பிரேக்கிங் பேட் (Breaking Bad) 2008 முதல் 2013 வரை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அமெரிக்கன் டிவி சீரிஸ்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசிக்கும் வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். மனைவி ஸ்கைலர் வீட்டோடு இருக்கிறார். மகன் உயர்நிலைப்பள்ளியில் பயில்கிறான். வால்டர் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.
வேதியியல் துறையில் வால்டர் ஒரு அறிவியலாளராக வளர்ந்திருக்க வேண்டியவர். கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உயர்கல்வி கற்கும் போதே, புரோட்டான் ரேடியோகிராபி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவர் தலைமை தாங்கிய குழுவிற்கு 1985 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைக்கிறது.
பிறகு தனது கல்லூரி நண்பர் எலியட் ஸ்வார்ட்ஸீடன் இணைந்து க்ரே மேட்டர் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனத்தை நடத்துகிறார். பின்னர் பொருளாதாரத் தேவைகளுக்காக நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்றுவிட்டு நிறுவனத்திலிருந்து வெளியேறி சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்.
வால்டரின் பையன் வால்டர் ஜீனியர் பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை. இத்தகைய குழந்தைகளால் பிற குழந்தைகளைப் போல இயல்பாக இயங்க முடியாது. சிந்திப்பதிலும், பகுத்தறிவதிலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் பல பிரச்சினைகள் இருக்கும். உடல் ரீதியிலான பிரச்சினைகளும் இருக்கும். ஜீனியரை பராமரிப்பதும் அவனுக்கான மருத்துவ செலவுகளும் வால்டர் குடும்பத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
ஆசிரியர் பணியின் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப செலவுகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை என்பதால் பகுதி நேரமாக ஒரு கார் வாஷ் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறார்.
ஒருநாள் கார் வாஷ் செய்துகொண்டிருக்கும் போது வால்டர் மயங்கி விழுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் வால்டருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. வழக்கமான குடும்ப செலவுகளையே சமாளிக்க முடியாத சூழலில், புதிய வரவான புற்றுநோய் சிகிச்சைக்கு பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டிய நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்படுகிறது குடும்பம். கையில் சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை.
புற்றுநோயோடு வால்டரின் 51 வது பிறந்த நாளும் வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக உறவினர்களும் நண்பர்களும் வால்டரின் வீட்டில் கூடியிருக்கிறார்கள். ஸ்கைலரின் தங்கை மரியாவும் கனவன் ஹேங்கும் தான் வால்டர் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரே உறவினர்கள். ஹேங்க் DEA வில் (Drug Enforcement Administration) சிறப்பு விசாரணை அதிகாரியாக பணிபுரிகிறான்.
அனைவரும் வால்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பாகிறது. ஹேங்க் அனைவரையும் அழைத்து அந்த செய்தியை பெருமையுடன் காட்டுகிறான். போதைப்பொருள் கும்பலிடமிருந்து DEA கைப்பற்றிய கட்டுக்கட்டான டாலர் நோட்டுகள் செய்தியில் ஒளிபரப்பாகிறது. வால்டர் அந்த செய்தியை ஆர்வத்துடன் கவனிக்கிறான்.
அன்று இரவு ஹேங்கை அழைக்கும் வால்டர் அடுத்த முறை பொதைப்பொருள் கும்பலை பிடிக்கச் செல்லும்போது தன்னையும் அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்கிறான். அவனுடைய கோரிக்கையை ஏற்று ஹேங்க் வால்ட்டை அழைத்துச்செல்கிறான். ஹேங்க் தலைமையில் போலீசார் போதைப்பொருள் டீலர் ஒருவனின் வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வால்டர் காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது எதிர் வீட்டின் மாடியிலிருந்து ஒருவன் கீழே குதித்து தப்பி ஓடுகிறான். வால்டர் அவனைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அது வால்டரின் முன்னாள் மாணவன் ஜெய்ஸி பிங்க்மேன்.
பிங்க்மேனின் முகவரியை தேடிப்பிடித்து அவனை சந்திக்கிறான் வால்டர். பிங்க்மேன் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவன். அத்துடன் போதைப்பொருள் டீலர்களின் தொடர்பிலும் இருப்பவன்.
“எனக்கு வேதியியல் தெரியும். உனக்கு போதை உலகமும் அதன் வியாபர நுட்பமும் தெரியும். வேதியியல் மூலக்கூறுகளை கொண்டு நான் ஒரு போதைப்பொருளை தயாரிக்கிறேன். உன்னால் அதை விநியோகம் செய்ய முடியுமா?” என்று கேட்கிறான். “செய்யலாம்” என்கிறான் ஜெய்சி. இருவரும் இணைந்து ‘கிறிஸ்டல்’ என்கிற போதைப்பொருளை தயாரிக்கிறார்கள். அதற்கான மூலப்பொருட்களை பள்ளியின் லேபிலிருந்தே எடுத்து வருகிறான் வால்ட்.
போதை உலகின் சந்தையில் கிறிஸ்டலுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. தேவை அதிகரிப்பதால் உற்பத்தியும் அதிகரிக்கிறது. லட்சம் லட்சமாக பணமும் குவிகிறது. பணத்தை வீட்டில் பதுக்கி வைக்கிறான். அத்துடன் இது தொடர்பான அனைத்து விசயங்களையும் குடும்பத்திடமிருந்து மறைக்கிறான்.
அடுத்து என்ன நடக்கிறது, என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது நாம் இக்கதையின் சமூகப் பின்னணிக்குள் செல்வோம். வால்டர் ஒயிட் ஒரு ஆசிரியர். மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தந்து அவர்களை சிறந்த மனிதர்களாக சமூகத்திற்கு செதுக்கித்தருபவர்கள் தான் ஆசிரியர்கள். தனது முன்னாள் மாணவனைத் தேடிச்செல்லும் வால்ட், அவன் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிருப்பதை எண்ணி வருந்தாமல், இருவரும் சேர்ந்து போதைப்பொருள் தயாரிக்கலாமா என்று கேட்கிறான். அந்த பயணத்தில் அவர்கள் அதை மட்டும் செய்யவில்லை. சில கொலைகளையும் செய்கிறார்கள்.
வால்டர் மிகச்சிறந்த அறிவாளி. வேதியியல் துறையில் சிறந்த நிபுணன். ஒரு விஞ்ஞானியாக உருவெடுத்திருக்க வேண்டியவன். அனைத்தையும் கடந்து நல்ல சமூக மனிதன். அத்தகைய மனிதன் ஏன் சமூக விரோதியாகவும், கிரிமினலாகவும், கொலைகாரனாகவும் மாறுகிறான் என்கிற கேள்வியை இந்த படைப்பு எழுப்பவில்லை. ஆனால் அதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. விஞ்ஞானியாக வேண்டியவனை கொலைகாரனாக்கியது எது? அதற்கான சமூக அடிப்படை என்ன என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அம்சம்.
அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அமெரிக்க சமூக அமைப்பை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
வால்டர் ஒயிட் நேர்மையாகதான் வாழ்கிறான். பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஒடிப்போய் போதைப்பொருள் தயாரித்து விடுவதில்லை. முதலில் தனது நிறுவனத்தின் பங்குகளை விற்கிறான். பிறகு கார் வாஷ் நிறுவத்திற்கு வேலைக்குச் செல்கிறான். இவ்வாறு நேர்வழிகளில்தான் வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறான். ஆனால் அவன் வாழ்கின்ற சமூக அமைப்பு தொடர்ந்து அவனை அதே வழியில் போராட அனுமதிப்பதில்லை. நேர்மறை வாய்ப்புகளை மறுத்து அவனை சமூக விரோதியாக மாற்றுகிறது.
அமெரிக்க மருத்துவத்துறைதான் உலகின் மிக மோசமான பகற்கொள்ளை கும்பல் என்பதை, பிரபல அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் மைக்கேல் மூர் தனது சிகோ (Sicko) படத்தில் பதிவு செய்திருப்பார்.
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை என்பது ஆடம்பர செலவுகளில் ஒன்றாகும். அமெரிக்காவில் அரசு மருத்துவமனைகள் என்பது மிக மிகக் குறைவு. சில மாகாணங்களில் சுத்தமாகவே இருக்காது. ஆனால் நாடு முழுவதும் மருத்துவ உதவித் (medicaid) திட்டம் என்பது அமுலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அது யாருக்கு கிடைக்கும்?
நிச்சயமாக சம்பாதிப்பவருக்கு கிடைக்காது. வாய்க்கும் வயிற்றுக்கும் என்று ஓரளவுக்கு சம்பாதிப்பவருக்கும் கூட கிடைக்காது. ஆகவே மிடில் கிளாஸ் மக்களில் ஒருவருக்கும் கிடைக்காது. ஆனால் அமெரிக்க மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையானவர்கள் மிடில் கிளாஸ்தான். அந்த வர்க்கத்தில் ஒருவன்தான் வால்டர் ஒயிட்.
வால்டருக்கு புற்றுநோய் அறியப்பட்டதும் பணத்திற்கு என்ன செய்வது, எங்கே கேட்கலாம், யாரிடம் கேட்கலாம் என்று தான் யோசிப்பார்களே தவிர, எங்கு கொள்ளையடிக்கலாம், எப்படி கொள்ளையடிக்கலாம் என்றோ போதைப் பொருள் தயாரிக்கலாம் என்றோ யோசிப்பதில்லை.
பொதுவான மருத்துவ சிகிச்சையே அதிக செலவு பிடிக்கக்கூடிய ஒரு நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை என்பது நடுத்தர வர்க்கத்திற்கு குதிரைக் கொம்புதான். எனினும் எங்காவது பணத்தைப் புரட்டிவிட முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் வால்டரின் முன் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று எதைச் செய்தாவது உயிர்வாழ வேண்டும். அல்லது சிகிச்சைக்குக் காசில்லாமல் சாக வேண்டும். வால்டர் வாழ முடிவெடுக்கிறான்.
அமெரிக்காவில் உயிர்வாழ்வதற்கான மருத்துவ உதவிகளைப் பெற வேண்டுமானால் ஒன்று கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். அல்லது சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை செலவளித்து மருத்துவம் பார்க்க வேண்டும். அல்லது வால்ட்டைப் போல சமூக விரோதியாக வேண்டும். அல்லது சாக வேண்டும். இது எவ்வளவு அநாகரீகமாகவும், மனிதத்தன்மையற்றதாகவும் இருக்கிறது. ஏன் இப்படி?
உயிர்களைக் காக்க மருத்துவம் வழங்க வேண்டியது மனிதாபிமானம் தொடர்பானது. அடிப்படை மனித உரிமை தொடர்பானது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை யாருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும். யாருடைய உயிர் எடுக்கப்பட வேண்டும். எதற்கு எவ்வளவு கட்டணம் என்பதை எல்லாம் தீர்மானிக்கும் இடத்தில் சில மருந்து கம்பெனிகளும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும்தான் எமன்களைப் போல அமர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம்?
அமெரிக்கா லாபவெறி பிடித்த ஏகாதிபத்தியமாக இருப்பதுதான் காரணம். முதலாளித்துவ சமூக அமைப்பில் மூலதனம் தான் உயிருடன் நடமாடுகிறது. மூலதனத்தை உருவாக்கும் உயிருள்ள மனிதர்களோ பிணங்களைப் போல நடமாடுகிறார்கள். அமெரிக்க சமூகம், லாப வெறியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம் என்கிற நிலையில் இருப்பதுதான் இதற்குக் காரணம். ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிடும்போது ஆரம்பகால முதலாளித்துவம் முற்போக்கானது என்கிற அளவுக்கு ஏகாதிபத்தியம் மிக மிக பிற்போக்கானது.
லாபவெறியை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க மருத்துவக் கட்டமைப்பைப் போன்ற ஒன்றைத்தான் இந்தியாவிலும் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் என்பவை சாதாரணமானவை அல்ல. மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதில் மருந்து கம்பெனிகள் கூட இரண்டாம் இடத்தில் தான் இருக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்ற, மருந்துக் கம்பெனிகளையே ஆட்டிப் படைத்து ஆதிக்கம் செய்கின்ற இடத்தில் இருக்கின்றன.
மனிதன் சுயலநலம் மிக்கவனா என்கிற கேள்வியை எழுப்பினால், இது என்ன கேள்வி, சுயநலத்தின் முழு உருவமே மனிதன்தான் என்றே பலரும் பதிலளிப்பார்கள். ஆனால் உண்மையில் மனிதன் சுயநலமற்றவன்.
மனிதன் சுயநலமிக்கவன் என்கிற பதிலை நாம் எங்கிருந்து சொல்கிறோம்? சுயநலமிக்க சூழ்நிலையின் நடுவில் நின்று கொண்டு சொல்கிறோம். உலகில் எப்போதும் இதே சூழ்நிலை இருந்ததில்லை. இனியும் இதே சூழ்நிலை இருக்கப்போவதில்லை. இப்போதும் கூட மொத்தப் பூமிப்பந்தும் இதே சூழ்நிலையில் இல்லை.
சக மனிதனை ஆசிட் ஊற்றி உருத்தெரியாமல் அழிக்கும் வால்டரின் செயலை, வால்டர் வாழும் இதே பூமிப்பந்தின் மற்றொரு மூலையில் வாழும் ஒரு பழங்குடி மனிதன் செய்வானா?
நிச்சயம் செய்ய மாட்டான். காரணம் அவனுடைய வாழ்நிலை வேறு, வால்டின் வாழ்நிலை வேறு. வால்ட் நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள அமெரிக்காவில் வாழ்கிறார். பழங்குடிகள் அந்த நாகரீகத்திற்குள் இன்னும் நுழையவில்லை. ஒருவேளை அவர்களும் வால்ட்டின் வாழ்நிலைக்கு வந்தால் அதைச் செய்வார்கள்.
எனவே அடிப்படையில் மனிதன் சுயநலமற்றவன்தான். அவன் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்கிறானோ அந்த சமூக அமைப்பின் தன்மைதான் அவனுடைய தன்மையையும் தீர்மானிக்கிறது. லாபவெறியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் வாழ்நிலைக்குள் இருக்கும்போது வால்ட் போன்ற நல்ல மனிதர்கள் கூட சமூக விரோதிகளாகவே மாற்றப்படுவார்கள்.
மனிதனின் வாழ்நிலைதான் அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் கூறியது இதைத்தான்.
ஒருவேளை வால்ட் ஏதேனுமொரு சோசலிச நாட்டில் பிறந்திருந்தால், அல்லது அமெரிக்காவே ஒரு சோசலிச நாடாக இருந்திருந்தால் வேதியியல் துறையில் உலகறிந்த விஞ்ஞானியாகியிருப்பான். உயிர் வாழும் அடிப்படை உரிமைக்காக சமூக விரோதியாகியிருக்க மாட்டான்.
ஜெய்ஸி பிங்க்மேன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்க மாட்டான். மிகச்சிறந்த மாணவனாகவும், அவனுக்குப் பிடித்த விளையாட்டுத்துறையில் சிறந்த வீரனாகவும் விளங்கிருப்பான்.
கிறிஸ்டல் தயாரிப்பது தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கும் ஸ்கைலரின் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக டாலருக்கு முன்னால் கரைந்தது போல கரைந்து போயிருக்காது.
ஏனெனில் சோசலிச நாடுகளில் அடிப்படை மருத்துவ சிகிச்சையிலிருந்து உயர் மருத்துவ சிகிச்சைகள் வரை அனைத்தையும் இலவசமாகப் பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. அவற்றை வழங்குவது அரசின் அடிப்படைக் கடமை.
விஞ்ஞானியாக வேண்டிய ஒருவனை கொலைகாரனாக்கியதுதான் முதலாளித்துவம் செய்த சாதனை. இத்தகைய இரக்கமற்ற சமூக அமைப்பு இனியும் நீடித்தால் வால்டர் ஒயிட்டைப் போன்று ஒவ்வொருவரும், சமூக மனிதன் என்கிற தன்மையை இழந்து வகை வகையான சமூக விரோதிகளாக மாற்றப்படுவார்கள். ப்ரேக்கிங் பேடை அதன் சமூகப் பின்னனியோடு அணுகுவதன் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம். மனித குலத்தையே அச்சுறுத்தும் இந்தக் கொடிய மிருகத்திடமிருந்து தப்பிக்க உலகத்தின் முன் இருக்கும் ஒரே தீர்வு சோசலிசம்.
சோசலிச சமூக அமைப்பு மட்டும்தான் இந்தத் தீமைகள் அனைத்திற்கும் ஒரே மாற்றாக நம் முன் இன்று இருக்கிறது.
அதைத்தான் வால்டர் ஒயிட்டின் வாழ்க்கையும், முதலாளித்துவ நிர்வாக அமைப்பு முற்றாக தோற்று நிற்கும் இன்றைய கொரோனா சூழலும் நமக்கு உணர்த்துகின்றது.