ஒளித்து வைக்கப்பட்ட நாடு
என் கிராமத்தின் பெயரை திரித்தனர்
மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை
ஒளிக்க முடியுமென நினைத்தனர்
என் நாட்டின் அடையாளமோ
பாறைகளைப் போல உறுதியானது
எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி
என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர்
சூழச்சிகளால் மறைக்க முடியாத
என் நெடு வரலாறோ
நதிகளைப் போல் நீண்டது
எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி
என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர்
தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும்
எனது உறுதியான அடையாளங்களோ
தீயைப் போலப் பிரகாசமானது
கண்ணுக்குப் புலப்படாமலெனை
மிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
காயங்களிலிருந்து
சிந்தப்பட்ட குருதியிலிருந்து
சாம்பலிலிருந்து
நான் எழுவேனென
என் முகத்தை சிதைத்துக்கொண்டிருப்பவர்கள்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
வலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை
ஒருத்தி பிரசவிப்பாளென
சாம்பலால் யாவற்றையும் முடியதாக நம்பியவர்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
பூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல
ஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை
நாளை ஒரு குழந்தை தேடுமென
திகதியிடாத மரணச்சான்றிதழ்.
இறந்த காலத்தின் நீதியும் இறந்துவிட்டதென்றனர்
நிகழ்காலக் கண்ணாடியில்
எந்தக் கீறல்களுமில்லையென்றனர்
முகங்களைநோக்கியிருக்கும்
துப்பாக்கிகளும் பீரங்கிகளும்
உமை பாதுகாக்கவென்றனர்
இராணுவத்தை உங்கள் தோள்களில் சுமப்பதே
போர் விசாரணைகளுக்கு தீர்வென்றனர்
மேற்கிளம்புமொரு சிறு குழந்தையின்
எலும்புக்கூட்டின் வாக்குமூலத்தை
பதிலுறுத்தும் விதமாய்
மயானங்களில் எலும்புக்கூடுகள்தானே மலருமென்றனர்
கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களையும்
அழைத்துச் சென்றுவிட்டதால்
தம்மிடம் எவரும் இல்லையென்றனர்
நடந்தவைகள் எல்லாவற்றுக்குமாக
திகயிடாத மரணச்சான்றிதழ் ஒன்றினை
பெற்றுக்கொள்ளச் சொல்லி மூடிக் கொண்டனர்
பூட்டிடப்பட்ட தேசத்தின் கதவுகளை.