ஓர் ஊர் தனது வசீகரத்தை நம் மேல் கடத்தி, அந்த மண்ணை உரிமை பாராட்ட வைப்பதென்பது அவ்வளவு இயல்பன்று.
தலைமுறைகள் கடந்து வாழ்பவர்களும், வசிக்க வந்தவர்களும் ஒரு சேர அன்பு பாராட்டும் சென்னைக்கு இன்று 380 ஆவது பிறந்தநாள்.
சென்னைக்கும் அதன் மண்ணுக்கும் என்ன தான் வயதென்று பின்னோக்கி போக, சென்னையின் பிரதான பகுதிகளான திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகியவை 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை என்று தேவாரங்களும் திவ்யப்பிரபந்தங்களும் குறிப்பிடுகின்றன. சங்க கால சோழர்களில் இளம்கிள்ளி மன்னனுக்குப் பிறகு தொண்டை மண்டலத்தின் மன்னன் பாப்பஸ்வாமியின் கைகளில் ஆட்சியில் இருந்தது. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி பல்லவர்கள் இந்நிலத்தைக் கைப்பற்றி ஆண்டதாகக் கூறப்படுகிறது. தமிழுக்குத் தரப்பட்ட சரிசம உரிமைகள் தெலுங்கிற்கும் தரப்பட்டதாக பல்லவ கோயில்களின் கல்வெட்டுகள் கூறுகின்றன.
9 ஆம் நூற்றாண்டு வரை நீடித்த பல்லவ ஆட்சிக்காலத்திற்குப் பின் ஆதித்ய சோழரின் படையெடுப்பில் கடைச்சோழர்களின் கை சேர்ந்தது இன்றைய சென்னை. இக்காலத்தில் இருந்த கோயில்களுக்கு சோழர்கள் கருங்கற்பணிகளில் ஈடுப்பட்டனர். 1264-ஆம் ஆண்டு ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ஆளத் தொடங்கி, பிற்காலத்தில் விஜயநகர பேரரசிற்கு கீழ் ஆண்ட நாயக்கர்கள் கைகளுக்கு சென்னை வந்து சேர்ந்தது. வடக்கே ஸ்ரீகால-அத்தியில் இருந்து வந்தவாசி வரை ஆண்ட பத்ம வெள்ளமா நாயக்கரை, 20 ஆகஸ்ட், 1639 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பனியை சேர்ந்த பிரான்சிஸ் டே சந்தித்தார். சூரத்தில் இருந்து நறுமணப்பொருட்கள் வணிகம் செய்வது போல் சென்னைப்பட்டினத்திலும் ஒரு துறைமுகம் எழுப்பி வணிகம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனி விரும்புவதாகத் தெரிவித்தார். பத்ம வெள்ளமா நாயக்கரின் ஒப்புதலுக்குப் பிறகு சந்திரகிரியின் விஜயநகரப் பேரரசர் பேடா வேங்கட ராயரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டது. அதன்படி கூவம், எழும்பூர் நதிகள் சங்கமிக்கும் நிலத்தின் மணல் பரப்பை ஆங்கிலேயர்களின் துறைமுகம் மற்றும் கோட்டை எழுப்பத் தருவதாக ஒப்பந்தம் ஆனது.
தமேரல்லா சென்னப்ப முதிராச நாயக்கரின் நிலமான முதிராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்நிலத்தில், செயின்ட் ஜார்ஜ் என்னும் கோட்டையை எழுப்பவும் , கிழக்கிந்தியக் கம்பெனியின் மக்கள் வந்து தங்கவும் ஆகஸ்ட் 22 , 1639 அன்று முடிவானது . மெட்ராஸ்பட்டிணம் – மெட்ராஸ் – சென்னை என்னும் வணிக நகர உருவாக்கத்தின் முதல் புள்ளி பிரான்சிஸ் டேவின் பேனாவில் இருந்து பிறந்தது.
ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான ஒப்புதல் கிழக்கிந்திய கம்பெனியிடம் பெறப்பட்டு, 20 பிப்ரவரி, 1640 அன்று பிரான்சிஸ் டே, கோகெய்ன் தலைமையின் கீழ் 25 ஆங்கிலேயப் போர் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். ஆங்கிலேயர்கள் வசித்த இடங்களை வெள்ளை நகரம் என்று அழைக்க தொடங்கினர். காலிகோ (காடா துணி வகை) துணிகளைத் தயாரிக்கும், அச்சிடும், சாயமிடும் இடமாக மெட்ராஸ் உருவாகத் தொடங்கியது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்பட்டு மக்கள் அங்கே குடிப்பெயரத் தொடங்கினர். வீடுகள், கடைகள், வணிகம் பெருகியது, மெட்ராஸ் வளரத் தொடங்கியது . எலிஹூ யேல், மதராஸப்பட்டினத்தின் முதல் ஆளுநர் ஆனார். அவரின் ஆட்சிக்காலத்தில், சென்னைக்கு மேயர் என்ற புதிய பொறுப்பை உருவகித்தார். நூலகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள் உருவாயின. ஏற்றுமதி இறக்குமதிக்கான சந்தைகள் உருவாக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் பெருகின. செழுமையை, கனவுகளைக் தேடி மெட்ராஸை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். இன்று வரை வந்து கொண்டே இருக்கின்றனர். மெட்ராஸ் மாநகராட்சியில் இன்றளவும் மேயர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் வண்ணாரப்பேட்டை, கிரீம்ஸ் ரோடு, நேப்பியர் பாலம் என அதன் பழமையும் பெயர்களும் மாறாமல் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
ஓர் நிலம், ஒரு பெயர், எதிர்காலத்திற்கும், மக்களின் வழமைக்கும் நம்பிக்கைகளை விதைத்தது. விதைத்துக் கொண்டு இருக்கிறது. இன்றய சென்னை தமிழகத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகளவில் முதல் ஐம்பது தொழில் நகரங்களில் ஒன்று. இவை எல்லாவற்றையும் விட இது மத-இன-மொழி கடந்து பல பேர்களைத் தாங்கி, பல பேர்களை வாழ வைத்து, பல பேர்களை வளர்த்து விட்ட நிலம். மைலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயிலின் குளம் ஆற்காடு நவாப் தந்தது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் நிலம் போர்த்துகீஸுக்கு தமிழ் பேசும் செட்டியார் தந்தது, 1746 இல் பிரெஞ்சு படைகள் சேப்பாக்கம் மற்றும் பிளாக் டௌனை அழித்த போது ஜார்ஜ் கோட்டையில் இருந்து தானியங்கள் சென்றன.
மெட்ராஸ் என்பது என்றுமே ஓர் ஊரோ நிலமோ இல்லை. அது ஒரு உணர்வு. அடையாளங்கள், பழக்கவழக்கங்கள் மொழிகள் தாண்டி நிற்கும் ஒரு மிடுக்கு!