமைதியா சொல்லு ” என ஆடிட்யூட் காட்ட, மீண்டும் அபிராமி ரொம்ப அமைதியாக ” இனி என் கிட்ட பேசாத ப்ளீஸ் ” என சொல்லி விட்டு இடத்தை காலி செய்து விட்டார். இதை அப்படியே விட்டிருக்கலாம் தான். ஆனால், அப்படியே விடுவதற்கு கேப்டன் எதற்கு இருக்கிறார்? கையோடு அபிராமியை இழுத்துக் கொண்டு மீராவிடம் நியாயம் கேட்க சென்றார் வனிதா. ” அவ பொதுவா யாரையோ கத்திட்ருந்தா உனக்கென்ன வந்துச்சு நீ ஏன் இடைல போய் பேசுற ?” என ஆரம்பிக்க அது பெரிய வாக்குவாதமாக இழுத்து, மீரா அழுது அவருக்கு முகேன் கண்ணீர் துடைத்து விட்டு, அபிராமி அழுது அவரை கவின் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி ஒரு வழியாக பிக் பாஸ் கேம் இனிதே இன்று துவங்கியது.
இடையில் மொத்த பெண்கள் அணியும் அபிராமியை கவினுடன் சேர்த்து வைக்க பெரும் பிரயத்தனப் படுகின்றனர். எது நடந்தாலும் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்கள் ரெண்டே பேர் தான். ஒருவர் சேரன். மற்றொருவர் லாஸ்லியா. சேரன் கூட யாருக்காச்சும் அட்வைஸ் பன்றாருங்க. லாஸ்லியா எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வது கிடையாது. வெறும் பார்வையாளர் மட்டுமே.
பிறகு பிக் பாஸ் முதல் வாரத்திற்கான, லக்ஸரி பட்ஜெட் டாஸ்கை அறிவித்தார். அதன் படி பிக் பாஸ் அழைக்கும் நபர் ஒரு கிண்ணத்தில் போடப்பட்டிருக்கும் சீட்டுகளில் இருந்து 3 சீட்டுகளை எடுக்க வேண்டும் அதில் சொல்லி இருக்கும் படி செய்ய வேண்டும். திட்டமிட்டே முதலில் மோகன் வைத்யாவைக் கூப்பிட்டார் பிக் பாஸ். உங்கள் வாழ்வில் சந்தித்த மிகப் பெரிய துயரம் எது?, யாருடைய இழப்பு உங்களை மிகவும் பாதித்தது?, கணவன் / மனைவி பற்றி சொல்ல்லுங்கள்? இந்த கேள்விகளுக்கான மோகன் வைத்யாவின் பதில்கள் அனைவரையுமே கண் கலங்க வைத்தன. செவித்திறன், பேசும் திறன் இழந்த தன் மனைவியை அவர் நேசித்த விதத்தையும், ரயில் விபத்தில் அவர் இறந்த தருணத்தையும், இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்ததையும் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்ட போது நமக்கும் கண்ணீர் சுரந்தது.
அடுத்ததாக வந்த ரேஷ்மாவிற்கு, கணவன்/அல்லது மனைவியைப் பற்றி சொல்லுங்கள், மறக்க முடியாத சம்பவம் எது? யாருடைய இழப்பு உங்களை பாதித்தது? போன்ற கேள்விகள் வந்தன. 18 வயதில் திருமணம் செய்து கணவனின் கொடுமை தாங்காமல் விவாகரத்து செய்து, மீண்டும் 2 வருடங்கள் கழித்து ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அவனும் அடித்து துன்புறுத்தி 5 மாத கர்ப்பிணியாக தன்னை விட்டுச் சென்ற கதையை சொல்லி கணவரை பற்றி சொல்ல எதுவும் இல்லை என்றார் ரேஷ்மா.
கணவர் அடித்ததில் 5 மாதத்திலேயே குழந்தை வெளிவரத் தொடங்க, தானே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்ந்ததும், குழந்தை 5 மாதம் இன்குபேட்டரில் இருந்ததும், ஆட்டிசம் பாதித்த குழந்தையாக பிறந்ததும் தான் வாழ்வின் மறக்க முடியாத சம்பவம் என சொன்ன போது மொத்த குடும்பமும் வெடித்து அழுதது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு, தைரியமாக வெளியுலகில் உழைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற பெண்களின் பிரதிநிதி தான் ரேஷ்மா. இந்த சம்பவத்தைக் கூட நம் மீடியாக்கள் ” 2 கணவன்கள் 2 விவாகரத்து 2 குழந்தைகள் – புஷ்பாவாக நடித்த ரேஷ்மாவின் நிஜ கதை” என்ற தலைப்பில் தான் செய்தி வெளியிடுகின்றன. எந்த சம்பவத்தை எப்படி அணுக வேண்டும் என்ற குறைந்த பட்ச புரிதல், நாகரீகம் கூட இல்லாதவர்களுக்கு மத்தியில் தான் பொதுவெளியில் பெண்கள் வலம் வர வேண்டியுள்ளது. பிரபலங்கள் என்ன தான் வெளியில் பளபளப்பாக சுற்றி வந்தாலும் அவர்கள் வாழ்விலும் மறக்க முடியாத துயரங்கள் மண்டிக் கிடக்கும் என்பது இன்றைய நிகழ்வைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.
இன்று மோகன் வைத்யாவின் கதையைக் கேட்டு தேம்பி அழுத சாண்டியை கட்டி அணைத்துக் கொண்டு ” உன்னால தான்டா பையா நான் என் வாழ்க்கைலயே அதிகமா சிரிச்சிருக்கேன். நீ அழாத டா ” என மோகன் வைத்யா உருகியதும், ரேஷ்மாவின் கதையை கேட்டுத் தாங்க முடியாத பாத்திமா பாபு, வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணிடமும் சென்று ” பொம்பளைகளை பத்ரமா பாத்துக்கங்கடா கஷ்டப்படுத்தாதீங்க ” என்று அழுததும், உங்களால் விட முடியாத கெட்ட பழக்கம் எது என்று அபிராமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ” கோபம் தான். அதுனால நெறைய பேரை இழந்துருக்கேன். இன்னைக்கு கூட மீரா கிட்ட சண்டை போட்டேன், சாரி மீரா ” என இயல்பாக ஒப்புக் கொண்டதும் தான் மனித வாழ்வின் நிதர்சனங்கள்.
யாருடைய முன் கதையும் யாருக்கும் முழுதாகத் தெரியாது ஆதலால் அன்பு செய்யுங்கள் மக்களே…!