கட்டுரைகள்

மேட்ச் பார்க்காமல் ஒரு ஐபிஎல் ரிவியூ – தினேஷ் அகிரா

கட்டுரை | வாசகசாலை

ஐபிஎல் ஃபைனல் மேட்ச் பார்க்காமல் ஒரு ரிவியூ எழுத முடியுமா? முடியும்! இப்போது அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதெப்படி மேட்ச் பார்க்காமல் ரிவியூ எழுத முடியும்?  நானே நிறைய எழுதியிருக்கேனே! அந்த சாமர்த்தியத்தை எல்லாம் வாசாகசாலை வாசகர்களிடம் காட்ட வேண்டாமே என்று விட்டுவிடுகிறேன். ஹைலட்ஸ் பார்த்துவிட்டு வந்து ஜல்லியடிக்காமல் சில முக்கியமான விஷயங்களை பேசலாம் என்று நினைக்கிறேன். ஐபிஎல் மாதிரியான லீக் தொடர்கள் இதுவரை சாதித்தது என்ன? எல்லாத் தரப்பினரும் ரசிக்கும் ஒரு ஆட்டமாக கிரிக்கெட் இன்று மாற்றியிருக்கிறது. A,B,C சென்டர் பாகுபாட்டுக்கு எல்லாம் இனி வழியில்லை. டெக்னிக்கலாக ரொம்பவும் அலட்டிக் கொள்ளத் தேவையேயில்லை. ஜாலியாக பார்த்துவிட்டு தூங்கப் போய்விடலாம். இது களத்திற்கு வெளியே நிகழ்ந்த மாற்றம்

உள்ளுக்குள்ளும் சத்தமேயில்லாமல் நிறைய விஷயங்கள் மாறியிருக்கின்றன. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சிறை மீண்டிருக்கின்றன. குறிப்பாக ஃபாஸ்ட் பவுலிங். 90களின் தொடக்கத்தில் கிரிக்கெட் உலகில் ஒரு புயல் அடித்தது. வேகப்புயல் எல்லாம் இல்லை. மிதவேகப் புயல் என்று வைத்துக் கொள்ளலாம்.  கிளென் மெக்ரா !!!  Accuracy, line and length, Economy rate மாதிரியான வார்த்தைகள் பிரபலமடைந்த நேரமது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அப்போதெல்லாம் நல்ல மவுசு. திரும்பிய பக்கமெல்லாம் மெக்ரா புராணம் தான். எல்லா அணிகளும் தங்களுக்கு என்று ஒரு மெக்ராவை Manufacture செய்ய ஆலாய் பறந்தன. “வேகம் எல்லாம் வேண்டாம் தம்பி, ஒழுங்கா லைன் பிடிச்சு மட்டும் போடு” என்பது வேதவாக்காக மாறிப் போனது.

அப்போது பிடித்தது கிரிக்கெட்டுக்கு ஏழரை நாட்டுச் சனி. போதாக்குறைக்கு bio mechanics, Video analysis போன்ற சமாச்சாரங்கள் வேறு.  ஃபாஸ்ட் பவுலிங் என்பது வேகமாக வீசுவது என்பதில் இருந்து கட்டுக்கோப்பாக வீசுவது என மாற்றமடைந்தது. spontaneity இல்லாத வஸ்துவாக ஃபாஸ்ட் பவுலிங் மாறியது அப்போது தான். மெக்ரா பெரிய பிஸ்தா தான். ஆனால் மெக்ரா மட்டுமே கிரிக்கெட் இல்லையே. ஏழு நிறங்கள் சேர்த்தால் தானே வானவில்லை ரசிக்க முடியும்?  ODI கிரிக்கெட்டுக்கு முந்தைய காலம் ஃபாஸ்ட் பவுலிங்கின் பொற்காலம். ஜெஃப் தாம்சன் bio mechanics படித்துவிட்டா பந்துவீசினார்? ஹோல்டிங் லைன் அண்ட் லெந்த் பிடித்தா எதிரணியினரின் மூக்கை உடைத்தார்?

ஆனால் இன்றைக்கு T20 யுகத்தில்  நிலைமை என்ன? மணிக்கு 145+ கி.மீ. வீசும் பவுலர் வேண்டுமென அணிகள் தவம் கிடக்கின்றன. நோக்யா, ஆர்ச்சர் மாதிரியான பவுலர்களுக்கு கோடிகளில் கொட்டிக் கொடுக்கிறார்கள். இந்த சீசனில் புதிதாக  என்ற ஓர் அற்புதத்தை பார்க்க முடிந்தது. உமர் மாலிக்! லைன் அண்ட் லெந்த் என்று தூக்கிக் கொண்டு வந்தால் இன்று மார்கெட்டில் துட்டு கிடைக்காது.  சரி இப்போது T20 கிரிக்கெட்டில் லெந்த் பிடித்து வீசுவதில்லையா என்று நீங்கள் கேட்கலாம்? வீசுகிறார்கள். ஆனால் என்ன லெந்த் என்று பாருங்கள். டெஸ்ட் லெந்த்!!! ஹர்சல் படேல் வீசும் cutters பாணி பந்துகள் இன்று நேற்று பிறந்தது அல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்த ஒன்று தான். வரலாறு திரும்புகிறது! லீக் கிரிக்கெட்டில் ஃபாஸ்ட் பவுலர்களை தேர்வு செய்யும் விதமே அத்தனை கலர்புல்லாக இருக்கிறது. ஒரு பவர் பிளே ஸ்பெசலிஸ்ட், மிடில் ஓவர்களில் முட்டுக் கொடுக்க ஒருவர், ஒரு death over ஸ்பெசலிஸ்ட்.

Bio mechanics-ஐ காரணம் காட்டி சீக்கிரமே பும்ரா உடைந்து போய்விடுவார் என்றார்கள்.  ஆனால் அவர் என்ன உடைந்தா போய்விட்டார்?  நொட்டை சொல்லக் காரணமாக இருந்த அதே bio mechanics-ஐ கொண்டே பும்ரா தன்னை கூர் தீட்டிக் கொண்டுவிட்டார். ODI கிரிக்கெட்டில் Bio mechanics, Video Analysis மாதிரியான தொழில்நுட்ப சமாச்சாரங்கள் வேகப் புலிகளை வீட்டுப் பூனைகள் ஆக்கின. இன்று T20 காலத்தில் அதே அறிவியல் வஸ்துக்கள் தான் புலிகளுக்கு புலிகளாக இருக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன.

சரி இப்போது சுழற்பந்து வீச்சுக்கு வருவோம். தெருக் கிரிக்கெட்டில் நீங்கள் இந்த நிகழ்வை அடிக்கடி பார்க்கலாம். ரன் எக்கச்சக்கமாக போய்க் கொண்டிருந்தால் ஓவருக்கு நடுவிலேயே ஃபாஸ்ட் பவுலர் ஸ்பின்னுக்கு மாறிவிடுவார். நானெல்லாம் அடிக்கடி இப்படி அவதாரம் எடுத்திருக்கிறேன். உண்மையில் சுழற்பந்து வீச்சு ஒரு தற்காப்பு பவுலிங் தான். அதனால் தான் லீக் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் மாஸ் காட்டுகிறார்கள். சரி ஐபிஎல் மாதிரியான லீக் கிரிக்கெட் அவர்களின் மீது எந்த மாதிரியான ஆதிக்கம் செலுத்தியது? KKR க்கு எதிரான qualifier-ல் கடைசி ஓவர் வீசிய அஸ்வினின் ஆக்சனைப் பார்த்திருப்பீர்கள். அஷ்ட கோணலாக ஏதோ முயற்சி செய்தார். ஆனால் நன்றாகவே வீசினார். கொஞ்சம் ரீவைண்ட் செய்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு செல்லுங்கள். வேறு ஃபார்மட், வேறு ஆக்சன். ஆனால் அதே  street smart. எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் அஸ்வினுக்கு Line of attack என்பது midlle & leg தான். இது முந்தைய ODI யுகத்தில் சாத்தியமில்லாத ஒன்று.

இன்றைக்கு  டெஸ்டில் விக்கெட் வீழ்த்த ஒரு ஸ்பின்னர் T20 கிரிக்கெட்டின் சூட்சமத்தையும் தெரிந்திருக்க வேண்டும்.  ODI கிரிக்கெட் பூதம் உச்சத்துக்கு வரும் வரை எக்கச்சக்கமான சுழற்பந்து வகைமைகள் கிரிக்கெட்டை அலங்கரித்தன. ஆனால் 90களுக்கு அப்புறம் வெறுமனே ஆஃப் ஸ்பின் அல்லது லெக் ஸ்பின். வேறு எதுவும் முயற்சி பண்ணக் கூடாது. மிடில் ஓவர்களில் ரன் கட்டுப்படுத்துவதற்கு இது போதும். தூஸ்ரா மட்டுமே ஒரு ஆறுதல். ஆனால் அந்த தூஸ்ராவும் நூறு வருடங்கள் பழமையான ஒன்றுதான். Sorry saqlain bhai! சமீபத்தில் Amol Rajan எழுதிய Twirlmen புத்தகத்தை வாசித்தேன். சுழற்பந்து வீச்சைப் பற்றிய Encyclopedia என்று அந்தப் புத்தகத்தை சொல்லலாம்.

வரலாற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரக ரகமாக இருந்திருக்கிறார்கள். நம்ம குல்தீப் வீசுகின்ற China man எல்லாம் நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட சரக்கு. இன்றைக்கு கூக்ளியை லெக் ஸ்பின்னரின் variation என்கிறோம். ஆனால் அன்றைக்கு கூக்ளி பவுலர் என்ற ஒரு தனிப்பட்ட வகைமையே இருந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் googly quartet ரொம்ப பிரசித்தம். medium fast leg spin என்ற வகைமையும் இருந்துள்ளது. எப்படித்தான் அந்த பவுலிங்கை பேட்ஸ்மேன் சமாளிச்சிருப்பானோ! இன்றைய ஐபிஎல் யுகத்தில் திரும்பவும் அந்தப் பொற்காலத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். History repeats itself! வருண் சக்கரவர்த்தி கைவசம் ஐந்தாறு வஸ்துக்களை வைத்திருக்கிறார். அவரை பொத்தாம் பொதுவாக லெக் ஸ்பின்னர் என்கிறார்கள். ஆனால் நியாயமாக அவருக்கு மர்ம சுழலர் என்றுதான் Name card போட வேண்டும். பஞ்சாபின் ரவி பிஸ்னோய் பெயருக்குத் தான் லெக் ஸ்பின்னர். ஆனால் வீசுவது எல்லாமே கூக்ளி. உண்மையில் பிஸ்னோயை கூக்ளி பவுலர் என்றே அழைக்கலாம். இது மாதிரியான விஷயங்களை taboo ஆகப் பார்க்க வேண்டிய தேவை இனியில்லை.  முந்தைய ODI யுகத்தில் இது போன்ற விசித்திர பாணி பந்து வீச்சுகளை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது. இப்படி சுழற்பந்து வீச்சில் பன்மைத்துவத்தை சாத்தியப்படுத்தியது தான் லீக் கிரிக்கெட்டின் சாதனை.

பீல்டிங்கில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது?  பீல்டிங் திறமைக்காகவே அணியில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படும் நிலைமை உண்டாகியுள்ளது. லீக் கிரிக்கெட்டின் குறுகிய கால அளவு இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. இதுவுமே ‘வரலாறு திரும்புகிறது’ வகையறா தான். முதன் முதலாக பீல்டிங்கையும் ஒரு பொருட்டாக நினைத்து அணித் தேர்வை செய்த நாடு தென்னாப்பிரிக்கா தான். நீங்கள் நினைப்பது போல ஜான்டி ரோட்ஸ் காலத்தில் அல்ல. 1950களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில். அதன் பிறகு ODI யுகத்தில் மிகச் சிறந்த பீல்டர்கள் எல்லா அணியிலும் தோன்றினார்கள். இந்தியாவுக்கு அசருத்தீன், தென்னாபிரிக்காவுக்கு ரோட்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங் என நிறைய பேரைக் கைகாட்டலாம்.

ஆனால்  பீல்டிங் என்ற ஒற்றைத் திறமை மட்டுமே தேர்வுக்கான அளவுகோலாக வைக்கப்படவில்லை. காரணம் ஒரு பீல்டர் எவ்வளவு ரன்களை காப்பாற்றிக் கொடுத்தான் என அளவிடுவதற்கான அறிவியல் முறைகள் அப்போது கிடையாது. The art of captaincy எழுதிய மைக் பிரயர்லி . “ஆரம்ப காலத்தில் இருந்தே பேட்டிங் என்பது  கணவான்களுக்கானதாகவும் பவுலிங், பீல்டிங் போன்ற உடலுழைப்பு சமாச்சாரங்கள் மற்றவர்களுக்காகவும் இருந்தது” என்கிறார்.  ODI யுகத்தில் பவுலிங் கூட மேட்டிமை பேசுபவர்களும் விரும்புகின்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது. ஆனால் பீல்டிங் என்பது ஓர் உபரி வேலையாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. இன்றைக்கு ஐபிஎல் மாதிரியான லீக் தொடர்கள் தேவையின் பொருட்டு பீல்டிங்கையும் ஒரு முக்கிய வேலைப் பிரிவாக அங்கீகரித்துள்ளது.

***

 

தொடர்புக்கு : dhinesh.writer@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button