சிறார் இலக்கியம்

“மெய்ப்பொருள் காண்பது அறிவு” –  சிறுவர் கதை

ஞா.கலையரசி

 

அரையாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கப்பட்டது.

அந்த விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து, நேரத்தை வீணடிக்காமல் மாணவர்களால் முடிந்த, பயனுள்ள நல்ல காரியங்கள் செய்து வருமாறு ஏழாம் வகுப்பாசிரியர் இளமாறன் சொல்லியிருந்தார்.

அவர்கள் செய்தவற்றுள் மிகச் சிறந்தது என வகுப்பில் பெரும்பான்மையான  மாணவர்கள் கருதும் சேவைக்குப் பரிசு கொடுக்கப் போவதாகவும், சொல்லியிருந்தார்.

மாணவர்கள் ஒவ்வொருவராக ஆசிரியரின் மேசைக்குப் பக்கத்தில் வந்து நின்று, விடுமுறையில், தாம் செய்த பொதுநலக் காரியத்தைச் சொல்லத் துவங்கினர்.

முதலில் வந்தவன் முருகன். தன் தெருவில் இருந்த கூட்டாளிகளுடன்  சேர்ந்து, விதைப்பந்து தயாரித்துப் புறம்போக்கு நிலங்களில் வீசியதாகச் சொன்னான்.  அதைத் தயாரிப்பது எப்படி என்றும், மாணவர்களுக்கு விளக்கினான்.

“சிறந்த காரியம் செய்தாய்.  மழை தரும் மரங்கள், வளர்வதற்கு, அது துணை செய்யும்,” என்று அவன் முதுகில் தட்டிப் பாராட்டினார், ஆசிரியர்.

அடுத்து கோபு வந்தான்.  அட்டை பெட்டியில், ஓட்டை போட்டு, போர்டிகோவில் மாட்டியதாகவும், அதில் சிட்டுக்குருவி குஞ்சு பொரித்திருப்பதாயும் சொன்னான்.

தினமும் மொட்டை மாடியில் பறவைகளுக்கு, மண்சட்டியில் தண்ணீர் வைப்பதாயும், உணவுக்காக அரிசி நொய், கம்பு போன்ற தானியங்களைப்  போட்டுத் தீனிக்குடுவை மாட்டியிருப்பதாகவும், சொன்னான்.

“நல்லது; சிட்டுக்குருவிகள் நம்மை அண்டி வாழும் இனம்.  இப்போது பெருமளவு அழிந்துவிட்டது. உன்னைப் போலவே, எல்லாரும் செய்தால், அவற்றை அழிவிலிருந்து, காப்பாற்றி விடலாம்”, என்றார் இளமாறன்..

ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததாயும், வயதானவர்களுக்கு உதவி செய்ததாகவும், அடுத்த வந்த இரு மாணவர்கள் சொன்னார்கள்.

மழைநீர்ச் சேகரிப்புக்காக, ஊர் மக்களுடன் சேர்ந்து, குளத்தைச் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தியதாய் மூவர் சொன்னார்கள்.

கடைசியாக வந்தவன் கண்ணன்.  அவன் சொன்னதை, வகுப்பே வாய் பிளந்து, வியப்புடன் கேட்டது.

அப்படி அவன், என்ன தான் சொன்னான்?

“சார்! ஒரு நாள் சாயங்காலம், எங்க ஊருக்குப் பக்கத்திலிருந்த மலைக்கு பசங்களோட விளையாடப் போனேன்.  அங்கே மலையுச்சியில் ஒருத்தன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.  போன மாதம், அவனுக்கும், எனக்கும் பயங்கரமான சண்டை.  அதுலேர்ந்து, ரெண்டு பேரும் பேசுறதில்ல.   ஆனா அவன் படுத்திருந்த ஆபத்தான இடத்தைப் பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். ஒரு அடி நகர்ந்தாக் கூட, கிடு கிடு பள்ளத்துல விழுந்துடுவான். என் விரோதியாயிருந்தாலும், பரவாயில்லைன்னு அவனை எழுப்பி, வேற இடத்தில் படுக்கச் சொன்னேன்,” என்றான் கண்ணன்.

“ஆஹா! விரோதின்னும் பார்க்காம, எழுப்பி அவன் உயிரைக் காப்பாத்தியிருக்கான்; இது தான் சார், உண்மையிலேயே சிறந்த சேவை! இவனுக்குத் தான், சார் பரிசு கொடுக்கணும்” என்றனர், மாணவர்கள் கோரஸாக.

பரிதி என்பவன் எழுந்து, “சார்! எனக்கொரு சந்தேகம்,” என்றான்.

“எந்தச் சந்தேகம்னாலும், தாராளமாக் கேட்கலாம்,” என்றார், ஆசிரியர்.

“ஒரு அடி நகர்ந்தாக் கூட, கிடுகிடு பள்ளத்துல விழுந்து செத்துடுவோம்னா, அங்கே யாராவது படுத்துத் தூங்குவாங்களா?  அப்படிப்பட்ட ஆபத்தான மலையுச்சியில போய்ப் படுக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றான் பரிதி.

“அட ஆமாம் இல்ல? எங்களுக்கு இது தோணவே இல்லியே! அங்க  எவனாவது படுப்பானா? படுத்தாலும், பயத்துல தூக்கம் வருமா?” என்றது, வகுப்பு முழுக்க.

அதற்குப் பதில் சொல்ல முடியாமல், திருதிருவென்று விழித்தான் கண்ணன்.  முடிவில் ஆசிரியரின் பரிசைப் பெற வேண்டும், என்பதற்காகப் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டான்.

“யார் எதைச் சொன்னாலும், ஒடனே அதை நம்பக் கூடாது; நன்றாக யோசித்து, அதன் உண்மையை, அறிந்து கொள்ள முயல வேண்டும்; மெய்ப்பொருள் காண்பதறிவு,” என்றார் ஆசிரியர்.

பொய் சொன்னதற்காகக் கண்ணனைக் கண்டித்த ஆசிரியர், நன்கு யோசித்து, உண்மையை வரவழைத்த, பரிதியைப் பாராட்டினார்.

முடிவில் “உங்கள் எல்லாருக்குமே, பரிசு வாங்கி வந்திருக்கிறேன்,” என்று சொல்லி, அனைவருக்கும், ஆளுக்கொரு பேனா பரிசளித்தார்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை,

“இது போன்ற நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும்,” என்று அவர்களைக் கேட்டுக் கொண்டார், ஆசிரியர்.

“கண்டிப்பாகச் செய்வோம் சார்!” என மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்தனர்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ஆசிரியருக்கே சந்தேகம் வராத போது சிந்தித்து உண்மையை வரவழைத்த மாணவனின் சமயோசிதம் பாராட்டுக்குரியது. நல்லதொரு கதைக்கும் வாசகசாலையில் வெளியானதற்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button