சந்திரா மனோகரன் கவிதைகள்
![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-18-at-20.42.18.jpeg)
வில்லிடுதல்
மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்
எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடு
கண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்
ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன
ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்
ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்
அவன் தயக்கம் தகனம் ஆயிற்று
ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்
நிமிர்ந்த நெஞ்சு போன்ற மணற்குவியல்கள்
ஏதோ ஒரு கூடு அவள் வருகைக்காக
உச்சியில் பதுங்கி இருந்த வண்ணத்துப்பூச்சியின்
அசைவிலும் சிறகடிப்பிலும் எதிரொலிக்கும் நேசம்
பூ பூத்த தனித்த இரவில் துயில்கையில்
இரக்கமற்றவளின் கனவு கட்டவிழ்க்கப்பட்டது
அடிக்காற்றின் உத்திரத்தில் நிலைகுலைந்த
பூஞ்செடி போன்றவனுக்கு புதுவாழ்வு உண்டா?
சிதைந்து முறிந்த காட்டுப் பூ போன்றவனுக்கு
வையமும் இல்லை வானமும் இல்லை!
மக்கிப் போன சருகுகளுக்குள் மறையும் அவலம்
கருகுமாலையில் தொலைதூரத்துப் புன்னகை
சரமழையெனக் கொட்டும் நிமிடங்கள்
வெதும்பிய உள்ளங்கையில் நுழையும் அற்புதம்
நழுவும் உடல் முழுவதும் பூக்க வைத்து
இறுகிக் கிடந்தவனுக்குள் ஓர் ஒளிப்பிழம்பு!
•
வருகாலம்
கருஞ்சிவப்பு நிறத்தில் கலங்கலான நீரின்
ஈரம் படிந்த காட்டு வழியில்
வேட்டைக்காரனின் காலடிகளுக்கடியில்
சின்னாபின்னமாய் சருகுகலாகிப் போனது அவளது காதல்
அந்த ஒற்றைக் குரலில் கானகமே அத்துவானமாகி இருந்தது ஆசுவாசமாய் மண்துகள் போல் அலைக்கழியும்
காயம் பட்ட சிறு கால்களின் நெடிய பயணத்தில்
அந்தக் கோழை மனத்தில்
தூலகாலம் பூரா ஆயிரம் இறக்கைகள்
முளைத்து எழும்புகின்றன
உள்ளார்ந்த சொற்கள் உற்பத்தியாகும்
கர்ப்பக்கோசம் ஆயிற்றே அது!
எரிபந்தம் போல் சுட்டெரிக்கும் உறு நினைவுகளின் உறுத்தலில்
உற்சவம் என்றாவது மலருமா?
நாதாங்கி கழண்டு உருண்டோடும்
தொடர் வண்டியின் சக்கரங்கள் போல்
மெல்ல நகரும் நாழிகை.
நெடிதுயர்ந்த மரங்களை அவனது சுவாசக் காற்று
குழந்தைகளின் கரங்கள் போல் பற்றுகிறது
காடாந்தகாரம் மறைந்து
நாட் பூ போல் மலரும் எழுபோது!
காடெங்கும் ஒலிக்கும் செல்லச் சிரிப்பு
நெடுந்தொலைவு பூரா அவனை
மெலிதான நம்பிக்கை மயிற்பீலி போல் வருடுகிறது.
***
- chandramanoharan.n@gmail.com