மதிய வெயில் மேகங்களுக்குள்ளே மறைந்து கிடந்தது. மனோகரி வானத்தை வேடிக்கை பார்த்தபடி மரத்தைச் சுற்றி கட்டிவிடப்பட்டிருந்த திட்டில் வலது காலுக்கு மேல் இடது காலை நட்டனம் கொடுத்து அமர்ந்திருந்தாள். மரத்திற்கு வளையம் கட்டியிருக்கிறார்கள், வேர்களுக்கு? இந்த மரத்தின் வேர்கள் மண்ணுக்கடியில் எந்த தூரம் வரையிலும் பரவியிருக்கும் என்ற கற்பனை அவளுக்குள் விரிந்தது.
வேணுவோடு வாழ்ந்திருந்த நாட்கள் நினைவிற்கு வரத் தொடங்கின.
*****
வேணுவிற்கும் மனோகரிக்கும் திருமணம் நடந்தபோது அவளுக்கு இருபத்திநான்கு வயது. திருமணத்தைப் பற்றிய பெருங்கனவுகள் அவளுக்கு நிறையவே இருந்திருந்தன. வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தன்னை தொலைத்துக் கொள்வதை அவள் அப்போது பெருமிதமாக கருதிக் கொண்டிருந்தாள். அதுவே விட்டுக்கொடுத்தலின் சுவை என்று நம்பியிருந்த தன்னை இப்போது நொந்து கொண்டாள்.
வேணு கருத்து வேறுபாடுகளை பெரிதாக முன் வைக்கும் நேரங்களில் விஷயத்தையும் வேறுபாட்டையும் ஆராய்ந்து பார்க்கும் நிதானம் கூட இல்லாமல் தன் மீதே தவறு, தானே திருத்திக் கொள்கிறேன் என்பதாக ஒப்புக்கொண்டுவிட்டு உறவைக் காப்பாற்றத் துடித்த அவளது மனப்பதட்டம் இன்றைய நாளிலிருந்து பார்க்கும் போது பெரும் முட்டாள்தனமாக தெரிந்தது. மற்றவர்களை தாங்கிப் பிடிப்பதற்காக தன்னை தரையில் புரட்டி எடுத்துக் கொள்ளும் மனோகரியை அவள் வெறுத்தாள்.
“எனக்கு பெயர கேட்டப்ப பிடிக்கவேயில்ல… மனோகரி…ஓல்ட் நேம்…. ரிஜக்ட் பண்ணிடலாம் நினைச்சேன். ஆனா, இதையெல்லாம் ஒரு காரணம்ன்னு சொன்னா வீட்ல அப்படியே விட்டிருவாங்களா என்ன. அதான் சும்மா ஒரு பேச்சுக்கு பாத்திட்டு புடிக்கலன்னு சொல்லிடலாம்ன்னு வந்தவன். எப்படி எப்படியோ ஓகே ஆகி இப்ப நாம்ம ஹஸ்பண்ட் & வைஃப்”
வேணு இதனைச் சொன்னபோது எனக்கு ஏன் கோபம் வரவில்லை. அப்படி பேசிய அவனது வார்த்தைகளில் எதை ரசித்து அன்று சிரித்தேன்?
“அப்படி ஒன்னும் வேண்டாவெறுப்பா யாரும் என் கூட வாழத் தேவையில்ல” இப்படி சீறியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? “எனக்கும்தான் நீங்க பண்றது எதுவுமே பிடிக்கல. அதுக்குண்ணு ஓடிரவா செஞ்சிட்டேன்?” – இப்படி பதிலுக்கு பதில் மல்லுகட்டியிருக்கலாம்தானே. இப்படியெல்லாம் பதில் பேசவேண்டுமென்கிற யோசனை கூட வராத அளவிற்குத் திருமண வாழ்க்கையின் முக்கியத்துவம் எனக்குள் கடத்தப்பட்டிருந்தது என்றாலும், எனது சொந்த அறிவிலிருந்து நான் கூடுதலாக எதையேனும் சிந்தித்திருக்க வேண்டும்தானே. ஏன் செய்யவில்லை? சிந்திக்காத அளவு எது என்னை கட்டிப்போட்டு வைத்திருந்தது? இன்று எதனையும் முண்ணூற்று அறுபது டிகிரி கோணத்தில் பிய்த்துப்போட்டு ஆராய்ந்து இறுதி முடிவிற்கு வரவேண்டுமென்று நினைக்கிற நான், அன்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்த வழமைகளை மட்டும் பிடித்துக் கொண்டு முடிவுகளை எடுப்பதற்கு தயாரான ஒருத்தியாக இருந்திருக்கிறேன்.– மனோகரியின் மனதில் எண்ணங்கள் நதியாக ஓடிக் கொண்டிருந்தன.
கடந்த எட்டு மாதங்களில் அவளுக்குள் நடந்திருக்கும் இந்த மனநிலை மாற்றங்களை அவளே வேறு ஒருத்தியாக விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரிவு என்கிற முடிவை முதலில் வேணுதான் முன் வைத்தான்.
“இவ்வளவு டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியனோட நாம சேர்ந்து இருக்கணுமா மனோ?”
ஒரு மழைநாளின் மாலை வேளையில் ஜன்னல் ஓரமாக சாவகாசமாக அமர்ந்திருந்தபடி காபி அருந்தும் நிதானத்தோடு இதனைக் கேட்டான்.
மனோகரிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி பேசிட்டு இருக்கீங்க”
“நம்மளோட டேஸ்ட் கம்ளீல்ட்ளி வேற வேற. ஒரு புள்ளி கூட ஒத்துப் போகல. சேர்ந்து ரொம்ப தூரம் டிராவல் பண்றது முடியாத காரியம்”
“சம் ஸ்மால் ஸ்மால் சில்லி ஃபைட்ஸ். அதுக்கு இவ்வளவு பெரிய முடிவெடுக்கணுமா?”
“சின்னதோ பெருசோ ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிங்கிறது நிஜந்தான?”
“… …”
அவள் பதில் பேசாமல் இருந்தாள்.
“விட்டுகொடுக்கிறதா நினைச்சிட்டு நீ ஒவ்வொரு டைமும் உன்ன காம்ப்ரமைஸ் பண்ணிக்கிற மனோ. எனக்கு அது பிடிக்கல. ஒய் யூ ஷுட் லாஸ்ட் யுவர் ஓன் ஷெல்ஃப் ஃபார் மீ? ”
“நான் அத புடிக்காம பண்ணலியே. புடிச்சுதான பண்றேன். அது நமக்காக பண்றது. அதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.ப்ளீஸ், இப்படியான முடிவு வேண்டாம்.எனக்காக கண்ஸிடர் பண்ணுங்க”
அவளது கண்கள் நிரம்பி கன்னங்களில் கண்ணீரின் கோடுகள் வரிசை கட்டிக் கொண்டு இறங்கின.
“இன்னிக்கு எந்த வருத்தமும் கிடையாதுன்னு சொல்ற. வருஷங்கள் ஓடும். திங்ஸ் வில் கெட் ஹீப் ஆன். மொத்தமா உன்னோட லைஃப நீ வாழாம போயிட்ட மாதிரி ஒருநாள் தோணலாம். இஃப் யூ ஸ்டார்ட் திங்கிங் ஸோ ஒன் டே ஐ காண்ட் டாலரேட் தேட். ஆல்ரெடி ரெண்டு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்ட கணக்குதான். இப்ப ப்ராஸஸ் தொடங்கினாலுமே இப்படியும் அப்படியும் ஒரு வருஷம் இன்னமும் ஓடிரும்.அதுவும் மியூச்சுவல் போனாதான். அதுக்குதான் உன்ன உட்காரவச்சு இவ்வளவு பேசிகிட்டு இருக்கேன். ”
மனோகரி அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். பதற்றத்தோடு வீட்டிற்கு தகவல் தெரிவித்தாள். இரண்டு வீட்டுப் பெரியவர்களும் அவளுக்கு சாதகமாக பேசுகிறார்கள் என்கிற ஆசுவாசத்தில் வேணுவை அவர்களின் நடுவே நிறுத்தினாள்.
கைபேசியிலிருந்து வந்த குறுஞ்செய்திக்கான சத்தம் மனோகரியின் கவனத்தை கலைத்தது. தோழிகளின் வாட்ஸப் க்ரூப்புக்கென்று அவள் பிரத்தியேகமாக வைத்திருந்த மழைத் துளி தெறிக்கும் சத்தம்.
“காட் ஸ்டக் இன் அ மீட்டிங். வில் பீ லேட் பை ட்வண்டி மினிட்ஸ்”
ரேஜல் செய்தி அனுப்பியிருந்தாள்.
அடுத்தடுத்து வரிசையாக மூணு தம்ஸப் சிம்பல்கள் வந்து விழுந்தன. கலை, தர்ஷினி , ஏஞ்சல் மூவரிடமிருந்தும்.
மனோகரி எந்த பதிலும் அனுப்பி வைக்காமல் ரேஜல் அனுப்பியிருந்த செய்தியை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தாள்.
நிதானமாக தனது பங்கிற்கான தம்ப்ஸப்பை அனுப்பி வைத்தாள்.
மனோகரி, கலை, தர்ஷினி, ஏஞ்சல், ரேஜல் ஐவரும் கல்லூரியில் வகுப்பு தோழிகள். சொல்லி வைத்தாற்போல உள் வளாக தேர்வில் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்ததோடல்லாமல் நிறுவனத்திற்குள் நுழைந்தபோது ஒரே ப்ராஜெக்டின் கீழ் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அடுத்து வந்திருந்த மூன்று வருடங்கள் அவர்களது வாழ்வின் வசந்த காலமாக இருந்தது. அவர்கள் வாழ்ந்தது கிட்டதட்ட மற்றுமொரு கல்லூரி வாழ்க்கையைத்தான். ஒரு விடுமுறை நாளைக்கூட சும்மா விட்டு வைத்ததில்லை. சரியாகத் திட்டமிட்டு வெளியில் சுற்ற கிளம்பிவிடுவார்கள். ஐவரும் தங்கி இருந்த விடுதியில் அவர்கள் பட்டாளத்தை பற்றி அறிந்திராத யாருமேயில்லை. அவர்களால் மகிழ்ந்ததும் எரிச்சலடைந்ததுமாக இரண்டு வகை அனுபவங்களும் அவர்களின் விடுதி வார்டனுக்கு இருந்தது.
எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த ரேஜலின் ப்ராஜெக்ட் மாற்றம் அவர்கள் கூட்டில் விழுந்த முதற்கல். அடுத்ததாக தர்ஷினியின் திருமணம். இப்படி வரிசையாக ஆளுக்கொரு பக்கமாக சிதற தர்ஷினியைத் தவிர நால்வரும் அதே நிறுவனத்தில் வேறு வேறு ப்ராஜெக்டின் கீழ் அமர்ந்தார்கள். தர்ஷினி திருமணத்தின் பொருட்டு மணமகன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெங்களூருக்கு தானும் மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டாள். ஒரே நிறுவனம் என்றாலும் மற்ற நால்வருமே தினமும் பார்த்துக் கொள்வதில்லை. அவரவர் வேலையின் பலு வெவ்வேறாக இருந்தது. அதனைப் பொருத்தே அவர்களின் மதிய உணவு இடைவேளை நேரங்களும் மற்ற இடைவேளை நேரங்களும் என்பதால், அதற்கேற்றபடி அவர்களின் சந்திப்பும் அரிதாகவே நிகழ்ந்தது. இரண்டு வருட ஓட்டத்தில் அனைவருக்குமே திருமணம் முடிந்திருக்க, தர்ஷினியும் அவளது கணவனின் வேலை மாற்றத்தினால் சென்னைக்கு திரும்பியபோது மீண்டும் பழைய நிறுவனத்திற்குள் வந்துவிட்டாள். தர்ஷினி மீண்டும் இணைந்து கொண்டதில் எல்லோருக்கும் பெரும் சந்தோஷம்.
மனோகரியின் வாழ்வில் தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருப்பவை பற்றி அவள் யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. எப்போதாவது சந்தித்துக் கொள்ளும்போது பெரும்பாலும் அலுவலக விஷயங்களை பேசுவதிலேயே நேரம் கழிந்துவிடும். சொந்த விஷயங்களின் பேச்சு என்று வரும்போது மற்றவர்களை பேசவிட்டு அவள் வெறும் வேடிக்கை பார்ப்பவளாக மட்டுமே நழுவிக் கொண்டிருந்தாள். குறைவான சந்திப்பு பொழுதுகள் என்பதால் அவளின் இந்த நழுவலை மற்றவர்கள் பெரிதாக கவனிக்காமலேயே விட்டிருந்தார்கள்.
ஒரே நிறுவனம் என்றாலும் அவர்களின் பெரும்பாலான உரையாடல்கள் வாட்ஸப் க்ரூப் சாட்டில் நிகழ்பவையே. இன்று ஐவரும் சந்திப்பதாக எடுத்த முடிவும் நேற்றைய இரவின் க்ரூப் சாட்டின் போதே எடுக்கப்பட்டது.
“கேர்ள்ஸ், டுமாரோ ஆஃப்டர்நூன் மீட் பண்ணலாமா?”
ரேஜல்தான் தொடங்கி வைத்தாள்.
“ஸ்யூர் டி”
கலையிடமிருந்து மின்னல் வேகத்தில் பதில் வந்தது.
“வி ஆர் நாட் கேர்ள்ஸ். வி ஆர் ஆண்டீஸ்”
ஏஞ்சல் அனுப்பி வைத்திருந்தாள்.
“அதெல்லாம் ஊர் கணக்கு. நமக்கு நாம எப்பயும் கேர்ள்ஸ்தான்”
“கரெக்டா சொன்ன தர்ஷும்மா”
வாட்ஸப் ஸ்டிக்கர்களும் ஸ்மைலிகளுமாக மட்டுமே அடுத்து சில நிமிடங்களுக்கான உரையாடல் தொடர்ந்தது.
மனோகரி வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மூளையை வார இறுதியில் வரப்போகிற கோர்ட் ஹியரிங் ஆக்கிரமித்திருந்தது.
“போதும் போதும் ட்ராக் எங்கேயோ போகுது. டுமாரோ மீட் கன்ஃபார்ம் பண்ணுங்கடி”
“ஐ ம் இன்”
ஏஞ்சல் உறுதியளித்தாள்.
வேணுவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி பாப்அப் ஆனது.
மனோகரி க்ரூப் சாட்டிலிருந்து வெளிவந்து அதற்குள் நுழைந்தாள்.
“ஸாட்டர்டே ஆன் டைம் வந்திருங்க மனோ”
சனிக்கிழமை ஹியரிங்கிற்கு வருவதற்கான செய்தியை புதன்கிழமை இரவே அனுப்பி வைத்திருக்கிறான். எல்லாவற்றிலும் அவசரக்காரன் என்று நினைத்துக் கொண்டாள். வேணுவைப் பொறுத்தவரை இது பொறுமையில்லாத கணக்கில் சேர்த்தியாகாது. எல்லாத்தையும் முன்கூட்டியே சரியாக செய்து வைத்துவிடும் துல்லியமது.
“ஓகே”
மனோகரி பதில் அனுப்பி வைத்தாள்.
“மனோ?”
“மனோ?”
“மனோ?”
“மனோ?”
ஒரு நிமிடத்திற்குள் நான்கு ‘மனோ’ க்கள் க்ரூப் சாட்டில் மேலெழும்பி நின்றன.
எல்லோரும் நாளைய சந்திப்பிற்கான அவர்களது தரப்பு உறுதியை அளித்து முடித்திருந்தார்கள்.
“மீ டூ இன்” மனோகரி அவளது உறுதியைத் தெரிவித்தாள்.
ரேஜலிடமிருந்து முதல் தம்ஸப் வந்து விழுந்தது. அடுத்தடுத்ததாக மற்ற மூவருமுடையதும்.
“ஷேல் வீ ஃபிளே எ டேர் டுமாரோ டூரிங் அவர் மீட்”
தர்ஷினியிடமிருந்து வந்த செய்தி.
“யெஸ் ஸ்யூர்”
“நம்ம டேர் விளையாடி ரொம்ப நாளாச்சுல”
“லாஸ்ட்டா தர்ஷினியோட ஸ்பின்ஸ்டர் பார்ட்டியில விளையாண்டதுல”
“யெஸ்”
“அப்ப என்னென்ன டேர் யார் யார் பண்ணீங்கன்னு எல்லாருக்கும் நியாபகம் இருக்குதான”
“இருக்கு இருக்கு”
“நல்லாவே இருக்கு”
“ரேஜலு…. பதிலயே காணோம்”
“வயாசாயிருச்சுல. பயபடுறா போல”
கோபத்தில் சிவந்து போயிருந்த பொம்மை முகத்தை அனுப்பி வைத்தாள் ரேஜல்.
மனோகரி மனதில் அவளது வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் எடுக்கப்பட்டிருந்த வெவ்வேறு முடிவுகள் வரிசையாக ஓடத் துவங்கின. அவளது பத்தாம் வயதின் போது அவளது படிப்பைத் தொடர எந்தப் பள்ளியில் அவள் படிக்க வைக்கப்படவேண்டுமென்கிற பெரும் விவாதம் அவளது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே நிகழ்ந்தது. அப்பா வீட்டிற்கு அருகில் அவள் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்த பள்ளியில் தொடர வைப்பதே போதுமென்று நினைத்தார். அம்மாவிற்கு அது போதவில்லை. அம்மாவின் சிநேகிதியின் மகன் படிக்கும் ஊரின் புகழ்பெற்ற மெட்ரிக்குலேசனில் மனோகரியைச் சேர்த்துவிட வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அவளது பிடிவாதம் ஜெயிக்கவும் செய்தது. பத்தாம் வகுப்பு முடித்தபோது பதினொன்றாம் வகுப்பில் எந்த க்ரூப் என்பதற்கான பேச்சுவார்த்தை. அப்பா உறவினர்களில் மெத்த படித்திருந்தவர்களாக அறியப்பட்டிருந்த எல்லோரிடமும் யோசனை கேட்டுக் கொண்டிருந்தார். மனோகரியிடம் கேட்பதற்கு அவருக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் என்ன படிப்பு, எந்த கல்லூரி என்கிற முடிவு. உறவினர்களில் மற்றும் அப்பாவின் நட்பு வட்டத்தில் நல்ல வேலையில் இருந்தவர்கள் அப்போது முக்கிய ஆட்டத்தை ஆடினார்கள். அம்மாவும் அவள் பங்கிற்கு அவளது நட்பு வட்டாரத்தில் இருந்து விஷயங்களை திரட்டி வந்து அடுக்கினாள். அடுத்த சில வருடங்களில் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்த போதும் மனோகரியின் கருத்துகளுக்கு பெரும் முக்கியத்துவம் ஏதும் கிடைத்திருக்கவில்லை. வாழ்வில் எத்தனை எத்தனை டேர்கள். அனைத்தும் மனோகரிக்காக யார் யாரோ ஆடிய ஆட்டங்கள்.
யோசனையில் மூழ்கிபோயிருந்த அவளை தொலைபேசியின் குறுஞ்செய்தி சத்தம் மீட்டது.
“மனோ, என்னடி கம்முணு இருக்க?”
ரேஜல் கேட்டிருந்தாள்.
“லாஸ்ட் டேர் அப்ப ஆடாம எஸ்கேப் ஆன மாதிரி இந்தவாட்டியும் எதோ பிளான் போடுறா போல”
“மனோ யெஸ் ஆர் நோ? இப்பவே தெளிவா சொல்லிடு டி. கேம் தொடங்கின அப்புறம் எஸ்கேப் ஆகக் கூடாது”
“திஸ் டைம் ஐ ம் ரெடி டூ பிளே”
மனோ பதில் அனுப்பி வைத்தாள்.
“பாருடா. குட் இம்ப்ரூவ்மெண்ட் டி. கீப் இட் அப்”
தர்ஷினி சிரிக்கும் ஸ்மைலியோடு சேர்த்து அனுப்பியிருந்தாள்.
மனோகரியின் அறைக் கதவு தட்டப்பட்டது.
கதவை திறந்தபோது அவளது அம்மா நின்று கொண்டிருந்தாள்.
“இந்தா..”
மூன்று இட்லியும் சாம்பரும் இடம்பெற்றிருந்த தட்டினை அறைக்கு வெளியே நின்றபடியே அம்மா நீட்டினாள்.
மனோகரி பதில் பேசாமல் வாங்கிக் கொண்டாள். அம்மா திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
வேணுவிடம் இரண்டு வீட்டு பெரியவர்களும் உட்கார்ந்து பேசியது எதுவும் சாதகமாக அமையாமல் அவனது முடிவில் அவன் உறுதியாக இருந்ததன் விளைவாக மனோகரியை வீட்டிற்கே அழைத்து வந்திருந்தபோது மனோகரியின் அம்மா, அப்பாவிடம் பெரும் வாக்குவாதம் நடத்தினாள்.
“இதுக்குதான் அப்பவே சொன்னேன். பெரிய இடம் வேணவே வேணாம்ன்னு. யாரு என் பேச்ச கேட்டா.. “
“…“
அப்பா தலைகுனிந்தபடி அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தார்.
“நான் வேண்டாம்ன்னு சொன்னப்ப என்ன சொன்னீங்க?”
அப்பாவிடம் அதற்கும் பதிலில்லை. அம்மா தொடர்ந்தாள்.
“பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசாத. இந்த காலத்துல வாழப்போற இரண்டு பேரும் சரிசமமா சம்பாதிக்கிறாங்களான்னுதான் பாக்கணும். இரண்டுபேருமே கைநிறைய சம்பளம் வாங்குறாங்க. ஒத்துவரும்ன்னு சொன்னீங்க. இப்ப ஒத்துவர லட்சணம் பல் இழிச்சிட்டில்ல”
“புள்ள வாழ்க்கை போச்சு. இனி அம்மான்னா வருமா.. அப்பான்னா வருமா. போனது போனதுதான”
அம்மா புலம்பி ஓய்ந்து போனாள்.
மீண்டும் சென்னையில் விடுதி வாழ்க்கைக்குள் நுழைய மனமில்லாத மனோகரி தனியாக வீடு எடுத்து அம்மாவையும் அப்பாவையும் வரவழைத்து உடன் வைத்துக் கொண்டாள். ஒரே வீட்டில் இருந்தாலும் மனோகரியிடமும் அப்பாவிடமும் சேர்ந்தாற்போல் நான்கு வார்த்தைகள் கூட அம்மா பேசுவதில்லை. இந்த வரனை பிடிவாதமாக முடித்திருந்த கோபம் அப்பாவின் மீதென்றால், வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை என்கிற புகார் மனோகரியின் மீது. என்னதான் பிரச்சினை என்றாலும் பெண்ணாய் பிறந்தவள் அதற்கேற்றபடி நடந்து வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மனோகரிக்கு சமத்து போதவில்லை என்று அம்மா நொந்து கொண்டாள்.
வீட்டில் மூவரும் ஆளுக்கொரு மனச்சிக்கலில் மாட்டிக் கொண்டு அவரவர் உலகத்திற்குள் உலவிக் கொண்டிருந்த நாட்களில், அவர்களின் வாழ்வில் பாலா திடீரென்று உள் நுழைந்தான். பாலா மனோகரியை விடவும் ஒரு வயது இளையவன். மனோகரிக்கு பள்ளியில் ஜூனியர். மேலும் மனோகரியின் குடும்பம் பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்னால் குடித்தனம் இருந்திருந்த காலனி வீட்டில் பாலாவின் குடும்பம் பக்கத்து வீட்டாராக இருந்திருந்தார்கள். அங்கிருந்து மனோகரியின் குடும்பம் சொந்த வீட்டிற்கு மாற்றிக் கொண்ட பிறகு தொடர்பற்று போகியிருந்தது.
சென்னையில் புதிதாக வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான். பழைய விஷயங்களின் நினைவுகளில் இருந்து சம்பவங்களை எடுத்து பேசிக் கொண்டிருந்தான். இருவீட்டாருக்கும் பொதுவாகத் தெரிந்திருந்த சங்கரியை பார்த்தபோது மனோகரியை பற்றி தான் கேட்டதாகவும், அவள்தான் மனோகரியின் சென்னை முகவரியை தனக்குப் பகிர்ந்தாள் என்பதையும் தெரிவித்துக் கொண்டான். சங்கரியும் அவர்கள் இருந்த காலனி வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு குடியிருந்தவள்தான். இப்போது சொந்த வீட்டிற்கு மாறியிருந்தாள். பாலாவிற்கு மனோகரிக்கு நடந்திருந்த திருமணத்தை பற்றிய முழு விவரமும் தெரிந்திருந்தது.
“மனோ, விஷயம் கேள்விப்பட்டேன். ஆண்டியும் அங்கிளும் என்னடா இப்படி கேக்குறானேனு தப்பா நினைக்க வேண்டாம். எதுக்கு சுத்தி வளைச்சு பேசிகிட்டுன்னுதான் நேரடியா கேக்குறேன். எனக்கு மனோவ கல்யாணம் பண்ணிக்க ஓகே. உங்களுக்கும் சம்மதம்னா மேற்கொண்டு அப்பாவ பேசச் சொல்றேன்”
இதனை சற்றும் எதிர்பார்த்திருக்காத மூவருமே திகைத்துப் போனார்கள். அன்றுதான் வேணுவின் வழக்கிற்கான இரண்டாவது ஹியரிங்கை முடித்து வந்திருந்த மனோகரிக்கு பாலாவின் கேள்வி இன்னும் அசெளகரியத்தை தந்தது. அவள் வெடுக்கென எழுந்து அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மனோகரியின் அம்மா திகைப்பிற்கு அடுத்த நொடியே பூரிப்பிற்கு மாறினாள்.
“கேக்கணும் தோணுச்சு கேட்டுட்டேன். யோசிச்சு பதில் சொல்லுங்க. ஒன்னும் அவசரமில்ல. நான் கிளம்புறேன்”
பாலா கிளம்பிச் சென்றபிறகு மனோகரியின் அம்மா அப்பாவிடம் கலகலவென்று பேச ஆரம்பித்தாள். எப்படியாவது மனோகரியை சம்மதிக்க வைத்துவிடும் ஆர்வம் அவளிடமிருந்தது. மனோகரியின் வாழ்வில் இந்த முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென அம்மா உறுதியாக நம்பினாள்.
மனோகரிக்கு பாலா மீது எந்த வெறுப்பும் இல்லை. அடுத்தடுத்த முடிவுகளை சட்டென்று எடுத்து வைக்கும் மனநிலையில் அவள் இல்லை. அம்மாவிடம் இதனைத் தெரிவித்தபோது அவள் புரிந்துக் கொள்ளத் தயாராக இல்லை.
பாலா அடிக்கடி வீட்டிற்கு வருவதும் அம்மாவிடம் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அன்று பாலாவின் குரல் முன் அறையில் கேட்டபோது மனோகரி தனது அறையின் கதவை சாத்திக் கொண்டாள். அறையின் வலது மூலையில் இருந்த கணினியை ஆன் செய்து இளையராஜாவின் இசையை ஒலிக்க விட்டபடி கட்டிலில் மல்லாந்து படுத்தாள். பாலாவின் குரலும் அம்மாவின் குரலும் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தன .
எப்போது கண் அயர்ந்தாளென்று தெரியவில்லை. அறைக் கதவு தட்டப்பட்ட ஓசையில் விழித்தாள்.
கதவைத் திறந்தபோது அம்மா நின்று கொண்டிருந்தாள். கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள். மனோகரி கணினி முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“அந்த பையன் பாலா இவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிட்டு இப்பதான் போறான். தெரிஞ்ச பையன்தான.. ரூம விட்டு வெளிய வந்து என்ன ஏதுன்னு பேசுறதுக்கென்ன? “
“எனக்கு அவன்கிட்ட பேச எதுவுமில்ல. வரல”
“இப்படி வெடுக்கு வெடுக்குண்ணு நின்னா என்ன சொல்றது”
“… “
மனோகரி அமைதியாக இருந்தாள்.
“நல்ல வாழ்க்கை வீடு தேடி வருது. இப்படி பிடிவாதமா இருந்தா எப்டி?”
அதற்கும் மனோகரி பதில் பேசவில்லை.
“நல்ல பையன். அவன் அம்மா கேன்சர் வந்து கடைசியா படுக்கையில விழுந்தப்ப அவங்க அப்பாவை காட்டிலும் இந்த பயதான் நல்லா பாத்துகிட்டானாம். அம்மாவ பாத்துகிடறதுக்காகவே படிச்ச படிப்புக்கேத்த வேலைய தேடாம உள்ளூர்ல கிடைச்ச வேலைய பாத்துகிட்டு இருந்திருக்கான். அம்மா தவறி ஒருவருஷம் ஆனபிறகு இப்பதான் அதுல இருந்து மீண்டு சென்னைக்கு வேலைக்கு வந்து ஆறு மாசமாச்சாம். சங்கரிக்கு நேத்து ஃபோன் போட்டு பேசுனப்ப எல்லாம் விவரமா சொன்னா. அவனுக்கு முன்னமே உன் மேல ஒரு புடித்தம் இருந்திருக்கும் போல. அவனாதான் சங்கரிகிட்ட உன்ன பத்தி விசாரிச்சிருக்கான். அவ உன்ன பத்தி சொல்லவும் அட்ரஸ் வாங்கிட்டு இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கான். அவனே வலிய வந்து ஆசைப்பட்டு கேக்குறான்.நீ என்னன்னா இப்படி அடம்புடிக்க”
“அப்பா அம்மான்னா பிள்ளேலுக்கு நல்லது செய்யத பத்தி யோசிக்கணும். உன் அப்பா என்னான்னா அவளுக்கு டைம் கொடுண்ணு உனக்கு சிங்கி அடிச்சிட்டு என்கிட்ட பேசுகாரு. வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு போனவன எத்தன நாள் நினைச்சிட்டு இருக்கப் போற?”
“அம்மா, நான் ஒன்னும் வேணுவ நினைச்சிட்டு இருக்கல. உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போகாதீங்க. ஐ நீட் டைம். அவ்வளவுதான். சும்மா நயநயன்னு ஒரே விஷயத்தையே பேசி என்ன சாவடிக்காம கொஞ்சம் ரூம விட்டு வெளிய போறீங்களா?”
அம்மா அறையை விட்டு கோபமாக வெளியேறியதைப் பார்த்தபடி மனோகரி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அதன்பிறகான நாட்களில் அம்மா மனோகரியின் அறைக்குள் எக்காரணம் கொண்டும் நுழைவதில்லை.
****
தர்ஷினியும் கலையும் மனோகரியோடு வந்து அமர்ந்திருந்தார்கள். ஏஞ்சல் தூரத்தில் வந்துக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்கு வெதர் நல்லா இருக்குல”
தர்ஷினி வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
“நல்லாயிருக்கு. ஆனாலுமே காத்துல சூடு கலந்திருக்கு”
“ஹாய் கேர்ள்ஸ்”
ஏஞ்சலும் வந்து சேர்ந்து கொண்டாள்.
“இன்னும் ரேஜல் வந்து சேரலியா. ரைட்டு.. அவ ட்வண்டி மினிட்ஸ் லேட்ன்னு சொன்னான்னு.. நான் தேர்ட்டி மினிட்ஸ் லேட்டா வந்தா, அவ இன்னமும் வந்து சேரலியா”
ஏஞ்சல் கேலியாகச் சொன்னாள்.
“வந்திருவா. அது வரைக்கும் நம்ம பேசிகிட்டு இருக்கலாம்”
கலை ஏஞ்சலை பக்கத்தில் இழுத்து அமர்த்தினாள்.
“நீ ரொம்ப சீக்கிரமே வந்துட்ட போல மனோ”
“ம்ம். ரேஜல் மெசேஜ் பண்றதுக்கு ஒரு டன் மினிட்ஸ் முன்னாடி வந்தேன்”
“அவ்வளவு ஃப்ரியாவா இருக்க”
“டெவலப்மெண்ட் ஓவர். டெஸ்டிங் போயிட்டிருக்கு. ஸோ, எங்களுக்கு பெருசா ஒர்க்கில்ல. நெக்ஸ்ட் வீக் தான் ரிலீஸ்”
“ம்ம். .. ”
வானத்தில் பறந்த விமானத்தின் சத்தத்திற்கு நால்வரும் ஒரே நேரத்தில் அண்ணாந்து பார்த்தார்கள்.
“யோசிச்சு சொல்லுங்க மனோ. இஃப் யூ ர் ஓகே டூ கோ டூ ஆன்ஸைட், விசாக்கான பிராஸஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம். உங்களுக்கு ஓகே இல்லேன்னா நான் நெக்ஸ்ட் ஆப்ஷன் யாருண்ணு டிசைட் பண்ணணும்”
மனோகரி தோழிகளைச் சந்திப்பதற்காக கிளம்புவதற்குமுன் ப்ராஜெக்ட் மேலாளர் அவளை அழைத்துப் பேசியிருந்தது அவளது நினைவில் வந்துப் போனது.
“அப்புறம் எல்லாருக்கும் லைஃப் எப்படி போகுது? மனோகிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணலாம் இன்னிக்கு. சொல்லு மனோ”
தர்ஷினி ஆர்வமாக கேட்டாள்.
“லைஃப்……இப்போதைக்கு ஷார்ட்டா சொல்லணும்னா அடுத்த டேர் விளையாட ரெடி ஆகிட்டிருக்கேன்.லைஃப்ல முதல் தடவையா எனக்கு புடிச்ச மாதிரி எனக்காக நானே விளையாட போறேன். பாக்கலாம் ”
மனோகரி தோள்களை உலுக்கிக் கொண்டாள்.