வீட்டில் அவர் யாரோடும் அதிகமாகப் பேசினதில்லை. கேட்டால் பதில் சொல்லுவார் அவ்வளவுதான்.
வெளியே யாரோடும் பேசுவார். அவரை அங்கே இங்கே யாரோடோ பேசிக் கொண்டிருந்ததை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.
சாப்பிட சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்.
முன்பெலாம் மூன்று நேரம் சாப்பிடுவார். ரொம்ப நாளாயிற்று, சாப்பாட்டை இரண்டு நேரமாக அவர் மாற்றி… இரவு சாப்பிடுவதில்லை.
தூங்கும் நேரத்துக்கு வந்தும் விடுவார்.
அவர் வருவதும் கிளம்பிப் போவதும் சிறகுள்ள பறவை ஒன்று இயல்பாக கிளையில் வந்து அமர்வதும் போவதும் போல.
இன்று இதுவரைக்கும் அவர் வரவில்லை. இப்படி ஒரு நாளும் நடந்தது இல்லை.
நேரம் போய்க் கொண்டிருந்தது. வீட்டில் கூடிப் பேசினார்கள். ஒவ்வொருவராக எல்லா வீதியிலும் அலைந்து தேடினார்கள்…காவல் நிலையம் போய் சொல்லிவிட்டு வந்தார்கள். ஊருக்குள் எங்கும் விபத்து நடக்கவில்லையாம்.
அவர் தினம் தினம் எங்கெங்கு போவார் என்று காவல் நிலையத்தில் கேட்டதற்கும் அவர் யாரோடெல்லாம் நட்பாக இருந்தார் என்று கேட்டதற்கும் பதில் சொல்ல முடியவில்லை, பதில் தெரியாததால்.
பகை யாரும் கிடையாது என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
கடைசியாக வீட்டு வாசல் கதவை எப்போதும் திறந்தே வைத்திருப்பது என்று முடிவெடுத்தார்கள்.
வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல்…
”முன் கதவை மட்டும் திறந்து வைத்தால் போதும்.
பின் கதவை மூடி விடலாம். அந்த வழியாக அவர் வரமாட்டார்.”
***
மகளே தோட்டத்திலிருந்து வருகிறாயா?
அங்கிருந்துதான் வருகிறேன் ஒரு லைலாக் நிற
வண்ணத்துப் பூச்சியை துரத்திக் கொண்டிருந்தேன்
ஈர மண்ணிலும் சேற்றிலும் ஓடியிருக்கிறாய் போல
காலெல்லாம் பாதங்களெல்லாம் அழுக்கு
நான் ஒடினபோது இப்படியெல்லாமும் நடக்குமா தெரியாது
வானத்தில் பறந்து கொண்டிருந்தது, நீ பூமியில் ஓடிக்கொண்டிருந்தபோது
பெருவெளியில் அது பறந்து கொண்டிருந்தது
நீ இந்த சிறு நிலத்தில் ஓடினபோது
வண்ணத்து பூச்சி கிடைத்ததா?
இல்லை.
********