நான்கு நாட்களாக மழை நசநசத்துக் கொண்டிருந்தது. மொத்தமாக தெருக்களில் நீர்வரத்துப் பெருகி தாழ்வான இடங்களை நிரப்பியும் அடங்காமல் ஓடிக் கொண்டும் இருந்தது. நெகிழிக் குப்பைகள் குழிகளையும் மடைகளையும் அடைத்துக் கொள்ள சாலைகள் தெப்பக் குளமாக காட்சியளித்தது. மரக்கிளைகளில் ஒண்டிக் கொள்ள வாகில்லாமல் காகங்கள் ஏசியின் அவுட் டோர்களின் இடுக்குகளில் ஒதுங்கிக் கொண்டு ஈரமான இறகுகளை உலர்த்த உதறிக் கொள்கின்றன. ஒண்டிக் கொள்ள இடமற்ற பூனைகள் சிலவை செத்து மிதக்க, பிழைத்தவை நடுக்கத்தில் கிடந்தன.
அவனுக்கு தெருவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. பாரிஸ் நகரத்துச் சாலைகளைப் போல் சென்னை மிதக்கிறது என எண்ணிக் கொண்டான். வெயிலில் காய்ந்து பொசுங்கும் தார்ச்சாலை தற்போது கண்ணுக்கே தெரியவில்லை. கலங்கலான குப்பைகள் மிதக்கும் தண்ணீரில் இறங்கி நடக்க மனம் இடம் தரவில்லை. என்னென்ன குப்பைகள் மிதக்கிறதென மனதுக்குள் குறிப்பெடுக்கத் தொடங்கினான் பட்டியல் நெடும் பாதையாகிப் போனது. பால் பாக்கெட்டிலிருந்து குப்பைக் கவர் வரை நெகிழிகள் மட்டுமே எழுபது சதவீதம் அடைத்திருந்தது.
உலகில் நெகிழி அழிக்க முடியாத ராட்சத பூச்சியாக உருமாறி இருப்பதை மனித இனம் ஒருபோதும் உணர்வதாகத் தெரியவில்லை. பூமி உருண்டைக்கு ஆணுறை அணிவித்ததுப் போல் நெகிழியை யோசித்தான் இனி பூமிக்கு குழந்தைகள் பிறக்கப் போவதில்லை ஆணுறையில் உறைந்த துளிகளில் இருந்து செயற்கை பூமியை வேண்டுமானால் உருவாக்கிக் கொள்ளலாம். மழையும் மரங்களும் காற்றும் விரைவில் நின்றுவிடும். அதிகபட்சமாக நூறு வருடங்கள் அதற்குப் பிறகு மனிதனுக்கு சுவாசிக்க எதுவும் இருக்காது. ஸ்தம்பித்துவிட்ட போக்குவரத்து சிக்னலைப் போல் இந்த நான்கு நாட்களும் அவனுக்குள் எதிர்கால அக்கறையை கிளர்த்தி விட்டிருந்தது. ஈர வாடையும் மின்சாரமற்ற அமைதியும் அவனுக்கு பிடித்துப் போயிருந்தது.
அலைபேசி அணைந்து போய் இரண்டு நாட்களாகி விட்டது. அலுவலகத்திலிருந்தோ, ஊரில் இருக்கும் உறவுகளிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, அழைப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இணைப்பு துண்டிக்கப்பட்ட காரணங்களை செய்திகளின் வாயிலாக தெரிந்திருப்பார்கள். யாரேனும் தனக்காக பிரார்த்தனை செய்திருக்கக் கூடும் என நம்பினான். மளிகைப் பொருட்கள் தீர்ந்து போய் விட்டது. பிரட், பால், மெழுகுவர்த்தி, கொசுவத்திச் சுருள், பிஸ்கட், நூடுல்ஸ், வாழைப்பழம், முட்டை என முன்னமே வாங்கி வைத்திருந்ததால் ஓரளவு சமாளித்துக் கொண்டான். தண்ணீர் கேன் இரண்டு இருந்தது. இன்னும் ஓரிருநாள் பிரச்சனையில்லை.
மனம் நீண்ட தனிமையை உணரத் தொடங்கியிருந்தது. வாழ்வின் பெரும்பகுதியை அலைபேசிக்கே கொடுத்து விட்டிருந்ததை பெருத்த அவமானமாக கருதினான். காலையில் கண்களைத் திறந்தவுடன் என்னவோ தலை போகிற அவசர தகவல்கள் இருப்பதாக மனம் அலைபாய்ந்து படுக்கையை விட்டு எழுந்திரிக்கக் கூட மறந்து அப்படியே அலைபேசியில் மேய்ந்து கொண்டிருந்ததும் அவசர அவசரமாக தயாராகி அலுவலகத்திற்கு ஓடுவதும் வாடிக்கையாக இருந்தது. இரவின் முக்கால் பங்கினை ரீல்ஸ் பார்ப்பதற்காக செலவிட்டதை நினைத்தான். யாரோ யாருடனோ சிரிப்பதையும் கலாய்ப்பதையும் சண்டை போடுவதையும் ஸ்க்ரோல் செய்து பார்ப்பதால் தனக்கு என்ன கிடைத்தது.. வீட்டு வாசல்களில் அமர்ந்து வெற்றிலையை மென்றபடி அடுத்த வீட்டு சங்கதிகளை புறம் பேசும் செயல்பாட்டின் நவீன வடிவம் தான் இந்த ரீல்ஸ். உண்மையில் ஆண்கள் இதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை.
அமைதியும் இயற்கையும் அவன் மனதை ஆழ உழுது அக்கம் பக்கத்து மனிதர்களின் தும்மல் இருமல், மூச்சுக் கூட தெளிவாக கேட்டது. மழைத்துளி விழும் சப்தம் போருக்கு முன்னமாக தண்டோரா போடும் அதிர்வலையில் கேட்டுக் கொண்டிருந்தது. சம்மணம் போட்டு அமர்ந்தான். இடுப்பில் கட்டியிருந்த டவல் அமர்வதற்கு தோதாக இல்லை. அதைக் கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக அமர்ந்தான். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலிருப்பது இடையில் இருக்கும் துணி மட்டும்தானா என்று நினைத்தான். அவன் கழற்றி வைத்த டவலை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தான்.
ஆறு வீடுகள் மட்டுமே இருக்கும் அபார்ட்மெண்டின் முதல் தளத்து முன்புற வீட்டில் தனியாக வசித்து வரும் பிரம்மனுக்கு மற்ற வீடுகளில் வசிப்பவர்களை இந்த நான்கு நாட்கள் பெய்த மழைதான் அறிமுகம் செய்தது. முதல் தளத்தில் வசிக்கும் வயதான தம்பதியினர் தங்களின் மகன் அமெரிக்காவில் வசிக்கும் பெருமையை சோகம் நிரம்பிய முகத்துடன் விவரித்தார். கீழ் தளத்தில் வசிப்பவர்கள் மழை நீடிக்குமென்ற தகவல் வந்த போதே தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தார்கள்.
மேல் தளத்தில் இருக்கும் குழந்தை ஓயாமல் அழுதுக் கொண்டே இருக்கிறாள். அவளது தாய்க்கு அவளைத் தோளில் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்து உறங்க வைக்கத் தெரியவில்லை. வாய் வலிக்க, ”ச்சோ ச்சோ ச்சோ” என்றே ஆற்றுப் படுத்த முயல்கிறாள். பிரம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது. குழந்தைகளின் அழுகுரலை உடனே நிறுத்தவில்லை என்றால் அவை துயரத்தை அழைத்து வருமென்று அத்தை அடிக்கடி கூறியது நினைவுக்கு வந்தது.
அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அத்தைதான் அவனை வளர்த்து வந்தாள். இளம் பிராயத்தில் தாயைப் பறிகொடுத்த வலியை அறியா வண்ணம் அத்தை காவேரி பார்த்துக் கொண்டாள். அப்பாவின் உடன் பிறப்பு. அண்ணாவின் மீதுள்ள பாசத்தினால் அண்ணி இறந்த நாளில் ஊரார் முன்னிலையில் தாய்ப்பாலுக்காக கதறியவனை மார்போடு அணைத்துக் கொண்டு தனியறை சென்றவள் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். இவனை உறங்க வைக்க நெஞ்சோடு அணைத்து முதுகில் உள்ளங்கையால் தட்டிக் கொடுத்து மெல்லிய குரலில் பாடுவாள்
”ஆராரோ ஆராரோ
உன்னையடிச்சது யாராரோ
தாலேலோ தாலேலோ
தங்கச் சிலையே தாலேலோ
அத்தைக்கு வயிறுமில்லை
அம்மைக்கி வாழ்வுமில்லை
பிள்ளைக்கி கொடியுமில்லை
பூச்சிக்கி வாயுமில்லை
ஆராரோ அடி ஆராரோ
உன்னையடிச்சது யாராரோ
எட்டூரு சந்தைக்கித்தான்
எம்பாட்டன் போயிருந்தான்
ஏறாத மலையேறி
எவ்வுசுர தந்திருந்தான்
ஆராரோ அடி ஆராரோ
உன்னயடிச்சது யாராரோ
காணாத சீமைக்கித்தான்
கண்ணே நீ போவோனும்
மன்னாதி மன்னோனா
மங்கலமா வாழோனும்
அம்மையத கேக்கோனும்
அத்தையத பாக்கோனும்”
அத்தையின் பாடலும் வரிகளும் இரவு முழுக்க நீளும். வாயில் வந்தவை எல்லாவற்றையும் பாடுவாள். ஒருமாதிரி அடித்தொண்டையிலிருந்து முனகுவதைப் போல சன்னமாக பாடும் பொழுது தூக்கம் கண்களை மறுப்பின்றி தழுவிக் கொள்ளும். அப்பாடலும் அத்தையின் குரலும் ஒரு மாயக்கயிறு. அந்த ஊஞ்சலில்தான் பிரம்மா இளம் வயதில் தொங்கிக் கொண்டிருந்தான். உணவு ஊட்டுவதற்கென மாயக் கயிறு வேறொரு பாடலைப் பாடி இழுக்கும். அத்தையின் குரலைக் கயிறாக்கி கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தவனை மேல்நிலைப் பள்ளிப் படிப்பிற்காக அப்பா சென்னையிலுள்ள விடுதியோடு இணைந்த பள்ளியொன்றில் சேர்த்து விட்டார்.
இரயில் நிலையத்தில் அத்தை அழுதது இன்னமும் நினைவிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியான அத்தை இரயில் நகரும்போதும் வயிற்றைத் தள்ளியபடி நகர்ந்து வந்து சன்னலில் இவனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவர் எங்கே அவள் விழுந்து விடுவாளோ என்று பதறி கைகளை விடுவித்து விட்டார். இரயில் மெதுவாக வேகமெடுத்தது. அவளது குரலென்னும் மாயக் கயிற்றின் ஒவ்வொரு நூலும் வலுவிழந்து அறுகத் தொடங்கியது.
பள்ளி விடுதியின் காப்பாளர் வேறு மாதிரியான தாம்புக் கயிற்றை அவனது கழுத்தில் போட்டு இழுத்தார். இம்முறை அவனுக்கு மூச்சு முட்டியது. பிடிக்காத உணவை விழுங்கும் போது தொண்டைக் குழியில் உருளும் கூழாங்கற்களை உணர்ந்தான். காப்பாளர் காரணமேயில்லாமல் பிரம்பால் கட்டிலின் கால்களை அடித்து ஒரு சப்தத்தை உருவாக்குவார். தனது கட்டிலின் மேல் அடிக்கும் போது அவரை அப்படியே மல்லாக்காக சாய்த்து பிரம்பினைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போலத் தோன்றும். கைகளை முறுக்கி கோபத்தை அடக்கிக் கொள்வான்.
முழுவாண்டுத் தேர்வின் விடுமுறைக்கே அப்பா அவனை ஊருக்கு வர அனுமதித்தார். அத்தையின் மாயக்கயிற்றில் இப்போது வேறொருத்தி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். அத்தை அக்கயிற்றை இரண்டாகக் கத்திரிக்க முயன்று தோற்றுப் போனதை உணர்ந்து இவனாக ஒதுங்கிக் கொண்டான். பள்ளியும் கல்லூரியும் வேறொரு உலகமாக அவனை அரவணைத்துக் கொண்டது.
பால்கனியில் சென்று சாலையைப் பார்க்கிறான். தண்ணீர் ஓரளவு வடிந்திருக்கிறது. தேங்கிய நீரில் சிறுவர்கள் விளையாடத் தொடங்கிவிட்டார்கள். மாடியிலிருந்து குழந்தையின் அழுகுரல் நின்றபாடின்றி ஒலித்தது. இப்படியே அழுதால் சீக்கிரமே மயங்கி விடும் அல்லது விபரீதமாக எதாவது நடந்து விடுமெனத் தோன்றியது. அரைக்கால் ஷாட்ஸையும் டீசர்ட்டையும் அணிந்து மாடிக்குச் சென்றான். திறந்தே கிடந்த கதவின் அருகிலேயே ஆறுமாதக் குழந்தையை மடியில் கிடத்தி வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவளை அழைத்துப் பார்த்தும் திரும்பாததால் தோளைத் தொட்டு உலுக்கினான். மின்சாரம் தீண்டியது போல அதிர்ந்தவள் வெடுக்கென குழந்தையைத் தூக்கி தோளில் போட்டபடி இவனை கலக்கமாகப் பார்த்தாள்
“ஏங்க கொழந்த அழுதுகிட்டே இருக்கு. எதாச்சும் ஒடம்பு சரியில்லையா? டாக்டர்ட்ட போனுமா என்ன? உங்க ஹஸ்பண்ட் இல்லையா?”
“இல்லைங்க சார் அதெல்லாம் ஒன்னுமில்ல.. அவர் வெளியூருக்கு போயிருக்கார்.. சரியாயிடும்”
“ஏங்க ஒன்னுமில்லன்னா எதுக்குங்க விடாம அழுதுகிட்டே இருக்கு”
“சார், இனிமே அழாம பாத்துக்கறேன். நீங்க வந்து கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்”
“அட என்னம்மா இதுக்கெல்லாம் போயி தேங்க்ஸ் அது இதுன்னு.. நான் கீழத்தான் இருக்குறேன் எதாச்சும் உதவின்னா கூப்பிடுங்க, சரியா?”
“சரிங்க சார்”
“அப்புறம் இந்த சாரு மோரெல்லாம் வேணாம். பிரம்மான்னே கூப்பிடுங்க”
“ம்ம்.. சரிங்க”
அவளுக்கு பேசப் பிடிக்கவில்லை என்பதை விட பேசுவதைத் தவிர்க்கிறாளென தெளிவாகப் புரிந்தது. கீழிறங்கி வந்தான். அடுக்களைக்குச் சென்று நூடுல்ஸ் தயாரிக்க தண்ணீரைக் கொதிக்க வைத்தான். இறுதியாக இருந்த ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து நான்கு இழுப்புகளுக்குப் பிறகு அணைத்து தூக்கியெறியாமல் அலமாரியில் ஓரமாக வைத்துவிட்டு நூடுல்ஸை கைகளால் நான்காக நொறுக்கி கொதி நீரில் போட்டான். மசாலா பாக்கெட்டை பற்களால் கடித்து நூடுல்ஸில் தூவினான். காற்றில் பறந்த மசாலாப் பொடி கண்ணில் சட்டென விழ விரலால் கண்ணைத் தேய்த்து மேலும் சிவப்பாக்கினான். பாத்ரூமிற்குச் சென்று குவளைத் தண்ணீரை கண்ணில் ஊற்றி கழுவ கண் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தது.
மீண்டும் குழந்தையின் அழுகுரல் முன்பை விட சப்தமாக கேட்டது. இம்முறை சற்று பக்கமாக கேட்கவே வேகமாக வெளியே வந்தான். அவனது வீட்டின் வாசலிலேயே போர்வை ஒன்றில் குழந்தையைப் போட்டுச் சென்றிருந்தாள். அவனுக்கு கோபமும் எரிச்சலும் அதிகமாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக மாடிக்குச் சென்றான். அவளது வீட்டின் கதவு உட்புறமாகத் தாழிட்டிருந்தது. தட்டினான்.. திறக்கவில்லை. வேகமாகத் தட்டினான். உள்ளே ஏதோ உருளும் உடையும் சப்தம் கேட்கவே பதட்டமானான். சன்னல் வழியாக உள்ளே பார்த்தான். அவள் தூக்குப் போட்டுத் தொங்குவதற்குத் தயாராக இருந்தாள்.
அவளுடைய கழுத்தில் நீல வண்ணச் சேலையின் ஒரு முனையை இறுக்கமாக கட்டியிருந்தாள். மறுமுனை ஃபேனில் இருந்தது. மர ஸ்டூலில் இருந்த கால்கள் ஸ்டூலைத் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றன அவளது கால்களுக்கும் ஸ்டூலுக்குமிடையில் அரை இன்ச் இடைவெளியிருக்கிறது அதனால் அவளுக்கு ஸ்டூலை நெட்டித் தள்ள இயலவில்லை. அந்த முயற்சியில் தான் அருகிலுள்ள தண்ணீர் பாட்டல் விழுந்திருக்கிறது. சன்னலின் வழியாக அவன் அவளை இறங்கச் சொல்கிறான். அக்கம்பக்கத்து ஆள்களை அழைக்க சப்தமிடுகின்றான். சில தலைகள் எட்டிப்பார்த்து சுதாரிப்பதற்குள் அவள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவளை பலவந்தமாக கீழே இழுத்து கழுத்திலுள்ள சுருக்கை அவிழ்த்து விடுவித்திருந்தான்.
சுற்றிலுமுள்ளவர்கள் ஆளாலுக்கு கருத்துகள் சொல்லிச் சென்றனர். அவளைக் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதே பலருக்கு சரியாக இருந்தது. குழந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கை செய்து கலைந்து சென்றனர். அவன் மட்டும் அவளோடு பேச வேண்டுமென அங்கேயே நின்றான்.
“கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா பைத்தியக்காரி.. நீ பாட்டுக்குச் செத்துப் போயிடுவே. இந்தக் கொழந்தைய யாரு பாத்துக்குவா?”
“மன்னிச்சுடுங்க சார்”
“மயிறு..”
“சார், இது என்னோடக் கொழந்தையே இல்ல சார்”
“அடிப்பாவி என்ன சொல்றே?”
“சார், எம்பேரு கங்கா.. எனக்கு யாருமேயில்ல சார், ஆஸ்ரமத்துல வளந்தேன். அங்கேயே படிச்சேன். வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்.. கொஞ்ச நாள் முன்னாடி நாங்க போய்ட்டிருந்த பைக் எதிர்ல வந்த லாரில மோதி டிவைடர தாண்டி ஆற்றுப் பாலத்துலேந்து தூக்கி எறிஞ்சுடுச்சு.. தண்ணீர் இல்லாத காரணத்துனால பாறைல மோதி அவர் செத்துப் போய்ட்டாரு. நான் மண்ணுல விழுந்துப் பொழச்சிக்கிட்டேன். தலைல மட்டும் பலமா அடிப்பட்டிருந்திச்சு.. கொஞ்சம் கொஞ்சமா மீண்டு மறுபடியும் வேலைக்கி போக ஆரம்பிச்சேன். அப்பதான் எனக்கு மண்டைல அடிபட்டதுல மூளையோட நரம்புகளெல்லாம் டேமேஜ் ஆகியிருக்குன்னும் எல்லாமே அப்பப்போ மறந்து போகுமுன்னும் சொன்னாங்க. ஆஃபிஸ்லயும் சரியா வேல பாக்க முடியலன்னு அனுப்பிட்டாங்க”
“சரிம்மா, அப்ப இந்தக் கொழந்த யாரோடது?”
“சார்”
“ம்ம் சொல்லும்மா பயப்படாதே”
“சார் சத்தியமா இந்தக் கொழந்த என்னோடது இல்ல”
”அது புரியுது. வேற யாரோடதுன்னு சொல்லுங்க அவங்ககிட்ட ஒப்படச்சுடலாமில்ல”
“சார், இந்தக் கொழந்த யாரோடதுன்னே தெரியல சார்”
“வ்வாட்.. என்னமா சொல்றே?”
“சார், ஒருதடவ பஸ் ஸ்டாண்ட் பாத்ரூம்க்கு அவசரமா போயிட்டு திரும்பிட்டு இருந்தப்ப ஒரு அம்மா இந்தக் கொழந்தைய ஒரு அஞ்சு நிமிஷம் பிடிங்க.. பாத்ரூம் போய்ட்டு வந்து வாங்கிக்கறேன்னு சொல்லி கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா, அப்புறமா வரவே இல்ல”
“அதெப்படி கொடுத்தவங்க வராம போவாங்க.. உண்மைய சொல்லு நீதானே தூக்கிட்டு வந்தே.. அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேசனுக்கு போயி ஒப்படச்சிருக்கலாமில்ல.. நீ பாட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டு இப்ப கத சொல்றியா?”
“இல்ல சார், எங்க அம்மா மேல சத்தியமா நம்புங்க”
“சரி, அப்புறம் எதுக்குடி தூக்குப் போட்டுச் சாவப்போறே? அதுவும் குழந்தைய என் வீட்டுக்கு முன்னாடி போட்டுட்டு”
“சார், எனக்கு அடிக்கடி எல்லாமே மறந்து போயிடுது சார். இந்தக் கொழந்தைய என்னால பாத்துக்க முடியல.. என் தலைவலியையும் தாங்கிக்க முடியல. ஒங்க மண்டைல யாராவது ஓங்கி நூறு தேங்காய போட்டு ஒடச்சா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் சார் அந்த வலி.. கொழந்தைய நான் வளந்த ஆஸ்ரமத்தில போட்டுட்டு சாகனும்னு நெனச்சிருந்தேன். ஆனா, மழ வந்து கெடுத்திருச்சு”
“அது எப்படிம்மா சாகனுங்கறத மட்டும் மறக்காம ஞாபகம் வச்சிருக்க”
“வலி சார் வலி.. வலி மண்டையப் பொளக்கும் போது சாகனும்னு தோணிக்கிட்டே இருக்கும்.. நீங்க வந்து பேசிட்டு போனதும் ஒங்க மேல ஒரு நம்பிக்க வந்திச்சு. இந்த கொழந்தைய பத்திரமா பாத்துக்குவிங்க இல்லனா பாத்துக்குற எடத்துல சேத்துடுவிங்கன்னு”
“அதனால தான் எங்கிட்ட போட்டியா?”
”ஆமாம் சார்”
“இப்ப என்ன பண்ண போறே? மறுபடி தொங்கப் போறியா இல்ல எதையாச்சும் தின்னுட்டு சாவப்போறியா .. அத்தனப் பேரும் ஒன்ன போலீசுல ஒப்படைக்க சொன்னாங்க. நாந்தான் பேசி கொழந்தைக்காக விட்டுடலாம்ன்னு சொல்லி அனுப்பியிருக்கேன்.. புரியுதா?”
”சார், நானும் வாழத்தான் ஆசைப் படறேன். என் வலி என்னை வாழ விட மாட்டேங்குது”
“ம்ம்ம்.. சாரி கங்கா, நான் கெளம்பறேன்”
“சாரி பிரம்மா.. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்”
“இட்ஸ் ஓகே”
“இங்கேயே இருந்திடறிங்களா”
“ஏன்? என்னாச்சு?”
“இல்ல இன்னைக்கு மட்டும் எங்கூட.. கரண்ட் இல்ல இருட்டா இருக்கு பாப்பாவும் அழுதிட்டே இருக்கா. நீங்க இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும்”
“இல்ல.. எனக்கு வேலை இருக்கு. நான் கெளம்பறேன்”
“கொஞ்ச நேரமாச்சும் இருந்துட்டுப் போயேன் பிரம்மா”
அவனால் மறுக்க முடியாத குரலும் அழைப்பும் அது. தலையை அசைத்து சம்மதம் சொன்னான். வாஞ்சையோடு குழந்தையை அவளிடமிருந்து பெற்று மார்போடு அணைத்தபடி அத்தையின் மாயக்கயிற்றை இருவரின் மீதும் வீசினான். கரகரப்பான குரலில் பாடத் தொடங்கினான். மனசாட்சியே இல்லாமல் அவள் பாராட்டிச் சிரித்தாள். அவர்களிருவரையும் இறுக்கமாகக் கட்டி தன்னுலகத்திற்கு கடத்திச் சென்றான். அவளுக்காக நூடுல்ஸை எடுத்து வந்து கொடுத்தான்.
உயிருக்குப் போராடும் பூனைகளின் குரல்களும், நிலவைப் பார்த்து ஊளையிடும் நாய்களும், ‘கொர்ரக் கொர்ரக்’ என்னும் தவளைகளின் ஒலியும் அவனை அவளிடம் நெருங்கச் செய்தது. முதலில் தயங்குவது போல் பாசாங்கு செய்தவளிடம் தலைவலியை மொத்தமாக நீக்கும் மருந்தென காமம் இருக்கலாமென ஆடைகளை அவிழ்த்தான். முன்னொரு காலத்தில் நீரோடு நீர்ப் புணர்ந்தால் பெருமழைப் பெய்யுமென காதலி சொல்லி இருந்தாள். அவளின் முகத்தை இவளுக்கு ஒட்ட வைப்பதில் மனதுக்கு எந்த சிரமமுமில்லை. மழைக்காலத்து சப்தங்களில் அவர்களின் முயங்கும் சப்தம் செம்புல நீராகக் கலந்தது.
“கங்கா, நீ எங்கே பிறந்தாய்?”
“பிரம்மா, நீ எங்கே பிறந்தாய்?”
பிரம்மா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து ஆறுமாத காலமாகியும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு யாரும் வரவில்லை. வீட்டின் அடித்தளத்தை கரையான் அரித்துக் கொண்டிருந்தது. காவேரி அத்தையின் கயிற்றை அரித்த அதே கரையான்கள் அவை.